“தேசிக” பதத்தின் சிறப்புக்கள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

தேசிக பதத்திற்கு இருக்கும் விசேஷத்தால்தான் “சங்கர தேசிக மே சரணம்” என்று அடிக்கு அடி இன்றைக்கும் நாமெல்லாரும் சொல்லி ஆசார்யாளை நமஸ்காரம் பண்ணும்படியாக அந்த ஆசார்யாளே தோடகாச்சார்யாளை ஸக்ஷ்மமாகத் தூண்டி அஷ்டகம் பாடவைத்திருக்கிறார்.*1

‘கந்தரநுபூதி’யில்கூட ஓரிடத்தில் ‘சங்கர தேசிகனே’ என்று வருகிறது*2. கைலாஸ சங்கரரான பரமேச்வரனுக்குக் குருவாக இருந்த குமாரஸ்வாமியைத்தான் ‘சங்கரனின் குருவே’ என்ற அர்த்தத்தில் அருணகிரிநாதர் அப்படி கூப்பிட்டிருக்கிறார். ஆகக்கூடி “சங்கர தேசிக” என்ற பதப் ப்ரயோகத்தில் அவருக்கும் ஒரு ஸந்தோஷம் இருந்ததாகத் தெரிகிறது. “என்னை இழந்த நலம்”, “சும்மாயிரு சொல்லற”, “என்னை விழுங்கி வெறுந் தானாய்” என்றெல்லாம் ஒரே அத்வைதமாக வரும் ‘அநுபூதி’யில் அவர் அப்படிச் சொல்லியிருப்பதால் ஆசார்யாள் நினைவில் சொன்னதாகவே கூட இருக்கலாம்.

வைஷ்ணவர்களில் தேசிகன், தேசிகாச்சாரி என்று பெயரே வைத்துக் கொள்கிறார்கள். ‘தேசிகாச்சாரி’ என்ற பெயரில் ‘தேசிகன்’ என்ற ஆள் பெயர், ‘ஆச்சாரி’ என்ற ஜாதிப் பெயர் இரண்டிற்குமே குரு என்ற அர்த்தமாயிருக்கிறது அவர்களுடைய முக்ய ஆசார்யர்களில் ஒருவரான வேதாந்த தேசிகர் ஞாபகத்திலேயே அப்படிப் பெயர் வைத்துக் கொள்வதாக தோன்றுகிறது.

‘வேதாந்தம்’ என்றேகூட அவர்கள் [ஸ்ரீவைஷ்ணவர்கள்] பேர் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு வேடிக்கை என்னவென்றால்: வெள்ளைக்கார தேசங்களில் ‘வேதாந்தா’ என்றாலே அத்வைதம் என்றுதான் அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். வேதாந்தம் என்றால் வேதத்தின் அந்திம பாகங்களான உபநிஷத்துக்கள் என்பதே நேர் அர்த்தம். அத்வைதம் மட்டுமில்லாமல் விசிஷ்டாத்வைதம், த்வைதம் முதலான மற்ற ஸம்பிரதாயங்களையும் உபநிஷத்துக்களான அந்த வேதாந்தத்தின் அடிப்படையில்தான் அந்தந்த மதாசார்யர்களும் ஸ்தாபிப்பதாகக் காட்டி, ஒவ்வொருவரும் தங்கள் கொள்கைதான் வேதாந்தத்தின் உண்மையான தாத்பர்யம் என்று வாதம் பண்ணுவார்கள். நம் ஆசார்யாளும், மத்வாசாரியாரும் உபநிஷத் பாஷ்யம் எழுதிய மாதிரி ராமாநுஜாசார்யார் எழுதாவிட்டாலும், அவருடைய [ப்ரஹ்ம] ஸூத்ர பாஷ்யம், ‘வேதாந்த தீபம்’, ‘வேதாந்த ஸாரம்’ முதலான புஸ்தகங்களில் நிறைய உபநிஷத் மேற்கோள் காட்டியிருக்கிறார். விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வரும் ‘அந்தர்யாமி ப்ராஹ்மண’த்தைத்தான் முதுகெலும்பு மாதிரிச் சொல்வது. ராமாநுஜர் உபநிஷத் பாஷ்யம் எழுதாவிட்டாலும் விசிஷ்டாத்வைத பரமாக ரங்கராமாநுஜர் என்பவர் எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது, ‘உபநிஷத்’ என்பதற்கு இன்னொரு பேரான ‘வேதாந்தம்’ என்றாலே அத்வைதந்தான் என்று லோகத்தில் பிரபலமாயிருக்கிறது; அப்படியிருந்தும் அத்வைதிகள் ‘வேதாந்தம்’ என்று ஆள் பேர் வைத்துக் கொள்வதில்லை; விசிஷ்டாத்வைதிகள்தான் வைத்துக் கொள்கிறார்கள்! வேங்கடநாதர் என்று அம்மா அப்பா பேர் வைத்த அவர்களுடைய முக்ய புருஷர்களில் ஒருவருக்குத்தான் வேதாந்த தேசிகர் என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டிருக்கிறது!

