ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திர சேகர குரும் பிரணமாமி முதானன்வஹம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இந்த உலகம் எப்பொழுது தோன்றிற்று, எப்படித் தோன்றிற்று என்பதை
இன்றுவரை யாராலும் தீர்மாணித்துக் கூற இயலவில்லை. இந்த உலகத்தைத்
தோற்றுவித்தவர் ஒருவர் இருக்க வேண்டும் என்பது மாத்திரம் எல்லோராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லிக்கொடுக்கும் பொழுது, எப்படி 'ஆ,ஆ'
என்று கற்றுக்கொடுக்கும்போது, எப்படி 'அ', என்பதை முதல் எழுத்தாக வைத்துக்
கற்றுக் கொடுக்கிறோமோ, அதுபோல் ஆதிபகவானை முதன்மையாக வைத்து
இந்த உலகம் படைக்கப்பட்டது என்று மாத்திரம் அவர்கள் தெளிவாகக்
கூறியுள்ளார்கள் திருக்குறளிலே.
ஆகவே ஆதி பகவான் ஒருவர் இருந்துள்ளார். அவர் மூலமாகவே இந்த
உலகம் படைக்கப்பட்டுள்ளது என்பதில் இரண்டு கருத்துக்கள் இருப்பதற்கு வழியே
கிடையாது. அந்த வகையிலே, உலகம் ஒரு ஆண்டவனுடைய செயலாக
செயல்பட்டு வருகிறது. தன்னிச்சையாக இயற்காயாக வருகிறது என்பதையெல்லாம்
ஏற்றுக்கொள்ளமுடியாத ஒருநிலையில் நாம் இருக்கிறோம். அந்த ஆண்டவன்
எங்கும் நிறைந்துள்ளவன், சர்வத்தையும் படைக்கும் சக்தி உடையவன்
எல்லோருக்கம் ஆனந்தத்தையும் இன்பத்தையும் அளிக்கக்கூடியவன், ஞான
வடிவமானவன், ஜோதி வடிவமனாவன். என்றெல்லாம் எல்லா நூல்களிலம்
விசேஷமாகக் கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட எங்கும் நிறைந்துள்ள
பரம்பொருளாகக் சொல்லப்பட்டிருக்கிற பரமாத்மாவை ஆதி பகவன் என்ற
சொல்லால் திருக்குறளிலே திருவள்ளவர் வர்ணிக்கிறார்.
உலக வாழ்க்கையிலே பலவிதமான சமுதாயங்களை நாம் பார்க்கிறோம்.
மக்கள் சமுதாயம், பிராணிகள் வட்டம், உயிரினங்கள் இப்படிப் பலவிதமானவற்றை
நாம் பார்க்கிறோம். அவைகளிலே, மற்ற யாருக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு
மனிதனுக்குக் கிடைத்திருக்கிறது. உயிரினங்கள் இருக்கின்றன - மரங்கள்
போன்றவைகள் - பிராணிகள் இருக்கின்றன - பறக்கக்கூடியவை. நகரக்கூடியவை
பல வகைகள் . இவைகளுக்கெல்லாம் கூட இல்லாத ஒரு சிறப்பு அம்சம்
மனிதனுக்கு உண்டு. அதுதான் பகுத்தறிவு. விசேஷ சக்தி என்று சொல்வார்கள்.
மற்ற எந்த உயிரினத்துக்கும், எந்தப் பிராணிக்கும் நல்லது எது, தீயது எது என்று
அறிந்து கொள்ளக்கூடிய சக்தி இல்லாமல், நல்ரதை ஏற்றுக்கொள்ளுதல், தனக்கு
வேண்டாததை, தீயதை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் இந்த சக்தி வரைக்கும்
எல்லா உயிரினங்களுக்கும் உண்டு, ஆனால் மனிதன் நல்லது எது, தீயது எது
என்று அறிந்து கொண்டு, தீயதை விட்டுவிடுவதோடு அல்லாமல், நல்லதை
ஏற்றுக்கொள்வது மாத்திரமல்லாமல், தீய வழிக்கே செல்லாமல் நல் வழியிலேயே
நின்று வாழ்க்கை நடத்துவதற்கும் ஒரு தனிச்சிறப்பு உடையவனாக மனிதன்
ஆகுகிறான். அதைதான் பகுத்தறிவு என்கிறோம். பகுத்து அறிந்து
தெரிந்துகொள்ளக் கூடியது பகுத்தறிவு. பகுத்தறிவாளன், மனிதன் விவேக சக்தி
உடையவன் என்று சொன்னார்கள்.
அவனுக்குத்தான் பள்ளிக்கூடம், அவனுக்குத்தான் கோயில்கள்.
அவனுக்குத்தான் ஆஸ்பத்திரிகள், சந்திர மண்டலம் வரை எந்த ஒரு விஞ்ஞானம்
சென்றிருக்கிறதோ இந்தக் காலத்தில், அத்தனை விஞ்ஞானமும் பகுத்தறிவாளனான
மனிதனால் கண்டுபிடிக்கவில்லை. உயிரினத்தை வைத்து மனிதன்
விஞ்ஞானத்தையும் கண்டுபிடித்தான். அனால் எந்த உயிரினமும் மனிதனை
வைத்து எந்த விஞ்ஞானத்தையும் கண்டுபிடிக்கவில்லை. மனிதன்தான் எல்லா
விஞ்ஞானத்தையும் தன் கைக்குள்ளே வைத்து, ஆராய்ச்சி செய்து, உலகிற்கு
உயர்ந்த விஞ்ஞானத்தையும் அளித்தான். அத்தனை விஞ்ஞானத்தையும்
அளிக்கக்கூடிய சக்தி, அவனடைய புத்தியிலே இருக்கிறது. அந்த புத்திக்கு சக்தி,
ஆண்டவனால், ஆதிபகவானால் அளிக்கப்பட்டது. ஆகவே எங்கும் நிறைந்துள்ள
ஒரு சக்தி, பரம்பொருளுடைய சக்தி, ஆண்டவனுடைய சக்தி, புத்தயிலேயும்
இருக்கிறது.
அந்த புத்தி சக்தியை வைத்துக்கொண்டுதான் மனிதனுடைய வாழ்க்கையே
நடைபெறுகிறது. புத்தி தவறிப் போகும்போது வாழ்க்கை தவறிப்போகிறது. புத்தி
நேராக இருக்கும்போது வாழ்க்கை நன்றாக ஆகிறது. ஆகவேதான்
எல்லாவிதமான உபதேசங்களும், சொற்பொழிவுகளும் நல்ல உபதேசங்கள்
அனைத்தும் மனிதனுக்குச் சொல்லப்பட்டு, அவைகள் கடைப்பிடிக்கப்பட்டு,
வருவதற்கு வேண்டிய முயற்சிகள் எல்லாம் நடைபெற்று வருகிறது. ஆகவே, அந்த
மனித சமுதாயம் என்றைக்குத் தோன்றிற்று. என்றால், அநாதிகாலந்தொட்டு வந்து
கொண்டிருக்கிறது. அந்த மனித சமுதாயத்திற்கு வரக்கூடிய நன்மைகளையெல்லாம்
அளிக்கக்கூடிய ஆண்டவனும் அநாதியயாக இருக்கிறான். ஆண்டவன் அநாதி,
அவனால் படைக்கப்பட்ட உலகம், அவனால் படைக்கப்பட்ட மனிதன்
இத்தனையும் அநாதியாக வருகிறத. அப்படிப்பட்ட மனிதனுக்குப் பிரச்சினைகள்
வரும்பொழுது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், அதற்குள்ள வழிகளும்
அநாதியாக வந்துகொண்டிருக்கிறது.
அதைத்தான் ஆண்டவனுடைய வழிபாடு என்கிறோம். உலகத்திலே
பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன. தலை வலி
வந்தால் அதற்கு உடனடியாக இந்த விஞ்ஞான உலகத்திலே மாத்திரையைச்
சாப்பிடுகின்றோம். ஊசி போட்டுக் கொள்கிறோம். டாக்டரிடம் காண்பித்துப் பலவித
மான மருந்துகளை எடுத்துக்கொண்டு பிரச்சினையைத்தீர்த்துக் கொள்ளுகின்றோம்.
ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாத
அளவில் வரும்போது "ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்." என்று
அனைவரும் கைவிட்டுவிட்ட நிலையிலே ஆண்டவனைத் தான் அழைக்கிறார்கள்.
அதை இந்த விஞ்ஞான யுகத்திலும் நாம் பார்க்கிறோம். இதைத்தான் அந்தக்
காலத்திலிருந்து அற நூல்களும் கூறியிருக்கின்றன. அனுபவித்த மகரிஷிகளும்,
பெரியோர்களும் கூட இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையிலே
ஆண்டவன் ஒருவனைத் தவிர இந்த உலகிலே, மனதிற்கு அமைதியும் சாந்தியும்,
துன்பத்தை அகற்றுவதற்கான வழியையும் வேற யாராலும் கொடுக்க முடியாது.
ஆனால் அந்த ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாக
இருக்கும்பொழுது, அவனை நம்மால் மனத்திலே இருத்தி, வழிபட்டு, தியானம்
செய்து, அருளைப் பெறுவது என்பது சாமானிய மக்களால் முடியாது. அதை
வைத்துத்தான் 'அருவமும் உருவமாகி, அநாதியாய்ப் பலவாய்' என்று
பலவகையிலே சொல்வார்கள். அந்த ஆண்டவனே அருவமாயிருப்பதுடன்
உருவமாய் வந்து, அந்த உருவமும் பல வகையாக வந்து நமக்கெல்லாம் அருள்
பாலிக்க முருகன் வந்தது போல், கந்தக் கடவுள் வந்தது போல், உலகிலுள்ள
அனைத்து வடிவங்களையும் நாம் காண்கிறோம். ஆண்டவன் ஒருவன்தான். அதில்
யாருக்கும் எந்த வித சந்தேகமும் இல்லை.
