‘சமம் – தமம் ‘ : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சமம் என்பது என்ன?

வ்ரஜ்ய விஷய வ்ராதாத் தோஷ-த்ருஷ்ட்யா முஹுமுஹு:|

ஸ்வலக்ஷ்யே நியாதாவஸ்தா மனஸ: சம உச்யதே||1

– இது [‘சம’த்துக்கு] ஆசார்யாள் கொடுத்திருக்கும் லக்ஷணம்.

சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் என்பதாக ஐம்புலன்களும் அநுபோகம் செய்ய விரும்புகிற எல்லாக் கூட்டமும் ‘விஷய வ்ராதம்’ எனப்பட்டிருக்கிறது. விவேகத்தாலும் வைராக்யத்தாலும் அடிக்கடி அலசிப் பார்த்து இவை யாவும் ஆத்மாவுக்கு ஹானியே செய்கின்றன என்று தெரிந்து கொண்டு வெறுத்துத் தள்ளுவதை ‘முஹு முஹு: தோஷ த்ருஷ்ட்ய விரஜய்’ என்கிறார். ‘முஹு முஹு:’ – அடிக்கடி; ‘தோஷ த்ருஷ்ட்யா’- விஷயாநுபோகத்திலுள்ள தோஷத்தைப் பார்ப்பதால்; ஆத்மாவுக்கு அவை ஹானி செய்வதால் தோஷமானவை என்று தெரிந்து கொண்டு பார்ப்பதால்; ‘வி்ரஜ்ய’- வெறுப்படைந்து….

மனஸ் ஸதாவும் இன்பம் என்று நினைக்கும் விஷயங்களை நினைத்து நினைத்துதான் நிலை கொள்ளாமல் அலைபாய்ந்தபடி இருக்கிறது. அதனால்தான் நமக்கு சாந்த ஸெளக்யம் இன்னவென்று தெரியவில்லை. விஷயங்களில் தோஷ த்ருஷ்டி உண்டாகி அவற்றை வெறுத்து ஒதுக்கி விட்டோமானால் அப்புறம் மனஸை சாந்த ஸெளக்ய ஸ்வரூபமான, ஆத்மா என்பதான, ஸாதனையின் லக்ஷ்யத்தில் நிறுத்தலாம். அதாவது நானா விஷயங்களுக்காக ஆலாப் பறந்து கொண்டு நாலா திசையிலும் ஒடுகிற மனஸை அப்படி ஒடாமல் அடக்கி லக்ஷ்யம் ஒன்றிலேயே நிறுத்தலாம். அப்படி அடக்குவதற்குப் பேர்தான் சமம்.

‘விஷய வ்ராத’த்திலிருந்து உண்டாகும் தோஷத்தை அடிக்கடி நினைத்துப் பார்த்து அவற்றைத் தள்ளி – அப்புறம், ‘ஸ்வலக்ஷ்யே’- தன்னுடைய லக்ஷ்யத்தில் ‘மனஸ: நியத அவஸ்தா’ – மனஸைக் கட்டுப்படுத்திய நிலையில் வைத்திருப்பது, ‘சம உச்யதே’- சமம் என்று கூறப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால், மனஸை அடக்குவதே சமம்.

‘விஷய’ங்களைப் பற்றி மனஸ் படர்வதற்குக் காரணம் பழைய அநுபோகத்தின் சுவடு (நெடி, வாஸனை என்பது) ஜன்மாந்த்ரமாக அதற்கு இருப்பதுதான். அந்த ஜன்மாந்த்ர வாஸனை ஸ்தூல சரீரம் செத்துப்போன அப்புறமும் ஸுஷ்ம சரீரத்துக்குள் இருந்து கொண்டேயிருந்து, மறுபடி உயிர் இன்னொரு சரீரத்தில் ப்ரவேசித்துப் புனர்ஜன்மா எடுக்கும்போது, மீளவும் தன்னுடைய வேலைத்தனத்தை ஆரம்பித்து விடுகிறது! ஆகையால் அந்த வாஸனைகளை அடியோடு விட்டு விட்டால் மனஸ் தானாக அடங்கிப் போகும். ‘சம’த்துக்கு டெஃபனிஷனே இப்படித்தான் ‘அபரோக்ஷாநுபூதி’யில் கொடுத்திருக்கிறார். (சற்று முன் சொன்னது ‘விவேக சூடாமணி’ டெஃபனிஷன்.)

ஸதைவ வாஸநா -த்யாக: சமோ (அ) யமிதி சப்தித: 2

‘வாசனை எனப்படும் போகானுபவத் தூண்டுதல்களை ஸதாகாலமும் விடோழிப்பது சமம் எனப்படும்’

மனஸை அடக்குவது சமம் என்று புரிந்து கொண்டால் போதும்.

அடுத்தாற்போல் வரும் “தமம்” என்பது புலன்களை அடக்குவது. ‘சம’த்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால் மனஸடக்கமும், புலனடக்கமும் ஒன்றோடொன்று கைகோத்துக் கொண்டு வருவதால் ‘தம’த்தைப் பற்றியும் ‘பேஸி’க்காக சொல்லி விட்டு, அப்புறம் இரண்டையும் சேர்த்துக் கொஞ்சம் விஸ்தாரம் செய்கிறேன்.

புலன் என்பது இந்த்ரியம். கர்மேந்த்ரியம் ஐந்து. ஞானேந்த்ரியம் ஐந்து. கார்ய ரூபத்தில் ஒன்றைச் செய்ய சக்தி வாய்ந்தவை கர்மேந்த்ரியங்கள். கையினால் அநேக கார்யங்களைச் செய்கிறோம். ‘கரம்’ – ‘கார்யம்’ என்ற வார்த்தைகளே செயல் பண்ணுவதில் அந்த அவயத்திற்கு உள்ள முக்யத்தைக் காட்டுகின்றன. அது ஒரு கர்மேந்த்ரியம். காலால் நடந்து, ஓடி, குதித்துக் கார்யம் செய்வதால் அதுவும் ஒரு கர்மேந்த்ரியம். வாயால் பேசுகிறோம், பாடுகிறோம். ஆகையால் அதுவும் ஒரு கர்மேந்த்ரியங்களில் ஒன்றாகிறது. இன்னம் இரண்டு அவயங்கள் விஸர்ஜனம் செய்ய இருக்கின்றன. அவை ஒரு மநுஷ்ய உடம்பிலிருந்து கழிவடைகளையும், வீர்யத்தையும் தள்ளுகின்றன. இந்த ஐந்தும் கர்மேந்த்ரியங்கள்.

இப்படித் தானே ஒரு கார்யத்தை உண்டாக்கிப் பண்ணுவது என்றில்லாமல் வெளியே இருக்கிற ஒன்றை அறிந்து அநுபோகம் பண்ணுவதாக உள்ள இந்த்ரியங்களுக்கு ஞானேந்த்ரியம் என்று பெயர். இப்படி ஐந்து. வெளியிலே உள்ள சப்தத்தை அறிந்து அநுபவிக்கும் காது; வெளியில் வழ வழ, சொர சொர என்று, சூடாக, ஜில்லிப்பாக – இப்படி பல தினுஸாக வஸ்துக்கள் இருப்பதாக அறிந்து அநுபவிக்கும் சர்மம் (தோல்); வெளிப்பொருள்களின் ரூபத்தை, வர்ணத்தைப் பார்வையால் அறிந்தநுபவிக்கிற கண்; பலவித ஆஹாரங்களின் ருசியைத் தித்திப்பு, கசப்பு, புளிப்பு என்றெல்லாம் அறிந்து அநுபவிக்கும் நாக்கு; பலவித வாஸனைகளை அறிந்து அநுபோகம் பண்ணும் மூக்கு என்று உள்ள இந்த ஐந்தும் ஞானேந்த்ரியங்கள்.

