இந்துக்களின் தலையாய பண்டிகை இது. இந்தியா முழுவதிலுமுள்ள மக்கள் -
ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி வெகு உற்சாகமாகத் தீபாவளி
கொண்டாடுகின்றனர். பண்டிகை கொண்டாடும் முறையில்தான், மாநிலத்திற்கு
மாநிலம் சில வேறுபாடுகள் காணப்படும்.
தீபாவளி- தீபங்களின் வரிசை என்ற பெயருக்கேற்ப வட இந்தியாவில்
மக்கள் தங்கள் வீடுகளில் பளிச்சென்று விளக்கேற்றிக் கொண்டாடுவர். ஞானம்
என்ற விளக்கொளியால் மனத்தின் உள்ளே குடிகொண்டுள்ள அஞ்ஞானம் என்ற
இருளை விரட்டியடிப்பது என்பது தத்துவம். பொய் பித்தலாட்டம் வஞ்சனை
முதலிய அரக்க குணங்களை ஞான ஒளியால் வெளியேற்றி அக ஒளிபெற உதவும்
பண்டிகை, தீபாவளி.
நரகாசுரன் எனும் அரக்கனைக் கண்ணன் வதம் செய்ததையட்டி அமைந்த
பண்டிகை என்பது புராண வரலாறு. தேவர்களும் மனிதர்களும் கொடிய
அரக்கனாம் நரகாசுரனால் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாகித் துன்புற்றனர்.
தேவர்களின் தலைவனான இந்திரன் பகவான் கிருஷ்ணனிடம் முறையிடவே,
கிருஷ்ணன் நரகாசுரனுடன் போர்புரிய சத்தியபாமாவுடன் புறப்படுகிறார்.
சத்தியபாமா இப்போரில் சக்தியின் அவதாரமாகச் செயல்பட்டாள் என்பது
குறிப்பிடத்தக்கது. நரகாசுரன் என்ற தீய சக்தி கண்ணன் - சத்தியபாமாவினால்
அழிக்கப்பட்ட மக்கள் அசுரனின் கொடுமையினின்றும் விடுபட்ட நாளையே
தீபாவாளியாக கொண்டாடுகிறோம்.
தீபாவளி அன்று விடியற்காலையே எழுந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து,
புனித நீராடுவதை கங்கா ஸ்நானம் என்று கருதுகிறோம். இப்பண்டிகை நாளில்
எண்ணெயில் லட்சுமியும், நம் வீட்டுத் தண்ணீரில் கங்கையும் பிரசன்னமாகின்றனர்
என்பது ஐதிகம், வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோ
கூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது
ஆன்றோர் வாக்கு. அதனால்தான் இப்பண்டிகையன்று நீராடிப்புத்தாடை உடுத்து,
இறைவனைத் துதித்து இனிப்புப் பண்டங்கள் புசித்து மகிழ்ந்த பின்னர் அக்கம்
பக்கத்தில் வசிக்கும் உற்றார் உறவினரிடம், கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று
விசாரிக்கிறோம். பகவத் கீதா கிஞ்சித் அதீதா, பகவத் கீதையில் சிறிதளவு, ஒரே
ஒரு சுலோகம் மட்டுமாவது படித்தால போதும், கங்கா ஜல லவகணிகா பீதா -
கங்கை நீரில் ஒரு திவலை அருந்தினாலும் போதும், ஸக்ருதபியேன முராரி
ஸமர்ச்சா - விஷ்ணுவின் நாமத்தை வாழ்க்கையில் ஒரே ஒரு தடவை சொன்னாலும்
போதும் - பரலோக பயம் நீங்கும், மக்கள் பேரின்பமாகிய மோட்சம் அடைவது
உறுதி. இமய மலையிலிருந்து பெருகிவரும் அலக்நந்தா, மந்தாகினி, பாகீரதி,
என்னும் நதிகள் கங்கை எனப் பெயர் பூண்ட புண்ணிய நதிகள் மக்கள் அதில்
விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அன்னை பவானியின் பூஜையாக
வங்காளத்திலும், தாம்பூலத் திருநாளாக மகாராஷ்டிர மாநிலத்திலும்
கொண்டாடப்படும் இப்பண்டிகை, குஜராத்தில் குபேர பூஜையாக புதுக்கணக்குத்
நாடெங்கும் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.
திருமணமான முதல் ஆண்டு வரும் மலை திபாவளியன்று
மாப்பிள்ளையைக் கோலமிட்ட மணையில் உட்கார வைத்து 'கௌரீ கல்யாணமே,
வைபோகமே' என்று மாமியார் பாடித் தலையில் எண்ணெய் வைப்பது தமிழ்
நாட்டவர் பழக்கம். பட்டாசு கொளுத்துவதன் மூலம் ஆயிரமாயரம் குடும்பங்கள்
பிழைக்கவும் இந்த திபத்திருநாள் வழிவகுக்கிறது. புத்தாடை உடுத்தும் வழக்கம்
நம்மிடையே இருப்பதால் நெசவுத் தொழிலும் செழிக்கிறது.
இப்பெருநாளில் இந்துக்கள் மட்டுமின்றிப் பிற மதத்தவரும் தங்கள்
வீட்டுப்பிள்ளைகளக்குப் பட்டாசும், ஏன் புத்தாடையும் கூட, வாங்கிக் கொடுத்த
மகிழ்கின்றனர்.
தீபாவளியன்று தொடங்கும் தீப அலங்காரம் கார்த்திகைப் பண்டிகை வரை
நீடிக்கிறது. தென் நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் அகல் விளக்கு ஏற்றி வரிசை
வரிசையாக வைத்து அலங்கரிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தீப மங்கள ஜோதி நமோ நம: