‘சங்கர விஜய’ங்களும் ஆசார்யாள் குறித்த மற்ற நூல்களும் – மாதவீய சங்கர விஜயம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

‘மாதவீய சங்கர விஜயம்’ என்பது நிறைய ப்ரசாரமாகி இருப்பதாகச் சொன்னேன். காவ்ய ரஸங்கள் நிரம்பியதாக அது இருப்பது ஒரு காரணம். அதே ஸமயத்தில் தத்வங்கள், ஸித்தாந்தங்கள் முதலியவற்றையும், ஆசார்யாளுக்கும் மாற்று ஸித்தாந்திகளுக்கும் நடந்த வாதங்கள் முதலியவற்றில் deep -ஆக அலசி அதில் சொல்லியிருக்கிறது. சங்கர விஜயப் புஸ்தகங்களில் முதல் முதலில் அச்சுப்போட்டு தேசம் முழுவதிலும் விநியோகமான புஸ்தகம் அதுதான் என்பதாலும் ப்ரபலமாயிற்று. அதை நன்றாக ப்ரசாரம் செய்யவேண்டும் என்று ஈடுபாடு கொண்ட அபிமானிகள் இருந்தார்கள். நூறு வருஷம் முந்தியே முப்பது வருஷ இடைவெளிக்குள் பம்பாயிலிருந்து முதல் ‘எடிஷ’னும், புனாவிலிருந்து இரண்டாவது ‘எடிஷ’னும் போட்டு விநியோகமான புஸ்தகம் அது1. இரண்டு வியாக்யானங்களோடு சேர்த்துப் பெரிசாக அச்சுப்போட்ட புஸ்தகம். அச்யுதராய மோடக் என்பவர் எழுதிய ‘அத்வைத ராஜ்ய லக்ஷ்மி’ என்பது ஒரு வ்யாக்யானம். இன்னொன்று ‘டிண்டிம வ்யாக்யானம்’. தனபதி ஸூரி என்பவர் எழுதியது.

மாதவீய சங்கர விஜயம் எழுதியவர் அதற்கு ‘ஸம்க்ஷேப (சுருக்கமான) சங்கர விஜயம்’ என்று பேர் கொடுத்திருக்கிறார். புஸ்தக ஆரம்பத்தில், ஏற்கெனவே ஆசார்யாளைப் பற்றி இருப்பதான சரித்ரங்களிலிருந்து திரட்டிச் சுருக்கித் தாம் எழுதுவதாகத் தெரிவித்திருக்கிறார். வ்யாஸாசலரைப் பேர் குறிப்பிட்டுச் சொல்லி, ‘அவருடைய சங்கர விஜயத்திலிருந்தும் இன்னும் மற்ற புஸ்தங்களிலிருந்தும் சேகரித்து எழுதுகிறேன்’ என்று சொல்கிறார். “அந்தப் பூர்வ கவிகளுடைய ச்லோகங்கள் ரொம்பவும் மதுரமானவை. ரொம்பவும் தித்திப்பாகச் சாப்பிட்டால் திகட்டிப் போகுமல்லவா?அப்படி ஆகாமலிருப்பதற்கே உப்பு, உறைப்பு, புளிப்பு மாதிரி மாற்று ருசியாக என் ஸொந்த ச்லோகங்களையும் அவர்களுடைய ச்லோகங்களோடு கலந்து ஒரு விநோதமான ‘ஸ்டை’லில் எழுதியிருக்கிறேன்”2 என்று விநயமாகச் சொல்கிறார். விநயத்தில் வாஸ்தவமும் கலந்திருக்கிறது. வாஸ்தவம் என்றது பூர்வ கவிகள் மதுரமாகப் பாடியிருப்பதாகவும் இவர் அதற்கு மாறாகப் பாடியிருப்பதாகவும் சொல்வதையல்ல. இவருடைய ஸொந்தக் கவனமும் அவர்களுடையதைப் போலவே, அதை விடவுங்கூட மதுரமாக இருப்பவை தாம். பின்னே என்ன வாஸ்தவமென்றால் மற்றப் புஸ்தகங்களிலிருந்து இவர் நிறைய எடுத்துத் தம் புஸ்தகத்தில் கொடுத்திருக்காறாரென்பதுதான். வ்யாஸாசலீயத்திலிருந்து பெரிய பெரிய பகுதிகளாகவே எடுத்துத் தம் புஸ்தகத்தில் அங்கங்கே சேர்த்திருக்கிறார். ராஜ சூடாமணி தீக்ஷிதரின் ‘சங்கராப்யுதம்’, ராமபத்ர தீக்ஷிதரின் ‘பதஞ்ஜலி விஜயம்’, ஜகந்நாத கவியின் ‘பகவத் பாத ஸப்ததி’ ஆகியவற்றிலிருந்தும் அநேக ச்லோகங்களை எடுத்து இந்தப் புஸ்தகத்தில் கொடுத்திருக்கிறார். ‘ஆனந்த கிரீய’மும் அவர் முக்ய source -ஆக எடுத்துக்கொண்டுள்ள இன்னொரு புஸ்தகம். ஆனால் அது ச்லோகம் கொஞ்சமாகவும் கத்யம் (உரை நடை) அதிகமாகவும் கலந்து எழுதப்பட்ட புஸ்தகமாகையால், முழுக்க ச்லோக ரூபமாகவே அமைந்த இந்தப் புஸ்தகத்தில் அதிலிருந்து அதிகம் சேர்க்க முடியவில்லை. ஆனாலும் அதிலிருந்தும் சில ச்லோகங்களைக் கையாண்டிருக்கிறார்; (அதன்) வசன நடைப் பகுதிகளிலிருந்தும் தாத்பர்யங்களை எடுத்துக்கொண்டு ச்லோகமாகப் பண்ணிக் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், பல புஸ்தகங்களில் ஸாரமாயுள்ளதையெல்லாம் ஒரே இடத்தில் நாம் சேர்த்துப் படித்து ரஸிக்கும்படியாகத் தம்முடைய நூலில் திரட்டிக் கொடுத்திருக்கிறார். மூலத்திலுள்ளதை அப்படியே கொடுப்பது, கொஞ்சம் மாற்றிக் கொடுப்பது, டெவலப் பண்ணிக் கொடுப்பது என்று மூன்று விதமாகவும் பண்ணியிருக்கிறார். ஆகையாலேயே அந்தப் புஸ்தகம் பண்டித பாமர ரஞ்ஜகமாக ப்ரஸித்தமாகியிருக்கிறது.

