நமது ஹிந்து மதத்தில் அரசு, துளசி முதலியவைகளைத் தெய்வமாகக்
கொண்டாடுவது நம் மதத்தின் மாண்புக்கு ஒர் எடுத்துக்காட்டாகும். அச்வத்தம்
எனப்படும் அரச மரமானது பிரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின்
வடிவம் என்றும், அம்மரத்தை இடைவிடாது காலையில் வலம் வருவோருக்கு
புத்ரபாக்கியம், தனதான்ய ஸம்பத்து, ஸ்த்ரீகளுக்கு ஸெளமங்கல்யம் இவைகளைக்
கொடுக்கும் என்று நம்பிக்கை இருந்து வருகிறது.
அரச மரத்தைப் பற்றி வேதத்திலும், புராணங்களிலும், ஸ்ம்ருதிகளிலும்
கூறப்பட்டிருக்கிறது. "ஊர்த்தவ மூலமவாக்சாகம் அச்வத்தம் ப்ராஹரவ்யயம்" என்று
கீதை கூறுகிறது.
அக்னி பகவான் குதிரை வடிவமாக அரச மரத்தில் ஒரு வருஷம் தங்கி
இருந்ததால் அச்வத்தம் என்று காரணப்பெயர் வந்ததாக வேதத்தில்
கூறப்பட்டிருக்கிறது. அதனால்தான் அதன் சமித்துக்களை வெகுவாக
ஹோமத்துக்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஆற்றங்கரையில் அரசமரத்தைப்
ப்ரதிஷ்டை செய்பவர்களுக்கு ஏனைய பாவமும் நீங்கி சுவர்க்க லோகம்
கிடைக்குமென்று கூறப்படுகிறது.
இதைப் பற்றியே ஆக்னேய புரணாத்தில் ஓர் சரித்திரம் உள்ளது. அதாவது -
ஒரு ஏழை பிராமணன் குடும்ப ஜீவனத்திற்காகக் கண்டவிடங்களில அலைந்து, தன்
வயிற்றுக்கும் சாப்பிடாமல் பொருள் தேடி குடும்பத்தைக் காப்பாற்றிக் கொஞ்சம்
பணம் சேமித்தும் வைத்தான். அந்தச்சமயத்தில் பணச் செலவில்லாத
காரியமாகையால் ஆற்றங்கரையில் ஓர் அரசங்கன்றை ஏதோ விளையாட்டாக
நட்டான். அது நாளடைவில் ஓங்கி வளர்ந்து ஓர் பெரிய மரமாக ஆகிவிட்டது.
அந்த பிராமணணோ முதுமையினால் இறந்தான். பரலோகம் செல்லும்
வழியில் இரண்டு பேர் அவனை வழிமறித்து, தாங்கள் தைத்துக் கொடுத்த
செருப்பின் கூலியைக் கொடுத்து விட்டுச் செல்லுமாறு சொன்னார்கள். என்ன
செய்வதென்று புரியாமல் திகைத்து நிற்கும் பிராம்மணனின் எதிரில் ஒரு
பிரம்மச்சாரி தோன்றி "அந்தக் கூலியை நான் கொடுக்கிறேன். அவரை
விட்டுவிடுங்கள்" என்றான்.
ஆனால் அந்த மனிதர்களோ எங்களுக்குக் கூலி காசு பணமல்ல. தோல்
தருவதாகவே சொல்லி இருந்தார் என்று சொல்லி தோலையே வேண்டினர். எனவே
அந்த ப்ரும்மசாரி தன் துடையிலிருந்து சருமத்தை அறுத்துக் கொடுக்க
அவர்களும் சென்றார்கள். பிராம்மணன் ஆச்சரியமுற்று சித்ரகுப்தனைக் கேட்க -
அவரும் அரசு மரத்தின் மஹிமையை உரைத்து , பூமிக்குச் சென்றார் அவ்வரச
மரத்தைப் பார்த்து விட்டு வரும்படி ஏவினர். அவனும் பூமிக்கு வந்து அவ்வரச
மரத்தின் பட்டை நடுவில் விட்டுண்டிருப்பதைக் கண்ணுற்று, தருமத்தின்
மகிமையை நினைத்து மகிழ்ந்தானாம். ஆதலால் அரசங்கன்றை நட்டு வளர்ப்பதும்
அதைப் பூஜித்து வலம் வருவதும் அளவிலாத பயனை அளிக்கும்.
துளசி
இந்து மதத்தில் திருத்துழாய் எனப்படும் துளசிச்செடியை ஒரு தெய்வமாகப்
பாவித்து, மிகுந்த பக்தியுடன் வழிபடுவதைக் காணலாம். வீடுதோறும் நடு
முற்றத்தில் துளசி மாடம் கட்டி, அதில் துளசிக் கன்றைப் பயிர் செய்து, மிகுந்த
ஆசாரத்துடன் ஜலம் விட்டு வளர்த்துப் பகலில் பூஜித்தும், மாலையில் தீபம் ஏற்றி
வைத்தும் வழிபடுவார்கள். துவாதிசி தோறும் விசேஷ பூஜையும் நடக்கும்.
கார்த்திகை மாதம் சுக்லபட்சத்வாதசியன்று துளசி விவாஹம் என்று விமரிசையாகக்
கொண்டாடுவார்கள்.
இந்தத் துளஸி தேவி பூர்வஜன்மத்தில் பிருந்தை என்ற பெயருடன்
ஜலந்தராசுரனுக்கு மனைவியாக இருந்ததாகவும், அவளது பதிவிரதாபக்தியினால்
அவ்வசுரனை சம்ஹரிக்க இயலாது பரமசிவன் தயங்கும்போது, விஷ்ணு பகவான்,
மாயமாக வேறு உருவத்துடன் அவளது சயனத்தில் அருகில் தோன்ற, அச்சமயம்
ருத்திரன் அவ்வசுரனைக் கொன்றான். அவன் தலை துண்டிக்கப்பட்டு
பள்ளியறையில் விழவே, அதைக் கண்டு திடுக்கிட்ட பிருந்தை இவை எல்லாம்
திருமாலின் மாயைதான் என்றறிந்து உடனே தனது உடலை எரித்துச் சாம்பலானாள்.
பெருமாளும் அங்கே கிடந்து புரள, அவள் தளசிக் செடியாக முளைத்தாள். அதன்
பிறகே, அந்தச் செடியை வளர்த்து பூஜித்து வழிபடுவோர் இம்மை, மறுமைப்
பயன்கைள எய்தி வாழ்வர் என்று வரம் கொடுத்து அவளையும் மணம் செய்து
கொண்டார். அதனால்தான் பிருந்தாவனத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அதிகமான
ப்ரியம். இவ்வளவு பெருமை வாய்ந்த துளசியின் குணங்கள் அனேகம். அதன்
காற்றினால் ஸகல வியாதிகளும் தீரும். மருந்தாக உட்கொண்டால் காங்கை ஜுரம்
தணியும்.விஞ்ஞானிகளும் அதன் குணங்களைப் பலவாறாகப் புகழ்ந்திருக்கிறார்கள்.
இவ்வளவு பெருமை வாய்ந்த துளசியைப் பூஜித்து சுகம் பெறவோமாக.