உபரதி : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

அப்படி ஆத்மாவிடம் வந்து நிற்கும் நிலைதான் ஷட்கத்தில் அடுத்ததான உபரதி. ‘உபரதி’ என்றால் ‘ஸ்டாப்’ ஆகிவிட்டது என்று அர்த்தம். சாவு என்றேகூட அர்த்தம் உண்டு. “மனம் இறக்கக்” கற்க வேண்டும் என்கிற இடத்தில்1 இறந்துபோவதாகவே சொல்லியிருக்கிறதல்லவா? அப்படிப்பட்ட, ஒரு வேலையுமில்லாமல் மனஸு ஓய்ந்துபோய் விட்ட நிலை. சம, தம அப்யாஸத்தினால் மனஸ் வெளியிலுள்ள பிடிப்பு எல்லாவற்றிலும் விடுபட்டு, ஒரு செயலுமில்லாமலிருப்பது உபரதி. அப்படித்தான் ‘விவேக சூடாமணி’ டெஃபனிஷன்:

பாஹ்யாவலம்பனம் வ்ருத்தே: ஏஷோ(உ)பரதிருத்தமா2

உத்தம நிலையான உபரதியை ‘உபரதி: உத்தமா’ என்கிறார். வெளிப்பிடிப்பு ‘பாஹ்ய அவலம்பனம்’. ‘வெளி’ என்றால் கையை காலை ஆட்டியும் ஞானேந்த்ரியங்களால் பார்த்து, கேட்டு, தின்னும் அநுபவிக்கும் வஸ்துக்கள் மட்டுந்தான் என்றில்லை. ஆத்மாவுக்கு வெளியான, ஆத்மாவுக்குப் புறம்பான, எல்லாமே ‘வெளி’தான். அதாவது மனஸ் எழுப்பும் எண்ணங்களெல்லாம்கூட ‘வெளியைச் சேர்ந்தது’தான். இப்படி ஸகலத்திருந்தும் விடுபட்டு மனஸ் இருக்கிறது. ‘இருக்கிறது’ என்றாலும் இருப்பு என்றே சொல்ல முடியாமல் இறப்பு மாதிரி இருப்பதால் உபரதி என்பது. மனஸ் செயலற்றிருக்கிறது. ஆனாலும் ஆத்ம ப்ரபோதம் ஏற்படாத நிலை. ஏற்பட்டுவிட்டால் அது இறப்புக்கு நேர் எதிரான அம்ருத நிலை. இப்போது ஆத்மா தெரியாவிட்டாலும் மனஸ் உழப்பறிசல் இல்லாமல் செத்த மாதிரி, எந்த சஞ்சலமுமில்லாமல் இருக்கிறது.

உபநிஷத்துக்களில் வாத ப்ரதிவாதங்கள் வரும். அப்போது ஒரு கட்சிக்காரர் எல்லாக் கேள்விகளுக்கும் ஆணித்தரமாகப் பதில் சொல்லி எதிர்கட்சிக்காரர் வாயடைத்துப் போய் ஓய்ந்து உட்கார்ந்துவிடுவதை “உபரராம” என்றே சொல்லியிருக்கும். அதாவது, ‘உபரமத்தை அடைந்தார்’ என்று அர்த்தம். உபரமம், உபரதி இரண்டும் ஒன்றுதான் – யமம், யதி இரண்டும் ஒன்று என்றேனே, அந்த மாதிரி! செயலற்றுப் போய் விடுவது ‘உபரதி’.

உபரதி நிலையை அடைந்தவன் உபரதன். ப்ருஹதாரண்யக பாஷ்யத்தில்3 ஆசார்யாள் உபரதனை ‘ஸர்வைஷணா விநிர்முக்த: ஸந்ந்யாஸீ’ என்று வர்ணித்திருக்கிறார். ‘ஏஷணா’ என்றால் ஆசை. புத்ரனிடம் ஏஷணை, பணத்தில் ஏஷணை, லோக வாழ்க்கையில் ஏஷணை ஆகியவற்றை விட்டு ஞானி பிச்சைக்காரனாக சுற்றுகிறான் என்று அதே உபநிஷத்தில் இன்னோரிடத்தில் வருகிறது.4 பொதுவாக புத்ர ஏஷணா, தார (பெண்டாட்டி) ஏஷணா, வித்த (பணம்) ஏஷணா மூன்றையும் ஏஷணா த்ரயம் என்பார்கள். [லலிதா] த்ரிசதியில் ‘ஏஷணா ரஹிதாத்ருதா’ என்று அம்பாளுக்குப் பேர் இருக்கிறது. ஆசையற்றவர்களால் பூஜிக்கப்படுபவள் என்று அர்த்தம்.