சில பேர் கேட்கிறார்கள்: ‘அவரே பேர் சொல்லிக் குறிப்பிட்டுள்ள வ்யாஸாசலீயத்திலிருந்தும், பூர்வ சரித்ரங்கள் என்று அவர் சொல்வதில் புகழ் பெற்றுள்ள ஒன்றான ஆனந்த கிரீயத்திலிருந்தும் வேண்டுமானால் அவர் நிறைய எடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ‘சங்கராப்யுதயம்’, ‘பதஞ்ஜலி சரிதம்’, ‘பகவத்பாத ஸப்ததி’ முதலியவற்றிலிருந்து அவர் எடுத்துக் கொண்டிருப்பார் என்பதைவிட அந்தப் புஸ்தக கர்த்தாக்கள்தான் இவருடைய புஸ்தகத்திலிருந்து எடுத்துத் தங்களுடைய புஸ்தகங்களில் சேர்த்துக் கொண்டிருப்பதாக ஏன் இருக்கக்கூடாது?’ என்று கேட்கிறார்கள்.

ஆனால் அவரேதான் ஸ்பஷ்டமாக அநேக நூல்களிலிருந்து திரட்டியதாகச் சொல்லியிருக்கிறாரே! அது மாத்ரமில்லை. சங்கர விஜயங்கள் என்பவை காவ்ய ரீதியில் எத்தனை ரஸமாக எழுதப்பட்டிருந்தாலும் அவற்றுக்குக் காவ்யம் (‘லிட்ரேசர்’) என்பதைவிடப் பாராயணத்துக்கான மத க்ரந்தம் என்றுதான் முக்யத்வம். க்ரந்த கர்த்தாவின் நோக்கமே படிப்பவர்கள் ஆசார்ய பக்தியும், ஆஸ்திக்ய புத்தியும் பெறவேண்டுமென்பதே தவிர, ‘இலக்கியம்’ என்று ரஸித்து மகிழ்வதோடு நின்றுவிட வேண்டும் என்பதல்ல. இப்படி மத சாஸ்த்ரங்களில் சேர்க்கும்படியாக உள்ள புஸ்தகங்களில், ‘வேறே கவிகள் சொன்னதை நாம் எடுத்துக் கையாண்டால் கௌரவ ஹானி இல்லையா?’ என்ற கேள்வி எழும்புவதில்லை. “நம் ‘பர்பஸ்’ ஜனங்கள் பக்தியுடன் படித்துப் பாராயணம் பண்ணக்கூடியதான ஒரு க்ரந்தத்தைக் கொடுப்பதுதான். அதற்கு எது உதவுமானாலும் அதை ப்ரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்” என்றே நினைத்து free-யாக மற்றப் புஸ்தகங்களிலிருந்தும் எடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் ராஜ சூடாமணி தீக்ஷிதர், ராம பத்ர தீக்ஷிதர், ஜகந்நாத கவி முதலியவர்கள் கவிகள் என்றே பெயரெடுத்தவர்கள்; காவ்யங்கள் என்ற முறையிலேயே தங்களுடைய புஸ்தகங்கள் பெயரெடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் எங்கேயாவது இன்னொரு புஸ்தகத்திலிருந்து எடுத்துத் தங்கள் புஸ்தகத்தில் சேர்ப்பார்களா? கவிகள் இதை கௌரவ ஹானியாகவே நினைப்பார்கள். (இப்படிச் செய்வதாகத் தங்கள் நூலில்) சொல்லாமலே செய்தால் குட்டு வெளியாகிறபோது ‘சோர கவி’, ‘இலக்கியத் திருடர்’ என்று மானமே போவதாகத்தான் ஆகும். ரஸவத்தாக இப்படியொரு சங்கர விஜயப் புஸ்தகம் இருந்தால் நிச்சயம் பல பேருக்கு — பண்டித ஸமூஹத்தினருக்காவது — தெரிந்ததாகத்தான் இருக்கும். அப்படியிருக்கும்போது கவி என்று பேர் வாங்கியவர்கள் அதிலே கை வைத்துத் தங்கள் புஸ்தகத்தில் நுழைய விட்டுக்கொள்ளத் துணிவார்களா?

இன்னொன்று: மாதவீய சங்கர விஜயம் ஸுமார் 2000 ச்லோகம் கொண்ட பெரிய புஸ்தகம். சங்கராப்யுதம், பதஞ்ஜலி சரிதம் ஆகியன அதைவிட ரொம்பவும் சின்னப் புஸ்தகங்கள். (பகவத் பாத) ஸப்ததியிலோ மொத்தம் எழுபதே ச்லோகம்தான். ஒரு பெரிய புஸ்தகத்தில் அங்கங்கே வேறே புஸ்தகங்களிலிருந்து ச்லோகங்கள் கொடுத்தால் வித்யாஸமாகத் தெரியாது. ஆனால் மூலமே சின்னதாயுள்ளபோது அதில் இரவல் சரக்கு நிறைய இருந்ததானால் அப்படிப்பட்ட புஸ்தகம் பண்டித ஸமூஹத்தில் எடுபடுமா? அந்தக் கவிக்குத்தான் பெயர் உண்டாகுமா? ஒரே ஸ்டைலில், ஒரே சீரான கதைப் போக்கிலும் கருத்துப் போக்கிலும் அந்த மூன்று புஸ்தகங்களும் போகும்போது (‘மாதவீய’த்தில் காணப்படும்) இந்த ச்லோகங்களும் ‘டெக்ஸ்’டோடு அங்கமாக இயற்கையாகப் பொருந்தியிருப்பதால், வேறே புஸ்தகத்திலிருந்து எடுத்துச் சேர்த்தது என்று சொல்வதற்கு இடமில்லை.

மாதவீய கர்த்தாவே கௌரவ ஹானி என்று நினைக்காமல் திறந்த மனஸோடு அநேக நூல்களிலிருந்து கோத்துக் கொடுத்திருக்கிறேனென்று சொல்லும்போது அப்படி இல்லை என்று நாம் ஏன் ஆக்ஷேபிக்க வேண்டும்?


1 1863-ல் பம்பாயிலிருந்து முதற் பதிப்பும், 1891-ல் புனாவிலிருந்து ஆனந்தாச்ரம நூல் வரிசையில் இரண்டாம் பதிப்பும் வெளியாயின.

2 யதா (அ)தி ருச்யே மதுரே(அ)பி ருச்யுத்பாதாய ருச்யாந்தர-யோஜநார்ஹா | ததேஷ்யதாம் ப்ராக்-கவி-ஹ்ருதய-பத்யேஷ்வேஷாபி மத்-பத்ய-நிவேச்-பங்கீ ||

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 1. கதாபேதங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  3. வ்யாஸாசலீயம்
Next