கண்ணனை உள்ளத்தில் குடியேற்றுவோம்

கண்ணனை உள்ளத்தில் குடியேற்றுவோம் !

நரகாசுரனை வீழ்த்திய தினம் என்பதாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. அசுரன் என்றால் தன்னுடைய ரத்தத்தையும், மாமிசத்தையும் வளர்த்துக் கொள்வதிலேயே விருப்பம் உடையவன் என்று பொருள். நரகன் தன்னுடைய பலத்தைப் பெருக்கிக் கொண்டு பல தவறான செயல்களில் ஈடுபட்டு அசுரன் ஆனான்.

இன்றைக்கும் மனிதர்கள் பலர் நரகாசுரர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதாவது தன்னுடைய வாழ்க்கையே மிகப் பெரிய வாழ்க்கை. தன்னைத் தவிர உலகில் வேறு ஒன்றுமே முக்கியமில்லை என்ற அகங்காரத்துடனும் பேராசையுடனும் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.

மனிதன் ஆசையே படாமல் இருந்து விட்டால், ஒரு காரியத்திலுமே உற்சாகம், ஆர்வம் ஏற்படாமல் ஒரு காரியமும் செய்யாமல் சோம்பேறி ஆகி விடுவான். நாடும் முன்னேறாது. ஒரு மனிதன் 'இந்தக் காரியத்தைச் செய்கிறேன்' என்று முயற்சி எடுத்தால்தான் அந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். இப்படிப் பலரது உழைப்பால், முயற்சியால் தேசமும் முன்னேறும், தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று தன்னைப் பற்றி துர்ப்பலமாக நினைத்துக் கொண்டு, ஒரு காரியமும் செய்யாமலிருந்தால் அவன் சோம்பேறி ஆகி விடுவான். இப்படிப்பட்ட வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும். ஆகவே, மனிதனுடைய வாழ்க்கையிலே தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஆசை ஏற்பட வேண்டும். இலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஆனால் பேராசை ஏற்படக் கூடாது. ஒரு பொருளை நாமும் ஏற்று, பிறருக்கும் முடிந்த அளவு கொடுப்பதுதான் ஆசையின் பயன். ஒருவருக்குமே ஒரு பொருளையும் கொடுக்கக்கூடாது. எல்லாவற்றையும் நாமே வைத்துக் கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது பேராசை.

எந்த ஒரு காரியத்தையும் நாம் உற்சாகத்தோடு தொடங்க வேண்டும் எதையும் நம்மால் சாதிக்க முமடியும் என்ற நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். ஆனால் என்னால்தான் இந்தக் காரியம செய்ய முடிந்தது, நான் இல்லாவிட்டால் இந்தக் காரியம் நடந்திருக்காது என்று சொல்லக்கூடிய அகங்காரம் இருக்கக் கூடாது. மனித வாழ்வில் பேராசையும், அகங்காரமும்தான் அசுர சக்திகள். மனிதனை அசுரனாக உருமாற்றுகிறவை இவைதாம்.

இலக்குகளை நிர்ணயித்து அதை அடைய முயற்சி செய்ய வேண்டும். கிடைத்ததை வைத்து மனத்திலே சந்தோஷம் அடைய வேண்டும், திருப்தி அடைய வேண்டும். திருப்தி இல்லாமைதான் பேராசைக்குக் காரணமாகிறது. தவறுகள் செய்ய வழிவகுக்கிறது. மனத்திருப்தி ஏற்படாததற்கு மனச் சஞ்சலம் தான்காரணம். மனம் சஞ்சலப்பட்டு மோகத்தை அடைவதற்குக் காரணம், பொருள்களின் உண்மைத் தத்துவத்தை அறியாததுதான்.

ஒரு சினிமா பார்க்கிறோம். அதில் வரும் நடிகர் நடிகையர் நடிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்து, நிஜம் என்று நம்புகிறோம். அதிலே ஒரு மோகம் ஏற்படுகிறது. அதனால் மனம் சஞ்சலப்படுகிறது. சினிமாவில் நடந்த

நிகழ்ச்சிகளைப் போல் நம் வாழ்க்கையிலும் நடத்தத் தொடங்குகிறோம். இதன் விளைவாகப் பல துன்பங்கள் நம்முடைய வாழ்க்கையிலே ஏற்படுகின்றன. ஆனால் சினிமாவை வெறும் சினிமாதான், பொழுது போக்குத்தான் என்று உணர்ந்து மனத்திலே மோகம், சஞ்சலம் உருவாகாமல் நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டால் அதனால் துன்பம் வராது.

இது போலவே நம்முடைய வாழ்க்கையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுவிடக் கூடாது. பேராசைப்படாமல், தாமரை இலை நீர் போல் வாழ வேண்டுமானால் எல்லாச் சக்திக்கும் மேலாக ஒரு மகா சக்தி இருக்கிறது என்பதை உணர வேண்டும், "அவனன்றி ஓர் அணுவும் அசையாது" என்ற தத்துவத்தை நாம் அறிந்து கொண்டால் பேராசையும் அகங்காரமும் தன்னால் அழியும். அந்த நிலையில் நம்முடைய அசுரத் தன்மைகள் போய்விடுகின்றன. மனிதன் தேவனாக உயர முடியம். இதை நமக்கு நினைவூட்ட வருவதுதான் தீபாவளி.

ஒரு கண்ணபிரான் தோன்றி நரகாசுரனை ஸம்ஹரித்தார். நாமும் நமது உள்ளத்தில் இருக்கும் அசுரனை அழிக்க மனத்தில் கண்ணைனைக் குடியேற்ற வேண்டும். கண்ணன் அசுரனுடன் போராடி அவனை அழித்து விடுவான்.

தீபாவளி நன்னாளில் புனிதமான கங்கையையும், பவித்ரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையும் நினைத்து, நம்மிடையே உள்ள அசுர சக்திகளான பேராசையும், அகங்காரமும் அழிய வேண்டுமெனப் ப்ரார்த்திப்போம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஒற்றுமை ஒங்கட்டும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஜனகல்யாண்
Next