புதிய பார்வை பத்திரிகைக்கு அளித்த பேட்டி

புதிய பார்வை பத்திரிக்கைக்கு சுவாமிகள் அளித்த பேட்டி

இந்துமதம், இந்துமதம் என்று பேசி வருகிறோம். அப்படி ஒரு மதம்

இருக்கிறதா?

உலகம் தோன்றிய காலம் முதலே தோன்றிய மதம் இந்துமதம். இன்றும்

என்றும் இருக்கப்போகிற மதம் இந்து மதம் ஒன்றே.

அப்படியானால் சைவம், வைணவம் என்ற பாகுபாடுகள் வருவது ஏன்?

ஆரம்பத்தில் அப்படிப்பட்ட பாகுபாடுகள் இல்லை. இயற்கையோடு

இயல்பாக வளர்ந்த இந்து மதம் கலிகால தொடக்கத்திலே தான் இத்தகைய

மாற்றங்களுக்கு உள்ளாகிற்று. ஒவ்வொரு பகுதியிலும் கிராமங்கள் என்று

உருவெடுத்த போது அங்கே ஒரு சிவன் கோயில், ஒரு விஷ்ணு கோயில் ஒரு

கிராம தேவதை கோயில் என உருவாக்கினார்கள். ஆரம்பத்தில்

வேற்றமையில்லாமலிருந்த மதத்தில் கிராமங்கள், பின்னர் நகரங்கள் என்று

தோன்றியபோது தான் வேற்றுமைகள் தோன்ற ஆரம்பித்தன.

இந்த வேற்றுமைகளைக் களைய வழிகள் இல்லையா?

இப்போது தானாகவே களையப்பட்டு வருகின்றன. 90 சதம் வேற்றுமை

இல்லையென்றே சொல்லலாம்.

இந்து மதத்தில் கூறப்படும் சனாதன தர்மம் தேவைதானா?

இந்து தர்மம் என்பதே சனாதன தர்மம்தான். எல்லாம் ஒன்றே!

ஆசாரம் காப்பதாக சொல்பவர்களே அனாசாரத்தையும் செய்கிறார்களே?

ஒரு மனிதன் ஒரு நாள் முழுவதும் இருபத்திநாலு மணி நேரமும்

ஆசாரமாகவே இருக்க முடியாது. அதே போல் இருபத்திநாலு மணி நேரமும்

அனாசாரமாகவும் இருந்துவிடமுடியாது. இரண்டும் கலந்ததுதான் மனித வாழ்க்கை!

"எங்கே பிராமணன்?" என்று ஆசிரியர் சோ துக்ளக்கில் ஒரு தொடர்

எழுதினார். அது இப்போது மீண்டும் கூட பிரசுரிக்கப் படுகிறது. அந்தத் தொடரின்

கருத்து பிராமணன் பிராமணனாக இல்லை என்பதே! அது உண்மையும் தானே?

பிராமணனுக்கு என்னென்ன லட்சணங்கள், என்னென்ன விளக்கங்கள்

சொல்லப்பட்டிருக்கிறதோ, அது யுகத்துக்கு யுகம் மாறிக் கொண்டிருக்கிறது.

தற்போதுள்ள கலியுகத்துக்கேற்றவாறு பிராமணர்கள் வாழ்ந்து கொண்டு

இருக்கிறார்கள். முன்யுகத்தில் சொல்லப்பட்ட 'அந்தணர்கள்' வாழ்க்கையை வைத்து

இப்போதுள்ள பிராமணர்களை எடை போட முடியாது. எடை போடக்கூடாது.

இந்துமதம் தவிர்த்து மற்ற மதங்களுக்கெல்லாம் ஒரு தலைமை, ஓர் அமைப்பு, ஒரு

கட்டுப்பாடு, நிர்வாகம் என்று இருப்பது போல இந்து சமயத்துக்கு இல்லையே?

