கந்தபிரான்

கந்தபிரான்

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாக விளங்குபவர் கந்தபிரான். அறுவகைச் சமயத்தில், முருகபிரான் வழிபாட்டை ஒரு வகையாக ஆதிசங்கரர் ஏற்றுக் கொண்டுள்ளார். பதினெட்டு புராணங்களில் கந்தபுராணம் ஒரு முக்கியமான புராணமாகச் சொல்லப்படுகிறது. வேதங்களிலும் முருகப் பெருமானைப் பற்றி, கந்தனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நெருப்பிலிருந்து தோன்றியதாகவும் முருகனைப் பற்றி சொல்லப்படுகிறது. ஜோதி வடிவமாகவும் முருகனைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வதி பரமேஸ்வரனுடைய மகனாகத் தோன்றினாலும், தந்தைக்கு ஓம் காரத்தை உபதேசித்ததாகவும் சொல்லப்படுகின்றது. தமிழகத்திலே ஆறு படை வீடாகவும் அருள் பாலித்து வருகிறார். ஆறுபடை வீட்டைத் தவிரவும் பல குன்றுகளிலேயும் விளங்கிக் கொண்டு வருகிறார். உருவ வழிபாட்டிலே முருகனுடைய வழிபாடு இன்றியமையாதது. பிரும்மம் என்றால் பரபிரும்மஸ்வரூபம். ப்ரமண்யம் என்றால் பரப் பிரும்மத்தைச் சார்ந்தது. சுப்ரமண்யம் என்றால் பரிபூரணமான உருவ வடிவத்தை பரப் பிரும்ம வடிவத்தைச் சார்ந்தது என்று பொருள். ஆகவே சுப்ரமண்யம் என்பது பரிபூரணமான பிரும்ம வடிவஸ்வரூபமானது. அந்த பிரும்ம வடிவத்தை அறிந்து கொள்வதற்கு, பிரும்ம ஸ்வரூபத்தை அறிந்துக் கொள்வதற்கு, அந்த ஸ்வரூபமாக விளங்குவது ஓங்கார ஸ்வரூபம். அந்த ஓம் காரத்தை ஜபிப்பதன் மூலம் பிரும்ம ஸ்வரூபத்தை நாம் அறிந்து கொண்டு விடலாம். அந்த ஓம் காரத்தைத்தான் தந்தைக்கும் முருகன் உபதேசம் செய்துள்ளான். ஆகவே ஓம்கார ஸ்வரூபமாகவும், ஓம் காரத்தை உபதேசித்தவனாகவும் விளங்குபவன் முருகன். முருகனைப் பற்றி ஆதிசங்கரர் திருச்செந்ததூரிலே பாடல் பாடியுள்ளார். பலவிதமான நோய்கள் எல்லாம் தீருவதற்கும் முருகனுடைய பாடல்கள் அருட்பாடல்களாக விளங்குகின்றன. திருமுருகாற்றுப் படையிலே விசேஷமாக முருகப் பெருமானைப் பற்றி பாடல் பாடப்பட்டுள்ளது.

வள்ளி, தேவசேனா என்ற இரண்டு சக்திகளோடு முருகன் விளங்கினாலும் இச்சா சக்தி, கிரியா சக்தி என்று சொல்லக்கூடிய சக்திகளோடு விளங்குவதாகத்தான் பௌராணிகர்கள், புராணம் சொல்லுபவர்கள் விளக்குவார்கள்.

எப்படி பிரம்மத்தை ஆதாரமாகக் கொண்டு மாயை இயங்குகிறதோ அதுபோல முருகனை ஆதாரமாகக் கொண்டு இந்த உலகம் முழுவதும் இயங்குகிறது. பிரம்ம ஆதாரத்தின் கீழ் மயில் இருக்கிறது. மயில் மிகவும் அழகாக விளங்குகிறது. தோகையை விரித்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கிறது. குறுக்கிக் கொண்டால் நீட்டிக் கொண்டுவிடுகிறது. அதுபோல் தான் பிரும்மம். தன்னிடம் உள்ள மாயையினால் உலகத்தை விஸ்தரிக்கிறது. தன்னிடத்துக்குள்ளேயே அடக்கிக் கொள்கிறது. அடக்கிக் கொள்ளும் போது அத்தனை விசேஷங்கள் தெரிவதில்லை. பிரித்துக் கொள்ளும் பொழுது, உலகத்தைப் படைக்கும் பொழுது, உலகம் இருக்கும் பொழுது, உலகம் எல்லோராலும் பார்த்து அனுபவிக்கப்படும் பொழுது, அது அநேகவிதமான சுக துக்கங்களோடு விசேஷமாகத் தென்படுகின்றது.

அந்த மாயைக்கு இரண்டு சக்திகள் என்று சொல்லுவார்கள். ஆருண சக்தி, விஷேப சக்தி என்று சொல்லுவார்கள். அதுபோல இங்கே மயிலுக்கு, மயில்வாகனனுக்கு வள்ளி தேவசேனா சக்திகள் என்று இரண்டு சக்திகள் இருக்கின்றன. சக்தி இல்லாவிட்டால் சிவம் கிடையாது என்று கூறுவார்கள். ஆகவே இந்த சக்தி இல்லாவிட்டால் மயிலின் அழகு கூட இருக்காது. மயிலின் அழகு இல்லாவிட்டால் முருகனைக் கண்ணால் கண்டு நாம் அனுபவிக்க முடியாது. சுத்தமான பரபிரும்ம ஸ்வரூபத்தை நாம் அறிந்து கொள்ளுவது மிகக் கடினம். ஆகவே அதற்காக உருவ வடிவத்திலே அந்த முருகனைக் காண்பதற்காக அந்த முருகன் அருவும் உருவுமாகி அனாதியாய் பலவாய் என்ற பாட்டுக்கு ஏற்றவாறு அருவ வடிவத்திலே, பரபிரும்ம வடிவத்திலே உள்ள அந்த முருகன் உருவ வடிவத்திலே தோன்றி, அதுவும் பல வடிவத்திலே தோன்றி, அனைவரும் மனதிலே பக்திகொள்ளும் வகையிலே தோன்றி அனைவரையும் வசீகரிக்கும் தன்மையிலே தோன்றி, அனைவரையும் அருள் பாலிக்கும் வகையிலே தோன்றி, எல்லா மக்களையும் உய்விக்கிறான். முருகனுக்கு அநேக பக்தர்கள் உண்டு. அவர்களிலே முக்கியமானவர் அருணகிரிநாதர். இந்த வாழ்கையிலேயும் சரி, இனி பிறவாது இருக்க கூடிய முக்தி நிலையிலும் சரி, இரண்டு நிலையிலும் அந்த முருகனேதான் தன் வாழ்நாள் முழுவதும் என்று ஒரே லட்சியத்தோடு வாழ்ந்தார் அருணகிரிநாதர். உலக இயல்பிலே வாழ்ந்து அந்த முருகனை விடாமல் தொழுது, அந்த முருகனிடத்தில் பலவகையிலே அருள் பெற்றவர் அருணகிரிநாதர். அதன் பின் நல்ல முக்தி நிலையை அடையும் பொழுது வட அவருடைய பக்குவத்தை அவருடைய பாடல் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஞானஜோதி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஐயப்பன்
Next