‘வேதாந்தம்’ மாதிரியே ‘பாஷ்யம்’ என்றும் அவர்கள் [ஸ்ரீ வைஷ்ணவர்கள்] மட்டுந்தான் ஆஸாமிக்குப் பேர் வைப்பது. பாஷ்யம் ஐயங்கார், பாஷ்யம் ரெட்டி, பாஷ்யம் நாயுடு – எல்லாரும் வைஷ்ணவர்கள்தான். [ஸ்மார்த்தர்களான] நாமும், இன்னும் லோகம் பூரா அநேக அறிஞர்களும் [சங்கர] ஆசார்யாளுடைய பாஷ்யங்களைத் தலைக்கு மேலே வைத்துக் கொண்டாடுகிறோம். ஆசார்ய பக்தியில் உசந்த வைஷ்ணவர்கள் ராமாநுஜருடைய ஸூத்ர பாஷ்யத்தை “ஸ்ரீ பாஷ்யம்” என்று பூஜிதையாகச் சொல்லி, அவருக்கே “பாஷ்யகாரர்” என்று பிருது சொல்லி, தங்கள் ஸம்பிரதாயத்தில் “பாஷ்யம்” என்பதை ஆஸாமி பேராகவும் வைக்கிறார்கள்.

குரு, ஆசார்யன், தேசிகன் என்று மூன்று இருப்பதில் ஸ்மார்த்த ப்ராமணர்களும், அப்ராமண சைவர்களும், குருஸ்வாமி, குருமூர்த்தி என்று மாத்திரம் பேர் வைத்துக் கொள்கிறார்கள். அநேகமாக ஸ்வாமிநாத ஸ்வாமியின் பெயரைத்தான் அப்படி வைப்பது.

‘ஆசார்யர்’ என்று ஒரு மநுஷ்யருக்குப் பெயராக வைக்கும் வழக்கும் எந்த ஸம்பிரதாயத்திலும் காணோம். ஆனால் ஜாதிப் பெயராக வைஷ்ணவ ப்ராமணர்கள், ‘ராஜகோபாலாசார்யார்’ என்ற மாதிரி வைத்துக் கொள்கிறார்கள், அப்ராம்மணர்களில் தட்டார் ஜாதியிலும், தச்சர் ஜாதியிலும் ‘ஆசாரி’ போட்டுக் கொள்கிறார்கள். ‘ஆசாரிக்குச் சொல்லியனுப்பணும்’ என்றே அவர்களைக் கூப்பிட வேண்டியிருக்கும்போது சொல்கிறோம். அவர்கள் பூணூலும் போட்டுக் கொள்கிறார்கள். மாத்வ ப்ராமணர்கள் ‘ஆசார்’ என்று போட்டுக் கொள்கிறார்கள்; ‘மைஸுர் வாஸுதேவாச்சார்’ மாதிரி. ஒரு வேடிக்கை என்னவென்றால், தமிழ் தேசத்தில் இருக்கப்பட்ட மாத்வ ப்ராம்மணர்களை நாம் ‘ராவ்’ என்றே சொல்கிறோம்; அவர்களும் ‘ராவ்’தான் போட்டுக் கொள்கிறார்கள்;ஆனால் மாத்வாசார்யாரே இருந்த கன்னட தேசத்திலிருக்கும் மாத்வ ப்ராம்மணர்கள் ‘ராவ்’ போட்டுக் கொள்ளாமல் ‘ஆசார்’ என்று தான் போட்டுக் கொள்கிறார்கள். அங்கே அவர்களைத் தவிர மற்ற ஸம்பிரதாயஸ்தர்கள் எல்லாருமே ராவ் போட்டுக் கொள்வார்கள். மைஸூர் ஸதாசிவ ராவ் என்று ஸாஹித்ய கர்த்தா இருந்தார். அவர் தியாகையர்வாளுடைய ப்ரசிஷ்யர் [சிஷ்யருடைய சிஷ்யர்]. நம்முடைய மடத்து சந்த்ரமௌளீச்வரரின் மேலே கூட அவர் கீர்த்தனம் பண்ணியிருக்கிறார்.*3 அப்போதிருந்த நமது மடத்து ஸ்வாமிகளையும் “ஸ்ரீமன் மஹா தேவேந்திர ஸரஸ்வதி” என்று குறிப்பிட்டு, அவரால் பூஜிக்கப்படுபவர் என்று அதில் சொல்லியிருக்கிறார். ‘ராவ்’ என்று ஜாதிப் பேர் போட்டுக் கொண்ட அவர் மாத்வரில்லை; ஸ்மார்த்த ப்ராம்மணர்தான். கன்னடதேசம், தெலுங்கு தேசம் முதலியவற்றில் அப்ராம்மண ஜாதியினர் உள்பட பல பேர் ராவ் போட்டுக் கொள்வதுண்டு. தமிழ்நாட்டில் ‘ராவ்’ என்றாலே மாத்வ ப்ராம்மணர்தான் என்று இருக்கிறது.