அந்த மதங்களெல்லாம் ஒருநாள், ஒருவரால் ஆரம்பிக்கப் பட்டவை. அவை

ஆரம்பிக்கும் போதே கட்டுப்பாடுகளுடன், அமைப்பு ரீதியாக

உருவாக்கப்பட்டவை. ஆனால், அனாதி காலத்திலே இயல்பாக வளர்ந்த இந்து

மதத்தில் அப்படிப்பட்ட அமைப்புகளையும் கட்டுப்பாடுகளையும் எதிர்பார்ப்பது

கூடாது. ஆனால், இந்துமதத்தினர் எப்படி இருக்க வேண்டும் என்ற நூல்களில்

எழுதப்பட்டுள்ளன. நூல்களில் எழுதப் பெற்ற கட்டுப்பாடுகளை பெற்றோர்கள்

குழந்தைப் பருவத்திலிருந்தே சொல்லிக் கொடுத்து வருவதால் அமைப்பு என்று

இல்லாவிட்டாலும் மற்ற மதங்களில் உள்ள கட்டுப்பாடு மற்றும் நெறிமுளைகள்

இயல்பாகவே வாழ்க்கையில் அமைந்து போகின்றன.

இந்து மதத்தில்தான் சாமியார்கள், அடியார்கள் என அதிக அளவில் தனித்தனி

அமைப்பாக இயங்கி வருகிறார்கள்?

இப்படிப்பட்டவை கொஞ்ச நாள் இருக்கும். அந்தந்தக் காலக்கட்டத்தில்

இந்த அமைப்புகள் தோன்றம் அந்த Godman க்குப் பிறகு இவை அமைதியாகப்

போய்விடும்.

இந்து சமயத்திற்கு சங்கர மடங்களின் பங்கு என்ன?

இந்து மதத்தின் நியதிகளை நியமங்களை காக்க வளர்க்க ஆதிசங்கரர்

ஆரம்பித்தவை.

ஆதிசங்கரர் ஆரம்பித்தது நான்கு மடங்கள் மட்டுந்தான் என்று சிலர்

குறிப்பிடுகிறார்களே அதைப்பற்றி தங்கள் கருத்து?

ஆதிசங்கரருக்கு முக்கியமான நான்கு சிஷ்யர்கள். அவர்களுக்காக நான்கு

திசைகளில் நான்கு மடங்களை உருவாக்கி கொடுத்தார் என்பது வரலாறு. ஆனால்,

அவருக்கென்று, அவர் கொண்டு வந்த வழிபாடுகள், நெறிமுறைகளுக்கென்று

காஞ்சியில் அமைக்கப் பெற்றது இந்த மடம். ஆக நேரடியாக ஆதிசங்கரரின் வழி

வகையில் ஐந்தாவது மடமாக இயங்கி வருகிறது. மற்ற நான்கு மடங்களும் பங்கு

பெற்றுக்கொண்டு நான்கு திக்குகளில் இயங்கி வருகின்றன. நாம் அப்படியில்லை.

இந்தப் பரந்த தேசத்தில் நாம் எங்கே வேண்டுமானாலும் போகலாம்.

காஞ்சி சங்கரமடத்தில்தான் நிறைய அரசியல் விஷயங்களுக்கு ஆலோசனைகள்

நடப்பதாகவும் முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் கூறலாம் இல்லையா?

நீங்கள் குறிப்பிடவது போல அரசியல் முடிவுகள் எடுப்பதாகவோ, அரசியல்

ஆலோசனைகள் நடத்தப்படுவதாகவோ இருந்தால் இந்த தேசம் எவ்வளவோ

முன்னேறிப் போயிருக்கும். இந்த அளவுக்கு தாழ்ந்து போயிருக்காது.

அரசியல்வாதிகள் நிறையப் பேர் தங்கள் மடத்துக்கு வருகிறார்கள், தங்களைச்

சந்தித்துப் பேசுகிறார்களே?

அவரவர்களுக்குப் பிரச்னைகள், மனசாந்திக்காக ஒரு மாற்றுத்துக்காக,

ஆசிர்வாதத்துக்காக இங்கே வந்து போகிறார்கள்.

