யானையின் வாயில் ஒரு விசேஷம். நமக்கும் இன்னும் ஆடு, மாடு மாதிரி எந்த ப்ராணியானாலும் அதற்கும் வாய் என்பது இந்தக் கோடிக்கு அந்தக் கோடி. உதடு எப்போதும் வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கிறது. கண் என்ற ஒரு அவயவத்திற்குத்தான் அவசியமான ஸமயங்களுக்காக ரப்பை என்று மூடிபோட்டு வைத்திருக்கிறதே தவிர காது, மூக்கு, வாய் ஆகியவை நன்றாக வெளியில் தெரிகிற விதத்திலேயே இருக்கின்றன. ரப்பை கண்ணை மூடுகிற மாதிரி உதடு நாக்கும் பல்லும் தெரியாமல் மூடுகிறதென்றாலும் இவற்றுக்குள் வித்யாஸமும் இருக்கிறது. கண்ணின் கார்யமான பார்வை என்பதில் ரப்பைக்கு வேலையேயில்லை. பார்வையை மறைப்பதற்கே ஏற்பட்டது அது. உதடு அப்படியில்லை. பேச்சு என்ற கார்யத்திலேயே நேராக நிறையப் பங்கு எடுத்துக் கொள்வது அது. நாக்கு, பல், உதடு, மூன்றுமே சேர்ந்துதான் பேச்சு என்பதை உண்டாக்கும் கருவியான வாய். ‘ப’, ‘ம’ முதலான சப்தங்கள் உதட்டாலேயே முக்யமாக உண்டாவதால் ‘ஓஷ்ட்யம்’ என்றே அவற்றுக்குப் பெயர். இங்கிலீஷிலும் ‘lip’ – ஐ வைத்து ‘labial’ என்கிறார்கள். நமக்கெல்லாம் வாயின் அங்கமான உதடு எப்போதும் வெளியே தெரிகிறது.
யானை ஒன்றுக்குத்தான் வாயை மூடிக்கொண்டு தும்பிக்கை இருக்கிறது. வாயைக் கையால் பொத்திக்கொள்வது அடக்கத்திற்கு அடையாளம். நாம் கையை மடித்துக் கொண்டுபோய் ஒரு கார்யமாக வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யானைக்கானால் ஸ்வாபாவிகமாகவே [தன்னியற்கையாகவே] அதற்குக் கையின் ஸ்தானத்தில் உள்ள தும்பிக்கை வாயை ஸதாவும் மூடிக் கொண்டிருக்கிறது! தும்பி என்றால் யானை. அதன் கை தும்பிக்கை. தும்பிக்கையால் ஆஹாரத்தை எடுத்து அது வாய்க்குள்ளே போட்டுக் கொள்கிறபோதும், தும்பிக்கையை உசரத் தூக்கிக் கொண்டு பிளிறுகிறபோதும் மட்டுந்தான் அதன் வாயைப் பார்க்க முடியும். இப்படிப் பட்ட வாய்க்காரராகப் பிள்ளையார் இருப்பதில் பெரிய தத்வார்த்தம் இருக்கிறது. எத்தனை வித்வத் இருந்தாலும் வொட வொடவென்று விஷயங்களைக் கொட்டி வாதம் பண்ணிக் கொண்டிருக்காமல், அவசியமான ஸமயம் தவிர மற்ற காலங்களிலெல்லாம் வாயை மூடிக் கொண்டிருப்பது தான் நிஜமான வித்வானின் லக்ஷணம் என்று காட்டவே தும்பிக்கையால் வாயை மூடிக் கொண்டிருக்கும் கஜ ரூபத்தில் இருக்கிறார். அத்தனை வித்வத்துக்கும் முடிவு மௌனம்தான் என்று காட்டுகிறார்.
விக்நேச்வரர் நிஜமான ஸுமுகர்.