ஸ்ரீ க்ருஷ்ண பகவான் ஸ்ரீமன் நாராயணனுடைய பரிபூரண அவதாரம். அவர் பிறந்தது முதல் பல லீலைகளைச் செய்தார். முக்கியமாக விசுவரூப தரிசனம பல தடவைகளில் காண்பித்துள்ளார். விசுவரூபம் என்றால் பகவான்தான் உலகம் முழுவதும் என்று பொருள். முதல் முதலில் குழந்தையாக இருந்தபோது, கண்ணபிரான் மண்ணைத் தின்றார் என்ற யசோதையிடம் புகார் சொன்னார்கள். அப்பொழுது குழந்தை கண்ணனை நோக்கி யசோதை கேட்டாள். "கண்ணா மண்ணைத் தின்றாயா? மண் எல்லாம் திங்கக் கூடாது. ஒரு வேளை மண்ணைத் தின்றிருந்தால் வாயை திறந்து காட்டு" என்று அன்பாக மிரட்டும் தோரணையில் யசோதை கண்ணனைக் கேட்டாள்.
கண்ணபிராண், 'நான் மண்ணைத் தின்னவே இல்லை' என்று சொன்னதும் அல்லாமல் வாயைத் திறந்து காட்டி, 'வாயைப் பார் நான் மண்ணைத் தின்றேனா இல்லையா?' என்று சொல்லி, கண்ணன் வாயைத் திறந்தார்.
அந்தச் சிறிய வாயில் சிறிது மண் மாத்திரம் அல்ல பஞ்ச பூதங்களுடன் உலகனைத்தும் யசோதை காண்கிறாள். அதைப்பார்த்து யசோதை ஒரு நிமிடம் பயந்து போய்விடுகிறாள். யசோதை இந்த நிகழ்ச்சியை மறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கண்ணபிரான் மந்தகாசச் சிரிப்பு ஒன்றைப் பூத்து அந்தச் சிரிப்பிலேயே மயக்க வைத்து விசுவரூப தரிசனம் கண்டதையே மறக்க வைக்கிறார்.
ஒரு சமயம் மாடுகளையும் கன்றுகளையும் தம்முடைய நண்பர்களுடன் காட்டில் மேய்த்துக் கொண்டிருக்கிறார். அந்தச் சமயத்தில் பிரம்மதேவன் திடீரெனக் கன்றுகள் மாடுகள் கண்ணனின் நண்பர்கள் அனைவரையும் மறைத்து எடுத்துச் சென்று விடுகிறார்.
அதையறிந்து கண்ணபிரான் தானே அத்தனை பசு மாடுகள் கன்றுகள் நண்பர்கள் வடிவமாகவும் ஆகிவிட்டார். இப்படி பல நாட்கள் கழிந்தன. தானே இத்தனை வடிவங்கள் எடுத்த காலத்தில் மாடுகளும் கன்றுகளும் நண்பர்களும் பரஸ்பரம் பிரேமை மிகுந்தவர்களாகக் காணப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு பிரம்ம தேவனே பார்க்க வருகிறார். அவருக்கு, தம்மிடம் உள்ள மாடுகள் கன்றுகள் நண்பர்கள் உண்மையானவர்களா, இங்கு இருப்பவர்கள் உண்மையானவர்களா என்று தெரியாமல் தவிக்கிறார், தடுமாறுகிறார்.
கண்ணனைப் பற்றித் துதி செய்கிறார். உண்மையான பரம்பொருள் கண்ணபிரானே என ஸ்தோத்ரம் செய்கிறார்.
பிரம்மதேவன் கொண்டுவிட்ட பிறகு பிரம்மதேவன் கண் முன்னாலேயே கண்ணபிரான் படைத்தவை எல்லாம் மறைந்து விடுகின்றன.
பரிபாலிக்க வேண்டிய கடவுள் விஷ்ணு. அவர் படைத்தும் மறைக்கவும் செய்கிறார் என்பதை அறிந்து படைக்கும் கடவுள் பிரம்மதேவன் அதிசயிக்கிறார்.
முதன் முதலில் விசுவரூபத்தை யசோதை உணர்ந்தாள். இரண்டாவதாக விசுவரூபத்தை பிரம்ம தேவன் உணர்ந்தார்.
நாரத பகவான் கண்ணபிரானிடம் வந்து, "சாட்சாத் பரம்பொருள் ஆன
ஸ்ரீமன் நாராயணனான நீயே இங்கு அவதரித்திருக்கிறாய். ஆகவே உன் முழு விசுவரூபத்தை நான் கண்டு மகிழ வேண்டும்" என பிரார்த்தனை செய்து கொண்டார்.
அப்போது கண்ணபிரான், "எத்தனை கோபிகைகள் வீடுகள் இருக்கின்றனவோ அத்தனை வீடுகளிலும் சென்று என்னைப் பார்" என்ற சொன்னார். அதன்படியே நாரதர் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்க்கிறார். அங்கே ஒவ்வொரு வடிவத்திலும் கண்ணபிரான் ஒவ்வொரு பணியைச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அந்த ஒவ்வொரு பணியையும் பார்த்துவிட்டு நிஜமான கிருஷ்ணன் எந்த வீட்டில் இருக்கிறார். நிஜமான காரியத்தை எந்த கண்ணன் செய்கிறார் என்று புரியாமல் தத்தளிக்கிறார். பிறகு கண்ணபிரானைப் பிரார்த்திக்கிறார். "நாரதரே, உன்னுடைய பிரார்த்தனைக்கு ஏற்றவாறு நான் இத்தனை வடிவம் எடுத்தேன்" என்று கூறுகிறார். இது நாரதர் கண்ட விசுவரூபம்.