நாத்திகம் பேசுபவர்கள் பேசியவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லையென்று

கூறுபவர்கள் உங்களது ஆசிர்வாதம் கோரி வருவது பற்றி...?

பொதுவாக மனித வாழ்க்கையில் பிரச்னை உள்ளவர்கள் பிரச்னைகளைத்

தீர்ப்பவர்கள் எவராயிருந்தாலும் எங்கேயிருந்தாலும், அவரவர்களிடம் சென்று

பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்வது இயல்பு. நோயாளியாக இருப்பவர் தனது

வியாதி குணமடைய வேண்டும் என்று தான் பார்பாரே தவிர்த்து வியாதிக்கு

சிகிச்சை தருபவர் எந்த மதம், எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை. எவரிடம்

போனால் நோய் குணமாகவோ அவரிடம் போகிறார்கள். ஆக பிரச்னைகளில்

தீர்வுதான் முக்கியம். தீர்ப்பவர் யார் என்ற அவசியம் ஏற்படாது.

நீங்கள் ஆன்மீகத்துக்கான வழிமுறை காட்டுகிறீர்கள் அதே சமயம் நாத்திகம் பற்றி

தஙகள் கருத்து..?

தற்போது நாத்திகம் என்பது அறவே இல்லை. சமண மதம், புத்தமதம்

தோன்றிய கால்த்தில் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அப்பர் போன்ற சமயக்

குரவர்கள், அந்த மதத்தினரை நாத்திகர்கள் என்று கருத்தினார்கள். 'வேத

வேள்வியும் நிந்தனை செய்யும் வட்டத்தார்" என்று பேசியிருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பௌத்த, சமண சமயங்களும் இல்லை. தற்போது நாத்திகர்கள்

என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இது போன்ற இலட்சியக் கொள்கைகளும்

இல்லை. அவரவர்க்கு தேவையானபோது, எதை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ,

அதை ஏற்றக்கொள்வது, எதைவேண்டாமென கருதுகிறார்களோ அதை எதிர்ப்பது,

போன்ற இப்படிப்பட்ட கொள்கைகளைத் தவிர வேறு இலட்சியமான கொள்கை

ஒன்றும் கிடையாது . அந்தந்த நேரத்து மனோ நிலைக்கு ஏற்றவாறு அவர்களது

பேச்சுகள் நடவடிக்கைகள் மாறிக் கொண்டு இருப்பது தான் இன்றைய நிலைமை.

டாக்டர் சங்கர்தயாள் சர்மா நமது நாட்டின் ஜனாதிபதி பதவி ஏற்றவுடன்

திருப்பதிக்கு சென்று சாமி கும்பிட்டதையும், புட்டபர்த்தி சென்று

சத்யசாய்பாபவிடம் ஆசிர்வாதம் வாங்கியது பற்றியும், ஜாதிமதபேதமற்ற நாட்டின்

தலைவர். இப்படி செய்யலாமா என்ற ஒரு விமரிசனம் எழுதப்பட்டது. அது பற்றி

தங்கள் அபிப்ராயம்..?

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் இரண்டு கோணங்கள்

இருக்கின்றன. ஒன்று ஆன்மீகம், அடுத்தது வாழ்க்கை முறை ஆன்மீகத்தில்

அடிப்படையில் வாழ்ந்தால்தான் மனிதனின் வாழ்க்கைமுறை சரியாக அமையும்.

வாழ்க்கைக்காக உத்தியோகமோ, வியாபரமோ, அரசியலோ எந்த

வழிவகையிலிருந்து வாழ்க்கை நடத்தினாலும் ஆன்மீகம் அவசியமாகிறது.

