இந்தக் காலத்தில் "வரதட்சிணை" என்பது பெரும் பிரச்னையாக இருக்கிறது.
வரதட்சிணை என்றால் என்ன? அவை பணமா, நகையா? அந்தக் காலத்திலிருந்தே
வரதட்சிணைப் பழக்கம் இருந்ததா? அல்லது புதிதாக வந்திருக்கிறதா? இன்றுள்ள
ஜனங்களுக்கு இந்த வரதட்சிணை மிகவும் குழப்பமாகவும் கொடுமையாகவும்
இருக்கிறது! இதை எப்படி சமாளிப்பது?
அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை, நம் ஹிந்து தர்மத்தில்,
எதை எடுத்துப் பார்த்தாலும், வரதட்சிணைக்கு, எந்தவித ஆதாரமும் இல்லை.
இந்து தர்மத்தில், எட்டு தினுசு திருமணங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்த
எட்டு விதத்திலும் வரதட்சிணைக்கு ஆதாரம் கிடையாது. கலியுகத்தில் இபபோது
ஒரு வகைதான் நடைமுறையில் இருக்கிறது. பெண்ணையும் பிள்ளையையும்
மங்களகரமாக அலங்கரித்து, அக்னியை சாட்சியாக வைத்து, அக்னி வலம் வந்து,
மாலை மாற்றி, மங்கல சூத்திரம் தாலி கட்டி, அம்மி மிதித்து நடப்பதையே
திருமணமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மாப்பிள்ளை அழைப்பு, ஜானவாசம்,
எதற்கும் ஆதாரம் கிடையாது. பெண்ணும், பிள்ளையும் பார்த்து திருமணம்
நிச்சயமான பிறகு, தாம்பூலம் மாற்றிக் கொள்வது மட்டும்தான் வழக்கம். ஆனால்
அந்தக் காலத்திலிருந்தே, எதையுமே தானம் செய்யும்போது, இன்னும் சிலவற்றைச்
சேர்த்து தானம் செய்வார்கள். பூமிதானம், கோதானம், வஸ்த்ர தானம்.
என்பதுபோல பெண்ணைத் திருமணம் செய்விக்கும் போது, கன்னிகா தானம்
என்று சொல்லப்படுகிறது. எனவே பெண்ணைத் தானமாகக் கொடுக்கும்போது,
அவள் சுபிட்சமாக, சௌக்கியமாக, அமோகமாக வாழ வேண்டும் என்பதற்காக,
அவளுக்கு வேண்டிய சில பொருள்கள், நகைகளும், மணமகளுக்கு சில
பொருட்களும் தானமாகத் தந்தார்கள்.
எனக்குப் பாட்டனார் காலத்திலேயும், பாட்டனுக்கு பாட்டன் காலத்திலேயும்,
150 வருடஙகளுக்கு முன்னால் இருந்த கதை இதுதான். இந்த இங்கிலீஷ் படிப்பு
வந்த பிறகுதான், செலவு செய்து இங்கலீஷ் படிப்பது என்று வழக்கம் வந்த
பிறகுதான், செலவைக் கேட்டுப் பெறுவது என்ற வழக்கமும் வந்து சேர்ந்து
விட்டது 'பிள்ளை படிப்புக்கு ஆன செலவைக் கொடுங்கள்' என்று ஆரம்பித்து,
எல்லாவற்றையும் கேட்டுப் பெறுவது என்று வழக்கமாகி விட்டது. ஆந்திராவில்,
வட நாட்டில், பிள்ளை எம்.பி.பி.எஸ் அல்லது எஞ்சினீயர் படிப்பு முதல் வருடம்
சேர்ந்தவுடனே திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அவன் படிப்பு முடிந்து
வெளி நாடுபோகும்வரை பெண் வீட்டார் செலவுதான்.
இதெல்லாம் ரொம்ப தப்பு. காசிலும், பணத்திலும், படாடோபத்திலும்
நிச்சயிக்கப்படும் உறவுகள், நிச்சயமாக ஸ்திரமாக இருக்காது. எந்த அளவுக்கு
அதிகமாக வாங்குகிறார்களோ, அந்த அளவுக்க மனசு ஒத்துக்காமல் போய், பிரிவு
ஏற்படும். மனம் ஒத்துப் போய், நல்ல முறையில் இடைஞ்சல் இல்லாமல்,
சம்பிரதாயங்களையும் அனுஷ்டித்து நடக்கும் திருமணங்கள்தான் மனுஷனுக்கு
நிம்மதியைத் தரும். சமுதாயத்திற்கும் அதுதான் நன்மை.