‘ஆசார்யன்’ என்று தனிப்பேர் இல்லாவிட்டாலும் அது ஜாதிப் பெயராக வைஷ்ணவ ப்ராம்மணர், மாத்வ ப்ராம்மணர், தட்டார், தச்சரோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

தேசிகர் என்று அப்ராம்மண சைவர்களில் பூஜகர்களைக் கொண்டதாக ஒரு ஜாதி இருக்கிறது. தனிப்பெயராக தேசிகன் என்றே ஐயங்கார்கள் வைத்துக் கொள்கிறார்கள் என்று சொன்னேன். அவர்களில் வடகலை ஸம்பிரதாயத்துக்கு முக்ய புருஷராக இருக்கப்பட்டவரையே வேதாந்த தேசிகன், ஸ்வாமி தேசிகன் என்றும், வெறுமே தேசிகன் என்று மாத்திரமும் சொல்கிறார்கள். ‘தேசிகர்’ என்று ‘ர்’ போடாமல் – ‘சிவர்’ என்று சொல்லாமல் ‘சிவன்’ என்றே சைவர்கள் பக்தி மிகுதியாலேயே சொல்கிற மாதிரி – ‘தேசிகன்’ என்றே சொல்கிறார்கள்.

ராமாநுஜர் பெயரும் வைஷ்ணவர்கள் நிறைய வைத்துக் கொள்கிறார்கள். மாத்வர்கள் அவர்களுடைய மூல புருஷரான ‘மத்வர்’ என்று பெயர் வைத்துக் கொள்வதில்லை. மத்வாசாரியாருக்கு ஆனந்த தீர்த்தர் என்று ஸந்நியாஸ பெயர். அப்படியும் அவர்கள் [மாத்வர்கள்] பேர் வைத்துக் கொள்வதில்லை. நம்மில் [ஸ்மார்த்தர்களில்] ‘சங்கர’ப் பெயர் வைத்துக் கொள்கிறோம். ஆனால் இது நம்முடைய ஆசார்யாளான காலடிக்காரரை நினைத்து வைப்பதா, அவருக்கும் மூலமான கைலாஸக்காரரை நினைத்து வைப்பதா என்று சொல்லத் தெரியவில்லை. வைத்யநாதன், விச்வநாதன் என்றெல்லாம் பரமசிவன் பெயர்களை வைப்பது மாதிரியே ‘சங்கர’ப் பெயர் வைப்பதும் ஒரளவுக்கு, பெருமளவுக்கே இருக்கலாம். ‘ராமாநுஜ’ என்பது ராமனின் தம்பிகளான லட்சுமணன், பரதன், சத்ருக்னன் மூன்று பேருக்கும் உரிய பேர். ஆனாலும், குறிப்பாக ராமரோடு ‘கூடப் பிறந்தது’ மட்டுமின்றி, கூடவே எப்போதுமிருந்த, ‘இளையாழ்வார்’ எனப்படும் லக்ஷ்மணன் பேராகவே அது நினைக்கப்படுகிறது. ஆனால் வைஷ்ணவர்கள் ராமாநுஜப் பெயர் வைக்கும்போது லக்ஷ்மணனையோ மற்ற ராம சகோதரர்களையோ நினைக்காமல் தங்கள் மூல புருஷரான ராமாநுஜாசார்யாரை நினைத்துத்தான் வைக்கிறார்கள். நம்மில் ‘சங்கர’ப் பெயரை அந்த அளவுக்கு ஆசார்யாள் நினைவில் வைப்பதாகத் தெரியவில்லை. [சிரித்து] ஸமீபகாலமாக (1957-ல்) நான் மெட்ராஸ் வந்ததிலிருந்து ஆசாரியாளின் ‘பாப்புலாரிடி’ ஜாஸ்தியாயிருக்கிறது. இப்போது ஸுரேஷ், ரமேஷ், இன்னும் அநேக பாஷன் பெயர்கள் வந்திருந்தாலும் ஆசார்யாள் நினைவிலேயே ‘ஷங்கர்’ பேர் நிறைய வைக்கிறார்கள். ‘சந்த்ரசேகர’*4 என்றும் நிறைய வைக்கிறார்கள். ‘ஷேகர்’ என்கிறார்கள். ஃபாஷன் உலகத்திலும் இப்படி இரண்டு கர்நாடககாரர்களின் பெயர்கள். அதையும் ஃபாஷன் பண்ணி ஷங்கர், ஷேகர்!…..