ஆனால் ஆண்டவனுடைய வடிவங்களும், ஆண்டவனுடைய
அருட்செயல்களும் பல வடிவங்களிலே வருகின்றன. உதாரணமாக, நம்முடைய
இந்து சமயத்தை எடுத்துக்கொண்டால் ஒரே ஆண்டவன்தான். 'ஒன்றே குலம்
ஒருவனே தேவன்' என்று சொல்வார்கள். அது இன்றைக்கு அரசியலில் உபயோகப்
படுத்தப்பட்டாலும், அந்தக் காலத்திலே திருமூலர் தன்னுடைய அனுபவத்தின்
மூலம்சொன்ன சொல் அது. ஒரு அருள்வாக்கு அது.
அவர் அனுபவித்தது ஒன்று. பரம்பொருளை அனுபவித்தார். அப்பொழுது
அவருக்கு வேறு ஒன்றுமே தெரியவில்லை. ஒரே தேவன் தெரிந்தான், ஒன்றே
குலம் தெரிந்தது. அது அனுபவ ரீதியிலே வந்த ஒரு உண்மை. அந்த
ஆண்டவனை அடைவதற்கு வழி வகையாக, உருவ வழிபாடுகளெல்லாம் இந்து
சமயத்திலே சிறப்பாக, பழங்காலந்தொட்டு வந்து கொண்டிருக்கிறது.
எத்தனை உருவங்கள் இந்து சமயத்திலே உண்டோ, அத்தனை உருவங்களும்
வந்ததற்குப் பல விதமான காரணங்கள் இருக்கின்றன. உருவங்கள் இல்லாமல்
அருவத்தை அடைய முடியாது என்பது இந்து சமயத்தினுடைய ஒரு முக்கியமான
லட்சியம், முக்கியமான கொள்கை. மேலும் சுலபமாக நாம் தெரிந்து கொள்வதற்கு
ஆண்டவன் ஒருவன்தான், அவன்தான் இத்தகைய வடிவங்களில் இருக்கிறான்,
அவனைச் சார்ந்தவர்கள்தான் இத்தனை பேரும், அவர்களுக்கு நாம் மரியாதை
கொடுக்கவேண்டும், இன்றைக்குப் பெரிய அதிகாரிகளுக்கு மெய்க்காவலர்கள்
இருக்கிறார்கள். அன்றைக்கும் உருவவடிவத்தில் வந்த இறைவனுக்கு
பரமசிவனாகட்டும், தேவர்களாகட்டும், விஷ்ணுவாகட்டும், - அவர்களுக்கும் துவார
பாலகர்கள் என்று, இருபக்கத்திலே இருவர் இருப்பார்கள். இந்தக் தத்துவத்தை நாம்
புரிந்து கொண்டால் பல தேவதைகளை நாம் சாதாரணமாகச் சொல்வது தவறு என்று
தெரியும். சாமானிய அதிகாரிக்கே இருப்பக்கத்திலும் இரு காவலர்கள் நின்று
காப்பது போல், மாபெரும் உலகம் படைக்கும் சக்தியினுடைய அருளாக வந்துள்ள
தேவர்களானவருக்கு இரண்டுபக்கத்திலும் இரண்டுதேவதைகள் துவாரபாலகர்களாக
நின்றிருக்கிறார்கள் என்று நாம் உணர வேண்டும்.
அதுபோலத்தான் ஒரு மாபெரும் அதிகாரி - ஒரு பெரிய ஸ்தானத்தில்
உள்ளவர்கள் வாசலிலிருந்து உள்ளுக்குள் வருவதற்குள் பல கட்டங்கள்
இருக்கின்றன. ஒரு இடத்தில் சிலரைப் பார்ப்பார்கள். மற்றவர்களை மற்ற சிலர்
பார்ப்பார்கள். இன்னும் சிலரை வேறு இடத்தில் பார்ப்பார்கள். அதிகாரிகளின்
அந்தரங்க அறைகளைப் பார்ப்பவர்கள் ஒரு சிலர்தான் இருப்பார்கள். அது
போலத்தான், இன்றைக்கு நம்முடைய கோவில்களில் பார்த்தாலும் தெரியும்.
துவஜஸ்தம்பம் கோபுரம் முதல் ஆரம்பத்தில் கர்ப்பக்கிரகம் வரை உள்ளநிலையே
தவிர, இதில் நமக்கு எந்த வித மாற்றமும்- எண்ணமும் - வர வேண்டிய தேவையே
இல்லை.
'கோபுரத்தைக் கண்டால் கோடி புண்ணியம்' என்று சொல்வார்கள். கோடி
என்பதாவது ஒரு எண்ணிக்கையில் வந்துவிடுகிறது. 'அளவில்லா' என்பதற்கு
எண்ணிக்கையே கிடையாது. ஆகவே மூலஸ்தானத்தை அடைவது மிகுந்த
புண்ணியம் - அளவிலாப்புண்ணியம். கோபுரத்தைக் கண்டாலே கோடி புண்ணியம்
கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஆகவே, நாம் ஒவ்வொரு நாளும் கோபுரத்தை
யாவது காணவேண்டும் என்பதற்காக உயர்ந்த லட்சியத்தோடு மனிதன் வாழ
வேண்டும் என்பதற்காக, மனிதன் ஒருவன்தான் உயரமாகப் படைக்கப்
பட்டிருக்கிறான் என்பதற்காக, உயர்ந்த நிலையிலே நமக்கெல்லாம் கோபுரத்தைக்
கட்டி, வெகு தூரத்திலிருந்து நாமெல்லாம் காணக்கூடிய வகையிலே பழங்காலப்
பெரியோர்களெல்லாம் கோபுரத்தை அமைத்திருக்கிறார்கள். அந்த கோபுர
தரிசனத்திலே அனைத்து மக்களும் ஈடுபட்டு, இறைவனை நினைத்து, எங்கு
சென்றாலும் (கிராமத்திலோ, நகரத்திலோ எங்கு சுற்றினாலும்) இறைவனுடைய
நினைப்பு இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் அப்படி வைத்தார்கள். அதை
வைத்துத்தான் நம்முடைய தமிழ் நூல்களிலே 'அரசனை மறவேல்' என்று
சொன்னார்கள்.
வழிபாடு என்பதைக் காட்டிலும், மறக்காமல் இருப்பது முக்கியம் என்ற
சொன்னார்கள். 'தெய்வம் இகழேல்' என்றார்கள். தெய்வ நினைப்பிருந்தாலே
இகழ்வதற்கு வாய்ப்பிற்காது. எங்கே நாம் சுற்றினாலும், கிராம நகரத்தைச்
சுற்றினாலும், கோபுரத்தின் மீது நம் கண்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான் கோபுரத்தை அவ்வளவு உயரத்தில் அந்தக் காலத்திலே
கட்டினார்கள். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் கோபுரம் மிகவும் உயரமாக
இருக்கும்.
மூலஸ்தானத்திலிருந்து பார்த்தால், கோபுரங்கள் உயரமாக இருக்கும்,
உள்ளுக்குள்ளே கர்ப்பாலயத்தைப் பார்த்தால் மிகவும் தாழ்வாக இருக்கும். மிகவும்
சிறியதாக இருக்கும். ஏனென்றால் இறைவனுடைய இடம மிகவும் சிறியதாக இருக்க
வேண்டும், அவரை வழிபடும்பொழுது அனைத்து மக்களும் தங்களுடைய மனதில்
இருக்கும் எல்லாத் தீய எண்ணங்களையும் விட்டு விட்டு, தூய எண்ணங்கள்
வருவதற்குத் தகுந்தவாறு அமைதியாக வழிபட வேண்டும்.
இறைவனிடம் கூட, நம்முடைய குறைகளைச் சொல்லிக் கொள்வதற்கு
முக்கியமான தேவனாக உள்ள அந்த மூலஸ்தானத்திலே தரிசனம் செய்து கொண்டு
போக வேண்டும். நமக்கு எப்போது கோரிக்கைகள் இருக்கின்றனவோ, அப்போது
விசேஷ அபிஷேகங்கள், விசேஷ ஆராதனைகள் போன்றவைகளை நாம் செய்து,
அருளைப் பெறுகிறோம், அந்த வகையிலே, உலக ரீதியிலே எதை நாம்
பார்க்கிறோமோ, அதைத்தான் கோயிலிலே பார்க்கலாம். அங்கே ஆண்டவன்
அருள் பாலிக்கிறான். இங்கே அதிகாரி அருள் பாலிக்கிறான். இங்கே மனித
சமுதாயத்தில், காம,குரோத,லோபத்துடன் ஒரு 'பார்ஷியாலிடியுடன்' இங்கே
காரியங்கள் நடைபெறும். அங்கே 'பார்ஷியாலிட்டி' இல்லாமல் அனைவருக்கும்
சமமாக ஆண்டவனுடைய அருள் கிடைக்கும். இதுதான் கடவுளுக்கும்
அதிகாரிகளுக்கும் உள்ள வித்யாசம்.
நமக்குத் தேவையானவர்களானால் காரியங்களைச் சீக்கிரமாக முடித்துக்
கொடுப்பார்கள். அங்கே ஆண்டவனுக்குத் தேவை ஒன்றும் கிடையாது! ஆகவே
வரும் பக்தர்களுக்கு என்ன தேவையோ அத்தனையும் அனுசரித்து
அனைவருக்கும் ஒரேமுகமாக கேட்ட தேவைகளுக்கெல்லாம், கோரிக்கைகைளுக்
கெல்லாம், மொத்தமாக பதிலளித்து. ஆசீர்வதித்து, மனத்திருப்தியோடு
அனுப்புவார்கள். நம்முடைய குறைகளைக் கேட்கும் பொழுது, சாமானிய மனிதன்,
"ஓ .. உனக்கு இத்தனை குறைகள் இருக்கா? எனக்குக்கூடச் சில குறைகள் இருக்கு!
என்று திருப்பிப் பதில் சொல்லுவான். அவனுடைய குறையும்
சேர்த்துச்சொல்லுவான்.
ஆனால் ஆண்டவனிடம் சொல்லும்பொழுது, அவனுக்கு எந்த விதக்
குறையும் இல்லாததனால், நம்முடைய குறைகள் அனைத்தையும் கேட்டு,
அவைகளை, நீக்குவது மாத்திரம் அல்லாமல். மனசுக்குத் சாந்தியையும்,
அமைதியையும், ஆனந்தத்தையும் கொடுத்து, நம்முடைய கோரிக்கையும் பூர்த்தி
செய்து வழியனுப்புகிறார். இது நாம் ஒவ்வொருவரும் கோயிலிலே காணக்கூடிய
பெரிய உண்மை, அனுபவம்.