"பெண்கள்தான் வரதட்சிணை கேட்டு வாங்கறாங்க மாமியார்தான் வரதட்சிணை
கேக்கறாங்க" என்று பொதுவா, ஒரு அபிப்ராயம் இருக்கு. பெண்ணையே குற்றம்
சொல்வது ஏன்? ஆண்களும் சம்மதித்துத்தானே இந்தக் காரியம் நடக்கிறது.
ஆண்களுக்கு அறிவுரை கூற வேண்டாமா?
எங்ககிட்டே வர பெண்மணிகளிடம் நாங்க இதைத்தான் சொல்றோம்.
வரதட்சிணை வாங்காதீங்கோ வரதட்சிணை கேக்காதீங்கோன்னு ஏனென்றால்
அவர்கள்தான் அந்தக்காலத்தில் வரதட்சணையால் கஷ்டப்பட்டார்கள் அதனால்
தான் நாம் கொடுத்தோமே, நமக்கு வர மருமகளும் கொடுக்கட்டுமே என்று
கேட்கிறார்கள். ஆண் கஷ்டப்பட்டதில்லை. அதனால் அவன்கேட்பதில்லை.
அதனால்தான் நாங்கள் பெண்களிடம் கூறுகிறோம், நீங்கள் கஷ்டப்பட்டது போதும்
வரதட்சிணை கேட்காதீர்கள் என்று!
ஒரு பெண் வரதட்சிணை கொடுக்க மாட்டேன் என்று கொள்கை வைத்துக்
கொண்டு அதன்படி மணமகள் கிடைக்காமல் போனால், அவள் திருமணமே
செய்து கொள்ளாமல் இருக்கலாமா?
திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பது ரொம்ப தப்பு. இல்லறம்
என்பதில்தான் வாழ்க்கையின் பூரணத்துவம் தெரிகிறது. இல்லறம் இல்லாமல்
நல்லறம் இல்லை. இந்த மாதிரி வரதட்சிணைக்காக திருமணம் செய்து கொள்ளாமல்
இருப்பது பெரிய தியாகமல்ல! 'ஏமாந்தவள்' என்று கூடச் சொல்லலாம். இல்
வாழ்க்கையே இல்லை. வரதட்சிணை வேண்டாம் என்று சொல்பவர்களை
தேடிப்பிடித்து, பத்து பேரைத் திருத்தி, ஜோடி சேர்ந்து திருமணம் செய்து கொள்ள
வேண்டும். வரதட்சணை ஒழிப்புக்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது
சரியல்ல.
பேப்பர்களில் விளம்பரம் பார்க்கிறோம், அழகான, ஒல்லியான, சிவப்பான... பெண்
வேண்டும் என்று ! பெண் கறுப்பாக இருந்தால் 20,000 ரூபாய் வரதட்சிணை
கேட்கிறார்கள். பெண் சிவப்பாக இருந்தால், 5,000 ரூபாய் குறைத்துக்
கொள்கிறார்கள் பெண் கறுப்பாக இருந்தால் அவளுக்குத் திருமணம் ஆகாதா?
நீங்கள், பெரியவர், ஸ்வாமிகள், இதற்கெல்லாம் ஏதாவது அறிவுரை
சொல்லக்கூடாதா?
திருமணம்ங்கறது, தனி மனுஷனோட வாழ்க்கைப் பிரச்னை! இது ஸ்வாமிகள்
சொல்லியோ மத்தவா சொல்லியோ கேக்கற சமாசாரமில்லை! இது அவரவர்கள்
சொந்த விஷயம் ! அவனுக்குப் பிடிச்ச பொண்ணாப் பாத்து அவன் கல்யாணம்
பண்ணிக்கணும்னு அவன் விரும்புவான். இதிலே c இன்னாரைத்தான் திருமணம்
செய்து கொள்ளணும்னு யாரும் சொல்ல முடியாது. கல்யாணம் பண்ணிண்டு வந்தா
நாங்க ஆசீர்வாதம் பண்ணுவோம். பிறகு பிரச்னை ஏதாவது வந்தா, நாங்க
புத்திமதிகள் சொல்லுவோம்!
இந்தக் காலத்தில் விவகாரத்துக்கள் ரொம்ப அதிகமாக இருக்கே? அதுக்குக்
காரணம் என்ன?
