பரமாத்மாவின் ஆறும் ஜீவாத்மாவின் ஆறும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி ்)

சமம், தமம், உபரதி, திதிக்ஷை, ச்ரத்தை, ஸமாதானம் என்றிப்படி ஆறு. இந்த ஆறு ஆத்மிக ஸம்பத்தையும் ஷட்க ஸம்பத்தி என்று வைத்திருக்கிறார். நல்ல ஜீவனானவன் சமாதி ஷட்க ஸம்பத்தி ஸம்பன்னாக இருக்க வேண்டும். ஷட்கர்ம நிரதன் என்று ஆறு தொழிலை1 க்ருஹஸ்தனுக்கு சாஸ்திரம் வைத்த மாதிரியே இந்த ஷட்குணங்களை ஆசார்யாள் ஸந்நியாஸாச்ரமத்திற்கு ஏறி ஆத்ம விசாரம் பண்ண இருப்பவனுக்கு வைத்திருக்கிறார். ஆனால் நான் முதலிலேயே சொன்னாற் போலவே இதிலெல்லாம் முடிந்த மட்டும் கொஞ்சங் கொஞ்சமாவது கிருஹஸ்தாச்ரமிகளும் அப்யாஸம் பண்ணி அடைந்தால்தான் வாழ்க்கையில் சாந்தி ஸெளக்யங்கள் இருக்கும்; என்றைக்காவது ஒரு நாளாவது ஆத்ம விசாரத்தில் பிரவேசிப்பதற்கான யோக்யதை ஏற்படும்.

‘பகவான், பகவான்’ என்று ஸ்வாமியைச் சொல்கிறோமே, அவனுக்கு அப்படிப் பேர் இருப்பதற்குக் காரணம் அவனிடமும் ஆறு வஸ்துக்கள் இருப்பதுதான். ஆறு கங்கள் அவனிடம் இருப்பதால் அவன் கவான் என்று “விஷ்ணு புராண”த்தில் சொல்லியிருக்கிறது. பகம் என்றாலும் ஸம்பத்துதான் – குண ஸம்பத்து, சக்தி ஸம்பத்து. த்வாதச ஆதித்யர்கள் என்பதாக பன்னிரண்டு ஸுர்யர்கள் உண்டு. அவர்களில் ஒருவனின் பேர் பகன். ஸுர்யன் ஜ்வலிப்பது போலக் கொழுந்துவிட்டெரிகிற சிறப்புக் குணம், அல்லது சக்திக்கு ‘பகம்’ என்று பேர். இப்படி ஆறு கொண்டவன் பகவான். பரமாத்மாவும் ஜீவாத்மா மாதிரியே ஷட்க ஸம்பன்னனாக இருக்கிறான்! அந்த ஆறு பகங்கள் என்னவென்றால், [1] ஐச்வர்யம் – ஈச்வரனாக அடக்கி ஆளும் சக்தி; அப்புறம் [2] தர்மம் – இயற்கையில் இத்தனை ஆர்டரை ஏற்படுத்தி, மநுஷ்ய வாழ்விலும் எல்லாவிதத்திலும் ஆர்டர் இருக்கும்படியாக சாஸ்திரங்களைக் கொடுத்திருக்கிறானே, அதுதான் தர்மம். அதாவது ஒழுங்குப்பாட்டின் உருவமாயிருப்பவன் பரமாத்மா. மூன்றாவது பகம் யசஸ்- அதாவது கீர்த்தி. அவனுடைய கீர்த்தியைத்தான் எத்தனை ஸங்கீர்த்தனம் பண்ணுகிறோம்? வேத ரிஷிகளிலிருந்து ஆரம்பித்து இன்றுவரை எத்தனை ஆயிரம் பேர் அவன் புகழ் பாடியும் அதற்கு முடிவு ஏற்படவில்லையே! அப்பேர்ப்பட்ட கீர்த்தியை ஒரு பகமாகப் பெற்றவன் பகவான். அப்புறம் [நான்காவதாக] ஸ்ரீ – செல்வம். அத்தனை செல்வமும் அவனிடமிருந்து வருவதுதானே? நமக்குத் தெரிவதாக வெளியில் காணும் இவ்வளவு செல்வமுங்கூட அவனிடம் வாஸ்தவமாக உள்ள மஹா பெரிய ப்ரம்மானந்தச் செல்வத்தில் ஒரு பைஸா, இரண்டு பைஸா மாயையின் பிரதிபலிப்பில் செல்வம் மாதிரி மினுக்குவதுதான். அப்பேர்ப்பட்ட ஸ்ரீமான் அவன்! இத்தனை செல்வம் இருந்தும் அதற்கு வசியமாகாமல், அதில் பற்றில்லாமல் நிற்கும் வைராக்யம் அவனுடைய இன்னொரு பகம் [ஐந்தாவது பகம்] கடைசியாக ஈச்வரனாக இருந்து கொண்டு ஸர்வ லோகங்களையும் கட்டியாளும் ஐச்வர்யத்தை முதல் பகமாகக் கொண்ட அந்தப் பரமாத்மாவே ஸர்வ லோகத்தையும் வெறும் மாயா செப்பிடு வித்தையாக தள்ளிவிட்டு மோக்ஷம் என்ற ஆறாவது பகத்தில் அந்த பகமாகவே, ப்ரம்மமாக இருந்து கொண்டிருக்கிறான். இப்படி ஆறு விஷ்ணு புராணத்திலிருக்கிறது.2

பரமாத்வாவுக்கு ஆறு பக ஸம்பத்து, ஜீவாத்மாவுக்கு சமம் முதலான ஆறு ஸம்பத்து.

இந்த ஷட்கத்திற்கு அப்புறம் ஸாதன சதுஷ்டயத்தில் கடைசியான, நாலாவது அங்கமாக வருவது முமுக்ஷுத்வம்.


1 வேதம் ஓதுதல் – ஓதுவித்தல்; வேள்வி செய்தல் – செய்வித்தல்; தானம் கொடுத்தல் – வாங்கல் ஆகியன ஆறு தொழில்கள்.

2 ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய தர்மஸ்ய யசஸ: ச்ரிய: |
வைராக்யஸ்யாத மோக்ஷச்ய ஷண்ணாம் பக இதீரணா || (வி. பு. VI.5.74)

Previous page in  தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is 'ஸமாதான' த்தில் கண்டிப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - ஆறாம் பகுதி  is  முமுக்ஷ§த்வம்
Next