இன்னொரு மூன்று உண்டு — கர்மா, பக்தி, ஞானம் என்ற மூன்றுதான். இப்போது நாம் பார்க்கவிருக்கிற ஆசார்யாள் கூறியதான — அத்வைத ஸாதனை என்பது ஞான மார்க்கம்தான். ஆனாலும் இதில் ப்ரவேசிப்பவனுக்கு சித்தம் நன்றாக சுத்தமாகி, ஒரே விஷயத்தில் நிற்கக்கூடிய ‘ஐகாக்ரதை’ என்ற சக்தி ஏற்பட்டிருந்தால்தான், அவன் இந்த வழியில் சிரமமில்லாமல் போக முடியும். அழுக்கு மயமான சித்தத்தை எப்படி சுத்தம் பண்ணிக் கொண்டு ஞான யோக ஸாதனைக்குப் போவது? ஞான யோகம் மேற்கொள்வதற்கு மனஸை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று சொன்னால், அலைபாயும் மனஸை எப்படி ஒரு விஷயத்திலேயே நிறுத்துவது?
[சித்தத்தை சுத்தப்படுத்துவது, ஒருமுகப்படுத்துவது என்ற] இந்த இரண்டையும் ஸாதித்துக் கொள்வதற்காகத்தான், எல்லாவற்றுக்கும் முந்தி, ஆரம்பத்திலேயே ஆசார்யாள் [முறையே] கர்மாவையும் பக்தியையும் வைத்திருக்கிறார். ஞான யோகத்தை ஆரம்பிப்பதற்குப் பூர்வாங்கம் கர்ம – பக்தி யோகங்கள் என்று வைத்திருக்கிறார்.
கட்டாந்தரையில் விதையைத் தூவினால் முளைக்குமா? முதலில் அதை உழ வேண்டும். அப்புறம் ஜலம் பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதை போட்டுப் பயிர் காண முடியும். கட்டாந்தரையாயிருக்கும் மனஸைக் கிளறவிட்டு லேசாக ஆக்குகிற உழவுதான் கர்ம யோகம். அதில் ஜலம் பாய்ச்சி ஈரிக்கப் பண்ணுவது பக்தியோகம்.
ஸ்வதர்மமாக அவரவருக்கும் சாஸ்திரப்படி ஏற்பட்ட கர்மாவை அப்பழுக்கில்லாமல் பண்ணப் பண்ணத் தன்னால் சித்தத்தின் அழுக்குகள் விலகிக் கொண்டே வரும்.
ஸ்வாமியிடம் ப்ரேமையினால் நம்முடைய மனஸ் ஒருமுகப்பட்டு நிற்க பக்தியுபாஸனை ஸஹாயம் செய்யும். மனஸானது பக்தியால் ஒரு மூர்த்தியிடம் ஒருமுகப்படப் பழகிவிட்ட பிறகு அமூர்த்தமான தத்வத்திலும் அப்படியே ஒருமுகமாகி ஆத்ம விசாரம் செய்ய முடியும்.
கர்மாவால் சித்த சுத்தியும் பக்தியால் சித்த ஐகாக்ரியமும் ஏற்பட்ட அப்புறம் ஞான யோகத்தில் அதிக சிரமமில்லாமல் முன்னேறலாம்.
ரொம்பவும் ஸுலபமாகச் சொல்லிவிட்டேன், கர்மாவால் சித்த சுத்தியும் பக்தியால் அதன் ஐகாக்ரியமும் என்று. ஆனால் நாம் உள்ள நிலையில் எது ஸரியான கர்மா, எது ஸரியான பக்தி என்றே தெரியாமல் ஏதோ பண்ணிக் கொண்டு போவதில் அப்படியெல்லாம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லையே என்றுதான் தோன்றும்.