ஸாதன சதுஷ்டயம் : வேத வழியில் ஆசார்யாள் வகுத்த முறை : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

பரம கருணையோடு நம்முடைய ஆசார்யாள் – சங்கர பகவத் பாதாள் – அப்படி அத்வைத லக்ஷயத்திற்கு ஸாதனா க்ரமம் வகுத்துக் கொடுத்திருக்கிறார். எதுவும், எல்லாமும் அவர் ச்ருதியை [வேதத்தை] அடிப்படையாகக் கொண்டுதான் செய்வார். ‘எண் சாண் உடம்புக்கு சிரஸே ப்ரதானம்’ என்கிறோம். அப்படி ச்ருதிக்கும் ப்ரதானமாக ஒரு சிரஸ் இருக்கிறது. உபநிஷத்துக்கள்தான் அப்படிப்பட்ட ச்ருதிசிரஸ். ‘ச்ருதிசிரஸ்’ என்று சொன்னால் உபநிஷத் என்று அர்த்தம். அப்பேர்ப்பட்ட உபநிஷத்துக்களில் சொல்லியிருப்பதன் அடிப்படையின் மேலேயே, அதை அஸ்திவாரமாகக் கொண்டே, ஆசார்யாள் பெரிசாகக் கட்டிடம் கட்டியிருக்கிறார்.

ஸாதன சதுஷ்டயம் என்பதாக நான்கு அங்கங்கள் கொண்ட ஒரு ஸாதனை க்ரமத்தை அவர் வகுத்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய நூல்களிலெல்லாம் சிகரமாகவுள்ள [ப்ரஹ்ம] ஸூத்ர பாஷ்யத்தில் முதல் ஸூத்ரத்தின் வ்யாக்யானத்திலேயே, ‘எதற்கப்புறம் ப்ரஹ்மத்தைப் பற்றிய விசாரணை ஆரம்பிக்கலாமென்று சொல்கிறோம்’ என்று சொல்லி, “நித்யாநித்ய வஸ்துவிவேக:” என்று ஆரம்பித்து இந்த சதுஷ்டயத்தின் நாலு அங்கங்களுடைய பெயரையும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே இருந்த மூல நூல்களுக்கு விளக்கமாக ‘பாஷ்யம்’ என்று அவர் எழுதியவற்றில் ஸூத்ரபாஷ்யத்திற்கு முதலிடம் என்றால், வேதாந்த விஷயத்தில் அவரே ஸொந்தமாக எழுதிய ‘ப்ரகரண’ங்களில் முதலிடம் பெறுவது “விவேக சூடாமணி”. அதில் ஸாதன சதுஷ்டயத்தின் எல்லா அங்கங்களுக்கும் நன்றாகவே டெஃபனிஷன்- லக்ஷணம் – சொல்லியிருக்கிறார்.

ஸாதநாந்யத்ர சத்வாரி கதிதாநி மநீஷிபி: |
யேஷு ஸத்ஸ்வேவ ஸந்நிஷ்டா யதபாவே ந ஸித்த்யதி ||1

என்று விஷயத்தை ஆரம்பிக்கிறார். ‘ஸத்வஸ்துவில் நிஷ்டை கூடி நிலைப்பதென்பது இந்த நாலு உபாயமில்லாமல் நடக்காது’ என்பதை ‘ஸந்நிஷ்டா யத் அபாவே ந ஸித்த்யதி‘ என்பதில் தீர்மானமாகச் சொல்லி விடுகிறார். இந்த நாலும் கைகூடினால்தான் ஸத்வஸ்துவில் நிஷ்டை உண்டாகும் என்பதை “யேஷு ஸத்ஸு ஏவ ஸந்நிஷ்டா” என்று தெரிவிக்கிறார். “இந்த ஆத்ம ஸாதனைக்கு நாலு ஸாதனங்கள் மநீஷிகளால் கூறப்பட்டுள்ளன: ஸாதநாநி அத்ர சத்வாரி கதிதாநி மநீஷிபி:” என்று ஆரம்பித்து, அவை மேற்கொள்ளப்பட்டால் ஸித்தி, இல்லாவிட்டால் இல்லை என்று முடித்திருக்கிறார்.