ஆன்மீகம் இல்லாத வாழ்க்கை அவர் எந்த நிலையில் இருந்தாலும் அவரைச்

சூன்யமாகத்தான் ஆக்கிவிடுகிறது. நமது நாட்டிலும், சரி, வெளிநாட்டிலும், சரி,

ஒவ்வொரு சமயத்தினரும் எந்த பொறுப்பு ஏற்றாலும் தங்கள் இஷ்ட தேவதையை

வணங்கி ஆசீர்வாதம் பெறுவதை இயற்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பார்த்தாலும் சங்கர்தயாள் சர்மா போன்றவர்கள் புதுப்

பொறுப்பேற்றவுடன் தங்கள் வாழ்க்கை முறை சரியாக அமையவேண்டும் என்ற

பரந்த நோகத்ததுடன் அவர்கள் தங்கள் இஷ்ட தேவதையை வழிபட

செல்கிறார்கள். இந்த வகையில் தவறேதும் கூறமுடியாது. அப்படியிருந்தம் கூட

அரசாங்க முறைப்படி இருப்பதற்காக இறந்தபோன ஜாகிர் உசேன் உள்பட

அனைத்து அரசியல் தலைவர்களின் சமாதிகள், நினைவிடங்களுக்குச் சென்று மலர்

வளையம் வைத்த மரியாதை செய்தார்கள். இப்போதும் மரியாதை நிமித்தமாக

செய்து கொண்டிருக்கிறார்கள். இதைப் போலத்தான் தங்கள் மசூதி, சர்ச், கோயில்

என்று அவரவர்கள் வழிபாடு செய்கிறார்கள். இதில் தவறேதுமில்லை.

நாட்டில் ஆங்காங்கே வகுப்பு பூசல்கள் நடந்த வண்ணமிருக்கின்றன. நாம் 'ஈஸ்வர

அல்லா தேரேநாம்', 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறுகிறோம். இதற்கு

ஏதாவது பொருள் உண்டா?

மதமாச்சாரியங்கள் களையப்பட வேண்டும். மத ஒற்றுமை வளர்க்க அதற்கு

தகுந்த மாதிரி ஒரு கட்சியே நமது நாட்டில் இல்லை. 'ஈஸ்வர அல்லா தேரேநாம்'

என்று காந்தி ஒருவர்தான் பாடினார். அதனால், அந்த சமுதாயமும் வளர்ச்சி

கண்டது. காந்திக்கு பிறகு அப்படி ஒரு தலைவர் உருவாகவில்லை, வருகிற

தலைவர்களும் மக்கள் ஒற்றமைக்காக எதையும் செய்யவில்லை. சமுதாய வளர்ச்சி,

தேசவளர்ச்சி என்ற அடிப்படையில் மக்கள் ஒற்றுமைக்காக ஒரு இயக்கம் மக்கள்

மத்தியில் உருவாக வேண்டும்.

இருக்கிற இயக்கங்கள்?

இந்த அடிப்படைக்கு ஒரு இயக்கமும் இப்போது இல்லை. ஒரு தலைவரும்

தோன்றவில்லை.

கலப்புமணங்கள் செய்வதால் வேற்றுமைகள் மறையும் என்ற நம்பிக்கையைப்

பற்றி..?

ஒருபக்கம் கலப்புமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்கம், தங்க

மெடல் கொடுத்து கௌரவிக்கிறது. அதே சமயம் உத்தியோகத்துக்கும் சரி,

படிப்புக்கும் சரி ஜாதிச் சான்றிதழ் கேட்கிறது. அப்படியிருக்கும்போது இவர்கள்

எந்த ஜாதி என்றும் குறிப்பிட முடியாது.

உத்தியோக விஷயத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அரசியலாக்கப்படுவது

பற்றி..?

முதலில் அரசாங்கக் கொள்கையில் ஜாதி வேற்றுமை ஒழிய வேண்டும் என்று

தீவிர நடவடிக்கை வேண்டும். முதல் வகுப்பு படிப்பு சேர்ப்பது முதல் ரேஷன்

கார்டு வரை ஜாதிப் பெயர் குறிப்பட வேண்டுமென்றே வலுக் கட்டாயமாக

நிர்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மண்டல் கமிஷன் போல எத்தனை

கமிஷன் ஏற்படுத்தினாலும் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் வரப்போவதில்லை.