அந்த வகையிலே உருவ வழிபாடு, இந்து சமயத்திலே, உலகம் தோன்றிய
காலம் முதல் முறையாக வந்துகொண்டிருக்கிறது. அதைத்தான், 'அருவமும்
உருவமாகி அநாதியாய்ப் பலவாய்' என்று வகுத்தார்கள். அந்தக் கோயில்கள்
மூன்று நான்கு வகையிலே உருவாகின்றன.
ஒன்று எங்கும் நிறைந்துள்ள பரம் பொருள், பல பெரியோர்களெல்லாம்
அந்தப் பரம்பொருளை மனத்தால் தியானித்து தரிசிக்கவேண்டும் என்று விரும்பும்
பொழுது அவர்கள் கண்முன்னே சுயமாகத் தோன்றக்கூடிய சில ஷேத்திரங்கள்.
அதைத்தான் 'சுயம்பு ஷேத்ரங்கள்' என்பார்கள். சுய விருட்சஷேத்ரங்கள்
என்பார்கள்.
இப்படித்தான் பஞ்சபூத ஷேத்ரங்கள், மற்றும் பல விசேஷ ஷேத்திரங்கள்
எல்லாம் இன்றைக்கும் தமிழ் நாட்டிலும், பாரத நாட்டிலும் வழங்குகின்றன. அது
ஒரு நாள் ஒருவரால் உண்டாக்கப்படாமல் பல மகரிஷிகளுடைய அனுபவத்தின்
கீழோ, அவர்களுக்குத் தரிசனம் அளிப்பதற்காகத் தானாகவே தோன்றிய இடங்கள்.
அங்கே ஆகம சாஸ்திரத்துக்கு உட்பட்ட அந்த இறைவனுடைய வடிவம்,
மேல் -கீழ் - இத்தனை உயரம் - இத்தனை அடி - இத்தனை இஞ்ச் என்றெல்லாம்
இருக்காது.
ஆகவே சுயம்பூ என்று சொல்லக்கூடிய வடிவத்திற்கு ஆகம சாஸ்திரத்துக்கு
அப்பாற்ப்பட்ட ஒரு நிலையே இறைவனுடைய வடிவம்தான் இருக்கும். மற்றப் படி
சாமான்ய மனிதர்கள் நாமெல்லாம் கோயில் கட்டுவதென்றால் அங்கே ஆகம
சாஸ்திரத்துக்கு உட்பட்டு, இத்தனை அடியிலே கர்பக்கிரகம் என்றெல்லாம்
அனுஸரித்து - இது இது இத்தனை இஞ்ச் இருக்க வேண்டும் என்று - எங்கும்
நிறைந்துள்ள இறைவனைக்கூட நம்முடைய அளவுகோலுக்கு அடக்கிவிடுகிறோம்!
ஆனால் சுயம்பூ ஷேத்திரத்தில் அவர் எந்த வடிவத்தில் வருகிறாரோ, அதை
அனுஸரித்துத்தான் கர்பகிரகமே நாம் அமைப்போம்.
கர்ப பிரகத்துக்கு ஏற்றவாறு மூர்த்தி வைப்பது மனிதர்கள் கட்டும் கோயிலே,
ஆனால் ஸ்வயம்பூ ஷேத்திரங்களிலே, ஸ்வயம்பூவாக பகவான் எங்கு
எழுந்தருளினானோ அந்த மூர்த்தியை அனுஸரித்து கர்ப்பக்கிரகம் போன்ற
அமைப்புக்களெல்லாம் ஏற்படும். இதுதான் ஒரு விசேஷம், மேலும், கர்ப்பக்
கிரகத்தை அனுஸரித்து அர்த்த மண்டபம், மகா மண்டபம், என்றெல்லாம்
வரிசையாகக் கோயில்களிலே வரும், அது, மூலஸ்தானம் வைப்பதற்கு ஓரிடம்,
உற்சவர்களை வைப்பதற்கு ஓரிடம், பிற்பாடு பக்தர்கள் நிற்பதற்கு ஓரிடம் என்று
வரிசையாக அந்தக் காலம் முதல் வைத்தார்கள்.
அடுத்தபடியாக, மகரிஷிகள், பெரியோர்கள், அவர்களெல்லாம், தாங்கள்
வழிபடுவதற்காக இறைவனைப் பிரதிஷ்டை செய்து அதன் மூலம் கோயிலைக்
கட்டினார்கள். அதைத்தான் 'ரிஷிப் பிரதிஷ்டம்' என்று சொல்லுவார்கள். அந்த
வகையிலே பல மகரிஷிகள் தவம் செய்து, தாங்கள் வழிபடுவதற்காகப் பிரதிஷ்டை
செய்ததுதான், ரிஷிகளால் ஆராதிக்கப்பட்டது. பிரதிஷ்டை செய்யப் பட்டது என்ற
வகைக் கோயில்கள்.
இன்னும் பல கோயில்கள் இருக்கின்றன. இதற்கெல்லாம் ஸ்தல புராணம்
நிறைய இருக்கும், ஆகவே ஸ்தல புராணங்களைக் கொண்ட கோயில்களைப்
பார்க்கும்போது 'இந்த ரிஷிகள் தவம் செய்தார்கள், இந்த ரிஷிகளால் பிரதிஷ்டை
செய்யப்பட்டு, இந்திரனால் பூஜிக்கப்பட்டது. சந்திரனால் பூஜிக்கப்பட்டது, வாயுவால்
பூஜிக்கப்பட்டது' என்றெல்லாம் ஸ்தல புராணக்கதை சொல்லும்பொழுது அவர்கள்
பிரதிஷ்டை செய்து, பூஜை செய்து தங்களுடைய கஷ்டங்களையும்,
துன்பங்களையும், பாபங்களையும் நிவர்த்தி செய்து கொண்ட ஷேத்திரங்கள் என்று
கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, பல மன்னர்கள் எல்லாம் தங்களுடைய வெற்றியின்
ஞாபகமாக பலவிதக் கோயில்களெல்லாம் கட்டினார்கள். அப்படித்தான் தஞ்சை
பிரகதீஸ்வரர் கோயில் போன்றவைகளெல்லாம் கூட வந்தன. அங்கே ஆகம
சாஸ்திர முறைப்படி கர்ப்ப கிரகம் முதல் துவஜஸ்தம்பம் - கோபுரம் வரை
கட்டினார்கள். அங்கேதான் சாஸ்திரத்துக்கு முக்கியமான இடம் கிடைக்கிறது. மற்ற
இரு கோயில்களிலும் மூர்த்திகள் வந்துவிட்டன. மூர்த்திகளை அனுஸரித்து
சாஸ்திரத்தைக் கடைப்பிடித்துக் கோயில்களைக் கட்டினார்கள். இங்கே, அரசன்
எங்கே தன்னுடைய வெற்றிச்சின்னமாகக் கோயில்களை அமைத்தானோ, ஆகம
சாஸ்திரத்தை - சில்ப சாஸ்திரத்தை முழுமையாகக் கடைப்பிடித்து, அதன்மூலம்
கோயில்கள் கட்டப்பட்டு வந்தன.
அந்த மாதிரிக் கோயில்களிலே,. பல வித சிற்பங்களெல்லாம் - பலவிதப்
புராண இதிகாஸங்களெல்லாம் - காணலாம், ஏனென்றால் அனைத்துக்
கலைகளையும் இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும் - அர்ப்பணிக்க வேண்டும்
என்ற நோக்கத்தோடு அந்த அரசர்களுடைய காலத்திலே எத்தனை விதமான
கலைகள் இருந்தனவோ அத்தனை விதங்களையும் அந்தக் கோயில்களிலே
சமர்ப்பித்து, அந்தக் கோபுரத்திலேயும், பிராகாரத்திலேயும். தூணிலேயும்.
எல்லாவற்றிலும் அந்தக் கலைகளை நாம் இன்றும் காணலாம்,
பிற்காலத்திலே. நம்முடைய காலத்திலே ஒவ்வொரு கிராமங்களிலும்
நகரங்களிலும். கிராம - நகர - அமைப்பு அமைப்பதற்காக, ஊர்க்கோடியிலே சிவன்
கோயில். மற்றொரு பகுதியிலே பெருமாள் கோயில். கிராமத்தின் ஊர்
எல்லையிலே கிராம தேவதை கோயில். என மூன்று வகையான கோயில்களை
வைத்து கிராம நகர அமைப்புகள் ஏற்பட்டன, இவையும் சிற்ப சாஸ்திரத்துக்கும்
ஆகம சாஸ்திரத்துக்கும் உட்பட்டு அமைக்கப்பட்ட கோயில்கள்.
அந்த வகையிலேதான் பழங்கால முதல் கிராமங்கள் நகரங்கள் எல்லாம்
அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிவன் கோயில், ஒரு பெருமாள்
கோயில் ஒரு கிராம சக்தி மூன்றும் இருக்கும்,
வழிபாடு என்பது மனிதனுடைய வாழ்க்கையிலே மூன்று வகையிலே
நடைபெறுகிறது, ஒன்று உலக ஷேமத்திற்காகவும். கிராம, நகரங்களுடைய
நன்மைக்காகவும், அந்தக் கோவில்களிலே உள்ள மூர்த்திகளுக்குப் பரம்பரை
பரம்பரையாக வரும் அர்ச்சகர்களை வைத்து, காலத்திற்கு ஏற்றவாறு ஒரு காலமோ,
இரண்டு காலமோ, மூன்று வேளைகளோ பூஜைகள் செய்வது என்பது ஒரு நியதி,
இதை வைத்துத்தான் பழங்காலத்தில் அவர்களுக்கெல்லாம் மானியங்களெல்லாம்
கொடுத்து அவர்கள் வேறு எந்தக் காரியத்திற்கும் செல்லாமல், கிராம -
நகரங்களுடைய நன்மைக்காக இறைவனுடைய வழிபாடு நடைபெறுவதற்காக,
மூன்று வேளை, இரண்டு வேளை என்று பூஜை நிதிகளெல்லாம் வைத்துச்
செய்தார்கள். அது ஊர் நன்மைக்காக செய்யக்கூடிய ஒரு பூஜை.