இந்த இந்த்ரியங்களைக் கட்டுப்பாட்டில் வைத்தில்லாததால்தான் அத்தனை அனர்த்த பரம்பரையும் உண்டாகின்றன. ஒவ்வொரு இந்த்ரியமும் கொடுக்கக்கூடிய அநுபோகங்களில் உள்ள ஒரு ஆசையால்தான் ஒரு ஜீவன் இந்த மாயா லோகத்தோடேயே கட்டிப்போடப்படுவது. இவற்றை அடக்கி வைத்தால்தான் ஆத்மலோகத்தில் சேரலாம். அப்படி அடக்குவதுதான் ‘தமம்’.

‘தமம்’, ‘சமம்’ என்ற இரண்டுக்கும் நேர் அர்த்தம் வெறுமே அடக்குவது என்பது தான். மனஸை அடக்குவது, புலனை அடக்குவது என்றில்லை. ஆனாலும் வெளிப் பொருள்களை அறிந்து அநுபோகம் பண்ணுவதாகவும், அதற்கு ஸஹாயமாகக் கார்யம் பண்ணுவதாகவும் உள்ள இந்த்ரியங்களை அப்படிப் பண்ணாதபடி அடக்குவது தனி விஷயமாகவும், தனக்குத்தானே எண்ணங்களை உற்பத்தி பண்ணிக் கொண்டு ஸதா சஞ்சலித்துக் கொண்டிருக்கும் மனஸை அடக்குவது தனி விஷயமாகவும் இருப்பதால் இந்த இரண்டுவித அடக்கத்திற்கும் வித்யாஸம் தெரியணும் என்று ‘சமம்’ என்பதை மனவடக்கம் என்றும், ‘தமம்’ என்பதை புலனடக்கம் என்றும் அர்த்தம் செய்து கொள்ளும்படி வைத்திருக்கிறார்கள். இரண்டுமே அடக்கம் தான் என்பதால்தான் ஆசார்யாளே “ஷட்பதீ ஸ்தோத்ர” ஆரம்பத்தில், வழக்கமான ப்ரயோகத்துக்கு மாறுதலாக ‘மனஸை அடக்கு’ என்கிற இடத்தில் ‘தமய மன:’ என்றும் ‘வெளிவிஷயக் கானல் நீருக்கு ஒடும் புலன்களை அடக்கு’ என்கிற இடத்தில் ‘சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்’ என்று போட்டிருக்கிறார்.

ஆசார்யாளின் ப்ரகரண க்ரந்தங்கள் அநுபூதி ஸ்திதியைச் சொல்வதில் தனிச்சிறப்பு பெற்றவை. ஸாதனை க்ரமமும் அவற்றிலிருந்து அழகாக ஜோடித்து, கோடித்து எடுத்துக் கொள்ள முடிகிறது. ஸித்தாந்தம் என்று கொள்கைகளை வகுத்து நிர்தாரணம் பண்ணுமிடத்திலோ அவருடைய பாஷ்ய க்ரந்தங்களுக்கே அதிக ‘வெய்ட்’ கொடுப்பது. இதைக் கவனிக்கும்போது உபநிஷத் பாஷ்யத்திலேயே அவர் சம-தமங்களுக்கு வழக்கமான அர்த்தத்தை மாற்றிச் சொல்லியிருப்பது கொஞ்சம் சர்ச்சைகூட எழுப்பியிருக்கிறது! ஷட்க ஸம்பத்தில் ச்ரத்தை நீங்கலாகப் பாக்கி ஐந்தையும் ப்ருஹதாரண்யகோபநிஷத்தில் சொல்லியிருக்கிறது என்றேனல்லவா? அந்த இடத்தில் பாஷ்யம் பண்ணும்போது ஆசார்யாள் ‘சாந்தன்’ (சமத்தோடு கூடியவன்) என்பதற்கு ‘வெளி இந்த்ரிய வியாபாரங்களை அடக்கி விட்டவன்’ என்றும், அதாவது , பொதுவாக ‘தமம்’ என்று நினைக்கப்படும் நிலையை அடைந்தவன் என்றும்; ‘தாந்தன்’ (தமத்தோடு கூடியவன்) என்பதற்கு அந்தஃகரணமாகிய மனஸின் த்ருஷ்ணையிலிருந்து (தாஹத்திலிருந்து) நிவாரணம் பெற்று விட்டவன் என்றும், அதாவது பொதுவில் ‘சமம்’ என்று நினைக்கிற நிலையை அடைந்தவன் என்றும் அர்த்தம் கொடுத்திருக்கிறார்3. ப்ரகரணமான ‘விவேக சூடாமணி’ முதலானவற்றில் பொது வழக்கப்படி சொல்லியிருக்கிறதே என்பதற்காகச் சர்ச்சை எழுப்ப வேண்டியதில்லை. ஆச்ரமம் வாங்கிக்கொண்டவுடனேயே பால்யத்தில் ஆசார்யாள் எழுதிய பாஷ்யங்கள்தான். அப்போது, சமம்-தமம் இரண்டுமே அடக்கம்தான் என்பதைக் கவனித்து அந்த இடத்தில் முதலில் வெளிப் புலனடக்கத்தையும் அப்புறம் மனவடக்கத்தையும் சொல்வதே பொருத்தமாயிருக்கிறதென்று அபிப்ராயப்பட்டு அப்படி பாஷ்யம் பண்ணியிருக்கலாம். பிற்காலத்தில், தேசம் பூரா ஸஞ்சாரங்கள் நிறையப் பண்ணிய பிறகு ப்ரகரணங்கள் எழுதியபோது ஜன ஸமூஹ, வித்வத் ஸமூஹ வழக்குப்படியே நாமும் அர்த்தம் கொடுக்கலாமென்று நினைத்து அப்படியே பதப்ரயோகம் செய்திருக்கலாம். “ஷட்பதீ” பக்தி ஸ்தோத்திரம். அதில் வேதாந்த பரிபாஷைக்கு அவ்வளவு முக்யமில்லை. ஆர்யா வ்ருத்தம் என்ற சந்தத்தில் அதைப் பாடும்போது எப்படிப்போட்டால் ஒசை நயம் இருக்குமோ அப்படிப் போட்டிருப்பார்.

‘தமம்’, ‘சமம்’ இரண்டும் அடக்கம் என்ற ஒரே அர்த்தந்தான் என்பதால், மனவடக்கம் புலனடக்கம் இரண்டையும் சேர்த்துப் பொதுவாக ‘அடக்கம்’ என்னும் போது அதை ‘தமம்’ என்று மட்டுமோ, ‘சமம்’ என்று மட்டுமோ சொன்னாலும் ஸரியானதே. ப்ருஹதாரண்யகத்திலேயே4 அப்படித்தான், தேவர்களிடம் பொதுவாக “அடக்கத்தோடு இருங்கள்”, என்று ப்ரம்மா உபதேசித்ததாக அவர்கள் தெரிவிக்கிறபோது ‘தமம்’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறது. “தாம்யத”– தமத்தோடு இருங்கள் என்று.

சகுந்தலை-துஷ்யந்தனின் பிள்ளையான பரதனுக்கு இன்னொரு பேர் ‘ஸர்வதமனன்’ – எல்லாரையும் அடக்கி ஆள்கிறவன் என்று அர்த்தம். மற்ற எல்லா யுவதிகளின் ஸெளந்தர்யத்தையும் அடக்கும் ஸெளந்தர்யவதியாக இருந்ததாலேயே தமயந்திக்கு அப்படிப் பெயர். எந்தச் சக்கரவர்த்தியானாலும் ஸரி, காலம் வருகிறபோது தப்பிக்க முடியாமல் அடக்கி உயிரை யமன் பறித்துக் கொண்டு போவதால் அவனுக்கு சமனன் என்று பேர் இருக்கிறது.