இந்து சமயத்துக்கு மட்டும் அராசங்க தரப்பில் அறநிலையத் துறை என்று இயங்கி

வருவது பற்றி?

இது விஷயமாக ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். சுயேச்சையான எந்தவித

அரசியல் குறுக்கீடுகளும் இல்லாத அமைப்பு நமக்குத் தேவை.

ஆலயங்களில் சுவாமி சிலை திருட்டு, ஆபரணங்கள் திருட்டு போன்றவை

அதிகமாகிக் கொண்டு வருகின்றனவே?

இதற்கு முக்கியமான காரணங்கள், மாற்று மதங்களின் பின்னணி,

அரசியல்வாதிகளின் பின்னணி, முரடர்கள் கூட்டம், நம்மிடையே ஒரு

பொறுப்பில்லாமை, கோயிலக்குச் சென்று கவனிக்காத சூழ்நிலை, துர்பலம்

ஆகியன. இத்தகைய சூழ்நிலையில்தான் இப்படிப்பட்ட திருட்டுகள்

நடைபெறுகின்றன, முதலில் நம்மிடையே விழிப்புணர்வு இருக்கவேண்டும்.

கோயிலுக்குச் சென்று கண்காணிப்பதைக் கடமையாகக் கருத வேண்டும்

இவற்றோடு அரசாங்க ஒத்துழைப்பும் அவசியம்.

மதுவிலக்குப் பிரச்னையில் அரசாங்கக் கொள்கையை, நீங்களே கூட விமர்சனம்

செய்திருக்கிறீர்களே, வேத காலம் தொட்டு சோமபானம், சுராபானம் போன்ற

மதுவகைகள் மக்கள் மத்தியில் புழக்கத்தில் தானே இருந்திருக்கின்றன?

இது ஒரு எதிர்மறையான கேள்வி. முதலில் சோமபானம், சுராபானம்

போன்றவை குடித்ததாக கிடையாது. அவற்றை முகர்ந்து பார்த்தாகத்தான்

சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி முகர்வதற்கும் நியமங்கள், தவங்கள் வழிபாடுகள்

போன்றவை நடத்த வேண்டும். ஒரேயடியாக குடித்துக் கொண்டே இருக்க

வேண்டும் என்று அர்த்தமல்ல. இன்னொன்று ஒருவர் நல்லவராக

இருக்கவேண்டம், நல்ல வாழ்ககை வாழ வேண்டும் என்ற சொல்லும்போது,

அடுத்த மாநிலத்தில் குடி இல்லையா, முற்காலத்தில் மது இல்லையா என்பதெல்லாம்

எதிர் மறையானவையே. ஒருவன் கெட்டுப் போனான் என்றால் நாமும் கெட்டுப்

போக வேண்டுமா என்ன?

ஆன்மீக ஆட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

நமது நாட்டைப் பொறுத்தவரை ஆன்மீகம் நாளருமேனி பொழுதொரு

வண்ணம் வளர்ந்து கொண்டே வருகிறது. அதற்கு உதாரணங்கள், எங்களுடைய

ஜனகல்யாண் முழு முயற்சி.

தற்போது பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் தருவது பற்றி..?

பெண்களுக்கு தற்காலத்தில் படிப்பு இன்றியமையாததகாப் போய்விட்டது.

ஒருவர் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை. அதனால்

பெண்களும் தொழிற்கல்வி, அலுவலகக்கல்வி போன்றவற்றைப் படிக்க

வேண்டியதாகிறது. நாகரிக உலகத்தில் பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது.