தனி ஒருவனுடைய வாழ்க்கையிலே வழிபாட்டு முறைக்கு, வீட்டிலேயும்
வழிபடலாம், கோவிலிலே வந்தும் இறைவனுக்கு அபிஷேகம் செய்வித்து,
அர்ச்சனை செய்து, அவனுடைய அருளைப் பெறலாம். பிரம்மோற்சவங்கள்
போன்ற காலங்களிலும் நம்முடைய பிறந்த நாள் போன்றவைகளிலும், விசேஷ
அபிஷேகங்களும் உற்சவங்களும் செய்து வைக்கலாம் என்பதற்காக உற்சவ
காலங்களை நிர்ணயித்தார்கள்.
கோவிலில் உள்ளுக்குள்ளே வந்து இறைவன் எங்கிருக்கிறானோ அங்கேயே
வழிபடவேண்டும். ஆனால் கிராம, நகரங்களில் உள்ள அனைத்து மக்களும்
ஈடுபடுவதற்காக உற்சவங்களைப் பெரிதாக வைத்தார்கள். பத்து நாள் உற்சவம்
என்ற வைத்தார்கள்.
அப்பொழுது இறைவன் கோவிலிலே மாத்திரம் அல்ல, கோவிலிலே
இருப்பதுபோல் நம்முடைய வீட்டு வாசலிலேயும் வந்து நிற்கிறான். ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு திருக்கோலத்தோடு - அலங்காரக்கோலத்தோடு, ஒவ்வொரு
வாகனத்தில் இருந்து அருள் பாலிக்க நம்முடைய வீட்டின் முன்பே வந்து
நிற்கிறான். அப்பொழுது அனைத்து மக்களூக்கும் நம்முடைய இறைவன் என்ற
உணர்வு ஏற்பட்டு, அனைவரும் அங்கே அவனைத் தூக்குவதிலும், அவனுக்கு
அலங்கரிப்பதற்கும், அவனுக்கு வழிபாடு செய்வதிலும் எல்லோரும் பங்குபெற்று
அந்த இறைவனிடம் ஒன்றிப் போய்விடுகிறார்கள்.
அதற்காகத்தான் பழங்காலத்தொட்டு உற்சவங்கள் வைத்தார்கள், ரதோற்சவம்
வைத்தார்கள், தெப்போற்சவம் வைத்தார்கள். இப்படிப் பல வகையிலே
தெப்போற்சவம், ரதோற்சவம், பிரம்மோற்சவம் போன்றவைகளெல்லாம் வைத்து,
எல்லா மக்களையும் ஒன்று சேர்ந்து எல்லோருடையமனமும் இறைவனிடம் ஈடுபட
வேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டதுதான் உற்சவத்தின் மிகுந்த விசேஷம்.
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்று நாம் இன்றைக்கு வாயாலே
பேசுகிறோம். ஆனால் ரதோற்சவம், தெப்போற்சவம் போன்ற உற்சவங்களிலே
பார்க்கும்பொழுது எல்லாப் பொது மக்களும், எந்தவிதமான பாகுபாடும் இன்றி,
வகுப்பு ஞாபகமும் இன்றி ஒன்றாக, ஒரு இறைவனுடைய குழந்தைகள் நாம்
அனைவரும் என்ற உணர்வோடு ஆன்மீக அன்பர்களாக ஒன்று சேர்ந்து, கூடி,
இறைவனைக் காண்கிறார்கள்.
அந்த ஆன்மீக ஒற்றுமை - இறை ஒற்றமை, ஆன்மீக சகோதரத்துவம்
என்பது அந்த உற்சவங்கள் மூலமாகத்தான் நமக்குக்கிடைக்கிறது. கிராம
தேவதைகளுக்கு சாமானியப் பாமர ஜனங்கள் எப்படி இருப்பார்களோ
அதற்கேற்றவாறு அந்தக் கிராமோத்சவங்களிலே வழிபாடு நடத்துவார்கள். இதற்கு
அங்கேயே கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து, வேப்பிலை வைத்து,
மாவிலையை வைத்து அவர்கள் படைத்து- (தங்களுடைய சாப்பாட்டையே
உணவாகப்படைத்து) அந்தக் கிராம மக்களின் அளவுக்கு இறைவன் இறங்கி
வருவான் என்பது நம்முடைய இந்து சமயத்திலே மாத்திரம்தான் காணக்கூடிய
விஷயம்.
c எந்த நிலையில் இருந்தாலும் அந்த நிலைக்கெல்லாம் வந்து, c
எதையெல்லாம் கொடுத்தாலும் அதையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வது
இறைவனுடைய தனிச்சிறப்பு. அதை வைத்துத்தான் கிராம தேவதைகளை
வழிபடுவதைப் பார்க்கும்பொழுது சிவன் கோயில், பெருமாள் கோவிலைக்
காட்டிலும், தனிச் சிறப்போடு விசேஷமாக விளங்கும் கிராம தேவதைகளின்
வழிபாடு என்று தெரிகிறது.
அவர்கள் எந்த வாத்தியம் வைத்திருக்கிறார்களோ, அவர்கள் எதை
உண்ணுவார்களோ, அவர்கள் எதைக் கட்டிக்கொள்ளுவார்களோ, அவர்களுக்கு
எது இயற்கைகயாகக் கிடைக்குமோ, அந்தப் பொருட்களை வைத்தே
உற்சவங்களை நடத்துவதுதான் கிராம தேவதா உற்சவத்தினுடைய பெரிய
விசேஷம்.
இப்படியாக நம்முடைய கிராமத்திற்கும், கிராம மக்களூக்கும் எல்லோருக்கும்
நன்மை ஏற்படும் வகையிலும், ஒற்றுமை ஏற்படும் வகையிலும் உற்சவங்கள்
வழிபாடுகள் எல்லாம் நடைபெற்றன. பொதுவாக வீட்டிலே பூஜை செய்யும்பொழுது
பதினாறு முறைகளில் பூஜை செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். இறைவனை
வரவேற்க வேண்டும். அவரை ஆசனத்தில் உட்கார்த்தி வைக்க வேண்டும்.
அவரை 'இங்கேயே இருக்க வேண்டும்' என்று பிரார்த்தனை செய்து கொள்ள
வேண்டும், பிறகு கால் அலம்பவேண்டும், பிறகு அர்க்கியம் கொடுக்க வேண்டும்,
அப்புறம் ஜலம் விட்டு ஆசமனம் போன்றவை கொடுக்க வேண்டும், பிறகு
திரவியங்களையும் பல விதப் பொருள்களையும் வைத்து அபிஷேகம் செய்விக்க
வேண்டும். என்னென்ன பொருட்களால் அர்ச்சனை செய்யும்போது என்னென்ன
பலன்கள்கிட்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது? அப்படிச்செய்யும்போது அதனால்
ஏற்படும் பலன்களின் காரணமாக அவற்றில் ஆர்வம் ஏற்பட நமக்கு உற்சாகம்
வருகிறது. விருப்பத்தைக் கொண்டுதான் மனிதனுடைய வாழ்க்கையே இருக்கிறது?
ஆக, பலன்களைச் சொல்லும்பொழுது, அதற்கு ஆசைப்பட்டாவது
இறைவனை வணங்கும் நிலை வரும் ஆகவே மனிதனுடைய எண்ணம்
தியாகத்தை வளர்ப்பதற்கு இறைவழிபாடு, உற்சவங்கள் போன்றவைகளெல்லாம்
மிகவும் அவசியமாகின்றன.
அபிஷேகத்தினால் உனக்கு இன்னின்ன பலன் கிடைக்கும் என்றால்,
மனிதனுக்கு எத்தனையோ ஆசைகள் - எத்தனையோ கோரிக்கைகள். அதை
வைத்தாவது அத்தனை பொருட்களையும் இறைவனுக்கு அர்ப்பிக்கக்கூடிய
பக்குவம் அவனுக்குக் கிடைக்குமல்லவா? ஆகவே தியாகத்தின் அடிப்படையில்
எழுந்ததுதான் அபிஷேகம். ஆராதனைகள் போன்றவகைள். இவை நம்முடைய
இந்து சமயத்திலே பழங்காலந்தொட்டு வழங்கி வந்திருக்கின்றன.
உடனடியாக ஒருத்தனுக்கு ஒரு பொருளைக் கொடு என்று சொன்னால்
சட்டென்று கொடுத்துவிட மனசு வராது. ஆனால் அதே சமயத்தில்,
'இறைவனுக்குக் கொடுத்துவிடு, உனக்கு இந்தப்பலன் கிடைக்கும்' என்றால் ஒரு
'Reaction' இருக்கும். உடனே கொடுத்துவிட ஆசைப்படுவான். இப்படிக்
கொடுத்துக் கொடுத்துப் பழக்கப்பட்டவனுக்குப், பிறகு எந்த ஒரு ஏழை கேட்டாலும்
சரி, யாராவது கஷ்டப்பட்டாலும் சரி, எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய எண்ணம்
தானாகவே வளர்ந்துவிடும்! மனசு வராது. ஆனால் இறைவனுக்குக் கொடுத்துப்
பழக்கப்பட்டுவிட்டால் யார் கேட்டாலும் கொடுக்கக்கூடிய ஒரு பக்குவத்தை
இறைவன் தன் அருளால் நமக்குக் கொடுப்பான். யார் ஏழை எளியவர்களோ
அவர்களுக்கும் கொடுக்கக்கூடிய ஒரு பக்குவத்தை ஏற்படுத்தி அனைவருக்கும்
பொருளை வழங்கக்கூடிய ஒரு தன்மையை இறைவனுக்கு கொடுப்பதன் மூலம்
மனிதனைப் பக்குவப்படுத்தித் தயாராக்குகிறான்.