அது யார் மநீஷி என்றால், ஸாதாரணமாக இருக்கப்பட்ட நாமெல்லாரும் மநுஷ்யர்கள். நம்மிலே உசந்த புத்தி சக்தியுடன் ஸரி தப்புக்களை நன்றாகத் தீர்ந்து தீர்மானம் பண்ணி சாஸ்த்ரஜ்ஞர்களாகவும் சிஷ்டர்களாகவும் இருக்கும் பெரியவர்களே மநீஷிகள். அவர்கள் வகுத்துக் கொடுத்ததே “ஸாதன சதுஷ்டயம்” என்று ஆசார்யாள் ஸம்பிரதாய மரியாதையுடன் ‘இன்ட்ரொட்யூஸ்’ பண்ணுகிறார். இது ‘விவேக சூடாமணி’யில்.

“அபரோக்ஷாநுபூதி” என்று ஒரு ப்ரகரணம் ஆசார்யாள் உபகரித்திருக்கிறார். ‘அபரோக்ஷம்’ என்றால் ‘நேர்முகம்’. தானே ப்ரஹ்மம் என்பதை எவரோ சொல்லி, எதிலோ படித்துத் தெரிந்து கொள்ளாமல் ஸொந்தத்தில் நேர்முகமாக அநுபவித்துத் தெரிந்து கொள்வது அபரோக்ஷாநுபூதி. அந்த பேர் கொண்ட ப்ரகரணத்திலும் இந்த ஸாதனை க்ரமம் பற்றிச் சொல்லியிருக்கிறார். அரிச்சுவடி மாதிரி சின்ன புஸ்தகமாக ‘பால போத ஸங்க்ரஹம்’ என்று எழுதியதில் கூட இவ்விஷயம் குறிப்பிட்டிருக்கிறார்.

எழுதியவர் பெயர் தெரியாமல் ‘ஸாதன சதுஷ்ட்ய ஸம்பத்தி’ என்ற தலைப்பிலேயே ஒரு புஸ்தகம் [தஞ்சாவூர்] ஸரஸ்வதி மஹால் ஸீரிஸில் இருக்கிறது. ‘ஸம்பத்தி’ என்றால் ஸம்பத்துத்தான். ஸாதனை முறை என்பது நமக்கு ஒரு பெரிய ஸம்பத்து, பெருஞ்செல்வம் என்று அர்த்தம்.

சதுஷ்டயம் என்றால் நான்கு விஷயம் சேர்ந்த அமைப்பு. நான்கு என்றாலும் இந்த ஸாதன சதுஷ்டயத்தில் மூன்றாவதான ‘சமாதி ஷட்க ஸம்பத்தி’ என்ற ஒரு அங்கத்திலேயே ஆறு அம்சங்கள் இருக்கின்றன – தலை என்ற ஒரு அங்கத்திலேயே கண், காது, மூக்கு, வாய் என்று பல இருக்கிறது போல! ‘சதுஷ்டயம்’ என்ற நாலங்க அமைப்பிலே ஒரு அங்கமே ஆறு அம்சங்களைக் கொண்டதாயிருப்பதால், நாலோடு இன்னம் ஐந்து சேர்ந்து ஒன்பது படிகளைக் கொண்டதாக இந்த ஸாதனை க்ரமம் இருக்கிறது. அந்த ஒன்பதும் இன்ன இன்ன என்று சொல்லலாமென்றுதான் உங்களையெல்லாம் இப்போது உட்கார்த்தி வைத்திருப்பது.

