ஆவணி மாதத்தில் பல பண்டிகைகள் வருகின்றன. முக்கியமாக ஆவணி - அவிட்டம் - அந்தணர்களுக்கான பண்டிகை. அந்தணர் என்பவர் வேதம் ஓதுவோர். வேதங்களையும், சாஸ்திரங்களையும் ஒதுமுன், பவித்ரமாக இருக்க வேண்டும் என்பதால் - மனசும், தேகமும் சுத்தப்படுத்த இந்த ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றிக் கொள்வது பழக்கத்தில் இருந்து வருகிறது. நல்ல காரியங்கள் செய்யும் போதும், அதேபோல் அசுத்தம் ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் அந்த தோஷத்தைப் போக்கவும் பூணூல் மாற்றிக் கொள்வது பழக்கம். அது போல் வேத ஆரம்பத்திலும் போட்டுக் கொள்வது பழக்கம். ஸ்ராவண மாதத்தில் 'வேதாரம்பம்' தொடங்குகிறது. இந்த சிராவண மாதம், வேத ஆரம்பத்துக்காக ஏற்பட்டது ஆவணி அவிட்டமும், பூணூல் மாற்றிக் கொள்ளுதலும்.
இன்றைக்கு வேத ஆரம்பமோ, சாஸ்தீர அறிவோ இரண்டாம் பட்சமாய்ப் போய் பூணூல் மாற்றிக் கொள்வது மட்டுமே பிரதானமாக நிற்கிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் போட்டுக் கொள்வது ஒரு அங்கம். அவ்வளவுதான். அதுவே பிரதானமல்ல. உபாகர்மா தான் பிரதானம். மந்திரங்கள் தான் முக்கியம்.
இன்றைக்கு ஆவணி அவிட்டத்தன்று நம் மக்கள், ஆபிஸ் போகிற அவசரத்தில் பூணூலை மட்டும் போட்டுக் கொண்டு மந்திரம் ஏதும் சொல்லாமல் கிளம்பி விடுகிறார்கள். இது மிகத் தவறு. அன்று ஒரு நாளாவது அலுவலகத்துக்கு லீவ் போட்டு விட்டு மந்திரங்களை முழுமையாகச் சொல்லவேண்டும். அதன் தொடர்ச்சியாக காயத்ரி ஜபம். அன்று காயத்ரீ தேவியைத் துதித்து வழிபட்டால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
இம்மாதத்தில்தான் சாதுர்மாஸ்ய விரதம் வருகிறது. சன்யாசிகள் நான்கு மாதங்கள் தொடர்ந்து ஓரிடத்தில் இருந்து - அது நதிதீரமாகவோ, புண்ணிய ஷேத்திரமாகவோ இருக்கலாம். சில கிரஹஸ்தர்கள் கூட இவ்விரதம் இருப்பார்கள்.
இச் சமயத்தில் தான் கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. அர்த்த ராத்திரியிலே பிறந்தாலும் அஞ்ஞான இருளை அகற்றும் கீதையை உலகுக்கு வழங்கியவர் அவர். கிருஷ்ண பரமாத்மாதான் முதல் ஜகத்குரு. அர்ஜுனனை ஒரு கருவியாகக் கொண்டு அகிலத்துக்கு அவர் அளித்த உபதேசங்கள் அத்தனையும் ரத்தினங்கள். அகிலம் முழுதும் தானேவாகவும், தன் சின்ன வாயினுள் உலகம் முழுதையுமாகக் காட்டியவர் கிருஷ்ண பரமாத்மா.
உலகில் நல்லவனவற்றைக் காத்து தீய சக்திகளை அழிக்க யுகம் தோறும் தான் பிறப்பதாக கீதையில் அவர் சொல்லியிருக்கிறார். அவரே படைப்புக் கடவுளாகவும், காக்கும் கருணாமூர்த்தியாகவும் சம்ஹரிக்கும் சர்வேஸ்வரனாகவும் விளங்குபவர். பகவானின் பல திருவிளையாடல்களை, ஸ்வரூபங்களையெல்லாம் பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தில் தான் காணமுடியும். பரிபூரணமான அருள் பாலிப்பு நிகழ்த்துபவர் கிருஷ்ண பரமாத்மா. அவரது பிறந்த புண்ணிய தினம் - கிருஷ்ண ஜெயந்தி என்று இம்மாதத்தில் வருகிறது.
அடுத்தது வினாயக சதுர்த்தி. மிக அதிகமான மக்களின் ஆதர்ச தெய்வம் வினாயகர். மிக எனிமையானவர். கோபுரம் நிறைந்த கோவிலிலும் இருப்பார். தெரு முக்கிலும் உட்கார்ந்திருப்பார் கூரையே இல்லாத அரசமரத்தடியிலும்
இருப்பார். வேண்டுவோரின் துயர் துடைப்பது மட்டுமே முக்கிய பணியாய்க் கொண்டு அருள் பாலிப்பவர்.
பள்ளிக்கூடப் பையன்கள் பரிட்ஷையில் பாஸ் பண்ணுவது முதற் கொண்ட அனைத்துக்கும் வேண்டப்படுவது அவைத்தான்.
இம்மையில் மட்டுமின்றி மோட்சம் அளிப்பது வரை அனைத்துக்குமான மூலகாரணம் அவர் நாம் எத்தொழிலைச் செய்தாலும் முதலில் வினாயகரைத் துதித்துப் பின்தான் எதையும் தொடங்குவோம். நம் விக்னங்களைக் களைவதால் அவர் விக்னேஸ்வரர் ஆகிறார். சர்வகாரியத்திற்கு மூலாதாரமாக விளங்குபவர்.
அத்தகைய வினாயகரின் பிறந்த தினமும் - வினாயகர் சதுர்த்தி - இம்மாதம் தான் வருகிறது.
இப்படி பண்டிகைகளும் விசேஷங்களும் நிறைந்து ஆவணி மாதம். அப்படிப்பட்ட புண்ணிய மாதத்தில் நம் மனதின் அழுக்குகள் யாவையும் நீக்கி பரம்பொருளின் மீதான சிந்தனையை வலப்பெறச் செய்து எல்லா சௌக்கியங்களையும் பெற சர்வேஸ்வரன் அருள்புரிய வேண்டி ஆசீர்வதிக்கின்றோம்!