வைராக்யம் என்பதும் ஆசை போன நிலைதான். ஆனாலும் அப்போது விஷயங்களில் வெறுப்பு தலை தூக்கி நின்றது. வெறுத்து ஒதுக்கிய நிலை அது. இப்போது உபரதியில் வெறுப்புமில்லை, ஆசையுமில்லை.

வைராக்யம் என்னும்போது வெறுப்பு, வெறுப்பிலே ஒரே கார்யமாக ஆசையை ஒழிப்பது என்று இருக்கிறது. தமம், சமம்-களில் ஆசைகளைப் படுகிற மனஸையும், அந்த ஆசைகளை நிறைவேற்றி வைக்கிற இந்த்ரியங்களையும் ஒரே கார்யமாக அடக்குவதாக இருக்கிறது. அப்புறம் கார்யமில்லை. வைராக்ய, சம தமங்களினால் மனஸ் ஒழிவடைந்திருக்கிறது. ஒழிவு என்றால் ஒரேடியாக ஒழிந்து விடவில்லை. அந்த ஒழிவு – அழிவு – ரொம்பக் கடைசியில்! இப்போதைய ஒழிவு என்பது ஓய்வு மாதிரி. ஆத்மாநுபவம், அதன் ஆனந்தம் [ஆகியவையும்] இல்லை. பாழாக, சூன்யமாக இருக்கிறாற்போன்ற நிலை. ஆனாலும் சஞ்சலங்கள் போட்டுப் பிடுங்காத ஒரு நிம்மதி நிலை.

ஆசைகள் விட்டுப் போய் விட்டதால் இதையே ஸந்ந்யாஸம் என்று [ப்ருஹதாரண்யக பாஷ்யத்தில்] ஆசார்யாள் சொல்லி விடுகிறார்; உபரதனை ‘ஸந்ந்யாஸி’ என்கிறார். இன்னும் அந்த ஷட்கத்தில் மூன்று பாக்கி இருக்கின்றன. ஆறில் [சமம், தமம், உபரதி என்ற] மூன்று தான் பார்த்திருக்கிறோம். [திதிக்ஷை, ச்ரத்தை, ஸமாதானம் என்ற] பாக்கி மூன்றை இன்னும் பார்க்கவில்லை. அவையும் ஆனவிட்டு முமுக்ஷுத்வம் என்ற மோக்ஷ நாட்டத்தில் ஒருத்தன் தேறிய பிறகுதானே ஸந்நியாஸம்? அதற்குள் எப்படி அதைக் கொண்டு வந்தார்? -என்றால், முன்னே சொன்னதை மறுபடி ஞாபகப்படுத்துகிறேன்: ஸாதனாங்கங்கள் ஒன்று முடிந்துதான் இன்னொன்று ஆரம்பமென்றில்லை; அவை கலந்து கலந்தே வரும். அப்படி வரும்போது, இன்னும் முன்னே சொன்ன வைராக்யத்தில் ஒருவன் என்றைக்கு முழுத் தேர்ச்சி பெறுகிறானோ அன்றைக்கேகூட ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு விடலாமென்று – யதஹரேவ விரஜேத் ததஹரேவ ப்ரவரஜேத் என்று – சொல்லியிருக்கிறது என்றேன். ஸாதனாங்கம் ஒன்றில் தீவரமாயிருந்தாலே அதைத் தொட்டுக்கொண்டு மற்றதெல்லாமும் வந்துதான் ஆகணும்; வந்தே தீரும். அதனால் உபரதி நன்றாக உறுதிப் பட்டு விட்டாலும் ஸந்நியாஸந்தான் என்று அபிப்ராயப்பட்டு அப்படிச் சொல்லியிருப்பார். அல்லது, ஸந்-ந்யாஸி என்பதற்கு நேர் அர்த்தம் ‘நன்கு துறந்தவன்’ என்பதேயாகையால் உபரதனை அப்படிச் சொல்லியிருக்கக்கூடும். ஏனென்றால் இனிமேல் வரப்போகிற திதிக்ஷை, ச்ரத்தை, ஸமாதானம் ஆகியவற்றில் ‘துறப்பது’ என்ற அம்சம் இல்லை – அவை என்னவென்று நான் எக்ஸ்ப்ளெய்ன் செய்யும்போது தெரியும். ‘பாஹ்யாவலம்பனம்’ வெளிப் பிடிப்புகள் – யாவும் விட்ட நிலை உபரதி என்றால், அப்படி ஸகலத்தையும் ‘ந்யாஸம்’ செய்வதுதான் ஸந்நியாஸம் என்பதும். ‘ந்யாஸம்’ என்றால் விட்டு விடுவது. நன்றாக விட்டு விடுவது ஸந்-ந்யாஸம்.

