தீபாவளி ஆசிச் செய்தி

தீபாவளி ஆசிச் செய்தி

தீபாவளி நாளன்று காலையில் பரஸ்பரம் ஒவ்வொருவரும் கங்கா ஸ்நானம் ஆயிற்றா என்று கேட்டுக் கொள்வது வழக்கம். கங்கை என்ற பெயரைச் சொன்னாலே சகல பாவங்களும் அகலும், கங்கை, நதியின் ரூபமாக நாம் கண்டாலும், கங்கை, ஜலத்திற்கும் அதிஷ்டான தேவதையாக விளங்குகின்றாள்.

ஒருசமயம் ஸ்ரீ ராமபிரான் தோன்றிய சூரிய வம்சத்தில் ஸகரன் என்ற அரசன் அசுவமேதம் என்னும் யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தைச் சேர்ந்த குதிரையை இந்திரன் ரகசியமாகக் கபில மகரிஷி ஆசிரமத்தில் கட்டி வைத்து மறைந்து விட்டான். ஸகர குமாரர்கள் குதிரையைத் தேடுவதற்குச் சென்றார்கள். கபிலருடைய ஆசிரமத்தில் குதிரை இருக்கக்கண்டு, கபில மகரிஷிதான், தன் தவத்தின் மகிமையினால் இங்கே கொண்டு வந்துவிட்டார், என்று நினைத்து அறியாமையினால் அவரடைய தவத்தைக் கலைத்தார்கள். கபில மகரிஷியின் தவதிற்கு இடையூறு செய்தவர்களைச், சாம்பல் ஆகும்படி சபித்து விட்டார். இதை அறிந்த மன்னன், தன் பேரனான அம்சுமானைக் குதிரையைப் பெற்று வர அனுப்பினான். அவனும் மகரிஷியிடம் சென்று மன்னிப்புக் கேட்டுச் சாம்பலாகச் சென்றவர்கள் நல்ல கதியை அடைவதற்கு வழியும் வேண்டினான். அதைக் கேட்ட கபில மகரிஷி தேவலோகத்தில் உள்ள கங்கா ஜலம் இவர்கள் மீது பட்டால் நற்கதியை அடைவார்கள் என்று சொன்னார்.

அந்த வம்சத்தில் வந்த பகீரதன் தவம் செய்து கங்கா தேவியும் பிரார்தித்தான். கங்காதேவியும், "நான் பூலோகத்தில் வந்து அனைவரையும் உய்விக்கிறேன், ஆனால் தேவலோகத்திலிருந்து வரும் என்னுடைய வேகத்தைப் பரமேஸ்வரன் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்திப்பூமிக்கு விழச் செய்ய முடியாது. அவருடைய சம்மதத்தைப் பெற்று வந்துவிடு" என்றாள். பகீரதனும் பரமேச்வரனைப் பிரார்த்தித்து அவருடைய சம்மதத்தைக் கங்காதேவியிடம் கூற, கங்காதேவியும் ஆகாசத்திலிருநது பரமேஸ்வரன் தலையில் விழுந்து பூலோகத்திற்கு வந்தாள். கங்காதேவியைத் தலையில் தாங்கிய பரமேஸ்வரனுக்கு 'கங்காதரேஸ்வரர்' என்று பெயர் வந்தது.

பூலோகத்திற்குக் கங்கா ஜலம் வந்தவுடன், ஜன்னு என்ற மகரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். கங்கா ஜலம் வேகமாக வந்து அவருடைய தவத்தைக் கலைத்தது. ஜன்னு மகரிஷியும் கங்கா ஜலத்தைத் தம் தவத்தினால் அடக்கி விட்டார். பிறகு பகீரதன், ஜன்னு மகரிஷியைப் பிரார்த்தித்துக் கங்கையை வெளிவரச் செய்தான். அப்பொழுது முதல் கங்கா தேவிக்கு ஜான்னவி என்ற பெயரும் வழங்கலாயிற்று.

