மிருகங்களை விட மனிதன் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். ஆனால் பல சமயங்களில் பார்க்கப்போனால் மனிதனை விட இதர உயிரினங்களே உயர்ந்தவையாகத் தோன்றுகின்றன!
தேனீயிடம் உள்ள சுறுசுறுப்பு நம்மிடம் இருக்கிறதா என்று யோசிக்கவேண்டும். தேனீ தன்னைப் பற்றிய நினைப்பை விடத் தனது தேன் கூட்டின் வளத்தையே பெரிதாக எண்ணுகிறது. அவ்வாறு நாம் தேசப் பற்றுடன் நமது நாட்டின் வளம் பெருகப் பாடுபடுகிறோமா?
விலங்கியல் நிபுணர்களைக் கேட்டால், நடப்பன, ஊர்வன, பறப்பன, நீரில் நீந்துவன ஆகிய பிரிவுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளிடம் உள்ள பல உயர்ந்த குணங்களை வெகு சுவாரஸ்யமாக நமக்கு எடுத்து சொல்வார்கள்.
இந்த ஜீவராசிகள் எல்லாம் சுதந்திரமாகச் செயல்படுகின்றன, ஆனால் அதே நேரத்தில் தங்கள் தங்கள் சமுதாயத்தின் நலனை உத்தேசிக்கப் பொறுப்புணவுடனும் நடந்து கொள்கின்றன.
பறவை இனங்கள் பல ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட பருவத்தில் இடம் பெயர்கின்றன. மீண்டும் வேறு பருவத்தில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வருகின்றன. அவை சில திசை தப்பினதாகவோ, ஒற்றுமையிழந்து தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதாகவோ சரித்திரமே இல்லை!
மிருகங்களை விட மனிதன் உயர்ந்தவனே என்றாலும் எத்தனையோ பல அம்சங்களில் நாம் இதர ஜீவராசிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள வாய்ப்பு இன்றைக்கும் -இத்தனை நாகரிக முன்னேற்றம் அடைந்த பிறகும் - இருக்கிறது.
ஆனால் மனிதன் இதனை மறந்து விடுகிறான். காரணம், மனிதனுக்கு விவேகமும், பகுத்தறிவும், ஏற்பட்டு இதர ஜீவராசிகளை விட உயர்ந்தவனாகக் கருதப்பட்டபோது கூடவே அவனுக்குள் அகங்காரமும் புகுந்து விட்டதுதான் விவேகமும் பகுத்தறிவும் அடக்கத்தை உருவாக்கவேண்டும் என்பதை உணராமல் மனிதன் அகங்காரத்தை வளர்த்துக் கொண்டு விடுகிறான்
மனிதனுக்கு விவேகமும் பகுத்தறிவும் இருப்பதால் இந்த உலகத்தை அவன் உன்னத நிலைக்கு உயர்த்த முடியும். அதே அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்த உலகை அழித்து விடவும் அவனால் முடியும். மனிதனிடம் எத்தனையோ அற்புதமான சக்திகள் இருந்தாலும் தான் பிறந்த பயனை மறந்து, தன்னைக் காத்துக் கொள்ளவும் மறந்து, தன்னால் தயாரிக்கப்பட்ட பொருள்களில் தானே மயங்கி, அழிவுப் பாதையில் செல்கிறான்.
மனிதனுடைய பிரத்தியேக உயர்ந்த குணங்களான விவேகம், பகுத்தறிவு ஆகயிவற்றை மனிதனுக்கே உரிய அகங்காரமானது பயனற்றுப் போகச் செய்து விடுகிறது- இந்த அகங்காரத்தை ஒடுக்கி, பகுத்தறிவோடு அடக்கத்தை ஒளிரச் செய்வதே தீபாவளித் திருநாளின் பயன்.
நரகாசுரன் துவாபர யுகத்தில் தோன்றித் தான் எனும் அகங்காரம் கொண்டு,
ஆத்திரம் அடைந்து, உலக மக்களை அழ வைத்துக் கொண்டிருந்தான், அவனை ஒழித்து உலக மக்களுக்குச் சாந்தியை அளித்தார் கிருஷ்ண பரமாத்மா. அகங்காரத்தின் அழிவே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தப் புனிதத்திருநாளில நாம் எதற்காகப் பிறந்தோம்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் சிந்தித்து, நம்முடைய மனத்திலே நரகாசுரன் போன்ற தீய குணங்கள் எல்லாம் இருந்தால் அவற்றை அழிக்கக் கண்ணபிரானைப் பிரார்த்தித்து, மனிதன் தேவனாக மாற முடியாவிட்டாலும், மனிதனாகவாவது வாழ முயற்சி செய்து இறைவனுடைய அருளைப் பெறுவோமாக.