அத்தனைக்கும் வித்தியாஸமான அத்வைதம் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

ஆதிசங்கர பகவத்பாதாள் நிலைநாட்டியுள்ள ஸித்தாந்தத்திற்கு அத்வைதம் என்று பேர். அது என்ன சொல்கிறதென்றால், இத்தனைக்கும் வித்யாஸமாக ஒரே பெரிய போடாகப் போட்டு விடுகிறது! லோகத்திலேயிருந்து — அதாவது ஸம்ஸாரத்திலிருந்து; ஸம்ஸாரம் லோகத்தில்தானே நடக்கிறது? அப்படிப்பட்ட இந்த லோகத்திலேயிருந்து — தப்பித்து ஒரு ஜீவாத்மா பரமாத்மா இருக்கும் மோக்ஷ லோகத்துக்குப் போய் அவரோடு சேர வேண்டும் என்ற பொதுவான அடிப்படைக் கொள்கையில் வரும் இஹ லோகம், மோக்ஷலோகம், ஜீவாத்மா பரமாத்மாவைச் சேர்வது, அப்போது ஏற்படும் உறவு என்ற எல்லாவற்றையுமே அது [அத்வைத ஸித்தாந்தம்] அடித்துத் தள்ளிவிடுகிறது. ‘இஹ லோகமென்று ஒன்று அஸல் ஸத்யமாக இருக்கவேயில்லை. அது வெறும் மாயக் காட்சி தான்’ என்கிறது. ‘மோக்ஷம்’ என்கிறதும் ஒரு லோகமோ இடமோ இல்லை. மனஸ் என்பதிலிருந்து ஆத்மா விடுபட்ட நிலைதான் மோக்ஷம். அது இங்கேயே, இப்பவே ஸித்தித்தாலும் ஸித்திக்கும். ஆகையால் செத்துப் போன அப்புறந்தான் மோக்ஷம் என்றில்லாமல் சரீரத்தில் ஒரு ஜீவன் இருக்கும்போது கூட முக்தனாகலாம். ஞானி என்று நாம் பார்க்கும் ஒருவன் நமக்கென்னவோ லோகத்திலிருக்கிறாற்போலத் தெரிந்தாலும் வாஸ்தவத்தில் அவன் மோக்ஷத்தில்தான் இருக்கிறான்’ என்கிறது.

