ஒவ்வொரு மனிதனும் தானும் துன்பப்படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கையாகும். தானும் துன்பப் பட்டுக் கொண்டு பிறரையும் துன்பப்படுத்துவது மனித வாழ்வே அல்ல. அது அசுர வாழ்க்கை.
அஸுத்ருப்யந்தே இதி அஸுரா:
அதாவது உடல், உறுப்புகள் இதிலேயே அல்ப சந்தோஷப்படுபவர்கள் அசுரர்கள். பிறந்தது முதல் இறப்பது வரை உடல் பல நிலைகளை அடைகிறது. ஒரே நிலையில் இருப்பதில்லை. இந்த உடம்பு என்பது, சதை, இரத்தம் தண்ணீர், எலும்பு மற்றும் தோலோடு கூடியது.
உடம்பின் நிறத்தை, நிலையை மறைத்துக் கொள்வதற்கு சட்டை போட்டுக் கொள்வது போல, உடம்பிற்குள் உள்ள உண்தண்ணீர் முதலியவற்றை மறைப்பதற்கு ஏற்பட்டதே தோல். சட்டையைக் கழற்றி விட்டால் நாம் எங்காவது அடிபட்டுக் கொண்டாலோ, சிராயத்துக் கொண்டாலோ சதை, எலும்பு, இரத்தம், தண்ணீர் எல்லாம் வெளிப்படுகிறது.
ஒருநாள் உடம்பை முழுமையாகச் சுத்தம் செய்யாமல் இருந்துவிட்டால் எவ்வளவோ அழுக்குகளும் துர்நாற்றங்களும் ஏற்படுகின்றன. ஒரு முறை மல, மூத்திரம் கழித்து விட்டு நீரினால் சுத்தம் செய்யாவிட்டால் எவ்வளவோ துர்நாற்றங்கள் ஏற்படுகின்றன.
நமது உடம்பில் எவ்வளவோ வியாதிகள் ஏற்படுகின்றன. அதனால் துடியாய்த் துடிக்கிறோம். எப்பொழுது மரணம் சம்பவிக்குமென்று தெரியாது. திடீரென்று கூடச் சம்பவிக்கின்றது. ஆகவே உடம்பின் மூலம் நிரந்தர சுகம் பெறவது என்பது முடியாது.
உறுப்புகள் மூலம் ஏற்படும் சுகம்கூட அந்த அந்தப் பருவத்திற்கு, வயதிற்கு, நிலைகளுக்கேற்றவாறு தேவைப்படுகிறது. ஆகவே உறுப்புகளும் எப்பொழுதும் ஒரே மாதிரியான நிலையான இன்பத்தை அளிப்பதில்லை.
மனசும் துன்பத்தோடும் சஞ்சலத்தோடும் கவலையோடும் இருக்கிறது. இத்தனையிலும் மனித வாழ்க்கை ஏதோ சிறிது சந்தோஷத்தோடு நடந்து கொண்டிருக்கிறது. இந்த மனித வாழ்க்கை எப்படி உள்ளதென்றால்...?
ஒரு மனிதன் தனியே நடந்து வந்து கொண்டிருக்கிறான். அப்பொழுது காட்டு மிருகங்கள் அவனைத் துரத்தி வருகின்றன. அவற்றைக் கண்டு பயந்து மரத்தின் மேல் ஏறினான். ஏறிய இடத்தில் ஒரு பாம்பு படுத்திருந்தது. கீழே இறங்க முடியவில்லை. மேலே ஏறவும் முடியவில்லை. அப்பொழுது வேறுகிளைக்குத் தாவினான். கிளையைப் பிடித்த இடத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. கை வைத்தவுடன் தேனீக்கள் கொட்ட ஆரம்பித்தன. அதே நேரத்தில் கூட்டிலிருந்த தேன் சொட்ட ஆரம்பித்தது. அந்தத் தேனை நாக்கை நீட்டிப் பருகினான் அந்த மனிதன்.
உடம்பெல்லாம் தேனீக்கள் கொட்டுகின்றன. பக்கத்துக் கிளையடியில் பாம்பு,கீழே காட்டு மிருகங்கள். இதன் மத்தியில் தேனைப் பருகுவது போலத்தான்
மனித வாழ்க்கையில் சுகத்தை அனுபவிக்க முடியும். இப்படி உடல், உறுப்புகள் மூலமாக அனுபவிக்கும் சுகத்தைத் தான் அஸுத்ருப்யந்தே இதி அஸுரா:என்கிறார்கள். இப்படி உடலாலும். உறுப்புகளாலும் சுகத்தை அநுபவிப்பவர்களை நரர்கள் என்பார்கள். அதிலும் குறைந்த சுகத்தை அனுபவிப்பவர்களை நரகன் என்பார்கள்.
அவர்களுள் உலகம் முழுவதையும் துன்பத்திற்குள்ளாகியும், தானும் துன்பப்பட்டும் வாழ்ந்தவன்தான் நரகாசுரன். தனி மனிதன் தவறு செய்தால் திருத்துவற்கு, நல் வழிப்படுத்துவதற்கு, பெரியோரின் ஆசியும், அந்த மனிதனின் முயற்சியுமே உறுதுணையாக இருக்கும். உலகம் முழுவதும் துன்பத்தைக் கொடுத்தவனை உலக குருவான, ஜகத்குருவான, பகவானின் சொரூபமான கண்ணனே தண்டிக்க முடியும்.
கர்ஷயதி இதி க்ருஷ்ணா:என்ற சொல்லின் பொருளுக்கேற்றவாறு எல்லாவிதத் துன்பங்களையும், அறியாமையும் அழிப்பவரான கிருஷ்ணனால்தான் இப்படிப்பட்ட நரகாசுரனுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டியிருக்கிறது. ஆகவேதான் நரகாசுரனின் முடிவு நாளன்று, கண்ணபிரானின் நினைவு நாளும் சேர்ந்து வருகின்றது. நம்முடைய மனத்திலும், ,உடலிலும், உறுப்புகளிலும் தீய குணங்கள் அகலுவதற்கும், நல்ல குணங்கள் வளருவதற்கும் பரம பவித்திரமான கண்ணபிரானின் அருளுக்குப் பாத்திரர்களாகும்படி ஆசீர்வதிக்கிறோம்.