அடுத்தாற்போல், “ஏகதந்தர்”. “ஸுமுகச்-சைகதந்தச்ச” . இரண்டாவது பேர் ஏகதந்தர். அப்படியென்றால் ஒரே தந்தமுடையவரென்று அர்த்தம். “ஒற்றைக் கொம்பன்”. பொதுவாக ஆண் யானைக்கு இரண்டு கொம்பு இருக்கும். பெண் யானைக்குக் கொம்பே கிடையாது. இவருக்கோ ஒரே கொம்பு.
முதலிலே இவருக்கும் இரண்டு [கொம்பு] இருந்து, அப்புறம் வலது பக்கம் இருப்பதை இவரே ஒடித்துக் கொண்டு விட்டார். அதை விக்ரஹங்களில் வலது பக்கக் கீழ்க் கையில் வைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
ஏன் ஒடித்துக்கொண்டார்? புராண ரீதியில் இரண்டு கதை சொல்கிறார்கள்.
வியாஸர் பாரதம் சொல்கிறபோது அதை உடனே விக்நேச்வரர் அவஸரமாக ஹிமாசலப் பாறைகளில் எழுத வேண்டியிருந்ததென்றும், அப்போது எழுத்தாணிக்காகத் தேடிக்கொண்டு ஓடாமல் தந்தங்களில் ஒன்றையே முறித்து அதனால் எழுதினாரென்றும் ஒரு கதை. அறிவு வளர்ச்சிக்காகத் தம்முடைய பஹு அழகான அங்கத்தை — யானையின் அங்கங்களுக்குள்ளேயே ‘இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்று ரொம்பவும் மதிப்புள்ளதாயிருப்பதை — உயிரோடு இருக்கும் போதே தியாகம் செய்த உத்தம குணத்தைக் காட்டும் கதை.
இன்னொரு கதை, மற்ற எந்த அஸ்திரத்தாலும் வதம் பண்ண முடியாத கஜமுகாஸுரனைத் தம்முடைய ஒரு தந்தத்தையே முறித்து ஆயுதமாக்கிப் பிரயோகித்து வதம் பண்ணினாரென்பது. லோக ரக்ஷணத்துக்காக “என்பும் உரியர் பிறர்க்கு” என்று காட்டிய கதை. ஸாதாரணமாக அந்தக் குறளுக்கு ததீசியைத்தான் த்ருஷ்டாந்தம் காட்டுவார்கள்*. தந்தமும் யானையின் எலும்புதான். அதனால் பிள்ளையாரும் ‘என்பும் பிறர்க்கு உரிய’ரான ‘அன்புடையார்’ தான்!
*வ்ருத்ராஸுரனை இந்திரன் வதம் செய்யும் பொருட்டு வஜ்ராயுதம் தயாரிப்பதற்காக ததீசி முனிவர் தமது முதுகெலும்பையே ஈந்தார்.