ஒன்பது படிகள் என்று சொன்னேன். படி வரிசை மாதிரி இவற்றை ஒன்றுக்கப்புறம் அடுத்தது, அப்புறம் மூன்றாவது, அதிலிருந்து நாலாவது என்று ஏறிப்போவது போலத்தான் சொல்லியிருக்கிறது. ஆனாலும் முழுக்க அப்படியே வைத்துக் கொள்ள முடியவில்லை. கணக்கு, ஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி மூன்றையும் சேர்த்து ஆரம்ப க்ளாஸில் கொஞ்சம் படித்து விட்டு அப்புறம் ‘மெயின்’ என்று ஒன்று மட்டும் எடுத்துக் கொண்டு டிகிரி வாங்குகிறது; அப்போதும் ‘ஆக்ஸிலரி’யோ ‘ஆன்ஸிலரி’யோ ஏதோ ஒரு பேரில் மற்றதையும் துணை சப்ஜெட்டுக்களாகப் படிப்பது என்று இருப்பது போல, ஸாதனை முறையின் எல்லா அங்கங்களையுமே முதலிலிருந்து அடிப்படையாகத் தெரிந்து கொண்டு அப்புறம் ஒவ்வொன்றுக்கு முக்யத்வம் தந்து முன்னேற வேண்டியிருக்கும். விருந்து சமையல் பண்ணினால் இரண்டு மூன்று அடுப்பில் ஒன்றில் சாதம் கொதித்துக் கொண்டிருக்கிறபோதே, இன்னொன்றில் கறிகாய் வெந்து கொண்டிருக்கும்; இன்னொன்றில் வாணலியில் எண்ணெய் சூடேறிக் கொண்டிருக்கும். கல்லுரலில் பாட்டுக்கு அரைவை நடந்து கொண்டிருக்கும். அப்புறம் ஒவ்வொரு ஸ்டேஜில் கறிகாயை மட்டும் கவனித்து, கொட்டிக் கலக்கி, அவியல் பண்ணுவது; இன்னொன்றில் வடை தட்டி வாணலியில் போடுவது என்று நடக்கும். சாப்பிடும்போதும் அப்படியேதானே கலந்து கலந்தும் தனித்தனியாகவும் இரண்டு தினுஸுகளிலும் பண்ணுகிறோம்? ஒவ்வொரு வாய் ஒவ்வொன்றைத் ‘தொட்டு’க் கொள்வது, தனியாகப் பாயஸம், ஸ்வீட் சாப்பிடுவது, கறி கூட்டு ஊறுகாய்ளையும் நடு நடுவே ருசி பார்த்தபடி சாதத்தோடு கலந்து கொண்டு சாப்பிடும் ரஸத்தையும் மோரையும் தனியாக டம்ளரில் வாங்கிச் சாப்பிடுவது என்று பண்ணுகிறோம். ஆரம்பத்தில் பருப்புஞ் சாதத்தில் ஸாம்பாரைக் கலந்து கொண்டு சாப்பிடும் போதே பச்சடியில் தயிரையும் ருசி பார்க்கிறோம். கடைசியில் அந்தத் தயிரையே சாதத்தில் கலந்து கொண்டு சாப்பிடும்போது ஸாம்பார் ‘தொட்டு’க் கொள்ள வருகிறது. இப்படி ஸாதனையில் ஒரு ஸமயத்தில் மெயினாகவும் ‘பக்கவாத்ய’மாகவும் இருக்கிற அம்சங்களே அப்புறம் மெயின் பக்க வாத்தியமாகவும், பக்கவாத்தியம் மெயினாகவும் மாறி வருவதுண்டு. ஒரு ப்ராமணர் சொன்னார். பத்னி ‘அகத்துக்கு இல்லாத’ நாட்களில் சாதம் மட்டும் வடித்துக் கொண்டு விடுவாராம். முதலில் பருப்புப் பொடி சாதம், தயிர் தொட்டுக் கொண்டு சாப்பிடுவாராம்; அப்புறம் தயிர் சாதம் பருப்புப் பொடி தொட்டுக் கொண்டு சாப்பிடுவாராம்! ஸாதனையிலும் இந்த மாதிரி வருவதுண்டு. அதன் அங்கங்கள் கலந்து கலந்தும் ஒவ்வொரு ஸ்டேஜில் ஒவ்வொன்று முக்யுமாயும் வரும்.

ஆனாலும் முதலில் பருப்பு, அப்புறம் ரஸம், கடைசியில் மோர் என்று க்ரமம் தப்பாத மாதிரி ஸாதனையிலேயும் ஒன்று இருக்கிறது. முதலில் ஆத்ம வித்யையை நன்றாக முறைப்படி தெரிந்து கொள்ள வேண்டும். முறைப்படி என்றால் குருமுகமாக என்று அர்த்தம். அப்போதுதான் அவருடைய அநுக்ரஹமும் உள்ளேபோய் நம்மை அந்த வழியில் ஸரியாகப் போகத்தூண்டிவிடும். அப்புறம் இரண்டாவதாக, உபதேசத்தை நம்முடைய புத்தியில் நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கப்புறம் மூன்றாவதாக, கடைசியாக, புத்தியில் உறுதியானதை அநுபவமாக ஆக்கிக் கொள்வதற்காக ஆத்ம விசாரம் ஒன்றே தொழில் என்று உட்கார்ந்துவிட வேண்டும்2.


1 ச்லோ 18

2 பிற்பாடு ச்ரவணம், மனனம், நிதித்யாஸனம் என்பதாக விவரிக்கப்படவிருக்கும் மூன்றினையே இங்கு ஸ்ரீசரணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை ஸாதனசதுஷ்டயத்திற்குப் பிற்பாடு வருபவை.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is காலம் செல்வதாயினும் முயற்சி தொடங்க வேண்டியதே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஞானத்திற்குப் பூர்வாங்கம் : கர்மாவும் பக்தியும்
Next