பிறகு கங்கை அலகாபாத்தில் யமுனை, சரஸ்வதியுடன் சேர்ந்து, அங்கிருந்து காசி சென்று, பாட்னா சமீபத்தில் உள்ள, பரமேஸ்வரன் புத்திரனான கணபதியினுடைய உருவம் கிடைக்கும ஷோன பத்ரா என்னும் நதியையும் தன்னுடன் அழைத்துக் கொள்கிறாள். பிறகு விஷ்ணு மூர்த்தியின் சொருபம் விளங்கும் சாளக்கிராமம் கிடைக்கும் நதியான கண்டகி நதியையும் அழைத்துக் கொண்டு, கல்கத்தா வழியாகக் கங்கா சாகர் என்னும் இடத்தில் சமுத்திரத்துடன்

கங்காதேவி சங்கமத்தை அடைகிறாள். இப்படி கங்காதேவி வந்தவுடன் கபில மகரிஷியின் சாபத்தினால் உயிரிழந்தவர்கள் உய்வு பெற்றார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் கடுவாள் என்று சொல்லப்படும் மலைப்பிரதேசத்தில் சுமார் 10,000 அடிக்கு மேல் உள்ள பகுதியில் பத்ரி நாராயண பகவான் விளங்குகிறார். அதற்கும் மேலாக உள்ள மலையிலிருந்து அலக்நந்தா என்னும் நதி வருகின்றது. அந்த அலக்நந்தா நதி, கர்ண பிரயாகை என்கிற சிறு நதியையும் அழைத்து வருகின்றது. பிறகு விஷ்ணு பிரயாகை என்கிற நதியுடன் இரண்டறக் கலக்கிறது. பிறக நந்த பிரயாகையுடன் கலந்து வருகின்றது.

பாரதத்தில் 12 ஜோதிர் லிங்கங்கள் இருக்கின்றன. அவைகளுள் கேதாரம் என்னும் க்ஷேத்ரம் முக்கியமானது. 11,000 அடிக்குமேல் ஒரு குன்றின் வடிவமாகவே அருள் பாலிக்கிறார். அங்கிருந்து மந்தாகினி என்ற நதி உற்பத்தியாகி வருகின்றது. தமிழ் மொழியைத் தமிழ் உலகுக்கு வழங்கிய அகஸ்திய முனிவரின் ஆசிரமத்தைத் தாண்டி ருத்ரப் பிரயாகை என்கிற இடத்தில் அலக்நந்தாவுடன் சேர்ந்து விடுகிறது. கடுவாள் பிரதேசத்தில் உத்தர காசிக்கு மேலே 12,000 அடி உயரமான குன்றிலிருந்து கங்கோத்ரி என்கிற ஒரு நதி தோன்றி, பாகீரதி என்கிற நதியுடன் கலந்து வந்த தேவப் பிரயாகை என்கிற இடத்தில் அலக்நந்தாவுடன் கலந்து, ஹரித்வாரில் உள்ள சப்தரிஷி ஆசிரமம் வரை பல மலைத் தொடர்களைக் கடந்து ஹரித்வாரில் பூமியில் வருகிறது. அது முதல்தான் கங்கா என்று அழைக்கப்படுகின்றது.

ஹரித்வாரிலிருந்து அலஹாபாத் வரை சுத்த கங்கை என்று சொல்லப்படுகிறது. அலஹாபாத்தில் கங்கை, யமுனை சரஸ்வதியுடன் கலப்பதால் திரிவேணி என்று சொல்லப்படுகிறது. கங்கை, திரிவேணிக்கு முன்பு சுத்த கங்கை எனப்படுகிறாள்.

ஒவ்வொரு ஹிந்துவும் ராமேஸ்வரத்தில், சேதுமாதவர் என்று சொல்லப்படுகிற பெருமாள் முன்பு தனுஷ்கோடி, ராமேஸ்வரம் மணலை எடுத்து பூஜித்து யாத்திரை செய்து அலஹாபாத்தில் சுத்த கங்கையில் வேணி மாதவன் சந்நிதியில் பூஜித்து, உடன் எடுத்து வந்த மணலை சுத்த கங்கையில் விட்டுவிட வேண்டும். அங்கிருந்து சுத்த கங்கை எடுத்து ராமேஸ்வரத்தில் ராமனாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும்.

ஸ்ரீ ஆதி சங்கரர், கங்கா ஜலத்தில் ஒரு பிந்து உட்கொண்டால் சகல பாபமும் போய்விடும் என்ற கூறியிருக்கிறார். ஒவ்வொரு ஹிந்துவும் தன் வாழ்நாளில் கங்கா ஸ்நானம் செய்து. கயா என்னும் ஷேத்திரத்தில் பித்ருக்களுக்குப் பிண்டம் போடுவது ஒரு முக்கியமான காரியம். இதை நினைவுறுத்துவதற்குத்தான் தீபாவளி நாளன்று, கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா?' என்று கேட்கின்றோம்.

தீபாவளி அன்று எண்ணெயை லட்சுமி என்றும் ஜலத்தைக் கங்கை என்றும் ஆன்றோர்கள் கூறுகின்றனர். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்த பலனை அடைகின்றோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is தீபாவளித் திருநாளின் பயன்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  நல்ல காரியங்கள் செய்வோம் - 11
Next