இருவேறு சாராருக்கு இருவேறு வழிகள் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

[தோன்றுவது] நியாயந்தான். எத்தனைதான் ஞானோபதேசம் செய்தாலும், ‘அத்வைதா’ கான்ஃபரன்ஸ்கள் நடத்தினாலும், இலவசமாகவோ மலிவு விலையிலோ. [அவ்விஷயமாகப்] புஸ்தகங்கள் போட்டாலும் அதற்காகப் பண்ணும் தடபுடலில் கூட்டம் கூடுமே தவிர, புஸ்தகங்களுக்கும் நல்ல ‘டிமான்ட்’ இருக்கக் கூடுமே தவிர, கார்யத்தில் எடுத்துக் கொண்டு அநுஷ்டானம் பண்ணுகிறவர்கள் ரொம்பவும் அபூர்வமாகத்தான் இருப்பார்கள். ‘ஆயிரத்தில் ஒருத்தன்தான் முயற்சி பண்ணுவான்; அதிலேயும் எவனோ ஒருத்தன்தான் விடாமல் பண்ணி ஸித்தி அடைவான்’ என்று பகவானே சொல்லியிருக்கிறார் 1. மாயா நாடகம் அப்படித்தான் நடக்கிறது! பூர்வ ஸம்ஸ்கார பலம் நன்றாக உள்ள அபூர்வப் பிறவிகளைத் தவிர மற்றவர்கள் மனஸின் இழுப்புக்களிலிருந்தும், கார்ய அரிப்பிலிருந்தும் விடுபட முடியாதவர்களாக, விடுபடணும் என்று கொஞ்சம் ஸீரியஸாக நினைக்கக்கூட முடியாதவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

அதனால் பகவான் கர்மாவுக்கு மாத்திரமே அதிகாரமுள்ளவர்களாக இந்த சாரார் என்றும், ஞான மார்க்கத்திற்கு அதிகாரிகளாக வேறே – அபூர்வப் பிறவிகளான – அந்த சாரார் என்றும் நன்றாகவே பௌன்டரி கட்டி இரண்டாகப் பிரித்துத்தான் கீதோபதேசம் செய்திருக்கிறார். அது மாத்திரமில்லை. தாம்தான் இப்படிப் பிரித்தது என்றில்லாமல் பூர்வத்திலேயே இப்படி இரண்டு சாராருக்கு இரண்டு மார்க்கங்களாகப் பிரித்துப் போட்டு வைத்திருக்கிறது என்கிறார்2. “புரா ப்ரோக்தா” என்கிறார். “புரா” என்றால் பூர்வகாலத்தில், ஆதியில் என்று அர்த்தம். ‘புராணம்’ என்பதில் வரும் ‘புரா’. ஆதி சாஸ்திரமான வேதத்திலேயே இப்படி பிரித்துவிட்டதைத்தான் “புரா ப்ரோக்தா” என்கிறார். ‘ப்ரோக்தா’ என்றால் ‘நன்றாகச் சொல்லப் பட்டது’ என்று அர்த்தம். ஈச்வரன்தான் வேதங்கள் வழியாக இப்படி உபதேசம் கொடுத்ததால், “பூர்வ காலத்தில் என்னால் இப்படிச் சொல்லப்பட்டது” – “புரா ப்ரோக்தா மயா” என்கிறார். என்ன இரண்டு மார்க்கங்கள் என்றால்,

ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்.

ஞானயோகம், கர்ம யோகம் என்று இரண்டு [மார்க்கங்கள்] .

ஞானயோகம் என்பதுதான் நம் ‘டாபிக்’கான அத்வைத ஸாதனை. அது உசந்த ஸம்ஸ்காரமுள்ள சில பேருக்கே. அவர்களை ஸாங்க்யர், ஸாங்க்யர் என்று பகவான் சொல்வார். இதற்குப் பல தினுஸாக அர்த்தம் பண்ணுவதுண்டு. எனக்கு ஒன்று வேடிக்கையாகத் தோன்றுகிறது. ‘ஸங்க்யை’ என்றால் எண்ணிக்கை. பாபுலேஷனை ‘ஜன ஸங்கி்யை’ என்கிறோமல்லவா? அதனால், ஸுலபமாக எண்ணிவிடக்கூடிய அளவுக்கே இருப்பவர்கள் ‘ஸாங்க்யர்’கள் என்று ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தோன்றுகிறது! இவர்களுக்கானது, இவர்களுக்கு மாத்திரமே ஆனது ஞானயோகமாகிற அத்வைத ஸாதனை, மற்ற எல்லோருக்குமானது கர்மயோகம்.