‘தம’த்திலிருந்து ‘தமனம்’, ‘தாந்தி’ என்ற வார்த்தைகளும், ‘சம’த்திலிருந்து ‘சமனம்’,’சாந்தி’ ஆகிய வார்த்தைகளும் வந்திருக்கின்றன. தமனம்-தாந்தியைவிட சமனம் – சாந்தி அதிகம் வழக்கிலிருக்கிறது. உஷ்ண சமனம், பித்த சமனம், கோபத்தை சமனம் பண்ணுவது என்றெல்லாம் சொல்கிறோம். ‘அடக்குவது’ என்பதுதான் அர்த்தமானாலும் அது கடுமையாகத் தெரியாமல், ‘தணிப்பது’ என்று mild -ஆக த்வனிக்கிறது! ‘சாந்தி’ என்கிற போதும் கொந்தளிப்பை அடக்குவது என்பதன் கடுமை தெரியாமல், ஸெளக்யமாக அடங்கி அமைதியாகிவிட்ட தன்மையையே குறிப்பதாக இருக்கிறது.

சாந்தி-மனஸ் அடங்கிய நிலை; தாந்தி- புலனடங்கிய நிலை. யதிகளாக இருப்பவர்களை ‘சாந்தி தாந்தி பூம்நாம்’ என்று சொல்வது5 வழக்கம்.

கண், காது முதலான இந்த்ரியங்கள் ஒன்றைப் பார்க்காமல், கேட்காமல் மூடிக்கொண்டு விடலாம். கண்ணுக்கு ரப்பை என்று இயற்கையாகவே மூடி இருக்கிறது. அதை மூடிக் கொண்டால் ஒன்றைப் பார்க்காமல் இருந்து விடலாம். காதில் பஞ்சை அடைத்துக் கொண்டால் கேட்காமலிருந்து விடலாம். கையை, காலைக் கட்டிப் போட்டால் கார்யம் பண்ணாமலிருந்து விடலாம். ஆனால் அப்போதும் மனஸ் ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிக்கொண்டுதான் இருக்கும். வெளிப்பொருள்களை இந்த்ரியங்களால் அநுபோகம் பண்ணாத போதிலும் மனஸ் அவைகளைக் கல்பனை செய்துகொண்டு அவற்றுக்காகத் தவித்துக் கொண்டு ஸதாவும் கொந்தளித்தபடிதான் இருக்கிறது. இந்த்ரியங்கள் செயல்படுவதுங்கூட மனஸின் ஏவலாலும், மனஸின் இஷ்ட பூர்த்திக்கும், அதாவது ஆசை நிறைவேற்றத்திற்கும்தான். ஆனபடியால் மனஸை அடியோடு அடக்கிப் போட்டுவிட்டாலே போதும். அத்தனை இந்த்ரியங்களின் ஆட்டங்களும் ஓட்டங்களும் நின்று போய்விடும்.

மனவடக்கத்துக்கு உள்ள முக்யத்வத்தால்தான் [ஸாதனாங்கங்களில்] முதலில் சமத்தைச் சொல்லி அப்புறம் தமத்தைச் சொல்லியிருக்கிறது.

‘சமம் ஸித்தித்துவிட்டால்தான் தமமும் அதிலேயே அடக்கமாக ஏற்பட்டுவிடுமே!ஆகையால் அது [சமம்] ஒன்றை மட்டும் சொன்னாலே போதுமே!’ என்றால் –

மனஸின் பூர்ண அடக்கம், மனோ நாசம் என்பது ஸாதனையில் ரொம்பவும் கடைசி நிலையில்தான் வரும். அதற்கு முற்பட்ட நிலைகளைத்தான் இங்கே சொல்லியிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே மனோ நிக்ரஹ முயற்சி பண்ணத்தான் வேண்டும். ஆனாலும் அப்போதைக்குத்தான் மனஸ் கட்டுப்பட்டு இருக்கும். ஒரு மைஸுர்பாக்கைக் கண் பார்த்துவிட்டால், முக்குக்கு அதன் வாசனை எட்டி விட்டால் கட்டுப்பாடு ஓடிவிடும். மைஸுர்பாக்குக்காகக் கால் ஓடும். கை அதை எடுக்கும். வாய் அதை மெல்லும். இப்படி, அநேக வஸ்துக்கள் இந்த்ரியங்களுக்குத் தெரிந்து இந்த்ரியங்கள் அவற்றுக்குப் பறப்பதாலேயே நடுவே கொஞ்சம் கட்டுப்பட்டிருந்த மனஸ் மறுபடி பிய்ந்துக் கொண்டு கிளம்பும். உச்சிமட்டங்களுக்குப் போகிற வரையில் இப்படி மனஸானது வெளியிலே கவர்ச்சியான வஸ்துக்கள் இல்லாதபோது ஒரளவு தன்பாட்டுக்கு அடங்கி இருப்பதாகவும், அப்படிப்பட்ட வஸ்துக்கள் இந்த்ரிய கோசரமாகும்போது மறுபடி சஞ்சரிப்பதாகவுமே இருக்கும். அந்த ஸமயத்தில் கண்ணை, மூக்கை, காலை, கையைக் கட்டிப் போட வேண்டும். இதனால்தான் ‘சம’த்துக்கு அப்புறம் தனியாக ‘தம’த்தைச் சொன்னது.

கடோபநிஷத்தில் மனஸையும், இந்த்ரியங்களையும் பற்றி அழகாக உவமை கொடுத்திருக்கிறது 6. ஜீவன் என்பவன் தேரில் உட்கார்ந்துள்ள யஜமான் மாதிரி. சரீரம் தான் தேர். தேருக்கு ஸாரதி யாரென்றால் புத்தி. அது பல குதிரைகள் பூட்டிய தேர். குதிரைகள் என்னவென்றால் அவைதான் இந்த்ரியங்கள். குதிரைகளை ஸாரதி ஏவி, வழி நடத்துவது லகானை [கடிவாளத்தை]ப் பிடித்துத்தானே? அந்த லகான் என்னவென்றால் மனஸ். புத்தியாகிற ஸாரதி (அதுதான் இதற்கு முந்தி சொன்ன இரண்டு ஸாதனாங்கங்களான விவேக வைராக்யங்களால் உறுதிப் பட்ட நல்லறிவு. அந்த நல்லறிவு என்ற தேர்ப்பாகன்) முறையான வாழ்க்கைப் பாதையில் – ஆத்ம மார்க்கத்தில் – போகும் விதத்தில் மனஸ் லகானைக் கவனமாக இழுத்துப் பிடித்து, விடுகிற அளவுக்கே விட்டானானால் இந்த்ரியக் குதிரைகள் உத்தமமான அநுபோகங்களுக்கே போய், அப்புறம் இறங்க வேண்டிய ஸாக்ஷாத்கார ஸ்தானம் வரும். வந்ததும் குதிரை, லகான் எல்லாவற்றையும் அவிழ்த்து விட்டு, ஸாரதியையும் அனுப்பி வைத்துவிட்டு, ஜீவனான யஜமானன் ஆத்மாவைத் தான்பாட்டில் அநுபவித்துக் கொண்டிருக்கலாம்.