இந்த ஒரு நிலை இந்து சமயத்திலேதான் விசேஷமமானது. ஏனென்றால் மற்ற
எந்த ஒரு சமயத்திலேயும், இறைவனுக்குக் கொடுப்பது, அவனிடமிருந்து
பிரசாதமாகப்பெறுவது இரண்டுமே கிடையாது. செல்ல வேண்டியது - பிரார்த்தனை
செய்ய வேண்டியது வெளியே வரவேண்டியது - இந்த மூன்றுதான். இங்கேதான்
இறைவனுக்கு நாம் எல்லா விதமான உபசாரங்களும் செய்வித்து, இறைவனுக்கு
வஸ்திரம் அளிப்பது முதல், நைவேத்தியம் செய்வது முதல் அபிஷேகம் வரை,
அனைத்தையும் இறைவனுக்காக அர்ப்பித்து - செய்கிறோம்.
ஆனால் இறைவன் ஒன்றையும் எடுத்துக்கொள்வதில்லை, இறைவன்,
சாட்சியாக எல்லாவற்றையும் பார்த்து அனுபவிக்கிறான், பிறகு அத்தனையும்
பிரசாதமாக மனிதர்கள் தான் அனுபவிக்கிறார்கள். ஆக, தெய்வீகத்தோடு
அவர்களுடைய வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக, இறைவனுக்குக்
கொடுத்து, பிறகு அத்தனையையும் அனுபவிக்கக்கூடிய ஒரு பக்குவத்தை
இறைவன் நமக்கு அருள் பாலிக்கிறான், இது இந்து சமயத்தினுடைய பெரிய
விசேஷம்.
ஆகவேதான் ஆண்டவனிடம் பக்தி செலுத்துபவர்கள் யாராக
இருந்தாலும் அவர்களுக்குப் பொருட்களைக் கொடுத்துப் பழக்கம் ஏற்பட்டதனால்,
எந்த நல்ல காரியத்துக்கும் பொருளைக்கொடுக்கக்கூடிய நிலையில் தன்மை
வருவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும்.
தனிமனிதனுக்குச் சாப்பாட்டுக்காக இருந்தாலும் கூட அதை இறைவனுக்கு
நிவேதனம் செய்துவிட்டுச் சாப்பிடும்பொழுது அது பிரசாதமாக அமைகிறது.
இதுதான் இந்து சமய்திலே நைவேத்தியம் என்று சொல்லப்படுகிறது, இறைவனுக்கு
அர்ப்பணம் செய்வதன் முக்கியத் தத்துவம் இது.
ஆகவே மனிதன் மனிதனாக வாழ வேண்டும். மனிதன் தெய்வமாக
வாழவேண்டுமென்றால், வெறும் கோஷத்தினால் வாழ முடியாது. இறைத்
தொடர்பாடு வாழவேண்டும். இப்படி எந்த ஒரு காரியம் செய்யும்போதும் இறைத்
தொடர்போடு நாம் செய்யும்போது அதற்கு ஒரு நல்ல பலன் கிடைக்கிறது.
இதற்குத்தான் இறைவழிபாட்டிற்கு உருவவழிபாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
வெறும் மனிதன் சாப்பிடும்பொழுது உடம்பு புஷ்டிக்காகச் சாப்பிடுகிறான்.
ஆனால் இறைவனுக்கும் படைக்கும்பொழுது, உடம்பு புஷ்டி மட்டுமல்லாது
உள்ளத் தூய்மையும் ஏற்படுகிறது. ஒரு துணியைக் கட்டிக்கொள்வதனாலும் கூட
இறைவனுக்குக் சமர்ப்பித்து பிறகுதான் நாம் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படி
எந்த ஒரு செயலாய் இருந்தாலும் இறைத்தொடர்போடு அதை நாம் செய்யும்போது
அது நமக்கு மிகுந்த பலனையளிக்கிறது.
அதுபோலத்தான் ராமர் பிறந்த இடம், கிருஷ்ணர் பிறந்த இடம்,
பெரியோர்கள், ஞானிகள், மகான்கள் வாழ்ந்த இடங்கள் எல்லாம், ஏன் ரிஷிகள்
பிறந்த இடங்களும் கூடப் புண்ணியஸ்தலங்களாக நம்முடைய இந்து சமயத்திலே
சொல்லப்பட்டிருக்கின்றன. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் போன்ற
அடியார்கள் பிறந்த இடங்கள் எல்லாம் புண்ணிய ஸ்தலங்களாக முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கு சாமான்யமாக அரசியலிலே,
அதிகாரிகளடைய இடங்கள் கூட நினைவுச்சின்னங்களாக வைக்கப்படுகின்றன!
அப்படி இருக்கும்போது உலகம் அனைத்துக்கும் இறைவனாக இருந்து, இறை
தூதர்களாக இருந்து, இறையருளைப் பெற்றவர்களின் நிலையிலே அவர்களுடைய
இடங்களையெல்லாம் எவ்வளவு புனிதமாகக் காக்கவேண்டும்? எப்படி நினைவுச்
சின்னங்கள் அமைக்கவேண்டும்? அவை எப்படி வழிபட்ட ஸ்தலங்களாக
இருக்கவேண்டும். என்பதையெல்லாம் நாம் ஆலோசிக்க வேண்டும். ராமனோ,
கிருஷ்ணனோ,மகான்கள் இருந்தஇடம் வழிபாட்டுத்தலங்களாக இருக்கவேண்டுமே
தவிர, அவை நினைவுச்சின்னங்களாக இருக்கவாய்ப்பு இல்லை. ஏனெனில்
அவர்கள் வழிபடப்பட்டவர்கள்.
யார் நினைவு, கொள்ளத்தக்கவர்களோ, அவர்களுடைய நினைவுச்சின்னமாக
வைத்துக்கொள்ள வேண்டும், யார் வழிபடுவதற்குத் தகுந்தவர்களோ
அவர்களுடையதை வழிபாட்டுத்தலமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை
நாம் நினைவில் கொள்ள வேண்டம் இது நம்முடைய வழியே வரக்கூடிய ஒரு
மரபு. அந்த வகையிலே பழங்காலந்தொட்டுக் கோயில்களெல்லாம் பல வகையிலே
இருந்திருக்கின்றன.
இந்து சமயத்தின் மாபெரும் பொக்கிஷமான கோயில்கள் என்பவை
இல்லாவிட்டால் இந்து சமயம் என்பதே இல்லை. கோயில்கள் இலலாவிட்டால்
பாரதீய கலாசாரம், இந்துக் கலாசாரம் என்பது ஒன்றுமே கிடையாது. அது
ஒன்றுதான் நமக்கு மாபெரும் சுரங்கமாகவும், பெருங்கடலாகவும் திகழக்கூடியது.
கடலுக்கு ஆழம் காண முடியாது. அதுபோல் நமது கலாசாரத்துக்கும்
பண்பாட்டுக்கும் கோயில்களுக்கும் உள்ள தத்துவத்திற்கும் அங்கே உள்ள ஈஸ்வர
சக்திக்கும் நம்மால் எல்லையே காண முடியாது. அப்படி ஒரு ஆழ்ந்த
தத்துவத்தோடு கலைகளோடு கூடியது இறைவனுடைய ஸ்தானம்.
கோயில்கள் என்பது வெறும் இறைவனுக்காக மட்டும் ஏற்பட்டதல்ல,
மக்களுக்காக ஏற்பட்டது, மக்கள் சமுதாயத்துக்காக ஏற்பட்டது என்பதும் இந்து
சமயத்துக்கு மாத்திரம் அமைந்துள்ள ஒரு விசேஷம். ஏதோ இறைவனுக்குக்
கோயில் என்றால் அவனை மாத்திரம் வைத்துப் பூஜை செய்வதற்காக அல்ல.
அவனுக்குப் பூஜை செய்வதெல்லாம் மக்கள் உய்வதற்காகத்தான், மக்களின்
தேவைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொள்வதற்காக. மக்கள் தேவைகள் பூர்த்தி
செய்யப்பட்டதென்றால் மக்கள் சமுதாயம் வளர்ச்சியடைகின்றது.
ஆகவே, அரசாங்களம் எத்தனைதான் திட்டம் போட்டு மக்களை உயர்த்த
நினைத்தாலும் ஆண்டவனுடைய அருள் இல்லாவிட்டால் மக்கள் சமுதாயம்
உய்வதற்கு வாய்ப்பே கிடையாது. ஆகவே ஆண்டவனுடைய கோயிலும்,பக்தியும்,
ஆண்டவனுடைய வழிபாடும் எத்தனைக்கெத்தனை சிறப்பாக உற்சவங்களோடும்
வழிபாடுகளோடும் நடைபெறுகின்றதோ, அந்த அளவுக்கு மக்களிடைய சமுதாய
வாழ்க்கையும் மேலும் மேலும் உயரும். அவர்கள் போட்ட திட்டங்கள் இங்கே
நிறைவேறும். திட்டங்களை மனிதன் தீட்டலாம். நிறைவேறுவது ஆண்டவனுடைய
சங்கல்பம்.
அந்த வகையிலே நாம் எவ்வளவு வேண்டுமானாலும் ஆண்டவனிடம்
கேட்கலாம், கொடுப்பது அவனுடைய நிலை என்பதை நாம் புரிந்துகொண்டால்,
அப்போது இறைவனிடம் நமக்கு கோபமே வராது.
"நான் அதைக் கேட்டேன், இதைக் கேட்டேன், இறைவன் கொடுக்கவே
யில்லையே, அவனுக்கு என்ன கண் இல்லையா? காது இல்லையா?" என்று
இன்றைக்கு நல்ல பக்குவம் உள்ளவர்களே இறைவனைப் பார்த்துப் பாட்டுப்பாடக்
கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காரணம், இவன் எதையெல்லாமோ கேட்கிறான். அத்தனையையும்
இறைவன் கொடுக்க வேண்டும் என்று ஆரம்பித்தால் பிறகு உலகமே இயங்காது.
ஆகவே 'கேட்பது உன்னுடைய உரிமை, கேள். கொடுப்பது நாட்டிற்கு, உலகுக்கு.
உன்னுடைய வாழ்க்கைக்கு குறை இல்லாது நான் கொடுப்பேன். என்று அன்போடு
அருள் பாலிப்பவன்தான் இறைவன்.
வீட்டிலேயே கேட்பதையெல்லாம் கொடுத்தால் குழந்தைகளும்,
மாணவர்களும் கெட்டுப்போகிறார்கள், ஏன்? நாமே கூட, விரும்பியதையெல்லாம்,
ஆசைப்பட்டதையெல்லாம் சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போய்விடுகிறது. நமக்கே
இத்தனை கட்டுப்பாடு வேண்டுமென்றால் உலகத்தில் வாழக்கூடிய இத்தனை
உயிரினங்களையும் ஒரு வழியாகக் கட்டுப்படுத்தி சீராக வைத்திருப்பது என்றால்,
அது ஆண்டவனுடைய பெரிய அருள்.