கர்மத்தை ப்ரவருத்தி என்றும், ஞானத்தை நிவ்ருத்தி என்றும் சொல்வது. இரண்டையும் நன்றாகப் பிரித்து வைத்து மநு – நமக்கு தர்மங்களைச் சொல்வதில் தலைமையான சாஸ்திரத்தைக்கொடுத்தவர் – “ப்ரவருத்தம் ச நிவ்ருத்தம் ச த்விவிதம் கர்ம வைதிகம்”3 என்று சொல்லியிருக்கிறார். இரண்டு விதமான மனப்பக்குவமும் ஸம்ஸ்காரமும் உள்ளவர்களுக்கு எனக் கர்மம், ஞானம் என்று இரண்டு வெவ்வேறு மார்க்கங்கள் என்று இவர்கள் சொன்னதையேதான் ப்ரஹ்ம ஸுத்ரத்திலும் “விபாக: சதவத்4 என்று சொல்லியிருக்கிறது. நூறு ரூபாயை இரண்டாக ஐம்பது ஐம்பது ரூபாய் என்று விபாகம் பண்ணி இரண்டு பேரிடம் கொடுக்கிற மாதிரி ஆத்மாவுக்கான வழியை கர்மம், ஞானம் என்று இரண்டாக விபாகம் பண்ணி இரண்டு விதமான அதிகாரிகளிடம் கொடுத்திருப்பதைத்தான் அப்படிச் சொல்லி இருக்கிறது. இது ப்ரஹ்ம ஸுத்ரத்தில் முக்கால்வாசிக்கு அப்புறம் வருகிற விஷயம். ஆரம்பம், பொட்டில் குட்டிக்கொள்கிற முதல் ஸுத்ரமே இந்த ஸமாசாரத்தைத்தான் தெரிவிக்கிறது.

அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா

[என்பது அச் சூத்திரம்] “அத அத:ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா”- “அப்புறம், இனிமேல் ப்ரஹ்ம விஷயமாக ஆலோசனை [பண்ணுவோம்]” என்று அர்த்தம். எடுத்தவுடனே “அப்புறம்”! எதற்கப்புறம் என்பதை ஆசார்யாள் பாஷ்யத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். முதல் ஸ்டேஜான கர்ம மார்க்கத்தில் ஸித்தி பெற்று, அப்புறம் ஞான மார்க்கத்தில் நாம் பார்க்கவிருக்கிற இரண்டாம் ஸ்டேஜின் ஸாதனங்களை எல்லாம் பண்ணிய அப்புறம் குருமுகமாக ஸந்நியாஸமும் மஹா வாக்ய உபதேசமும் பெற்று ஆத்ம விஷயத்திற்கே தன்னை whole time அர்ப்பணம் பண்ணிக் கொள்ளும் கட்டம் வருகிற ஸமயத்தில் ப்ரஹ்ம விஷயமாக ஆலோசனை பண்ணலாம் என்று அர்த்தம் பண்ணியிருக்கிறார்.

இங்கே கூடியிருக்கிற பேரெல்லாம் – ஒன்றிரண்டு பேர் விலக்கு இருக்கலாம்; மற்றவர்கள் – கர்ம யோகத்துக்கு அதிகாரிகள்தான். கர்மாவை விட முடியாதவர்கள்தான். “ஸரி, விடாமல், கர்மாவே பண்ணு. ஆனால் பலன், பலன் என்று அதே குறியாக, அதே இச்சையாக இல்லாமல் இது ஸ்வதர்மம், கடமை என்பதற்காக் பண்ணு. பலன் ஸமாசாரத்தை பலதாதாவான ஈச்வரனிடம் விட்டு விடு” என்று சொல்லி இருப்பதுதான் கர்மயோகம்.

இப்படி நிஷ்காம்ய [பற்றில்லாமல்] கர்மம் பண்ணியதில் மனஸ் சுத்தமான அப்புறமே ஒருவன் ஞாநயோகத்திற்கு தகுதி பெறுகிறான். கீதைக்கு ஆசார்யாள் பண்ணியிருக்கும் பாஷ்யத்தில் இதை ஸ்பஷ்டமாகத் தெரியப்படுத்தி இருக்கிறார். இந்தக் காலத்தில் பல பேர் – திலகர், காந்தி முதலானவர்கள் – கர்ம யோகமே நேரடி ஸாதனமென்பதுதான் கீதா தாத்பர்யம் என்று சொன்னாலும், அப்படியில்லை என்றே ஆசார்யாள் காட்டியிருக்கிறார். அந்த விஷயம் இப்போது நமக்கு வேண்டாமானாலும், [சிரித்து] தெரியாத்தனமாக அதைத் தொட்டுவிட்டதால் கொஞ்சம் ‘க்ளியர்’ பண்ணி விடுகிறேன்.

“ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:”- ‘ஒரு மநுஷ்யன் ஸ்வதர்மமாக ஏற்பட்ட கர்மாவை ஈச்வரார்ப்பணமாகப் பண்ணி ஸித்தி அடைகிறான்’ என்று கீதை கடைசி அத்யாயத்தில் வருகிறது5. இங்கே ‘ஸித்தி’ என்று வருவதை மோக்ஷ ஸித்தி என்று அர்த்தம் பண்ணிக்கொண்டே, கர்மயோகமே மோக்ஷத்திற்கு அந்தரங்க [நேரடி] ஸாதனம் என்று சொல்கிறவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஆசார்யாள், “இங்கே சொன்ன ஸித்தி ஞான யோகத்தில் போவதற்கான யோக்யதா ஸித்தியைத்தான் குறிக்கும்; அதாவது கர்ம யோகத்தின் முடிந்த முடிவான பலனாக ஒருவன் பெறும் ஸித்தி என்பது இதுவரை கர்ம பலனை மட்டும் விட்ட அவன் இனிமேல் கர்மத்தையே அடியோடு விட்டு ஸந்நியாஸியாகி ஞான யோகத்தில் ப்ரவேசித்து ஸதாவும் ஆத்ம விசாரம் செய்வதற்கான யோக்யதையைப் பெறுவதுதான்” என்று விளக்கியிருக்கிறார். முன்னே பின்னே அவர் தொடர்ச்சி காட்டி ஆணித்தரமாக வாதம் பண்ணியிருப்பதில் அதுதான் ஸரி என்று உறுதிப்படுகிறது. கீதையில் அங்கங்கே கர்ம யோகத்தை ரொம்பவும் சிறப்பித்து, ச்லாகித்துச் சொல்லியிருப்பதெல்லாம் “அர்த்தவாதம்” என்பதைச் சேர்ந்தது என்றும் ஆசார்யாள் கூறியிருக்கிறார். நம்மை உத்ஸாஹப்படுத்தி ஒரு வழியில் போகப் பண்ணுவதற்காக அதை ‘ஒஹோ’ என்று புகழ்வதுதான் அர்த்தவாதம். குழந்தை அரிச்சுவடி படிக்கமாட்டேன் என்கிறது. ‘படித்தால்தானே நீ ராஜா ஆகலாம்?’ என்று சொல்லி அதை உத்ஸாஹபடுத்துவது அர்த்தவாதம். நல்ல எண்ணத்தில், நல்ல உத்தேசமத்தில் மிகைபடுத்திகச் சொல்வது. “ஞானந்தானே மோக்ஷத்திற்கு நேர்வழி” நாம் அதற்கு லாயக்கில்லாமல் கர்மாவையே கட்டியழ வேண்டியிருக்ககே!’ என்று க்லேசப்படுகிறவனிடம், ‘அப்படியெல்லாம் குறைத்து நினைக்காதேயப்பா! இந்தக் கர்மயோகமே இதுவாக்கும், அதுவாக்கும், இப்படியாகப்பட்ட பலன்களை தருமாக்கும்’ என்று சொல்லி அவனுக்கான வழியில் அவனை உத்ஸாஹமாகப் போகப் பண்ணவே பகவான் உசத்திச் சொல்லியிருக்கிறார். ஆனாலும் ஞானியைப் பற்றிச் சொல்லும்போதுதான், “ஞாநீ த்வாத்மைவ மே மதம்6: ஞானி என்பவன் நானேதான் என்பது என் உறுதியான தீர்மானம்”, “ஞானிகள் என்னுடைய தன்மையையே அடைந்துவிட்ட மத்பாவமாகதா:7” என்றெல்லாம் யதார்த்தமாகச் சொல்கிறார்.

நன்றாக எல்லை கட்டி ஸாங்க்யர்களுக்கு ஞானயோகம், யோகிகளுக்குக் கர்ம யோகம் என்று பகவான் வாக்கிலேயே இருக்கிறது.

