‘இந்த லோகத்துக்கெல்லாம் காரணமாக ஒரு பரம்பொருள் இருக்கிறது. நமக்கும் அதுதான் காரணம். நம்மை அதுதான் படைத்திருக்கிறது. நாம் அல்ப ஜீவாத்மா. அது மஹத்தான பரமாத்மா. ஜீவாத்மாகவுள்ள நாம் மறுபடி போய் அந்த பரமாத்மாவோடேயே சேர்ந்து விடவேண்டும். அப்போதுதான் ஸம்ஸாரம், சுற்றிச் சுற்றி வரும் ஜனன மரணச் சுழல், கர்மா நம்மைப் படுத்தியெடுக்கும் பாடு, இந்த மனஸின் ஓயாத உழப்பறிசல் எல்லாம் தீர்ந்து பேரின்ப நிலையை அடையலாம். ஸம்ஸாரச் சுழலிலிருந்து விடுபட்ட அந்த நிலைக்குத்தான் வீடு என்றும் மோக்ஷம் என்றும் பேர். அதை அடைத்துவிட்டால் அப்புறம் அழிவில்லாமல், சாவில்லாமல் சாச்வதமாக சாந்தி அநுபவிக்கலாம்’ என்று சொல்லவும், என்ன பண்ணினால் நாம் அப்படிப் போய் பரமாத்மாவை அடையலாம் வழிகாட்டிக் கொடுக்கவுமே மதம் என்பது இருக்கிறது.
ஒவ்வொரு மத ஸித்தாந்தமும் பரமாத்மாவுக்கு ஒவ்வொரு பேர் கொடுத்திருக்கிறது. ஒன்று சிவன் என்கிறது. ஒன்று விஷ்ணு என்கிறது. சக்தி என்று இன்னொன்று சொல்கிறது. ‘இப்படியிப்படிப் பண்ணினால் சிவன் இருக்கிற கைலாஸத்திற்குப் போகலாம். அதுதான் மோக்ஷலோகம்’ என்று ஒன்று சொல்லும். இன்னொன்று, ‘விஷ்ணு இருக்கிற வைகுண்டம்தான் மோக்ஷலோகம். அதற்குப் போய்ச்சேர இன்னின்ன பண்ணவேண்டும்’ என்று சொல்லும். இப்படியே ‘அம்பாள் இருக்கும் ஸ்ரீபுரம் என்பதுதான் மோக்ஷஸ்தானம்’; ‘பிள்ளையார் இருக்கும் ஆனந்த புவனம்தான் மோக்ஷம்’; ‘சுப்பிரமணிய ஸ்வாமி இருக்கும் ஸ்கந்தகிரிதான் மோக்ஷம்’; ‘ராமரும் க்ருஷ்ணருங்கூட அவதாரம் முடிந்த பிறகு வைகுண்டம் போய் விஷ்ணுவிடம் ஐக்யமாகிவிடவில்லை. ராமருக்கென்றே தனியாக ஸாகேதம் என்று திவ்ய லோகம் இருக்கிறது. அதுதான் மோக்ஷம்’; இதே மாதிரி, ‘க்ருஷ்ணருக்கென்றே தனியாக கோலோகம் என்று இருக்கிறது. அதுதான் மோக்ஷலோகம்’ என்று ஒவ்வொரு உபாஸனா மார்க்கத்தில் பரமாத்மாவுக்கும், அது இருக்கும் இடத்திற்கும் ஒவ்வொரு பேரைச் சொல்லி அங்கே போய்ச் சேர்ந்துவிட்டால் அப்புறம் ஸம்ஸாரக் கஷ்டமில்லை, சாச்வத ஸெளக்யந்தான் என்று சொல்லியிருக்கிறது.
மோக்ஷத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் எப்படிப்பட்ட உறவு இருக்குமென்பதைப் பற்றி ஒவ்வொரு சித்தாந்தம் ஒவ்வொரு விதமாகச் சொல்லும். பரமாத்மாவுக்கு முழுக்க வேறாகவே மோக்ஷத்திலும் ஒரு ஜீவாத்மா இருந்துகொண்டு அதை சாச்வதமாக பக்தி பண்ணிக்கொண்டு, அதனால் சாச்வதமான ஆனந்தத்தை அநுபவிக்குமென்று ஒரு ஸித்தாந்தம் சொல்லும். அதற்குப் பேர் த்வைதம். இன்னொன்று [அப்படி] முழுக்க வேறாயில்லாமல், ஜீவாத்மாவுக்கென்று தனியாக ஒரு உயிர் மோக்ஷத்திலும் இருந்து அது பக்தி பண்ணிக்கொண்டிருக்குமென்பது வாஸ்தவந்தானென்றாலும், தன்னுடைய இந்த உயிருக்கு உயிராக அந்தப் பரமாத்மா அந்தர்யாமியாக இருக்கிறது என்று உணர்ச்சியை அது பெற்றிருக்கும் என்று சொல்லும். அதற்குப் பேர் விசிஷ்டாத்வைதம். இன்னொன்று, ‘ஸூர்யன் உதயமான அப்புறம் நக்ஷத்ரங்கள் எல்லாம் அழிந்து போய்விடுவதில்லை. ஆனாலும் தாங்கள் இருப்பதே தெரியாமல் ஸூர்ய ப்ரகாசத்தில் அழுந்தி மங்கிப்போய் விடுகிறதோல்லியோ? அப்படித்தான் மோக்ஷலோகத்தில் ஜீவாத்மா அழிந்து போய்விடாமல் இருந்தாலும் தன்னுடைய அல்பமான சைதன்ய [ஞானமயமான உயிருணர்வு] ப்ரகாசத்தை இழந்து பரமாத்மாவின் பேரறிவான சைதன்யத்தில் அழுந்திக் கிடக்கும்’ என்று சொல்லும். அதற்குப்பேர் சைவ ஸித்தாந்தம். இப்படி இன்னும் பல இருக்கின்றன.