அதற்காகத்தான் நாம் கேட்பவற்றில் நமக்குத் தேவையானதைக்கொடுத்து
இறைவன் நமக்கு அருள் பாலிக்கவேண்டும் என்பதற்காக, ஆண்டவனுக்கு உருவ
வழிபாட்டை வைத்து வழிவகையோடு அமைத்தார்கள். அவருக்குக் கண் காது
எல்லாம் வைத்து நாம் பேசுவதைக் கேட்பதற்காகத்தான் வைத்திருக்கிறது! அதனால்
தான் நாம்கொடுக்கும் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் வசதியான உருவம்
படைத்திருக்கிறான். அந்த அருளை நாம் பெறுவதற்கு வாய்ப்பாக நமக்கும்
கைகால்களை நல்ல வகையில் வைத்திருக்கிறான். நமக்கு அருள்பாலிக்கிறான்.
எங்கும் நிறைந்த பரம்பொருள் இல்லாவிட்டால் நாம் கேட்கவும் முடியாது, அவன்
கொடுக்கவும் முடியாது. இரண்டுக்கும் வசதியாகத்தான் உருவ வழிபாடு நமது இந்து
சமயத்திலே இருக்கிறது. அதனால்தான் நாம் கேட்டு, அவர் நமக்கு
அருள்பாலிக்கிறான். இரண்டு விஷயங்கள் நிலையாக நிற்பதற்கு இந்து சமயத்திலே
உருவ வழிபாடு மிகவும் முக்கியமானது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும்
முன்பாக ஒரு குளம் இருக்கும், ஒவ்வொரு கோயிலுக்கும் முன்பாக ஒரு ஸ்தல
விருட்சம் இருக்கும். ஒரு இறை மூர்த்தி இருக்கும்.
இது மூன்றும் கொண்டதுதான் கோயிலின் விளக்கம். ஒவ்வொரு
தீர்த்தத்துக்கும் ஒரு பெருமை இருக்கும். பெரியவர்கள், மகரிஷிகள் ஆகியோர்
ஸ்னாநம் செய்வதற்காக அமைந்திருக்கும் குளங்கள். அதற்கு தகுந்த அமைப்புடன்
அமைந்திருக்கும் அவற்றைத் திருக்குளங்கள் என்பார்கள். அதுபோல்
பழங்காலத்திலே ஒரு மரத்தடியில் உடர்கர்ந்து கொண்டுதான் தவம் செய்தார்கள்.
யோகிகள் மகரிஷிகளெல்லாம் எந்த மரத்தடியில் தவம் செய்தார்களோ அந்த
மரத்தின் ஞாபகம் இன்றைக்கும் இருக்கும். இதைத்தான் ஸ்தல விருட்சம் என்று
சொல்வார்கள். அந்த மரத்தில் இறைவன் அருள்பாலிக்க வந்ததினால் அந்த
மரத்தடியிலேயே அல்லது அந்த மரத்தின் பக்கத்திலேயே கோயில்
தோன்றியிருக்கும். அதை வைத்துத்தான் மூர்த்தி, தலம், கீர்த்தி என்பார்கள்.
இந்த மூன்றும் இருக்கும் இடத்திலே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கே
இடம் கிடையாது. ஏனெனில், யாரோ ஒரு பெரியவர் தவம் செய்த - அவருக்கு
அருள்பாலித்திருக்காவிட்டால் இந்த மூன்றுமே வந்திருக்காது. ஆகவே, யாரோ
ஒருவருக்கு அருள்பாலிப்பத்ற்காக இந்த மூன்றும் சேர்ந்து பிரத்யட்சமாக
வந்ததுதான் கோவில்.இன்றைக்கு நம் வசதிக்கேற்ப நாம் கட்டும் கோயில்களிலே,
மூர்த்தியை நாம் பிரத்ஷ்டை செய்கிறாம். ஆனால் பழங்காலக்கோயில்களிலே,
பெரியவர்கள் யாரோ தவம் செய்து- அவர்களுக்கு அருள்பாலிப்பதற்காக ஏற்பட்ட
ஷேத்திரங்கள். அந்தக் ஷேத்திரத்ங்களிலே மூன்றும் இருக்கும். தீர்த்தம், மூர்த்தி,
ஸ்தல விருட்சம். இந்த ஸ்தல விருட்சத்தோடு கூடிய கோவிலிலே இருக்கும்
இறைவன் யாரோ ஒருவருக்கு அருள் பாலிக்க வந்தவன். ஆகவே, ஒருவருக்கு
உதவுவதற்காக வந்தது என்றால் இன்றைக்கும் நாம் அந்த பக்தியோடு, அந்த
உணர்வோடு, அந்த சிரத்தையோடு பக்தி செய்யும்போது, அந்த இறைவன்
அருள்பாலிப்பான் என்பது கட்டாயமாக நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்று.
இறைவன் எப்போதும் அருள்வதற்குத் தயாராக இருக்கிறான். நாம்
பெறுவதற்குத் தயாராக இருக்கவேண்டும்.
மேகம் மழை பொழிகிறது. அப்பொழுது அனைவரும் அந்த மழையை
விரும்புவார்கள் ஆனால் செங்கல் சூளை போடுபவனுக்கு அந்த மழை கஷ்டமாக
இருக்கும். அதேபோல் இறையருள் தேவையில்லை என்பவர்களுக்கு பலனே
இல்லை என்பார்கள். ஆக, அனைவருக்கும் அருள் மழை பொழிகிறது. கண்ணாடி
சுத்தமாக இருந்தால் அங்கே பிரதிபிம்பமும் தெளிவாகத் தெரியும்.
கண்ணாடி அசுத்தமாக இருந்தால், நாம் எத்தனைதான் அலங்காரம்
செய்துகொண்டு நின்றாலும் நம்முடைய பிரதிபிம்பம் அழுக்கடைந்துதான் தெரியும்.
அலங்காரங்களின் அழகு தெரியாத. அதுபோல், மனிதன் என்னும் கண்ணாடி
வாழ்க்கை என்னும் கண்ணாடி சுத்தமாக இருந்தால், பக்தியோடு இறைவனை
வழிபடும்போது இறையருள் கட்டாயமாக நமக்குப் பிரதிபலிக்கும்.
எல்லாவற்றையும் நாம் இன்றைக்குப் பரிட்சை செய்துதான் வாங்குகிறோம்.
தூய்மையாக இருக்கிறதா, நல்லதாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குகிறோம்.
வெண்டக்காய் வாங்குகிறோம். நன்றாக இருந்தால்தான் வாங்குகிறோம். சாமான்கள்
வாங்குகிறோம். துணிகள் வாங்குகிறோம். சிலவற்றில் குறைபாடு இருக்கத்தான்
செய்கிறது.
கம்பெனியில் உழைக்கிறோம். முப்பது நாள் வேலை செய்த பிறகுதான்
சம்பளம் கொடுக்கிறான். முப்பது நாள் அவனை நம்பித்தான் உழைக்கிறோம்.
அவனும் நம்மை நம்பித்தான் பணம் கொடுக்கிறான். இதிலெல்லாம் நமக்கு
நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஆண்டவனிடம் வரம்போது மட்டும் அவன்
கொடுப்பானா, கொடுக்கமாட்டானா என்ற சந்தேகம் எழுகிறது. இந்தச் சந்தேக
நிலை மாறினால்தான் வாழ்கையிலே நாம் இறைவனுடைய அருளைப் பெற
முடியும். இறைவன் கொடுப்பானா, கொடுக்கமாட்டானா என்ற சந்தேகம்
இருப்பவனுக்கு எதுவுமே கிடைக்காது.
'சம்சயாத்மா விநஸ்சித.' என்று பகவத்கீதை கூறுகிறது. அதை வைத்துத்தான்
நாவுக்கரசர் போன்ற பெரியோர்களெல்லாம், அடியவர்கள் எல்லாம், பலவிதச்
சோதனைகளுக்கெல்லாம் உட்பட்டபோதும்கூட, இறைவன் இருக்கிறானா
இல்லையா என்றெல்லாம் கேட்கவே இல்லை. "நான் நம்புவது நமச்சிவாயம்.
என்னைக் காப்பது நமச்சிவயம் என்ற நம்பிக்கையோடு அழுத்தம் திருத்தமாகக்
கூறினார்கள்.
அவரைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்ட போதும்கூட அத தணிந்தது.
கல்லைக்கட்டி சமுத்திரத்தில் போட்டபோது அந்தக் கல் மிதந்தது என்று நாம்
பார்க்கிறோம்.
இறைவனுடைய அற்புதங்களைப் பார்க்கும்போது அவன் நமக்கு என்னவெ
ல்லாம் அருள் செய்திருக்கிறான் என்று அறுபத்தி மூன்று நாயன்மார்களுடைய,
ஆழ்வார்களுடைய வாழ்க்கை மூலம் நாம் நிறைய உணர்ந்து கொள்ளலாம்.
அற்புதம் செய்வதெல்லாம் இறைவன்அல்ல, ஆனால் இறைவன் அற்புதம்
செய்வான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அறுபத்து மூன்று நாயன்மார்களு
க்கு இறைவன் பலவித அற்புதங்கள் செய்திருக்கிறான். இறைவன் இருக்கிறான்
என்பதை நம்பியதனால் அவர்களுக்கு அத்தனை நன்மைகளெல்லாம் நிகழ்ந்தன.
பலபேரிடம் நமக்கு நம்பிக்கை இருக்கிறது. லாப விஷயங்களை
நம்புகிறோம். ஆனால் ஆண்டவன் என்று வரும் போது மட்டும், 'இறைவன்
இருக்கிறானா? அவன் இருந்தால், அவன் ஜெயித்தால்!' என்றெல்லாம் டேஷ்
போடுகிறோம். இந்த 'டேஷ்' (பக்தி எங்கிருக்கிறதோ, அங்கு பலன் குறைவாக
இருக்கிறது. நம்பிக்கையோடு எங்கே நாம் செய்கிறோமோ, அங்கே
இறைவனுடைய அருள் பரிபூரணமாக நமக்குக் கிடைக்கிறது.