எங்ககிட்டேயும் விவாகரத்துகேஸ்கள் நிறையவருகின்றன. முடியறவரைக்கும்
எடுத்துச் சொல்லி சமாதானம் செய்து வைக்கிறோம். தப்பு இரண்டுபேர் மேலேயும்
இருக்கு!அதிலேயும் பெண்களுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகள் இருக்கு.
சினிமா, டிராமா, டி.வி ன்னு பார்த்து 'இப்படித்தான் வாழ்க்கை இருக்கும்'னு கற்பனா
உலகத்திலே இருக்கா! ஆண்களும் அதே மாதிரி கனவுகளை வளர்த்துண்டு,
கற்பனா உலகத்திலேயேதான் இருக்கான். இரண்டு பேரும் கற்பனா உலகத்திலே
இருக்கும்போதே திருமணம் நடந்து முடிந்து, நிலையான வாழ்க்கைக்கு வந்து
சேரும்போது இரண்டு பேருக்கும் ரொம்ப 'ஷாக்' ஆகி விடுகிறது. ஆனா ஆண்
'ஷாக்' கை சமாளிக்கிறான். வெளியுலகம், ஆபிஸ் வேலைன்னு அவன் சீககிரமா
அதிர்ச்சியிலிருந்து வெளியிலே வந்துடறான்! ஆனால் பெண்களாலே அது
முடியறதில்லை! அவாளாலே வளைஞ்சு கொடுக்கவும் முடியலே! வளைய
வைக்கவும் முடியலை. பெண்களும் கஷ்டப்படறா!உறவுப் பெண்களாலேயும்
கஷ்டம் இருக்கு?
கணவன் குடிகாரனாக இருந்தாலும், கோபக்காரனாக இருந்தாலும், முடிந்த
வரையில் பெண்கள் கணவனோடு வாழும் வாழ்க்கையைத் துண்டித்துக் கொண்டு
வெளியே வருவதில்லை. ஆனால், கணவன் ஒரு வேறு ஸ்தீரியுடன் தொடர்பு
வைத்துக்கொண்டிருக்கிறான் என்று கேள்விப்படும்போது, அவளால் அதை
ஒப்புக்கொள்ளவே முடிவதில்லை. அப்போது அவள் அவனை விட்டு வெளியே
வந்துவிடலாமா? அல்லது adjust செய்து கொண்டு இருக்க வேண்டுமா?
இந்தியக் கலாசாரப்படி, இந்தியப் பண்பாடுகள்படி, கணவனை விட்டு
வெளியே வரும் பெண்களுக்க நம் சமூகத்தில் மதிப்பு கிடைப்பதில்லை.
சமூகம் ஒப்புக் கொள்வதில்லை. அப்படியே வெளியில் வந்தாலும்
அவளுக்கு சரியான பந்தோபஸ்து, பாதுகாப்பு இல்லை. அவள் மீது மேலே மேலே
ஏதாவது பழிசுமத்தி கஷ்டப்படுத்துவார்கள். நம்மூர் வாய் அப்படி! அந்த வீட்டிலே
யே, தனி அறை வைத்துக்கொண்டு, அவள் ஒதுங்கி தனி வாழ்க்கை வாழலாம்.
இப்போதெல்லாம் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றனவே!பணத்தைக்
கொடுத்து இல்லங்களில் சேர்த்து விடுகிறார்களே? அது கெடுதல் இல்லையா?
ரொம்ப கெடுதல்தான். எனக்கு வரும் பாதி கேஸ்களும், புதிதாக மாட்டுப்
பெண் வந்தவுடன்தான் முதியோர்கள் இல்லத்தில் வந்து சேருகிறார்கள் அம்மாவும்
பிள்ளையும் ஒருவர் மேல் ஒருவர் depend ஆக இருக்கிறார்கள். மாட்டுப் பெண்
வந்தவுடன் நிலைமை மாறி விடுகிறது. பிள்ளைகளே என்னிடம் வந்து "நான் பணம்
கொடுத்து விடுகிறேன் என்று அம்மா அப்பாவை இல்லத்தில் வைத்துக்
கொள்ளுங்கள்" என்று சொல்கிறான்.
இந்த நிலைமை மாற என்ன வழி?
