அந்தப் புஸ்தகத்திலிருந்து தெரிவது வ்யாஸாசலீயத்திற்கு நிறைய ப்ராமாண்யம் (மெய்ம்மை) உண்டென்பது. அசலம் என்றால் மலையல்லவா? அதை வைத்து சிலேடையாக மாதவீயத்தின் ஆரம்பத்தில் அதைப் பண்ணியவர், “வ்யாஸ அசலர் முதலான பூர்வகாலப் பண்டிதர்கள் என்ற மலையில் ஆசார்ய சரித்ரம் ஒரு உன்னதமான வ்ருக்ஷமாக முளைத்திருக்கிறது. அதன் புஷ்பங்களில் நிரம்பியுள்ள தேனை (அர்த்த புஷ்டியை) வித்வத் ஸமூஹம் என்கிற வண்டுகள் பானம் பண்ணுகின்றன. உச்சத்திலுள்ள அந்தப் புஷ்பங்களில் என் சிற்றறிவு என்ற குட்டையான துறடுகோலுக்கு எட்டுகிற கொஞ்சத்தை மட்டும் ஈச்வர ஸ்வரூபமான குரு ஸ்மரணையோடு பறித்து மாலையாகத் தொடுத்து இந்த ‘ஸம்க்ஷேப சங்கர விஜய’மாகத் தருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்*.
இதே உபமானம் சொல்லி இதே வ்யாஸாசலீயத்தை கோவிந்த நாதரும் தம்முடைய சங்கர விஜயத்தில் கொண்டாடியிருக்கிறார் :
அத்யுந்நதஸ்ய காவ்யத்ரோர் – வ்யாஸாசல – புவோ – (அ)கிலம் |
அர்த்த ப்ரஸூநாத் – யாதாதும் அஸமர்த்தோ – (அ) ஹம் அத்புதம் ||
“வ்யாஸாசல பூமியில் (வ்யாஸ அசலமாகிய மலை நிலத்தில்) மிகவும் உயர்ந்த காவ்ய மரமாக ஆசார்ய சரித்ரம் முளைத்திருக்கிறது. அதனுடைய அர்த்தமாகிய அத்புத புஷ்பத்தைப் பறித்து வர நான் சக்தியற்றவன்” என்று அர்த்தம்.
புஸ்தக ஆரம்பத்திலேயே வ்யாஸாசலரை ஸ்துதித்த மாதவீய கர்த்தா அப்புறம் பத்துப் பதினைந்து ச்லோகங்களில் அவையடக்கமாகப் பல விஷயம் சொல்லிவிட்டு மறுபடியும், “தந்யோ வ்யாஸாசல கவிவரஸ் – தத் – க்ருதிஜ்ஞாச்ச தன்யா:” என்பதாக, ‘கவி ச்ரேஷ்டரான வ்யாஸாசலரும் பாக்யசாலி’; ‘அவருடைய க்ரந்தத்தை அறிந்தவர்களும் பாக்யசாலிகள்’ என்று பாராட்டுகிறார்.
*வ்யாஸாசல – ப்ரமுக -பூர்விக-பண்டித – க்ஷ்மா-
ப்ருத் – ஸ்ம்ப்ருதோச்ச – தர – காவ்ய – தரோஸ் – ஸூரீதே: |
வித்வந் – மதுவ்ரத – ஸுகோரு – ரஸாநி – ஸர்வாணி –
(ஆ)தாதும் – அர்த்த – குஸுமாந் அஹம் அக்ஷமோ – (அ)ஸ்மி ||
யத்நாதுதல்ப – திஷணா ஸ்ருணிநா க்ருஹீதும்
சக்பம் ததத்ர ஸரஸம் ஸகலம் க்ருஹீத்வா |
காஞ்சிந் – மஹேச்வர – குரு – ஸ்ம்ருதி – பிந்ந – மோஹ:
ஸம்க்ஷேப – சங்கர – ஜய – ஸ்ரஜம் ஆதநோமி ||