ஸாதாரணமாக தமம் என்பது இந்த்ரிய நிக்ரஹம் என்கிறபோது ஞானேந்த்ரியங்களை மாத்ரந்தான் குறிப்பது வழக்கம். மனஸ் சொன்னபடிதான் ஞானேந்த்ரியங்கள் ஆடுகிறது என்பதுபோல, ஞானேந்த்ரியங்களின் ஏவலில் தான் கர்மேந்த்ரியங்களின் கார்யங்கள் ஏற்படுவது. அதனால் அவற்றை நிக்ரஹம் செய்வதைத் தனியாகச் சொல்வதில்லை. “பஞ்சேந்த்ரிய நிக்ரஹம் என்னும்போது ஞானேந்த்ரிய நிக்ரஹமாகத்தான் அதை நினைப்பது வழக்கம். ‘விவேக சூடாமணி’யிலேயே, சற்றுத்தள்ளி, “பஞ்சேந்த்ரியங்களில் காதால் கேட்கும் சப்தம் ஒன்றாலேயே மானுக்கு அழிவு (வேடர்கள் வேணுகானம் பண்ணும்போது மான் மயங்கி நின்றுவிடும். அப்போது தான் அதைப் பிடிப்பது), சர்மத்தால் அநுபவிக்கப்படுகிற ஸ்பர்சத்தால் யானைக்கு அழிவு (ஏற்கெனவே பழக்கப்பட்ட பெண் யானையை ஆண் யானையின் வழியிலே விட்டு, இதன் ஸ்பர்ச ஸுகத்திலே அது தன்னை மறந்துள்ள போதே அதைப் பிடிப்பார்கள்), கண்ணுக்கு பிடிபடுவதான ரூபத்தால் விட்டில் பூச்சிக்கு அழிவு (விளக்கு ஜ்வாலையின் ரூபத்தில் மோஹித்துத்தானே அது வந்து விழுந்து ப்ராணனை விடுகிறது?), நாக்கினால் ருசிக்கப்படும் ரஸத்தால் மீனுக்கு அழிவு (தூண்டிலுள்ள புழுவைத் தின்ன வேண்டும் என்ற சபலத்தாலேயே மீன் பிடிபடுகிறது), மூக்கால் முகரப்படும் வாஸனையால் வண்டுக்கு அழிவு (சம்பகப்பூவின் வாஸனையாலேயே வண்டு ஆகர்ஷிக்கப்பட்டு அதற்குள் போய் உட்காரும். மலர்ந்த பூ அப்புறம் இறுக்கமாகக் கூம்பிக்கொள்ளும் போதும் வாஸனை ஆசையால் வண்டு பறந்து போகாமல் அதிலேயே இருக்கும். அப்படியே கூம்பின பூவுக்குள் மூச்சு விட முடியாமல் திணறி உயிரைவிடும்) – இப்படிப் பஞ்சேந்த்ரியங்களில் ஒவ்வொன்று ஒரு ப்ராணிக்குச் சபலமூட்டி அதன் அழிவுக்குக் காரணமாகிறது. மநுஷ்யனையோ ஐந்து இந்த்ரியங்களுமே சபலப்படுத்துகிற போது இவன் கதியை என்ன சொல்ல?” என்று வருகிறது7. இங்கே ஞானேந்த்ரியங்களை மாத்திரம் சொல்லி அவைகளையே அநர்த்த ஹேதுவாகக் காட்டி இருக்கிறது.

ஆனாலும் முதலில் ‘தம’த்துக்கு டெஃபனிஷன் கொடுக்கிற இடத்தில் “உபயேஷாம் இந்த்ரியாணாம்”– இருவகைப்பட்ட இந்த்ரியங்களையும், அதாவது கர்மேந்த்ரியங்கள், ஞானேந்த்ரியங்கள் என்ற இருவகைப் புலன்களையும் அததற்கு விஷயமாக உள்ள இன்ப நுகர்ச்சிகளிலிருந்து திருப்பி நிலை நிறுத்தி அடக்குவதே ‘தமம்’ என்று சொல்லியிருக்கிறார்:

விஷயேப்ய : பராவர்த்ய ஸ்தாபநம் ஸ்வஸ்வகோளகே |

உபயேஷாம் இந்த்ரியாணாம் ஸ தம : பரிகீர்த்தித : ||8

அநுபோக வஸ்துக்களான ‘விஷயங்’கள் என்பவற்றிலிருந்து இரண்டு தினுஸு இந்த்ரியங்களையும் இழுத்து அடக்கி அதனதன் கோளத்தில் நிலை நிறுத்துவது – ‘ஸ்வஸ்வ கோளகே ஸ்தாபனம்’ என்றால் ‘அதனதன் வட்டத்தில் நிலை நிறுத்துவது’- அப்படிச் செய்வதே ‘தமம்’என்று விசேஷித்துச் சொல்லப்படுகிறது என்கிறார்.

‘விஷயங்களிலிருந்து இந்த்ரியங்களை இழுத்து அடக்குவது’ என்றால் புரிகிறது. ‘அதனதன் வட்டத்தில் நிலை நிறுத்துவது’ என்றால் என்ன? இந்த்ரியங்களின் அடக்கந்தான் தமமானதால் அதைச் சொன்னதோடு விட்டிருக்கலாமே! அவற்றை ‘அவற்றுக்குரிய வட்டங்களில் நிறுத்துவது’ என்று ஒன்றை, புரியாத ஒன்றை, சேர்ப்பானேன்?

நான் இதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறேனென்றால் அல்லது புரிந்ததாக நினைத்துக் கொண்டிருக்கிறேனென்றால்: ஒன்றையுமே பார்க்கக் கூடாது, ஒன்றையுமே கேட்கக்கூடாது, ஒன்றையுமே தின்னக்கூடாது, கையை காலை ஆட்டி ஒரு காரியமும் பண்ணக்கூடாது என்றிப்படி தசேந்த்ரியங்களையும் முழுக்க அடக்கும் படியாக ஆசார்யாள் சொல்லவில்லை. அப்படி ஒரேயடியாக இந்த்ரிய வியாபாரம் முழுதையும் நிறுத்திவிட்டால் உயிர் வாழவே முடியாது. அப்படியானால் ஸாதனை எப்படிப் பண்ணுவது? சுவரை வைத்துத்தானே சித்ரம் எழுதணும்? சரீர யாத்ரைக்கு அத்யாவச்யமாக பார்க்க வேண்டியது, கேட்க வேண்டியது, சாப்பிட வேண்டியது, நடக்க வேண்டியது, எடுக்க வேண்டியது முதலானவற்றைப் பண்ணத்தான் வேண்டும். இப்படி அத்யாவச்யத்தை லிமிட் பண்ணும் எல்லையைத்தான் கோளகம் – வட்டம்- என்று ஆசார்யாள் சொல்கிறாரென்று தோன்றுகிறது. உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமாக எந்த அளவுக்கு ஒரு இந்த்ரியம் தொழில் படணுமோ அதுவே அதற்கு கோளகம்; அதற்கு மேலே போனால் ஆத்ம ஹானி. அந்த எல்லையை மீறப்படாது. கார் ஒரு குறிப்பிட்ட ஸ்பீடில் போகலாம் – போகவேண்டும். கார் இருப்பதே பல இடங்களுக்குப் போவதற்காகத்தான். ஆனாலும் ஸ்பீட்லிமிட் வைத்திருக்கிறதல்லவா? அப்படித்தான் சரீர யாத்ரை உள்ளவரை இந்த்ரியங்களுக்குக் கார்யமுண்டு. ஒரு கார்யமுமில்லாமல் முழுக்க அவற்றை அடக்கவிடப்படாது.

“ஒரு கார்யமுமில்லாவிட்டால் சரீர யாத்ரையே முடியாமல் போய்விடுமே! அப்படி வேண்டாம். நியதியானதைப் பண்ணு: நியதம் குரு கர்ம த்வம்… சரீர யாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேத் அகர்மண:” என்று பகவான் சொன்னதை9 இங்கே பொருத்திப் பார்த்து அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டும்.