வயதானவர்கள்அந்தக் காலத்திலேயே இருக்கிறார்கள். இவர்கள் பிள்ளைகள்
இந்த காலத்தில் இருக்கிறார்கள். இதற்கு நடுவில் ஒரு gap விழுந்து விட்டது. இதை
மகனோ மருமகளோ யாரவாது ஒருவர் புரிந்து கொண்டு adjust செய்யத்தான்
வேண்டும்.
ஆன்மீகத்தால் இந்த நிலைமையை மாற்ற முடியுமா?
முடியாது! அவரவர்கள் சுயசிந்தனை செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
Debates, Seminars மூலம் ஒரு awareness கொண்டு வரலாம். Media வினால்
முடியாததே கிடையாது! அவர்கள் நினைத்தால், இந்த உறவை பலப்படுத்த நிறைய
செய்யலாம். சினிமாவில் வன்முறைதானே நிறைய இருக்கிறது.
நீங்கள் அறிவுரை சொல்லக்கூடாதா?
நான் சொன்னால் "ஸ்வாமிகள் தர்மம் பேசுகிறார்! அவருக்கென்ன தெரியும்
நம் கஷ்டம்" என்று பேசுவார்கள். இப்போது பழையதையும் ஒத்துக் கொள்ள
முடியவில்லை. புதியதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆன்மீகத் தலைவரான, குருவான நீங்கள், இன்றைய சமுதயாத்தில் உள்ள
மாணவர்களுக்கு, குடும்பத் தலைவிகளுக்கு, வயதானவர்களுக்கு கூறும்
அறிவுரைகள் என்ன?
கல்லூரி மாணவர்கள் என்றாலே எல்லோருக்கும் இப்போது ஒரு பயம்
வந்திருக்கிறது. அதை அவர்கள் மாத்த வேண்டும். அன்றைய கலாசாரம், பண்பாடு
எதையும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைக்கவும் வேண்டாம்!
வளர்க்கவும் வேண்டாம். இப்போது உள்ளது போல maintain செய்தால் போதும்.
மனுஷன் மனுஷனா வாழ பழகிக்கணும்.
குடும்பத் தலைவிகள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது பழைய காலமுமில்லை. முன்னேறிய காலமும் இல்லை. சுதந்திரம் வந்து
நாற்பது ஆண்டுகள்தான் ஆகிறது. எனவே. பழைய கலாசாரத்தை விட்டுவிடக்
கூடாது. புது மாடர்ன் கலாசாரத்திலிருந்து நல்லதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதாவது காலையில் நம் கலாசாரத்தை விடாமல், பூஜை, புனஸ்காரம்,
அனுஷ்டானங்கள் செய்யலாம். மாலையில், புதுக்கலாசாரம் என்ற முறையில்
Social ஆக இருக்கலாம். ஒரேயடியாக religion ஆகவும் இருக்கத்
தேவையில்லை. ஒரேயடியாக Social ஆக இருந்தாலும் சிரமம் அவ்வப்போது
தேவையானதை ஏற்றுப் பழகிக் கொள்வதுதான் நல்லது.
பெண்கள் முழுநேர சமூக சேவையில் ஈடுபடலாமா? நிறையக் பெண்கள் சமூக
சேவை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களே?
தாராளமாகச்செய்யலாம். அவரவர்வீட்டு கடமைகளையும் பொறுப்புகளையும்
முடித்துவிட்டு மீதிநேரத்தில் சமூக சேவையில் ஈடுபடுவதுதான் நல்லது. இல்லை
யென்றால், அவர்கள் வீட்டு வேலைக்கு வேறு யாராவது Party சேவை செய்ய வர
வேண்டியதிருக்கும்.
முதியோர்களுக்கு சில வார்த்தைகள்?
அந்தக் காலத்தையே நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. இந்தக் காலத்திற்கு
தகுந்தாற்போல் மாற முடியாவிட்டாலும், வாயை பொத்திக் கொண்டு, 'கிருஷ்ணா
ராமா' வென்று பகவான் நாமா ஜபித்துக் கொண்டு நேரத்தைத் தள்ள வேண்டும்.
பேரக் குழந்தைகளை தட்டிக் கொடுத்து, அன்போடு பழகி, நல்ல உறவை
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மகனும் மருமகளும் ஒத்து வராவிட்டால்
பரவாயில்லை! விட்டு விடலாம்! பேரக் குழந்தைகளுடன் இனிய தொடர்பை
ஏற்படுத்திக் கொண்டு விட்டால், பிரச்னைகள் முக்கால் வாசி குறைந்து விடும்.
"எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும்".