படிப்பில் இருபாலரும் சேர்ந்து படிக்கிற Co-Education மாதிரி, தொழிலிலும்

இருபாலரும் சேர்ந்து பணியாற்ற வேண்டியதாகிறது. கிராமங்களில் விவசாயம்,

கைத்தொழில் போன்றவற்றில் ஆண், பெண் இருவருமே சேர்ந்து வேலை

செய்வதால் பிரச்சினைகள் குறைந்து போகிறது. தவறுகள் அடங்கிப் போய்விடும்,

வளராது. இப்போது சினிமா போன்ற பிரசார சாதனங்கள் அதிகமாகிப் போய்

விட்டன. அதனால், பிரச்சினைகள் பல ஆரம்பமாகின்றன.

தப்பு இரண்டு பக்கம் என்றாலும், தவறு நடந்தால் பெண்தான் அகப்பட்டுக்

கொள்கிறாள். உலகம் எங்கும் இந்த நிலைமைதான். இதனால் பெண்களுக்கு சமூக

உரிமை மட்டமல்ல, சம்பாத்திய உரிமையும் அதிகம் கொடுக்கவேண்டும். சாதாரண

கைத்தொழில் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் வரை, அவர்களுக்கு கற்பித்து

தற்போதைய சமுதயாத்துக்கேற்ப அவர்களைத் தயார்படுத்துவது நமது கடமை

நமது சமுதாயத்தில் ஒரு பக்கம் சட்டத்தை மதித்து நடக்கிற பிரஜைகள்

இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கடவுளுக்கு பயந்து வாழ்கறி பிரஜைகள்

இருக்கிறார்கள். இவர்களிடையே பலவேற்றுமைகள் இருப்பது குறித்து?

சட்டம் என்பது மக்களால் மக்களுக்காக தற்கால சமுதயாத்துக்காக

ஏற்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தை மதிக்க வேண்டியது இன்றியமையாதது.

பொது மக்களூக்காக சட்டம் இயற்றப்பட்டதால் அதைப்பொதுமக்கள் மதிக்க

வேண்டும்.

கடவுள் என்று வரும்போது உலகம் தோன்றிய காலம் தொட்டு நம்மோடு

இயைந்து வருகிற சக்தி. சட்டம் இயற்றுகிற திறமையை, அந்த மூளைக்கு கொடுத்து

அதற்கு காரணமாக இருந்ததும் கடவுளின் அந்த சக்திதான். கடவுள் சக்திக்கு

அடிபணிவது என்பது ஆன்மீகத்துக்கு தெய்வத்துக்கு தேவையானது. சட்டம்

என்பது மனிதன் கட்டுப்பாடாக நடக்க வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட நியதி.

கடவுளுக்குப் பயந்து பூஜை புனஸ்காரங்கள் செய்பவர்களே, தவறுகள் பல

செய்வதற்கும் உடந்தையாக இருக்கிறார்களே?

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாருமே என்று சொல்லமுடியாது.

ஒரு சிலர் நாம் எதைச் செய்தாலும் அருள் பாலிப்பார் என்ற வகையில் தவறான

விஷயங்களைச் செய்கிறார்கள். இவர்கள் தவறான சூழ்நிலையில் வளர்நதாலும்

வாழ்ந்தாலும் அப்படிப்பட்ட தவறுகளுக்கு ஆளாகிறார்கள். பழங்கால பக்தி வேறு,

அதனால்தான 'பயபக்தி' என்ற சொல்லை பயன்படுத்தினார்கள், பக்தி, அன்பு

பக்தியாக வளர வேண்டும் இந்த முறை கெட்டதால்தான், இத்தகைய வம்புகள்

இடம் பெறுகின்றன. அன்பு பக்தியை நெறிப்படுத்த, கடவுளின் தூய்மையான

குணத்தை சொல்லி மனதினில் தூய்மையை வளர்க்க வேண்டும், அப்போது

கீழ்த்தரமான எண்ணங்கள் மறைந்து உயர்ந்த எண்ணங்கள் வளரும். உயர்ந்த

பிராத்தனைகளால் தூய்மையான பக்தி வளர வாய்ப்பிருக்கிறது.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is மங்கை பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  உஷா பத்திரிகைக்கு அளித்த பேட்டி
Next