*1 விவரம் “தெய்வத்தின் குரல்”, ஐந்தாம் பகுதியில் “ஸ்ரீ சங்கர சரிதம்” என்ற பேருரையில் “தோடகர்: தாஸ்ய பக்தியின் திருவுருவம்” என்ற பிரிவில் பார்க்க. சுருக்கமாக: ஆசார்ய சீடர்களுள் குற்றேவல் மாத்திரம் செய்து கொண்டிருந்த ஒருவரை ஏனையவர்கள் அறிவில் குறைந்தவரென்றே கருதி வந்தனர். அவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் பொருட்டு ஒருநாள் ஆசார்யாள் ஏனைய சீடர்கள் யாவரும் குழுமியிருந்தும் பாஷ்ய பாடம் தொடங்காமலே காத்துக் கொண்டிருந்தார். புரிந்து கொள்ளச் சக்தியில்லாத ஒருவருக்காக ஆசார்யாள் காத்திருப்பானேன் என்று அவர்கள் பேசலானார்கள். அப்போது ஆசார்யாளின் அநுக்ரஹ சக்தியில் தொடகரின் உள்ளார்ந்த அறிவு பிரகாசமடைய, அவர் பண்டிதர்களும் வியக்கும்படி, ‘தோடகம்’ எனும் விருத்தத்தில் ஆசார்யாள் மீது எட்டு ச்லோகங்களைத் தாமே இயற்றிப் பாடியவண்ணம் அங்கு வந்து குரு சரணத்தில் பணிந்தார். மற்ற சீடர்கள் தங்களது தவறான கருத்தை மாற்றிக் கொண்டு அவரை மதித்துப் போற்றினர். அவருக்கு ‘தோடகர்’ என்றே பெயர் ஏற்பட்டது. ‘தோடகாஷ்டகம்’ எனப் பெயர் பெற்றுள்ள அவரது எட்டு ச்லோகங்களில் ஒவ்வொன்றின் கடைசிப் பாதமும் “பவ சங்கர தேசிக மே சரணம்” என்று முடியும். இத் தோத்திரத்தைக் கூறி, ச்லோகம் தோறும் அக் கடைசிப் பாதம் வருகையில் பகவத்பாதரின் பாதத்தில் பணிவது பக்தர் மரபு.

*2 “தேவே சிவ சங்கர தேசிகனே” என முடியும் 39-ம் பாடல்.

*3 “ஸ்ரீ ஷண்முகஜனக சந்த்ரமௌளீச்வர” எனத் தொடங்கும் சங்கராபரண கருதி.

*4 ‘சந்த்ரசேகர’ என்பதே ஸ்ரீசரணர்களின் ஸந்நியாஸ நாமம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is குரு உபதேசமின்றி ஞானமில்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ' பரமாச்சார்யர் '
Next