சந்தேகம் வரும்போது மனிதனுடைய மனது சுத்தமாக இல்லை. சுத்தம்
இல்லாதபோது பலனும் கிடைப்பதில்லை. அருளைப்பெறுவது முடிவதில்லை.
ஆகவே, எந்தவிதக் குழப்பமாக இல்லாமல், சந்தேகமும் இல்லாமல் தூய்மையாக
இருக்கும்போதுதான் ஆண்டவனுடைய ஒளிவிளக்கு நம்முடைய உள்ளத்திலே
தெரிகிறது. எங்கே பக்தி செய்தும் பிரார்த்தனை செய்தும்கூட, நம்பிக்கை வைத்தும்
கூடப் பலன் கிடைக்கவில்லையோ, நடைபெற வில்லையோ அதையும்
ஆண்டவன் சித்தம் என்று நாம் விட்டுவிட வேண்டும்.
அதிலும் ஒரு தத்துவம் இருக்கும். ரகசியம் இருக்கும். அதனால் அது
கிடைக்கவில்லை என்று நேர்ந்தால் அப்படியே விட்டுவிடவேண்டும்.
அமைதியுடன் இருக்க வேண்டுமே தவிர அப்போதும் நம் மனத்தைக் குழப்பிக்
கொண்டு, "ஆண்டவா... உனக்கு இது செய்தேனே.. அதைச் செய்தேனே..." என்று
நிந்தனை செய்யும்போது மனதிலே தாய்மை அற்ற நிலை வருகிறது.
இன்றைக்குப் பொது மக்களுக்கு நாளுக்கு நாள் கடவுளிடம் பக்தி பெருகி
வருகிறது. ஆனால் குழப்பமற்ற பக்தி இருக்கிறதோ என்று பார்த்தால், அது மிகவும்
குறைவாகவே இருக்கிறது. குழப்பத்தினால்தான் பக்தியே வளர்நத் §
கொண்டிருக்கிறது! இந்த பக்தி அசல் பக்தியல்ல. நிஜமான பக்தியல்ல. ஆனால்
நிஜமான பக்தி வருவதற்கு இது ஒரு காரணமாக அமையலாம். ஆனால்
குழப்பத்தோடேயே வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்ககூடாது.
நிஜமான பக்தியை அடைவதற்கு இந்த பக்தியில் தொடங்கி அதன்மூலம்,
குழப்பமற்ற நிலையை அடைய வேண்டும்.
மனிதனிலே எந்தவிதமான பாகுபாடும், வேறுபாடும் இல்லாமல் அனைவரும்
ஆண்டவனுடைய பக்தர்கள் என்று எடுத்துக்காட்டாகத்தான் அறுபத்தி மூன்று
நாயன்மார்களையும் பன்னிரண்டு ஆழ்வார்களையும் ஒவ்வொரு கோயிலிலும்
வைத்திருக்கிறார்கள். அந்த ஆழ்வார்களிலும் நாயன்மார்களிலும், அனைத்து
சமதயாத்தினரோடு பெரியோர்களும் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஒரே பீடம்
அமைக்கப்பட்டு எல்லோரையும் பொதுவான நிலையில் வைத்திருக்கிறார்கள்.
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் பக்தி செய்து, தியாக மனப்பான்மையுடன்
பக்தி செய்து, தியாக மனப்பான்மையுடன் பக்தி செய்து, நல்ல எண்ணத்துடன் பக்தி
செய்து, ஒழுங்காக முறையோடு பக்தி செய்து வந்தால், இறைவனுடைய அருளால்
நமக்கு எல்லாமே கிடைக்கும். அந்த வகையிலே அறுபத்து மூன்று
நாயன்மார்களையும், பன்னிரு ஆழ்வார்களையும் தூய மனதோடு நாம் பக்தி
செய்து- அனைத்து சமதாய மக்களும் கோவிலுக்கு வந்து, பக்தியின் நிறைவாக
மனத்தூய்மை பெறுவதற்காக, 'நான் பூஜை செய்கிறேன்' என்று அகங்காரம்
இல்லாமல், இறைவனுடைய அடியார்க்கு அடியவனாய்த் தொண்டு செய்கிறேன்
என்ற உணர்வோடு நல்ல நிலையோடு பக்தியைச் செய்ய வேண்டும்.
அடியார்களிலே உயர்ந்த ஜாதிக்காரர்கள் இருக்கிறார்கள். தாழ்ந்த ஜாதிக்காரர்
-களும் இருக்கிறார்கள். அதனால் அகங்காரத்தை அழிப்பதற்காகவே கோயிலுக்குச்
செல்லவேண்டும். நானும் கோயிலுக்குப் போகிறேன் என்று அகங்காரத்துடன்
கோயிலுக்குச் செல்லக்கூடாது. அப்படி பக்தியோடு கோயிலுக்குச் செல்லும்போது,
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பதை நாம் வாழ்க்கையிலும் பார்க்கலாம்.
ஒவ்வொரு மனிதனும் கோயிலுக்குச் செல்லும்போது பக்தியோடு
அகங்காரமற்ற நிலையில் எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்ற உணர்வோடு
கோயிலுக்குச் செல்லவேண்டும்.
கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக, வெளியே குளம் இருக்கும். ஜலம்
இருக்கும். அங்கே சென்று கை கால்களையும், முகத்தையும் கழுவிக்கொள்ள
வேண்டும். விபூதியோ, குங்குமமோ, சந்தனமோ ஏதாவது ஒன்று நெற்றியில்
இட்டுக்கொள்ள வேண்டும். இந்தக் காலத்திலே சினிமாவுக்குப் போவது போன்று
கோவிலுக்கு வருவது பழக்கமாகிவிட்டது. அந்த நிலையெல்லாம் இல்லாமல்
கோவிலுக்குச்செல்லும்போது, நம்முடைய முறைப்படி, சென்று, துணியை இடுப்பில்
கட்டிக்கொண்டு, லுங்கியெல்லாம் கட்டிக்கொள்ளாமல், நம்முடைய இந்து கலாசாரப்
படி உடைகள் அணிந்துகொண்டு, ஒரு நல்ல எண்ணத்தோடு செல்ல வேண்டும்.
பெரியவர்களைப் பார்க்கப் போகும்போது நாம் வெறுங்கையோடு போக
மாட்டோம். அப்படி இருக்கும் போது பெரியவர்களுக்கெல்லாம் பெரியவனான
இறைவனைப் பார்க்கப்போகும்போது வெறுங்கையுடன் போகலாமா? ஏதோ
நம்முடைய சக்திக்குத் தகுந்த மாதிரி புஷ்பமோ, பழமோ, வாங்கிக்கொண்டு
போகலாம். அதை நம் சக்திக்கு ஏற்றவாறு பணிவோடு பக்தியோடு சமர்ப்பிக்க
வேண்டும்.
கோவிலுக்குள் போனவுடன் முதல் முதலாக, நந்தி பகவானுக்குப் பக்கத்திலே
வணங்கிவிட்டு அங்கிருந்து உள்ளே செல்லவேண்டும். பிறகு, விநாயகப்
பெருமானை வழிபட வேண்டும். ஒவ்வொரு சன்னிதியையும் பார்க்கும்போது
வெறும் காட்சிப் பொருளைப் பார்ப்பது போல் பார்க்கக்கூடாது. எத்தனையோ
பெரியவர்களெல்லாம் இறைவன் மீது எவ்வளவோ அருட்பாடல்களைப்
பாடியிருக்கிறார்கள். அவற்றை மனதிற்கொண்டு அருட்காட்சியைப் பார்ப்பது
போல் பார்க்கவேண்டும். அத்தகைய பாடல்களைப் பாடி அவனை மகிழ்வித்து
அவனுடைய அருளைப் பெற்றுச் செல்லவேண்டும்.
சாதாரண மனிதர்களிடம் ஒரு காரியம் நடக்கவேண்டும் என்றாலே அவனை
இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து போற்றுகிறோம். ஒன்றுமில்லாதவனைப்
புகழ்ந்தால்தான் காரியம் நடக்கிறது. ஏகப்பட்டது கொடுத்தால்தான் காரியம்
நடக்கிறது? இறைவனுக்கு என்று வரும்போது கொடுக்கவேண்டியதெல்லாம்
அவசியம் இல்லை. கொடுக்கவேண்டியது எது? மனது! தாழ்மையான பக்தி,
சிரத்தை இவற்றைத்தான் கொடுக்கவேண்டும். பாக்கியெல்லாம் உலக
வாழ்க்கைக்காக, ஏதோ நம்மாலனதை கற்பூரம், பழம், புஷ்பம், தேங்காய் என்று
கொண்டு போகிறோம் இந்த பக்தியோடு முதல் முதலாய் ஒவ்வொரு சன்னிதியிலும்
இருந்து பாடல்களைப் பாடி வரவேண்டும்.
எல்லாக் காரியத்தையும் நிதானமாகச் செய்கிறோம். ஆனால் கடவுள்
சன்னதியில் மட்டும் கிடுகிடுவென்று போய்விடுகிறோம். அப்படிச் செல்லக்கூடாது.
நிதானமாக பொறிமையோடு கோயிலுக்குச் சென்று வரவேண்டும். முதலில்
விநாயகரை வழிபடவேண்டும். பிறகு பிரதட்சிணமாக வரும்போது ஆங்காங்கே
உள்ள மூர்த்திகளை வழிபட வேண்டும். மூலஸ்தானத்தை வணங்கும்போது, சிறிது
நேரம் இருந்து பகவானுடைய உருவத்தை மனதிலே வாங்கி ,அப்படியே மனதில்
பெற்றுக் கொள்ளவேண்டும்.
பொதுவாகச் கோவிலுக்குச் செல்லும்போது அங்கே இறைவனிடம் ஒரு சக்தி
இருக்கிறது என்கிறோம். அந்தச்சக்தியைப் பெற்றுக்கொண்டு திரும்பவேண்டும்.