கோளகம் என்பதை orb (வட்டம்) என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளாமல் orbit (வட்டப்பாதை) என்று பண்ணிக் கொண்டால் ஸரியாயிருக்கும். க்ரஹங்கள் ஸுர்யனைச் சுற்றி அது அதற்கேற்பட்ட ‘ஆர்பிட்’டில் போய்க் கொண்டிருக்கும் வரையில் ப்ரபஞ்ச நடப்பு ஸரியாய்த் தானிருக்கிறது. ப்ரபஞ்ச வாழ்க்கை ஸரியாய் நடக்க அந்த க்ரஹ ஸஞ்சாரம் அவசியமாகவே இருக்கிறது. ஆனால் ‘ஆர்பிட்’டை விட்டு ஒரு க்ரஹம் விலகியோடினால் எத்தனை உத்பாதமாகி விடும்? இன்னொரு பக்கம், க்ரஹங்கள் ஸஞ்சாரமே பண்ணாமல் நின்று விட்டாலும் பெரிய உத்பாதமாகத்தான் ஆகும். அப்படித்தான் தசேந்த்ரியங்களும் ஒரு ‘ஆர்பிட்’டில் ஓடிக் கார்யம் பண்ணினால்தான் ஜீவ யாத்ரையே நடக்கும். அவை நின்று விட்டால் சாவுதான். “புநரபி ஜனனம்” என்று மறுபடி அடியிலிருந்து ஆரம்பித்தாகணும். “இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” 10 என்று – இப்போது ஒரு கதையாகவாவது ஆத்மா, ஸாதனை என்று கேட்பதற்கு உட்கார்ந்திருக்கிறோமே, இதற்குக்கூட வழி, வசதி, அபிலாஷை இல்லாததாக என்ன ஜன்மா வாய்க்குமோ? ஆகையால் ஒரு சீராக இந்த்ரியங்கள் ஒரு கார்யவட்டத்தில் போகிற விதத்தில் அவற்றை நிலைப்படுத்த வேண்டும். அதுதான் இங்கே சொல்லும் “ஸ்தாபனம்”. நகரவே முடியாமல் நிறுத்திவிடும் ஸ்தாபனமில்லை; ஜீவ யாத்ரைக்கு அவச்யமான கதியிலேயே போகும்படியான ஸ்தாபனம் – அதாவது, அந்த வழியிலேயே நிலைப்படுத்துவது.

இப்படி ஞானேந்த்ரியங்களை மாத்ரமில்லாமல் கர்மேந்த்ரியங்களையும் அடக்கும்படிச் சொல்கிறார் என்றும் சொன்னேன்.

மனஸ், கர்மேந்த்ரியம் ஐந்து, ஞானேந்த்ரியம் ஐந்து, எல்லாவற்றையும் கூட்டிப் பதினொரு இந்த்ரியங்கள் என்றும் சொல்வதுண்டு. ஏகாதச ருத்ரர்கள் என்று ஈச்வரனுக்குப் பதினொரு ரூபம் இருப்பது இந்தப் பதினொரு இந்த்ரியங்களின் அதிதேவதைகளாகத்தான் என்று சொல்வதுண்டு. ஏகாதசி பட்டினி என்பதே தத்வார்த்தத்தில் ஏகாதச இந்த்ரியங்களுக்கும் தீனி போடாமல் வைப்பதுதான். “ஐந்தைந்தாக உள்ள இருவகைப்பட்ட இந்த்ரியங்களோடும் ஸம்பந்தப்படும் மனஸையும் பதினோராவது இந்த்ரியமாக அறிய வேண்டும். அந்த ஒன்றை ஜயித்து விட்டால் பாக்கிப் பத்தையுமே ஜயித்ததாகி விடும்’ என்று மநு சொல்லியிருக்கிறார்:

ஏகாதசம் மநோ ஜ்ஞேயம் ஸ்வகுணேநோபயாத்மகம் |

யஸ்மிந் ஜிதே ஜிதாவேதௌ பவத: பஞ்சகௌ கணௌ || 11

இன்னொரு விதமான க்ளாஸிஃபிகேஷனும் உண்டு. என்னவென்றால், ஞானேந்த்ரியம் ஐந்தோடு மாத்திரம் மனஸைச் சேர்த்து ஆறு இந்த்ரியங்கள் என்று சொல்வதுண்டு. கீதையில் பகவான், “இந்த்ரியாணி மனச்சாஸ்மி” 12 – “இந்த்ரியங்களுக்குள் நான் மனஸாக இருக்கிறேன்” என்று சொல்லி இன்னொரு இடத்தில் இதையும்விட ஸ்பஷ்டமாக, “மந: ஷஷ்டாநீந்த்ரியாணி”13என்று ஆறு இந்த்ரியங்களில் மனஸும் ஒன்று என்று தெரிவித்திருக்கிறார்.

ஆசார்யாளும் இந்த அபிப்ராயத்தைக் காட்டும் இடங்களுண்டு. உதாரணமாக: இந்த்ரியத்தைக் ‘கரணம்’ என்றும் சொல்வதுண்டு. ஜீவனின் இஷ்டங்களைப் பூர்த்தி செய்யும் காரியங்களைப் பண்ணும் கருவியாயிருப்பதால் அப்படிப் பெயர். எண்ணுவது, ப்ளான் போடுவது, துக்க ஸுக உணர்ச்சிகளை அநுபவிப்பது ஆகிய காரியங்களை ஒரு ஜீவனின் உள்ளுக்குள்ளேயே இருந்து கொண்டு மனஸ் பண்ணுவதால் அதற்கு ‘அந்தஃகரணம்’ என்று பெயர். இதை வெளிப்படக் காரியம் பண்ணும் ஐந்து ஞானேந்த்ரியங்களுடன் சேர்த்து, ஒரு வண்டாக ரூபகப் படுத்தி ஆசார்யாள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்லியிருக்கிறார்: “மஜ்ஜீவ:கரணசரண:ஷட்சரணதாம்” என்று14 ஏன் வண்டாக என்றால், வண்டுக்கு ஆறு கால்; அந்த மாதிரி ஜீவனுக்கு ஆறு காலாக இந்த ஆறு கரணங்கள் இருக்கின்றன. காலால்தானே சலனம் செய்வது? வாழ்க்கையில் ஒரு ஜீவன் செய்கிற சலனங்களுக்கெல்லாம் ஆறு கரணங்களுமே காரணமாயிருந்தால் இவையும் கால்கள்தான். “கரண சரணம்” என்பது அதைத்தான். ஆறுகால் உள்ள பிராணி வண்டே ஆகையால் இந்த ஆஸாமியும் வண்டுதான். வண்டு தாமரைப் பூவில்தான் போய் அப்படியே தன்னை மறந்து சொக்கியிருக்கும்? அதே போலத் தமது ஜீவன் அம்பாளின் பாத தாமரையில் படிந்து கிடக்கும் வண்டின் தன்மையை அடைய வேண்டும் என்று அவளிடம் பிரார்த்தித்திருக்கிறார். அப்போது மனஸ், பஞ்சேந்த்ரியங்கள் இரண்டும் அடங்கி, அதாவது சமம், தமம் இரண்டும் கைகூடி ஜீவன் அவளிடம் லயித்திருக்கும். அம்பாளுடைய பாதத்தை ஆசார்யாள் சொல்கிறார்; அவளுடைய ஹஸ்தங்களில் கரும்பு வில்லும் பஞ்சபாணமும் வைத்துக் கொண்டிருக்கிறாளே, அவற்றிலும் வில் நம் மனஸை அடக்கி ‘சம’த்தை உண்டாக்குவதுதான்; பாணம் பஞ்சேந்த்ரியங்களை அடக்கி ‘தம’த்தை உண்டாக்குவது.

ஆக, மன அடக்கமும் புலனடக்கமும் ஒன்றோடொன்று கைகோத்துக் கொண்டு, காம்ப்ளிமென்டரியாக ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொண்டு போக வேண்டும். ஸாதனாங்கங்களில் எல்லாமுமே சேர்ந்து சேர்ந்து, கலந்து கலந்து அப்யஸிக்கப்பட வேண்டியவை; அடியோடு பிரித்துப் பிரித்து, ஒன்றை முழுக்க முடித்து விட்டு அப்புறம் அடுத்தது என்று இல்லை என்று சொன்னேன். சம-தம விஷயமாக அதை மேலும் அழுத்தம் கொடுத்துச் சொல்லவேண்டியதாகிறது.