ஜீவாத்மாவும் பரமாத்மாவும் சேர்வது, அப்போது அவர்களுக்குள் ஏற்படும் உறவு ஆகிய விஷயமாகவும், ‘சேர்கிறது என்றே கிடையாது. உறவு என்றும் கிடையாது. இரண்டு பேர் இருந்தால்தானே ஒருத்தர் மற்றவரோடு சேர்ந்து, ஏதோ ஒரு உறவு ஏற்படுத்திக் கொள்ள முடியும்? வாஸ்தவத்தில் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் இரண்டு வெவ்வேறு ஆஸாமிகளே இல்லை. இருக்கிறது ஒரே ஆத்மா தான். ப்ரஹ்மம் என்பது அதுதான். அது தனக்கு வேறாக எதுவுமில்லாத ஒன்றாக, தான் தானாக இருக்கிற அநுபவத்தைத் தவிர ஒரு எண்ணமும் இல்லாமலிருப்பது. நிர்குண ப்ரஹ்மம் என்று அதனால்தான் சொல்வது. ஆனாலும் அந்த ப்ரஹ்மத்தின் ஆதாரத்தைக் கொண்டே, அதே ஸமயத்தில் அந்த ப்ரஹ்மத்தையும் மறைப்பதாக ஒரு மாயா சக்திதான் லோகம் என்கிற ஜாலக் காட்சியை — மாஜிக் ஷோவைக் காட்டுகிறது. வெள்ளை ஸ்க்ரீனின் ஆதாரத்தில்தானே ஸினிமா ஓடுகிறது? ஸ்க்ரீன் இல்லாமல் அந்தக் காட்சி கிடையாதல்லவா? ஆனாலும் அந்தக் காட்சியே ஸ்கரீன் தெரியாதபடி மறைத்தும் விடுகிறது! மறைந்தாலும் தன் மேல் ஓடுகிற காட்சி எதனாலும் பாதிக்கப்படாமல் ஸ்க்ரீன் இருக்கிறபடியே இருந்து கொண்டிருக்கிறது! அப்படித்தான் ப்ரஹ்மத்தின் ஆதாரத்தில் லோகமாயா நாடகம் நடப்பதும். இதிலே கூடுதலாக ஒரு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், ப்ரஹ்மம் ப்ரஹ்மமாகவே ஒரு பக்கம் இருந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதுவே மாயா சக்தியினால் தனித்தனி அந்தஃகரணங்களைப் பெற்று தனித்தனி ஜீவர்களாகவும் ஆகியிருக்கிறது. ஸாதனை பண்ணி அந்த அந்தஃகரணத்தைப் போக்கிக் கொண்டுவிட்டால் ஜீவனே பிரம்மமாகிவிடுவான். அதாவது ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டு பேர் சேர்கிறது என்பதே இல்லை. இவனே தான் அவனாகத் தன்னைத் தெரிந்து கொள்கிறான். ஒருத்தனேதான் தன் நிஜமான ஸ்வரூபம் தெரியாதபோது ஜீவன் என்று சொல்லப்படுகிறவனாகவும், தெரிந்தபோது ப்ரஹ்மமாகவும் இருப்பது. இரண்டு வேறே ஆஸாமிகளே இல்லை. மனஸ் என்று கட்டைப் போட்டுக் கொண்டிருந்ததால் ஜீவன் என்ற பெயரில் இருந்த ப்ரஹ்மம் அந்தக் கட்டை உதறிவிட்டுத் தான் தானாக இருப்பதில் யாரும் யாரோடும் சேரவில்லை. அங்கே ஒருவிதமான உறவுமில்லை. நமக்கே நாம் என்ன உறவு? கட்டு அவிழ்ந்து விடுதலை கிடைப்பதுதான் மோக்ஷமாதலால் அதை மோக்ஷலோகம் என்று இடத்தை ஸம்பந்தப்படுத்திச் சொல்ல இடமே இல்லை’ — இப்படி அத்வைதம் ஒரே போடாகப் போட்டுவிடுகிறது!

‘மனஸைக் கழட்டி [கழற்றி]ப் போட்டுவிட்டால் நாமே ப்ரஹம்மம்; இங்கேயே மோக்ஷம்’ என்றால், நமக்கு “இத்தனை ஈஸியாக இப்பேர்ப்பட்ட ஸித்தியா?” என்று ஆச்சர்யமாயிருக்கிறது. நமக்கு மேலே பரமாத்மா என்று ஒருத்தர், ‘அவருக்குக் கீழேதான் நாம்’ என்று இருக்கிற நிலையையே பேரானந்தமான முடிவு நிலை என்று சொல்லி, அதை அடைவதற்கும் எங்கேயோ எட்டாததாயிருக்கும் மோக்ஷ லோகத்திற்குப் போக வேண்டுமென்று மற்ற ஸித்தாந்தங்கள் சொல்வதாயிருக்க, நமக்கு மேலே ஒரு ஸ்வாமி, அதற்குக் கீழே நாம் என்றில்லாமல் நாமே ஸ்வாமியாயிருக்கிற மஹா மஹா பேரானந்தத்தை முடிவு நிலையாகச் சொல்கிற அத்வைதமோ, அதை அடைய எந்த எட்டாத லோகத்துக்கும் போக அவசியமில்லாமல் இங்கேயே அடையலாம் என்றும் சொல்கிறதே! எத்தனை ஸுலபமாக எத்தனாம் பெரிய லாபம்?’ என்று ஆச்சர்யமாயிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is மத ஸித்தாந்தங்களின் ஸாராம்சம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  எளிதாகத் தோன்றினாலும் கடினமானது
Next