போகும்போது ஒருவித வறட்டு சக்தியுடன் போவோம். ஒன்றுமில்லாமல்
போவோம். வரும்போது புனித சக்தியோடு வரவேண்டும். பேட்டரி சார்ஜ்
என்கிறார்களே, அதுபோல் சிறிது நேரம் இருந்து நம்முடைய மனம் என்னும்
பேட்டரிச் சார்ஜ் செய்து கொண்டு வருவதுதான் கோவிலுக்குச் சென்று வந்ததன்
அடையாளம்.
ஒவ்வொரு சன்னதியிலும் சில நிமிஷங்கள் இருந்து, இருந்து, அந்த
இறைவன்மேல் பாடப்பட்ட பாடல்களைப் பாடியப்படி, விநாயகப்பெருமான்,
மூலஸ்தானம் அடியார்கள் இவர்களை பார்த்துக் கொண்டு சண்டிகேஸ்வரர் முன்
சிவப்பிரசாதமாய் இருந்தால் சிறிது அங்கே வைத்துவிட்டுப் போகவேண்டும்.
அவர் ஒவ்வொரு பக்தரும் தன்னுடைய பிரசாதத்தை எனக்குக் கொடுத்து
விட்டுப்போகவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் நம் கையில் ஏதாவது
பிரசாதம் இருந்தால் அவருக்கு கொஞ்சம் வைக்கவேண்டும். அப்படி ஏதும்
இல்லாவிட்டால், பக்தர்கள் வந்து சென்றோம் என்று அவருக்குத் தெரிவிக்கும்
வகையில், அவர் தவத்தில் இருக்கும்போது, நம் வருகையை உணர்த்தும்
வகையிலே மிகச்சிறிய அளவிலே கையைக் கொட்டிவிட்டு- நாம் ஒரு நிமிடம்
சிவத்தியானம் செய்துவிட்டு வரவேண்டும்.
இது அவரது தவத்துக்க இடையூறு அல்ல. அங்கே நாம் சென்றதற்கு
அடையாளமாகச் செய்யவேண்டிய ஒரு பணி.
அப்படிச் செய்துவிட்ட, பிறகு முறையாக எல்லா சன்னதிகளையும் தரிசனம்
செய்துவிட்டு, நந்தி பக்கத்தில் நின்று சாமியைப் பார்த்துவிட்ட பிறகு
துவஜஸ்தும்பத்தின் முன் வந்து சேவிக்கவேண்டும்.
இப்படி முறையோடு கோவிலை வலம்வந்து வணங்கினால்தான் கோவில்
பிரதட்சனம் பூர்த்தியாகிறது. பெருமாள் கோவிலாக இருந்தாலும் இதே போலத்தான்
இடமிருந்து வலமாக வந்து மூலஸ்தானத்தை தரிசனம் செய்ய வேண்டும். எந்தப்
பக்கத்தில் கைகால் நீட்டினால் தோஷமில்லாமல் இருக்கமோ, தவறு இல்லாமல்
இருக்குமோ அந்த வகையில் விழுந்து வணங்கவேண்டும். அதுவரையில்
கையைக் கூப்பிக்கொண்டு வந்தால் போதமானது.
துவஜஸ்தம்பத்திற்குப் பிறகு சிறிது நேரம் உடகார்ந்து வெளியில் மௌன
தியானம் செய்யவேண்டும்.
பிறகு வெளியே வந்து நம்முடைய மனைக்குச் செல்ல வேண்டும். இப்படி
வழிபாட்டிலே ஒரு முறை இருக்கிறது. அந்த வழிபாட்டு முறைப்படி செல்ல
வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் அவர்களின் இஷ்ட
தெய்வதினுடைய மந்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். அதைத்தான் தீக்க்ஷ£
நாமம் என்று சொல்வார்கள். பஞ்சாட்சரமோ, அஷ்டாட்சரமோ, ஷடாட்சரமோ,
ஏதோ ஒரு மந்திரத்தை ஜபித்து, அதையே கடவுள் சன்னிதானம் முன்னால் ஜபித்து
அவனுடைய அருட்சக்தியைப் பெறவேண்டும்.
இப்படி ஒருவழியோடு வழிபாட்டு முறை இருந்தால்தான் கடவுளுடைய
அருள் நம்முடைய வாழ்க்கையிலே கிடைக்கும்.
விசேஷ காலங்களிலே பிரதோஷ காலம் மிகவும் விசேஷம். பிரதோஷ
காலத்திலே ஒவ்வொரு மனிதனும் சிவன் கோவிலில் வந்து சேவிக்கவேண்டும்.
அந்த சமயத்திலே அனைத்து தேவர்களும் தேவதைகளும் சிவ சன்னதியில் வந்து
கூடுகிறார்கள். ஆகவே, பிரதோஷ காலத்திலே சிவன் சன்னதியை சேவிப்பதன்
மூலம், எல்லாத் தேவைகளையும் தரிசித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கிறது.
பிரதோஷ காலம் என்றால் மிகவும் தோஷமான காலம் என்று சாமான்யமாகப்
பொருள். அந்த தோஷகாலத்திலே நாம் இறைவனைத் தரிசிக்த்துக்கொண்டிருந்தால்
அத்தனை தோஷங்களும் நிவர்தியாகிவிடும்.
ஆனால், அதே காலத்தில் நாம் வேறு நிந்தனையில், வேறு இடத்தில்
இருந்தால், தவறான காரியத்தைச் செய்து கொண்டிருந்தால், சாமான்யமாகச்
செய்யக்கூடிய பாவங்கள்கூடப் பெரிய தோஷங்களாகிவிடும்.
மனிதன் எதற்காகப் பிறந்தான் என்றால், சம்பாதித்துச் சாப்பிடுவதற்கு,
மாடியிலே தூங்குவதற்கு டி.வி. ரேடியோ பார்ப்பதற்கு, கேட்பதற்கு என்பது
மாத்திரமல்ல. இவையெல்லாம் தேவைதான். ஆனால் இத்தனைக்கும் மேலாக நாம்
இறைவனையும் நினைத்தால்தான் நாம் இறையருளைப் பெறமுடியும். பெற்றதையும்
அனுபவிக்க முடியும். இறையருளை வைத்துத்தான் வாழ்க்கையே தவிர,
வாழ்க்கையே இறையருள் அல்ல. இன்றைக்கு இத்தனை சுகமாய் இருக்கிறதோ,
கஷ்டமாய் இருக்கிறதோ, அதற்குக் காரணம் இறைவன்தான். இறைவனுடைய
அருளால்தான். ஆகவே, இனியும் நம்முடைய வாழ்க்கை நல்லபடி அமைவதற்கு
நாம் ஒவ்வொருவரும் இறையருளைப் பெற வேண்டும். நல்ல குணங்களைப் பெற
வேண்டும்.
இறைவனிடம் எத்தனையோ கேட்டுக் கொள்கிறோம். எனக்கு
அதுவேண்டும், இது வேண்டும் என்றெல்லாம் கேட்கிறோம். நல்ல குணங்கள்
வேண்டும். மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை. இரண்டு. இறைவனை
மறவாமை ஒன்று. நல்ல தூய்மையான வாழ்க்கை இன்னொன்று. தூய வாழ்க்கையும்
தூய மனமும் எங்கே இருக்கிறதோ, அங்கேதான் இறைவனுடைய அருள்
வருகிறது. ஆகவே, இறைவனிடம் அதைக் கொடு இதைக் கொடு என்று
கேட்டுக்கொள்வது மாத்திரமல்லாமல், எனக்கு நல்ல வாழ்க்கையையும், நல்ல
மனத்தையும், நல்ல சிந்தனையையும் கொடு. நல்ல செயலையும் கொடு என்று
கேட்க வேண்டும்.
நான் மாத்திரம் நன்றாய் இருக்கவேண்டும் என்று கேட்காமல்
உலகமனைத்திலும் உள்ள அனைவரும் நன்றாய் இருக்கவேண்டும் என்று
பிரார்த்தனை செய்ய வேண்டும். இதுதான் இந்து சமயத்திலுள்ள ஒரு விசேஷம்.
அந்தக் காலத்திலே கூன்பாண்டியன் என்ற அரசன் மாற்று சமயத்திலே
இருந்துவிட்டு மீண்டும் இந்து சமயத்திற்கு வந்தபோது, ஞான சம்பந்த பெருமான்
பாடிய பொழுது, இதைத்தான் அவர் பாட்டிலே கேட்டுக்கொள்கிறார்.
வாழ்க அந்தணர், வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்கதீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க, வையகம் துயர் தீர்கவே
உலகம் முழுவதும் உள்ள எல்லா ஜனங்களும் ஷேமமாக இருக்க வேண்டும்.
சுபிட்சமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாரே தவிர, நான் சுபிட்சமாக
இருக்கவேண்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று கேட்கவில்லை. உலகம்
நன்றாக இருந்தால் அதிலுள்ள நாமும் நன்றாகத்தானே இருப்போம்?
எங்கும் நிறைந்த பரம்பொருள் மனதில் இல்லையென்றால் நினைக்க
முடியாத. பசு மாட்டிற்கு உடம்பு முழுவதும் பால் இருந்தாலும் அது காம்பின்
வழியாகத்தானே நமக்குக் கிடைக்கிறது. எங்கும் காற்று நிறைந்திருந்தாலும் ஒரு
ஃபேன் மூலம்தான் காற்று இருப்பது நமக்குத் தெரிகிறது. மின்சக்தி எங்கும்
இருந்தாலும் ஒரு பல்பின் மூலம்தான் தெரிகிறது என்பார்கள்.
அதுபோல் ஆண்டவன் எங்கும் நிறைந்திருந்தாலும் கோவிலின்
மூலமாகத்தான் அருள் பாலிக்கிறான். மூர்த்தியின் மூலமாகத்தான்
அருள்பாலிக்கிறான். இது இந்து சமயத்தினுடைய ஒரு மரபு, ஒரு நெறி முறை.
அந்த வகையிலே பெரும் கருணை கொண்டுள்ள ஒரு பரம்பொருள் நம்முடைய
உள்ளத்தில் நிறைந்து, நம் அனைவரையும் நல்வழிப்படுத்த, நெறிப்படுத்த, நம்
அனைவருக்கும் இறையருள் கிட்டவேண்டும் என வாழ்த்தி ஆசிர்வதிக்கிறோம்.