“விவேக சூடாமணி” ஆரம்பத்திலேயே ஸாதன சதுஷ்டயத்தைச் சொன்ன ஆசார்யாள் அப்புறம் தள்ளி, ரொம்பத் தள்ளி எல்லாமும் மறுபடி விவேகம், வைராக்யம், உபரதி முதலியவைகளைச் சொல்வார். ஏன் இப்படி ஒருத்தர் ஸந்நியாஸம் வாங்கிக் கொண்டு ஸாதனையில் உசந்த கட்டத்துக்குப் போவதைச் சொன்ன அப்புறம் இவற்றை மறுபடி சொல்கிறார் என்று தோன்றலாம். ஆலோசித்துப் பார்த்தால் புரியும், இந்த அங்கங்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு கட்டமாக மேலே மேலே பழுத்துக் கொண்டு போய்தான் முழுமையை அடையும் என்பது. இப்படித்தான் ஆரம்பத்தில் சொன்ன விவேக- வைராக்யங்களையே மறுபடி ஒரு இடத்தில்5 சொல்லி இந்த இரண்டின் அதிரேகம் – அதாவது உபரி வளர்ச்சியாலேயே, மனஸ் சுத்தியாகி முக்திக்குத் தகுதி பெறுகிறது என்கிறார். இன்னம் தள்ளி6 “வைராக்யாந்- ந பரம் ஸுகஸ்ய ஜநகம் பச்யாமி வச்யாத்மந:– “மனஸை வசப்படுத்தின யதிக்கு வைராக்யத்தைவிடப் பரம ஸுகமான இன்னொன்றை நான் அறியவில்லை” என்று ஒரே தூக்காகத் தூக்குகிறார்! அதே மாதிரி, வைராக்யத்திலிருந்து போதம் (ஞானம்), போதத்துக்கும் அப்புறம் உபரதி என்று உபரதியின் முழுமையை ரொம்பப் பின்னாடி காட்டியிருக்கிறார்.7

மனஸ் இப்போது பார்க்கும் ஆரம்ப ‘உபரதி’யில் ஓய்ந்து விட்டால் அப்படியே வெறுமையாக முடிந்து விடுமா? முடியாது. அப்போதைக்கு அப்படியிருந்தாலும் ஈச்வராநுக்ரஹம் என்பது அதை அப்படியே விட்டு வைக்குமா என்ன? ப்ரஹ்ம ஸத்யம் என்ன என்று தெரிந்து கொள்வதே லக்ஷ்யமாக ஒரு குழந்தை ஆசையெல்லாம் அடக்கிப் போட்டிருக்கும்போது மனஸு ஓய்ந்து நின்று விடும் நிலையோடு அவன் கதை முடியட்டுமென்று ஈச்வரன் விட்டுவிடுவானா? அதற்காக உடனே ஸத்ய ஸாக்ஷாத்காரத்தைக் கொடுத்து விடவும் மாட்டான். ஜீவனுடைய கர்மாவெல்லாம் அழிந்த அப்புறந்தான் அதைக் கொடுப்பான். அந்தக் காலம் வருவதற்குள் வெறுமையான உபரதி என்பது மஹாவாக்ய உபதேசத்திற்கு மேலும் யோக்யதை ஸம்பாதித்துக் கொள்வதற்கு வகையாக ஜீவனுள்ள ‘ஸமாதான’ நிலையை அடையும்படிப் பண்ணுவான். அப்புறம் ஸந்நியாஸம் பெற்று உபதேசம் என்று [ஸாதனை] மேலே போகும்.

‘ஸமாதான’த்திற்கும் ‘உபரதி’க்கும் நடுவே ‘திதிக்ஷை’ ‘ச்ரத்தை’ என்று இரண்டைச் சொல்லியிருக்கிறது.


1 “மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே?”(தாயுமானவர் பராபரக் கண்ணி, 169)

2 ச்லோ 24.

3 IV.4.23

4 III.5.1

5 ச்லோ 175 (அ) 177.

6 ச்லோ 376 (அ) 377.

7 ச்லோ 419 (அ) 420.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is சமம்-தமம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  திதி¬க்ஷ
Next