கர்ம யோகத்திற்கு உரிய அதிகாரிகளை பகவான் ‘யோகி’ ‘யோகி’ என்றே சொல்வார். யோகி என்றால் நாம் ரொம்ப உசந்த நிலையில் மூச்சையடக்கி, மனஸையடக்கி உட்கார்ந்திருப்பவனை நினைக்கிறோமென்றால், அவர் ஞானத்திற்கு பக்குவம் போதாதவன் என்பதால் கர்மாவிலேயே ஒரு நல்வழியில் செலுத்தப்படுகிறவனை ஏன் இப்படிச் சொன்னார்? இதற்கும் எனக்குப் புதுசாக ஒரு அர்த்தம் தோன்றுகிறது. ‘யோகம்’ என்றால் ‘சேர்வது’ ‘சேர்க்கை’ என்பதே நேர் பதப்பொருள். ‘சேர்வது’ என்றால் இரண்டு வஸ்து இருக்க வேண்டும். குறைந்த பக்ஷம் இரண்டு. அதற்கு மேல் மூன்று, நாலு, எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படியிருந்தால்தான் ஒன்றோடொன்று சேர்ந்து, சேர்க்கையாகிற ‘யோகம்’ ஏற்பட முடியும். ஒரே வஸ்துதான் இருக்கிறது எனும்போது அங்கே சேர்க்கைக்கு இடமேயில்லை. அது அதுவாக இருக்கிறது. சேருவதற்கு வெளி வஸ்து இல்லை. இப்படிப் பார்த்தால் ‘யோகி’ என்கிறவன் இன்னொன்றைச் சேர்ந்தே, சார்ந்தே இருக்கக்கூடிய த்வைதி, அதாவது த்வைதமான மாயா லோகத்திலேயே உழப்பறிந்து கொண்டிருப்பவன்; தனியாய், தானாய் நிற்கக்கூடிய அத்வைதியில்லை என்று அர்த்தம் ஏற்படுகிறது.[சிரிக்கிறார்.] விளையாட்டாகச் சொன்னது! வித்வான்கள், விஷயம் தெரிந்தவர்கள் தப்பாக நினைக்கக்கூடாது……

நம்மைப் போன்ற பெரும்பாலான ஜனங்கள் கர்ம ஸங்கிகளாக [கர்மத்தில் பற்றுள்ளவர்களாக] இருப்பவர்கள் தான். நம்மால் ரொம்பவும் அதிகபக்ஷமாகச் செய்யக்கூடியது, பலனில் பற்றில்லாமல் கர்மாக்களைச் செய்வதுதான். அதுவே ரொம்ப ச்ரமம். ஏதாவது ஒரு பலனுக்காகத்தான் நாம் உழைக்கிற உழைப்பெல்லாம். அப்படியிருக்கும்போது பலனை நினைக்காமல் கர்மா பண்ணுவது என்பதே பஹு ச்ரமந்தான். அதற்கும் மேலே ஒருபடி போய் — அந்த ஒரு படியே ஒரு மாடி உசரம்!: அதற்கு எகிறிப் போய் — கர்மாவையே அடியோடு விட்டுவிட்டு, த்யானம் மாத்திரம் ஸதாவும் பண்ணிக் கொண்டிரு என்றால் என்ன ப்ரயோஜனம்? கர்ம ஸங்கிகளிடம் பகவான், ‘ஆத்ம விஷயமாக நீ ஒன்றுமே பண்ண வேண்டாம். கர்மாவை யோகமாகப் பண்ணிகொண்டு போவதோடேயே நின்றுகொள். அதனால் சித்த சுத்தி வருகிறபோது வரட்டும். அதற்கப்புறம் நீ ஞான விஷயமாக ப்ரவேசித்தால் போதும்’ என்று சொல்கிற ரீதியில்தானே, ‘ஸாங்க்யர்களுக்கு அது; உனக்கு இது’ என்று இரண்டு பாதையாகப் போட்டுக் கொடுத்திருக்கிறார்? ஒரு பாதையில் போகிறவன், அதிலேயே ஸரியாகப் போகமுடியாமல் திண்டாடுகிறவன், எட்டாத இன்னொரு பாதையைப் பற்றித் தெரிந்துகொண்டு என்ன ப்ரயோஜனம்? [சிரித்து] சுருக்கமாக, இப்போது இந்த உபந்நியாஸத் தலைவலி எதற்காக?

சொல்கிறேன்:


1 கீதை vii.3.

2 கீதை iii.3

3 மநுதர்ம சாஸ்திரம் XII.88

4 III.4.11

5 ச்லோ. 46

6 VII.18

7 IV.10

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is ஸந்நியாஸிக்கானதை ஸகலருக்கும் சொல்வானேன் ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  ஸகலருக்கும் சொல்வதன் காரணம்
Next