புத்தி பூர்வமாக இல்லாமல் ‘இன்வாலன்டரி’ என்கிறபடி சில ஸமயங்களில் தானாகவே இந்த்ரியங்கள் விஷய போகங்களுக்கு ஓடுவதை வேண்டுமானால் மனஸின் ஸம்பந்தம் இல்லாமல் நடப்பது என்று சொல்லலாமோ என்னவோ? மற்றபடி எந்த இந்த்ரியத்தின் ஓட்டமும் நிற்பதும், மனஸின் ஓட்டம் நிற்பதும் மனஸினாலேயே ஸாதிக்கப்படும் ஸமாசாரங்கள். இந்த்ரியங்கள் ஓடுவதுங்கூட மிகப் பெரும்பாலும் மனஸ் ‘டெலிபரேட்’டாகத் தன்னுடைய ஆசைப்பூர்த்திக்காக ஏவுவதால்தான். ஆனாலும் கொஞ்சங் கொஞ்சம் அவை ‘இன்வாலன்டரி’யாகவும் ஓடலாம். இப்படித் தானாக கொஞ்சம் ஓடலாமே தவிர, தானாக நிற்பது என்பது அடியோடு இல்லை. மனஸுதான் இந்த்ரியங்களையும் அடக்கி நிறுத்த வேண்டும். ஆக, நேராக மனவடக்கமேயான சமம் மாத்ரமில்லாமல், புலனடக்கமான தமமும் மனஸின் கார்யந்தான். ஒரே மனஸ்தான் இரண்டையும் ஸாதிப்பது. ஆகையால்தான் சம-தமங்கள் ரொம்பவும் கலந்து இணைந்து வருவது.

“இந்த்ரியாணி மநஸா நியம்ய15 – புலன்களை மனத்தால் அடக்கி” என்று தமத்தை மனஸின் கார்யமாகவே க்ருஷ்ண பரமாத்மா சொல்லியிருக்கிறார். ஏறக்குறைய இதே சொல்லமைப்பிலேயே இன்னோரிடத்திலும் “மநஸைவேந்த்ரிய க்ராமம் விநிம்ய” 16– “மனஸினாலேயே (மனஸினால்தான், தன்னால் இல்லை என்று தெளிவுபடுத்துவதாக ‘மநஸா ஏவ’ ‘மநஸைவ’ என்று போட்டிருக்கிறார். மனஸினாலேயே) புலன்களின் கூட்டத்தை நன்றாக அடக்கி” என்கிறார். அப்படி அடக்கி, ‘சநை: சநை: உபரமேத்’, மெல்ல மெல்ல அமைதியாக அடங்கியிருந்துவிட வேண்டும் என்கிறார். அப்படியிருப்பது தான் ஷட்க ஸம்பத்தில் அடுத்த ‘உபரதி’. ‘உபரமேத்’ என்றால் ‘உபரதியுடன் இருக்க வேண்டும்’.

பகவான் சம தமங்களைச் சேர்த்துச் சேர்த்து சொல்லுவார். ‘ஸர்வ த்வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி நிருத்ய ச’ 17 என்கிற இடத்தில் “ஸர்வ த்வாராணி ஸம்யம்ய” தான் தமம். “மநோ ஹ்ருதி நிருத்ய” என்பது சமம். “ஸர்வ த்வாராணி ஸம்யம்ய” என்றால் ‘எல்லா ஓட்டையையும் அடைத்து’ என்று அர்த்தம். ஓட்டை என்பது இந்த்ரியங்கள் தான். காது, மூக்கு, வாய் ஆகியவற்றில் கண்ணுக்குத் தெரியும்படி ஓட்டை இருக்கிறது. சர்மத்தில் நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் மயிர்க்காலுக்கு மயிர்கால் ஓட்டைதான். கண் என்பதே கபாலத்திலுள்ள ஓட்டையில் fix ஆனதுதான். அதோடு கண்மணியிலுள்ள துளையின் வழியாகத்தான் ஒளிக்கதிர் உள்ளே போய் காட்சி என்பது ஏற்படுகிறது. ஆகையால் ஸர்வ த்வார ஸம்யமம் என்பது பஞ்சேந்த்ரிய நிக்ரஹமான தமம்தான். மனசை அடக்கி ஆத்மாவில் நிறுத்தும் சமம்தான் “மநோ ஹ்ருதி நிருத்ய”.

“உயிர்களின் பலவிதமான பாவங்களும் என்னிடமிருந்தே உண்டாகின்றன: பவந்தி பாவா பூதானாம் மத்த ஏவ ப்ருதக்விதா:” என்று சொல்லி அப்படிப்பட்ட பாவங்களில் மிகவும் உசந்ததாக “புத்தி, ஞானம், அஸம்மோஹம் (மோஹத்துக்கு ஆளாகாத நிலை), க்ஷமை (பொறுமை), ஸத்யம், தமம், சமம்” என்று பகவான் இந்த இரண்டையும் குறிப்பிட்டு விட்டு மேலே சிலது சொல்லிக்கொண்டு போகிறார்.18 ‘தைவி ஸம்பத்’ என்பதாக தெய்வீக குணங்களுக்கு லிஸ்ட் கொடுக்கும் போதும் “தாநம் தமச்ச” என்று தமத்தையும், “த்யாக : சாந்தி” என்று சமத்தையும்19 அவற்றில் ‘இன்க்ளூட்’ பண்ணியிருக்கிறார். சமத்தினால் விளைவது சாந்தி, தமத்தினால் விளைவது தாந்தி – முன்னேயே சொல்லியிருக்கிறேன்.

ஸந்நியாஸியை ‘யதி’ என்றும் சொல்வதுண்டு என்று தெரிந்திருக்கலாம். ‘எத்திராஜர்’ என்று ராமாநுஜரைச் சொல்கிறார்கள்; ‘எத்திராஜ்’ என்று பேர் கூட வைத்துக் கொள்கிறார்கள். அது ‘யதி ராஜர்’ என்பதுதான். யதி என்றால் துறவி. அந்த வார்த்தைக்கு நேர் அர்த்தம் என்னவென்றால் ‘அடக்கியவர்’ என்பதே. ‘யம’, ‘யத’ என்ற இரண்டும் அடக்குவதைக் குறிக்கும். மற்றவர்களை கிடு கிடு வென்று நடுங்கப் பண்ணி அடக்கி வைக்கிறவன் யமன். தான் இருக்கிற ஊருக்கு அவன் பிடித்துக் கொண்டு போகிறவர்களை அங்கே நன்றாக அடக்கி ஒடுக்கித் தண்டிப்பதால் அந்த ஊருக்கே ‘ஸம்யம்னீ’ என்று பெயர். அது யமன் ஸமாசாரம் – வெளியிலிருப்பவர்களை அடக்குவது. யதி ஸமாசாரம் – தன்னையே அடக்கி வைத்திருப்பது. அதனால் அவனை யதாத்மா, ஸம்யாத்மா என்றும் கீதாதி சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. பலாத்காரமான அடக்குமுறை உள்ள ஊர் ஸம்யமனீ என்றால் தன்னைத்தானே கடுமையாக அடக்கி வைத்துக் கொண்டுள்ள ஸந்நியாஸியை ஸம்யதாத்மா என்றும், ஸம்யமி என்றும் சொல்லியிருக்கிறது. எதை அடக்கி வைத்திருக்கிறானென்றால் மனஸையும் இந்த்ரியங்களையுந்தான். அதாவது சம தமங்களை ஸாதித்தவனே யதி எனப்படும் ஸந்நியாஸி.

“ச்ரத்தாவான் லபதே ஞானம் தத்பர:ஸம்யதேந்த்ரிய:’ என்று பகவான் சொல்லும்போது20 ச்ரத்தையோடு கூட இந்த்ரியங்களை நன்றாக அடக்கி ‘ஸம்யதேந்த்ரிய’னாக இருப்பவனே ஞானமடைவான் என்கிறார். ஸாதன சதுஷ்டயத்தில் வரும் ச்ரத்தை, சம, தமம் ஆகிய எல்லாவற்றையும் அடைத்துச் சொல்லியிருக்கிறார்!

