கண்ணபிரானால் தோற்றுவிக்கப்பட்டது தீபாவளித் திருநாள். நரகாசுரனால் அரசர் முதல் மக்கள் வரை பலருக்கும் பலவிதத் துன்பங்கள் ஏற்பட்டன. அவையெல்லாம் நீங்குவதற்காகக் கண்ணபிரானால் நரகாசுரன் கொல்லப்பட, தீபாவளிப் பண்டிகை தோன்றியது. நரகாசுரன் மரிக்கும் பொழுது அவன் செய்த பிரார்ததனையே ஜன கல்யாணம்தான். அந்தச் சமயத்தில் நரகாசுரனுடைய தாயாரும், நரகாசுரன் ஜனங்களுக்குச் செய்த தீமைகளையெல்லாம் ஜனங்கள் மறந்து எல்லா மங்களங்களுடனும் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள்.
ஜனங்களுக்கு நன்மை கிடைக்கவேண்டும் என்பதே பகவானுடைய அவதாரங்களின் முக்கியமான பணி. இதைத்தான் "பரித்ராணாய ஸாதூனாம், விநாசாயச துஷ்க்ருதாம்" என்ற ஸ்லோகமானது நல்லவர்களைக் காப்பதும், தீயவர்களை அழிப்பதும் தர்மத்தை நிலை நாட்டுவதும் பகவானுடைய அவதாரக் கடமை எனச் சுட்டிக்காட்டுகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் பகவான் இந்தப் பணியை - "ஜன கல்யாணத்தை" - செய்திருக்கிறார். ஒரு நல்லது விளங்க வேண்டுமானால் அதற்கு இடையூறாக உள்ள தீயதை அழித்தால்தான் நல்லது வளரும். பயிர் செய்யும் பூமியில், பயிர் விளைவதற்கு நாம் விதைகளை விதைத்தாலும், விதைத்த விதைகள் முளைப்பதற்கு முன்பாக, விதைக்காமலே வளரும் களைகள்தான் முந்தித் தோன்றும். விதைத்த பயிரையும் வளரவிடாமல் தடுக்கும். ஆகவேதான் விவசாயப் பெருமக்கள் விதைத்த பலனை அடைவதற்கு முன்பாகப் பல தடவை களைகளை அகற்றுவார்கள். களைகளை அகற்றுவது பயிர்கள் வளர்வதற்கு உதவியாக இருக்கும். அதுபோலத்தான் நாட்டில் நல்லது வளர வேண்டுமென்றால், தீமைகளை அகற்ற வேண்டிய பணி முக்கியமானதாகிறது.
கண்ணபிரானைப் பற்றிச் சொல்லும் ஒரு ஸ்லோகம், "வஸுதேவ ஸுதம் தேவம். கம்ஸ ஸாணூர மர்தனம்" என்று கூறுகிறது. வசுதேவருக்குக் குழந்தையாக இருந்தாலும், அவர் கம்ஸன், சாணூரன் போன்றவர்களை அடக்குவார் என்று சொல்கிறது. அதுபோல் ஒவ்வொரு மனிதனும் நல்லதைச் செய்ய முயற்சி செய்வதோடு, தீய சிந்தனைகளை அடக்கி ஆள்வதற்கும், தீய பழக்கங்களை விடுவதற்கும் முயற்சி எடுக்க வேண்டும். தீயது அகன்றால் நல்லது தோன்றுவது சுலபமாகிவிடும். ஆற்று மணலின் கீழே நீர் இருக்கிறது. அதை மணல் மறைத்திருக்கிறது. மணல் மூடியிருப்பதால் உள்ளிருக்கும் நீர் தெரியாமல் இருக்கிறது. மணலை அகற்ற அகற்ற நீர் இயற்கையாக வெளிவரும். அதுபோல் நம்மிடம் அறியாமை (அஞ்ஞானம்) இருக்கிறது. அதனால் நம்முடைய உண்மையான அறிவு (ஞானம்) மறைக்கப்பட்டு நமக்குத் தெரியாமல் இருக்கிறது. அறியாமை விலக, விலக உண்மை அறிவை - ஞானத்தை - நாம் உணர முடியும்.
அன்று இறைவன் அவதரித்து அசுரர்களை வென்று மக்களுக்கு நன்மைகளைச் செய்தார். இன்றும் பல வடிவங்களில் அவதரித்து அசுர சக்தி கொண்டவர்கள் இருந்தால் அவர்களுடன் போராடி அழிக்கிறார். இத்தகையவர்களைத் தெய்வப் பிறவிகள் என்று கருதி வணங்குகிறோம். ஆனால்
புறத்தேயுள்ள இந்த அசுர சக்திகள் தவிர, ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலும், செயலிலும் அசுர சக்திகள் நிரம்பியுள்ளன. ஆகவே ஒவ்வொரு மனிதனும் தன்னிடமுள்ள அசுர சக்தியை அடக்குவதற்கும் அழிப்பதற்கும் தானே முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு தனி மனிதனால் சமுதாயத்திற்கே கேடு வரும் பொழுது இறைவன் தோன்றிக் கடமையாற்றுவார். ஆனால் ஒரு மனிதனால் அவனுக்கே கெடுதி வரக் கூடிய சூழ்நிலை இருக்கும் போது இறைவனுடைய அருளால் அந்தத் தனி மனிதன் தன்னைத் தானே திருத்திக் கொண்டு நல்ல மனிதனாக வாழ முயற்சி செய்ய வேண்டும்.
ஜனநாயகத்தில் ஒவ்வொரு தனி மனிதனும் நல்லவனாக இருந்தால்தான் சமுதாயம் நல்லபடியாக இருக்க முடியும். தனி மனிதனுக்கு நல் வழியை வகுத்துக் கொடுப்பதும், அதன்படி நடக்கச் செய்வதும், அதன் பயனாக ஜனங்கள் அனைவருக்கும் நன்மை (கல்யாணம்) கிட்டுவதும்தான் ஜன கல்யாணம்.