‘ஸமாதான’த்தில் கண்டிப்பு : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

‘ஸமாதானம்’ என்பது பிரம்மம் ஸம்பந்தமான விஷயங்களிலேயே புத்தியைப் பூர்ணமாக ஸ்தாபனம் செய்வது.

ஸம்யகாஸ்தாபநம் புத்தே: சுத்தே ப்ரஹ்மணி ஸர்வதா |
தத்-ஸமாதாநமித்யுக்தம் ந து சித்தஸ்ய லாலநம் ||

“ந து சித்தஸ்ய லாலநம்”. ‘புத்தி’யைப் பற்றி ச்லோக ஆரம்பத்திலே சொன்ன ஆசார்யாள் இங்கே முடிகிற பாதத்தில் ‘சித்த’த்தைப் பற்றிச் சொல்கிறார். புத்தி, மனஸ், அஹங்காரம் என்ற மூன்றுக்கும் பொதுவான ‘எண்ணம்’ என்பதற்கு உற்பத்தி ஸ்தானமாயிருப்பதே சித்தம். ஆகையால் ஸந்தர்ப்பத்தைப் பொறுத்து அதுவே மனஸ் என்றும் புத்தி என்றுங்கூட அர்த்தம் கொடுக்கும். இங்கே புத்தியை ஐகாக்ரியப்படுத்துவதைச் சொன்னவுடன், சித்தத்தைப் பற்றிச் சொல்வதால், அதையும் புத்தி என்றே வைத்துக் கொள்ளலாம். அல்லது எண்ணத்தை உற்பத்தி செய்யும் கருவி என்று பொதுப்படையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

“ந து சித்தஸ்ய லாலனம்” என்றால் “சித்தத்திற்கு செல்லம் கொடுப்பதல்ல” என்று அர்த்தம். ‘லாலனம்’ என்றால் ‘செல்லம் கொடுப்பது’. ஒரு குழந்தை நாம் சொன்ன பேச்சைக் கேட்கும்படி செய்வதற்காக அதற்குத் செல்லம் கொடுத்து, “மிட்டாய் தருகிறேன்” என்று தாஜாப் பண்ணிக் கார்யம் வாங்கிக் கொள்வது லாலனம். இப்படி ஸாதகனுக்கும் ஆரம்ப தசையில் கொஞ்சம் விட்டுக் கொடுத்து, தாஜா கீஜா பண்ணி நல்ல வழியில் போகப் பண்ணுவதுண்டுதான். ஒரே தீவிரமாக நிர்குண ப்ரஹ்மத்தில்தான் அவன் ஸித்தத்தை வைக்க வேண்டுமென்று சொல்லாமல் அந்த தசையில் ஸகுணமாக ஒரு மூர்த்தியை, பல மூர்த்திகளை வேண்டுமானாலும், நினைத்து விட்டுப் போகட்டும் என்று அப்போது விட்டுக் கொடுத்து, தினுஸு தினுஸு நைவேத்யம் வரையில் – குழந்தைக்கு மிட்டாய் மாதிரி – அவனுக்குக் காட்டி ஒரு நல்ல வழியில் அப்போது ‘லாலன’மாகவே அவனைத் திருப்பி விட வேண்டியதுதான். ஆனாலும் ஸாதனையில் அவன் ‘அட்வான்ஸ்’ ஆன தசையில் அப்படியெல்லாம் செல்லம் கொடுக்காமல், அதற்கெல்லாம் ‘புல் ஸ்டாப்’ வைத்துவிட்டு சுத்தமான நிர்குண ப்ரம்மத்திலேயேதான் அவனைக் கண்டிப்புடன் திருப்பிவிட வேண்டும்.[சிரித்து] கண்டிப்பே காட்டாமல் மிட்டாயே கடைசிவரை கொடுத்துக் கொண்டுபோனால் நீர் வியாதிதான் வரும்! விட்டுப் பிடிக்க வேண்டிய மட்டும் முதல் ஸ்டேஜில் விட்டுக் கொடுத்துவிட்டு, இப்போது இரண்டாவது ஸ்டேஜில் முன்னேற்றம் கண்டு, மூன்றாவது ஸ்டேஜான ஸந்நியாஸத்திற்கு யோக்யதா ஸித்தி பெற வேண்டிய ஸமயத்தில் கொஞ்சங்கூடச் செல்லம் கொடுக்காமல் கண்டிப்பாக ப்ரஹ்ம தத்வத்தைப் பற்றிய உபதேசங்களிலேயேதான் ஒருத்தனுடைய சித்தத்தைத் திருப்பிவிட வேண்டும்.

இது யாரோ வெளி மநுஷ்யர்கள், குரு போன்றவர் பண்ணுவது மட்டுமில்லை. அவனுமே தன்னைத்தானே லாலனம் பண்ணிக் கொள்ளாமல், ப்ரஹ்ம வித்யை ஒன்றிலேயே நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவனே தனக்குப் பண்ணிக் கொள்ள வேண்டிய விஷயமாகத்தான் இங்கே ஆசார்யாள் ‘அட்வைஸ்’ பண்ணியிருக்கிறார். “அப்பா! ஸ்வச்சமான நிர்குண ப்ரஹ்மத்திலேயே புத்தியை நன்றாக ஸ்தாபனம் பண்ணிக் கொள்ளு. அதுதான் ஸமாதானம். ‘வேறே விஷயத்திலும் புத்தி கொஞ்சம் போனால் போகட்டும்; அதை ரொம்பவும் ‘கம்பெல்’ பண்ணி இதற்கே கொண்டு வரவேண்டாம்; கொஞ்சம் ‘ஃப்ரீ’யாக அதை போக விட்டு, அப்புறம் இழுத்துக் கொள்ளலாம்’ என்று இன்னமும் லாலனம் பண்ணிக் கொண்டிருக்காதே. அதை – விட்டுக் கொடுத்து தாஜாப் பண்ணுவதை – ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்தத்தானே வேண்டும்? அந்த கட்டம் வந்துவிட்டது. அதனால் இனிமேல் கறாராக ஏக ஆத்மா, நிர்குண ப்ரஹ்மம் என்று அத்வைதபரமாகவே புத்தியைச் செலுத்த ஆரம்பி” என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is உபநிஷத் போதனை பெற அதிகாரி யார் ?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  பரமாத்மாவின் ஆறும் ஜீவாத்மாவின் ஆறும்
Next