கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ண பகவானால் பல காரியங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையின்போது வரக்கூடிய மூன்று நாட்களும் கிருஷ்ணபகவானால் தொடங்கி வைக்கப்பட்டன. போகிப் பண்டிகை மாட்டுப் பொங்கல், இந்திர விழா.
தீபாவளியும் கிருஷ்ணபகவானால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்திரனுக்கு கர்வ பங்கம் செய்து அதன் மூலம் போகிப் பண்டிகையும், மாட்டுப் பொங்கல், இந்திர விழாவும் தொடங்கி வைத்தார் பகவான்.
ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் சக்தியான பூமாதேவியின் புத்திரரான நரகாசுரனைக் கொல்வதற்காகச் சத்திய பாமாவுடன் சென்று நரகாசுரனால் அடைத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அரசர்களையும் விடுதலை செய்தார் கிருஷ்ண பரமாத்மா.
எல்லா ஜனங்களுக்கும் சந்தோஷமும், திருப்தியும், ஆனந்தமும் ஏற்படும் வகையில் பூமாதேவி நரகாசுரன் இருவரின் பிரார்த்தனையினால் கிருஷ்ண பரமாத்மாவினால் தீபாவளி புண்ணியத் திருநாள் தொடங்கி வைக்கப்பட்டது.
தீபாவளி புண்ணியத் திருநாளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன.
தீய காரியங்கள் செய்பவர்கள் நிலைத்து நிற்க முடியாது.
கஷ்டப்பட்டுபவர்களுக்கு நிச்சயம் ஒரு நாள் விமோசனம் உண்டு.
கஷ்டப்படுபவர்களைக் காப்பதற்குப் பகவான் தானாகவே வருவார்.
எவ்வளவோ தீயவர்களாக இருப்பினும் அவர்கள் கடைசி காலத்தில் நல்ல பிரார்த்தனையும் நல்ல காரியங்களும் செய்வார்கள்.
எவ்வளவோ கொடிய காரியங்களை செய்தவனாக இருந்தாலும் பூர்வ புண்ணியத்தினால் பகவத் தரிசனம் கிடைக்கும்.
ஒருவன் இறந்த தினம் 'தீட்டு' தினமாகக் கருதப்பட வேண்டியதாக இருந்தாலும் அதையும் மாற்றி புண்ணிய தினமாக ஆக்கக்கூடிய ஆற்றல் பகவானின் அருளுக்கு உண்டு.
இதையெல்லாம் தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது.
தற்பொழுது மனிதர்களுடைய மனத்தில் பல தீய ராட்சஸ, அசுர குணங்கள் குடு கொண்டிருக்கின்றன.
அவைகளைப் போக்கடித்துக் கொள்ளவும், நம்முடைய மனத்திற்குள் எங்கும் நிறைந்துள்ள இறைவன் இருப்பதனால் நல்ல எண்ணங்களையும், காரியங்களையும் வளர்த்துக் கொள்ளவும் முயற்சி செய்ய வேண்டும்.
தீபாவளி புண்ணியத் திருநாளில் நல்ல சங்கல்பம் செய்வோம்.
நல்ல காரியங்கள் செய்வோம்!