“ஆமை தலை, கால் ஆகியவற்றை ஆபத்துக் காலத்தில் ஓட்டுக்குள் இழுத்துக் கொள்கிற மாதிரி ஒருவன் இந்த்ரியங்களை இந்த்ரிய விஷயங்களிலிருந்து விடுவித்து உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஸ்தித ப்ரஜ்ஞ லக்ஷணங்களைச் சொல்லும்போது அழகாக உபமானம் கொடுத்து புலனடக்கத்தை வற்புறுத்தியிருக்கிறார். இந்த்ரியங்கள் தன் பாட்டுக்கு ஓடுகிற அத்தனை காலமுமே மநுஷ்யனுக்கு ஆபத்துக் காலம்தான்! அதனால் ஆமை எப்போதோ வரும் ஆபத்துக் காலத்தில் மட்டும் தலை, காலை உள்ளே இழுத்துக் கொள்கிறதென்றால் மநுஷ்யன் எப்போதும், எல்லா விதத்திலும் புலன்களை வெளிப்போக்கில் விடாமல் உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதை “ஸர்வச:” என்ற ஒரு சின்ன வார்த்தையை போட்டுத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

“யதா ஸம்ஹரதே சாயம் கூர்மோ (அ)ங்காநீவ ஸர்வச:”21

ப்ருஹதாரண்யகத்தில் தேவஜாதி முழுதற்கும் உபதேசமாகச் சொல்லியிருப்பதே தமம்தான். “தாம்யத – இந்த்ரியங்களை அடக்கி வைத்திருங்கள்” என்று உபதேசித்திருக்கிறது.22 கதை என்னவென்றால்: தேவர்கள், மநுஷ்யர்கள், அஸுரர்கள் மூவரும் தங்களைப் படைத்த ப்ரஜாபதியிடம் போனார்கள்; உபதேசம் பெற்றுக் கொள்வதற்காகப் போனார்கள். அவர்களுக்கு ப்ரஜாபதி ‘த’ என்ற ஒற்றையெழுத்தை மட்டும் உபதேசித்துவிட்டு, “புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்டார்.

எவருக்குமே தனக்கு முக்யமாக உள்ள ஒரு குறை என்னவென்று தெரியாமலிருக்காது. ஆகவே ஒருத்தர் ஸங்கேதமாக ஏதாவது சொல்லி அதிலிருந்தே அவர்களை தங்களுக்கானதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வைத்தால் புரிந்துகொண்டு விடுவார்கள். அப்படித் தாங்களாகவே புரிந்துகொள்ள விடுவதற்கு ‘வால்யூ’வும் ஜாஸ்தி. அது நன்றாக மனஸில் தைக்கப் பண்ணும். ‘குறையைச் சொல்கிறானே!’ என்று சொல்கிறவனிடம் கோபம் வராமல் ஒரு விநோத உணர்ச்சி, ‘க்யூரியாஸிடி’ அடித்துக்கொண்டு போய்விடும்!

அப்படி இப்போது ப்ரஜாபதி ‘த’ என்று ஒரே அக்ஷரத்தைச் சொன்னபோது அந்த மூன்று ஜாதியினரும் ஒவ்வொரு விதத்தில் அதைப் புரிந்துகொண்டார்கள். தங்களுக்கு முக்யமாக தேவைப்படுகிற ஒன்றின் முதல் எழுத்து அது என்று அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும்போது தேவர்கள் ‘த’ என்பது ‘தமம்’ என்பதற்கு ‘அப்ரீவியேஷன்’ என்றே எடுத்துக் கொண்டார்கள். அதனால் “புரிந்து கொண்டோம். ‘தாம்யத’– ‘இந்த்ரிய நிக்ரஹத்தோடு இருங்கள்’ என்று உபதேசித்திருக்கிறீர்கள். அப்படித்தானே?” என்று கேட்டார்கள். ப்ரஜாபதியும், “ஆமாம், ஸரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றார்.

மநுஷ்யர்கள் (‘த’என்பதை) “தத்த’: ‘கொடுங்கள்’ அதாவது ‘தான தர்மம் பண்ணுங்கள், ஈகைக் குணத்தோடு இருங்கள்’ என்று புரிந்து கொண்டார்கள். அதையும் ப்ரஜாபதி ஸரி என்றார். அஸுரர்கள் “தயத்வம்”‘: ‘தயையுடன் இருங்கள்’ என்று புரிந்து கொண்டார்கள். “ரொம்ப சரி” என்று பிரஜாபதி ‘அப்ரூவ்’ பண்ணினார்.

இங்கே தேவர், மநுஷ்யர், அஸுரர் என்று சொன்ன மூவருமே மநுஷ்யர்களில் மூன்று தினுசானவர்தான் என்று ஆசார்யாள் பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். ‘மற்ற நல்ல குணங்கள் இருந்தும் இந்த்ரியக் கட்டுப்பாடு போதாத மநுஷ்யர்களை இங்கே தேவர்களாகவும், ஒரே லோப குணத்தோடு – ஈகை என்பதேயில்லாமல் – தனக்கே சேர்த்துக் கொள்வதுதான் பொதுப்படையாக மநுஷ்ய ஜாதியின் பெரிய தோஷமாதலால் அப்படி இருப்பவரை மநுஷ்யர் என்றேயும், தயையே இல்லாத, தயா தாக்ஷிண்யம் தெரியாத க்ரூர ஸ்வபாவிகளான மநுஷ்யர்களை அஸுரர்களாகவும் சொல்லியிருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது மூன்று உபதேசமுமே மநுஷ்யனுக்கானதுதான்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து மற்றபடி ஸத்குண ஸம்பன்னர்களாக இருப்பவர்களுக்குக்கூட புலனடக்கம் போதாமலிருக்கும் என்று தெரிகிறது. ஜீவனை மாயையில் இழுக்கும் வலு வாயந்த சக்தியாகப் புலனாசைகள் இருப்பது இதிலிருந்து புரியும். ஆகையால் அதிலிருந்து விடுபடுவதும் ஸுலபமாக முடியாது; தமம் – சமமும்தான்; இரண்டையும் பிரித்துச் சொல்லவே வேண்டாம்; இங்கே தேவர்களுக்கும் மனஸடக்கம், புலனடக்கம் இரண்டுமையுமே சேர்த்து அப்யஸிக்கச் சொல்வதுதான் தாத்பர்யம்; அந்த அடக்கமானது – தீவிர ப்ரயத்தனத்தால் தான் கை கூடும். நாம் ஏதோ கொஞ்சம் முயற்சி பண்ணிவிட்டு பலனில்லையே என்று உடைந்துபோய் விட்டுவிடக் கூடாது. ஈச்வரனை நம்பிக்கொண்டு, தொடர்ந்து விடாமுயற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அப்யாஸம் செய்ய வேண்டும்.

