ஸந்நியாஸிக்கானதை ஸகலருக்கும் சொல்வானேன் ? : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அசடு, பைத்தியம் என்று நான் என்ன பட்டம் கட்டினாலும் உங்களுக்குள் ஒரு கேள்வி எழும்பலாம்? “யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் அசட்டுப் பட்டம் கட்டினால் என்ன அர்த்தம்? ப்ரத்யக்ஷமான நடைமுறையை புரிந்து கொள்ளாமல் ஒருத்தர் பேசினால் அது மட்டும் சமர்த்தைச் சேர்ந்ததா என்ன?” என்று கேட்கத் தோன்றலாம். “சாச்வத சாந்தி என்றால் ஆசையாய்தான் இருக்கிறது. ஆனாலும் அதற்கானதை மூன்றாம் ஸ்டேஜில் செய்வதற்கு ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டால்தான் முடியுமென்றால், நடைமுறைக்கு ஸரிபட்டு வரவேயில்லையே! அதற்கு நாம் ரெடி இல்லையே! அதற்கு நாம் பக்குவமும் ஆகவில்லையே! சாந்தி அடைவதற்காகவே, ‘உறவையெல்லாம் விடு. வேலையை விடு. வீட்டை விட்டு ஒடு’ என்றாலும் இதையெல்லாம் விட்டு விட்டுப் பராரியாக நின்றால் என்ன ஆகுமோ, என்ன ஆகுமோ என்ற பயத்தில் இருக்கிற சாந்தியும் போய்விடும் போல அல்லவா தோன்றுகிறது? நமக்கு இருக்கப்பட்ட ஆசாபாச இழுப்பிலே [ஸந்நியாஸ] ஆச்ரமம் வாங்கிக் கொண்டால், அதற்கு ஏற்றபடி கொஞ்சமாவது நடத்திக்காட்ட முடியுமா? தப்புப் பண்ணும்படிதானே ஆகும்? அந்த ஆச்ரமத்திலிருந்து கொண்டு அப்படிப் பண்ணினால் மஹா பெரிய அபசாரமாகிவிடுமே! நம்மையே நாம் ஏமாற்றிக்கொண்டாலொழிய இப்பவே ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு அதற்கேற்றபடி வாழமுடியுமென்று நினைக்க இடமுண்டா? சொல்கிறவரும் நாமெல்லாரும் ஸந்நியாஸியாகி ஸதாகால ஆத்மவிசாரம் ஆரம்பிக்க முடியுமென்று நினைக்கிற அளவுக்கு அசடாயிருக்க மாட்டாரே! [சிரித்து] அந்த அளவுக்கு அசடாயிருக்க மாட்டாரே! பின்னே எதற்காக வ்ருதாவாக நம்மையெல்லாம் இங்கே கட்டிப் போட்டு, வேலை மெனக்கெட்டு, நம் வேலையையும் கெடுத்துக்கொண்டு லெக்சர் அடிக்கிறார்?” என்று தோன்றலாம். அதாவது, ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளும் உத்தேசமும் அதற்கான பக்குவமும் உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டியதை ஸகல ஜனங்களுக்கும் எதற்காகச் சொல்ல வேண்டும் என்று தோன்றலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is உச்ச கட்ட ஸாதனை துறிவக்கே !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  இருவேறு சாராருக்கு இருவேறு வழிகள்
Next