மூன்றாவது அங்கத்திற்கு “சமாதி ஷட்க ஸம்பத்தி” என்று பெயர். நாலாவது “முமுக்ஷுத்வம்”.
“சமாதி ஷட்க ஸம்பத்தி” என்பதிலேயே ஆறு அங்கங்கள்: “சமம்”, “தமம்”, “உபரதி”, “திதிக்ஷை”, “ச்ரத்தை”, “ஸமாதானம்” என்று. இவற்றில் ‘ச்ரத்தை’ என்ற ஒன்றுதான் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கும். அதுவுங்கூட அவ்வளவு ஸரியான அர்த்தத்தில் இல்லாமல் என்று முன்னேயே சொன்னேன். “கர்ம ச்ரத்தையா வந்து கோழி (கோள்) மூட்டிட்டுப் போனான்” என்ற மாதிரி சொல்லும் போது ‘ரொம்பவும் அக்கறையுடன், ஈடுபாட்டுடன்’ என்ற அர்த்தத்தில் ‘ச்ரத்தை’ என்கிறோம். அது ஸரியில்லை. த்ருடமான நம்பிக்கைதான் ச்ரத்தை, ஆஸ்திக்யம்தான் ச்ரத்தை, சாஸ்த்ரங்களும் குருவும் சொல்கிறதை முழு மனஸுடன் நம்புவதுதான் ச்ரத்தை என்று சொன்னேன். “ஸமாதானம்” என்ற ஒன்று ஆறில் சொன்னேனே, அதற்கும் அர்த்தம் தெரியுமென்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நீங்கள் அர்த்தம் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது வேறே, நான் சொல்லப் போகிற அர்த்தம் வேறே. (சமாதி) ஷட்க ஸம்பத்தியில் அடங்கும் ஆறு விஷயங்களுக்கு ஒவ்வொன்றாக அர்த்தம் சொல்லும்போது கடைசியில் அதைச் சொல்கிறேன். [சிரித்து] காக்க வைத்து, எதிர்பார்க்க வைத்துச் சொன்னால் இன்டரஸ்ட் ஜாஸ்தியாகும்; அதனால் மனஸிலும் நன்றாகப் பதியும். டின்னர்களில்கூட சாப்பாட்டு வகையறாக்களைக் கண்களில் காட்டுவதற்கு முன்னாடியே ‘மெனு’ என்று பேர்களை மட்டும் கொடுத்து விடுகிறார்கள் அல்லவா? அப்படி முதலில் சமாசாரங்களை எக்ஸ்ப்ளெய்ன் பண்ணாமல் – அஸலாகப் பரிமாறாமல் – மெனு மாதிரி பேர் லிஸ்ட் மட்டும் கொடுத்து விடுகிறேன்: சமம், தமம், உபரதி, திதிக்ஷை, ச்ரத்தை, ஸமாதானம். தெரியாத சாப்பாட்டு வகையறாப் பெயர்களோடு மெனு கொடுத்தால் அது என்ன, எப்படி ருசிக்கும் என்பதில் இன்ட்ரஸ்ட் கூடுதலாக ஆகும். அந்த மாதிரி கொடுத்திருக்கிறேன்.
சமாதி ஷட்க ஸம்பத்தி
சமாதி; ஸமாதி இல்லை. சங்கரர், சட்டை என்பதில் வரும் ‘ச’. ஸ-ரி-க-மவில் வரும் ‘ஸ’ இல்லை.
சம+ஆதி = சமாதி. ‘சமம் முதலான’ என்று அர்த்தம். ‘ஷட்க’- ஆறு ஸமாசாரங்கள் ஒன்று சேர்ந்த அமைப்பு. ‘ஸம்பத்தி’ என்றால் ஸம்பத்துதான்; செல்வம். பொருட்செல்வம் மாதிரி ஆத்மிகமான செல்வம். ‘சமாதி ஷட்க ஸம்பத்தி’ என்றால் சமம் முதலான ஆறு அம்சங்கள் கொண்ட ஆத்மிகச் செல்வம்.
என்ன அந்த ஆறு?
முதலில் ‘சமம்’. அப்புறம் ‘தமம்’. மூன்றாவது ‘உபரதி’நாலாவது ‘திதிக்ஷை’. ஐந்தாவது ‘ச்ரத்தை’. கடைசியில் ‘ஸமாதானம்’ஆறாவது.
‘சமாதி’: ‘சமம் முதலான’ என்று ஆறையும் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். அவர் பாஷ்யம் செய்துள்ள ப்ரஹ்ம ஸுத்ரத்தின் மூலத்தில் ‘சம தமாதி’: ‘சமம், தமம் முதலான’ என்று இருக்கிறது: “சம தமாதி உபேத ஸ்யாத்”1. ஞானம் பெறுவதற்கு ஒருவன் சமம், தமம் முதலானவற்றோடு கூடியவனாயிருக்க வேண்டும் என்று அர்த்தம். “அப்படித்தான் விதி – தத் விதே:” என்றும் (ப்ரஹ்ம ஸுத்ரம்) சொல்கிறது. யார் விதி பண்ணியது என்றால், வேறே யார்? வேதம்தான். ஈச்வரனேதான் வேதங்கள் வழியாக விதி போட்டிருக்கிறார்.
சமதமாதிகளைக் கைக்கொள்ள வேண்டுமென்று வேதத்தில் எங்கே விதி இருக்கிறதென்றால் – ப்ருஹதாரண்யகோபநிஷத்தில் ஜனகருக்கு யாஜ்ஞ்யவல்க்யர் உபதேசம் பண்ணுகிற இடத்தில்2 ஞானி “சாந்தனாக (சமத்தை உடையவனாக), தாந்தனாக (தமத்தை உடையவனாக), உபரதனாக (உபரதி உடையவனாக) திதிக்ஷுவாக (திதிக்ஷை உடையவனாக), ஸமாஹிதனாக (ஸமாதானமுடையவனாக) இருப்பான்” என்று சொல்கிறார். அப்படிச் சொன்னால் இவற்றை அப்யாஸம் பண்ணி அடைந்தவன்தான் ஞானி ஆகமுடியும், ஞானம் பெற முடியும் என்றுதானே அர்த்தம்? இங்கே ‘ச்ரத்தை’ தவிர பாக்கி ஐந்தும் சொல்லியிருக்கிறது. இங்கே சொன்ன ஆர்டரிலேயேதான் பின்னாடி ஆசார்யாள் அவற்றை வைத்திருக்கிறார். ச்ரத்தைதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. ச்ருதியில் வேறு பல இடங்களில் அதை விதித்திருக்கிறது. அதனால் அதையும் சேர்த்துக் கொண்டது. இப்படி சமம் முதலான ஆறு.
1 III.4.27
2 IV.4.23