வெளியில் வஸ்துக்கள் இருந்து அவற்றை கண், காது, நாக்கு முதலானவை அநுபோகம் பண்ணாத நிலையிலும் மனஸ் அந்த அநுபோகங்களின் ஆசையிலிலுள்ள அஸ்திவாரத்தின் மேலேதான் ஸதா காலமும் எண்ணமிட்டுக் கொண்டு சஞ்சலப்படுவது. மனவடக்கம் என்பது அந்த எண்ணக் கட்டப்பாடுதான் – thought control. அதை ஸாதிப்பது லேசில்லை. அதனால் முதலில் ஓரளவுக்கு வெற்றிகரமாகப் பண்ணக்கூடியது உள்ளே மனஸில் ஆசையெல்லாம் போகாவிட்டாலுங்கூட, வெளியேயாவது இந்த்ரியங்களைக் கொண்டு ஸ்தூல வஸ்துக்களை அநுபோகம் பண்ணாமல் கட்டிப்போடுவதுதான் – அதாவது தமந்தான். வ்ரதம், உபவாஸம் என்று கொஞ்சம் பட்டினி போடுவது, கண்ட காட்சிகளைப் பார்க்காமலிருப்பது, அந்த நாட்களில் ரதி ஸுகத்தை விலக்குவது என்றிப்படிப் பிடிவாதமாகப் பண்ணினால் உள்ளேயிருக்கும் மனஸுமே அந்த ஆசைகளை அடக்கிவிட்டு இருக்கும் ‘சம’அப்யாஸத்திற்குக் கொஞ்சம் பக்குவமாகும். விஷயங்கள் – அதாவது இந்த்ரிய போகத்திற்கான வஸ்துக்கள் – இல்லாத ஸமயத்தில்கூட மனஸ் அவற்றின் நினைப்பிலேயே அலைவதை முதலில் ஓரளவு அடக்கிவிட முடியும். அதாவது ஓரளவுக்கு மனஸின் ஓட்டத்தை நிறுத்தி வைக்க முடியும். ஆனாலும் அப்புறம் ஏகாந்தத்திலிருந்து விஷய ப்ரபஞ்சத்துக்கு வந்துவிட்டோமானால் உடனே காது ரேடியோவில் ஸினிமாப்பாட்டுக்கு பிய்த்துக் கொள்ளும், நாக்கு காப்பிக்குப் பிய்த்துக் கொள்ளும்! இப்படி ஒவ்வொரு இந்த்ரியமும், பழைய வாஸனையால் தானாகவே, மனஸின் தூண்டுதல் இல்லாமலே ஒவ்வொன்றுக்குப் பிய்த்துக் கொள்ளும்! லகானின் இழுப்புகளைப் பொறுத்து இல்லாமல், குதிரைகள் தாமே இஷ்டப்படி ஓடுகிற மாதிரி. இப்போது மறுபடி தமம் என்ற ஆயுதத்தை பிரயோகிக்கணும். அப்படி இந்த்ரியங்களை நிறுத்திய பிறகு அநுபோக வஸ்துக்கள் சுற்றிச் சூழ்ந்திருக்கும்போதிலும் கூட மனஸ் அவற்றுக்காகப் பறக்காமல் நிற்கும்படியாக சம ப்ரயோகம் பண்ணனும். இப்படி தம சமங்களை மாறி மாறி- அந்த மாற்றங்கள் ரொம்ப வேகத்தில் அடுத்தடுத்து வருவதால், சேர்ந்து சேர்ந்து என்றே தோன்றும் விதத்தில் – அப்யஸித்து முடிவாக ‘ஸாதித்தேயாச்சு’ என்று ஆக்கிவிட வேண்டும். அந்த முடிவு மனஸின் பரிபூர்ண அடக்கமான சமத்தின் நிறைவாகவே இருக்கும்.

முதலில் ஓரளவு ஸாதிக்கக்கூடியது, வெளிப் புலன் அடக்கமான தமந்தான். ‘நாராயணவல்லி’யில்23 ரொம்பவும் ‘ஸிம்பதி’யுடன் ப்ரஹ்மசாரிக்கு தம அநுஷ்டானத்தையும், கடைசியில் முற்றும் துறந்து முனிவனாகிறானே அவனுக்கு சம அநுஷ்டானத்தையும் சொல்லியிருக்கிறது. ‘தமமே பரம் என்று ப்ரஹ்மசாரிகள் அநுஷ்டித்து ஆனந்தப் படுகிறார்கள். சமமே பரம் என்று அரண்யவாஸிகளான முனிவர்கள் அநுஷ்டித்து ஆனந்தப்படுகிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறது. ப்ரஹ்மசர்யத்திலிருந்தே இரண்டையும் ஆரம்பித்தால்தான் ஸந்நியாஸத்தின்போது மனஸின் பரிபூர்ண அடக்கமான சமம் பூர்ணமாக ஸித்திக்கும் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம்.

அடங்கின மனஸ் எங்கே நிற்கிறதோ அந்த ஸ்தானம் தான் ஆத்மா. மனஸ் நின்றுபோனால் ஆத்மா ப்ரகாசிக்கும். முன் ஸ்டேஜிலேயே இந்த்ரியங்கள் தாங்களே இன்வாலன்டரியாகப் பழைய வாஸனை வேகத்தில் பிய்த்துக் கொண்டு கிளம்புவது ஓய்ந்துபோய், மனஸ் வாலன்டரியாகவும் அவற்றை அடக்கி ஒடுக்கிப்போட்டிருக்கும். அதற்கப்புறம் மனஸில் பாக்கி இருக்கிற வாஸனை அழுக்குகளை மாத்திரமே போக்க வேண்டியிருக்கும். அதாவது சமம்தான் முடிவாக வருகிற அடக்கக் காரியம். அப்படிப் பூர்ணமாக மனஸ் அடங்கிவிட்டால் ஆத்ம ப்ரபோதம் [விழிப்பு] உண்டாகும். இவ்வாறு சமமே முடிவான அடக்கமாயிருப்பதால்தான் “சாந்தி: சாந்தி: சாந்தி:”, “ஆத்ம சாந்தி” என்றெல்லாம் சொல்வது. ‘தாந்தி’ என்ற வார்த்தை இதனால்தான் ‘சாந்தி’ மாதிரிப் பழக்கத்தில் இல்லை. அடக்குவது என்று பலமான கார்யமாகத் தெரியாமல், அடங்கிப்போன விட்டு உண்டாகும் அமைதியையே சாந்தி என்று சொல்வதற்கு காரணம் அந்த அடக்கல் ஏற்பட்டவுடன் – “உடன்” என்றால் “உடனேயே” அமைதி நிலை ஏற்படுவதுதான்!.

மனஸ் அடங்குவதைத்தான் எல்லா மஹான்களும் முக்யமாக ப்ரார்த்தித்திருக்கிறார்கள். க்ருஷ்ண பரமாத்மாவும் அப்படித்தான் உபதேசித்திருக்கிறார்.

யதோ யதோ நிச்சரதி மனச்-சஞ்சல – மஸ்திரம் |

ததஸ்தோ நியம்யைதத் ஆத்மந்யேவ வசம் நயேத் 24||

மனஸின் நிலை கொள்ளாத தத்தளிப்பை நன்றாக எடுத்துக்காட்ட வேண்டுமென்பதால் ‘கூறியது கூற’லாக ‘சஞ்சலம்’ ‘அஸ்திரம்’ என்று இரண்டு வார்த்தை போட்டிருக்கிறார். எந்தெந்த காரணத்தை உத்தேசித்து இந்த சஞ்சலமான, ஸ்திரமில்லாத மனஸ் வெளியிலே ஓடுகிறதோ அந்தந்த காரணம் ஒவ்வொன்றிலிருந்தும் அதை இழுத்துப் பிடித்து ஆத்மாவின் வசத்தில் ஒப்புவித்து விட வேண்டும் என்கிறார்.


1 விவேக சூடாமணி, 22

2 அபரோக்ஷாநுபூதி, 6.

3 “சாந்த:- பாஹ்யேந்த்ரிய வ்யாபாரத உபசாந்த:, தாந்த: – தாந்த:- அந்தஃகரண த்ருஷ்ணதோ நிவ்ருத்த:”

4 V.2.1

5 ஸ்ரீமடத்தின் ஸ்ரீமுகத்தில் அசார்யாளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடைமொழிகளில் இது ஒன்று.

6 III.3-6

7 ச்லோ 76 (அ) 78 (“சப்தாதிபி:”)

8 ச்லோ. 23.

9 கீதை III.8.

10 தாயுமானவர்: ‘சித்தர் கணம்’, பாடல் 4.

11 மனுஸ்மிருதி II.92

12 X.22.

13 XV.7.

14 ச்லோ. 90.

15 கீதை III.7.

16 கீதை VI.24.

17 கீதை VIII.12.

18 கீதை X 4,5.

19 கீதை XVI.1-2

20 கீதை IV. 39

21 கீதை II.58

22 V.2.1

23 தைத்திரீய உபநிஷத்தின் கடைசிப் பகுதியான நான்காம் பகுதி. இதனையே தனி உபநிஷடமாக “மகாநாராயண உபநிஷத்” என்றும் கூறுவர். குறிப்பிடப்படும் மத்திரங்கள்: 78 : 3-4.

24 கீதை VI.26.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is 'ஆறு ஸம்பத்துகள்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  உபரதி
Next