கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

மாதங்களுள் மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்று பகவான் கீதையில் சொன்னாலும், அதற்கு முன் மாதமான கார்த்திகை மாதத்திலேயே பகவானுடைய பூஜைக் கார்த்திகை மாதமே உகந்த மாதமாக ஆகிறது. கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் ஸ்நானம் செய்வது மிகவும் உகந்தது. அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம். ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது. எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் நாலு ஜாமமும் சிவ பூஜைக்கு விசேஷமாகும்.

கார்த்திகை மாதம் அமாவாசை சோமவாரமும் சேர்ந்தால் அன்று அரசமர பிரதட்சணம் மிக மிக விசேஷம். அரச மர பிரதட்சணத்தின் மூலம் மும்மூர்த்திகளை பிரதட்சிணம் செய்த பலன் உண்டு. இதையேதான் பகவானும் பகவத் கீதையில் மரங்களுள் அரச மரமாக நான் இருக்கிறேன் என்றார்.

மேலும் கார்த்திகை பௌர்ணமியில் அன்னாபிஷேகம் மிக விசேஷமாக சொல்லப்படுகிறது. இந்து சமயத்தில் வினாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைவருக்கும் கை கால் முதலிய உருவங்கள் உண்டு. ஆனால் சிவலிங்கத்திற்கு கை, கால் முதலிய உருவங்கள் கிடையாது. லிங்க வடிவமாகவே இருக்கும். லிங்கம் என்றால் காரணம். லிங்காகாரமாக உள்ள பரமேச்வரன் உலகனைத்திற்கும் பெரும் பேறான முக்தி அளிக்கக் கூடிய ஞானத்தையும், உபதேசிக்கக்கூடிய காரணமாக இருப்பதினால் லிங்கமாகவே பரமேச்வரன் விளங்குகிறார். சிவம் என்றாலே மங்களம். நல்லவை என்று பொருள். பரமம் என்றால் உயர்ந்தது. பரம மங்களங்களுககுள் உயர்ந்தது பரமசிவம். இந்த பரமசிவன் ஜோதிவடிவமாக இருப்பதாக சாஸ்தீரங்கள் கூறுகீன்றன.

பஞ்ச பூத ஷேத்திரங்களுள் (ப்ருதிவி ஷேத்திரம் காஞ்சிபுரம், ஜலஷேத்திரம் திருவானைக்கா, தேஜஸ் ஷேத்திரம் திருவண்ணாமலை, வாயு ஷேத்திரம் ஸ்ரீ காளஹஸ்தி, ஆகாசசேஷத்திரம், சிதம்பரம்) ஜோதி ஷேத்திரம் திருவண்ணாமலை. ஜோதிஸ் என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி. இப்படிப்பட்ட ஷேத்திரம் திருவண்ணாமலை.

திருவண்ணாமலையில் கார்த்திகை மாதத்தில் மலை மேல், தீபம் ஏற்றப்பட்டு ஜோதி வடிவமாக இறைவன் உள்ளதாக நாமெல்லாம் அறிகிறோம். பரமேச்வரனும் லிங்கோத்பவ மூர்த்தியாக அடி முடி காணாத ஜோதி வடிவமாக இருப்பதாக அறிந்து கொள்கிறோம். கார்த்திகை தீபம் ஒவ்வொரு கோவிலிலும், ஒவ்வொரு வீட்டிலும் ஏற்றப்பட்டு, விசேஷமாக ஜோதி ஒளியுடன் வீடுகளும், கோவில்களும் விளங்குகின்றன. குழந்தைகளெல்லாம் மாவெலியோ மாவெலி என்று மஹாபலி சக்கரவர்த்தியின் தானத்தையும், பக்தியையும் எடுத்துக்காட்டும் வகையில் தீப்பொறி பறக்கவிடுகிறார்கள்.

புழுக்களுக்கும், கொசுக்களுக்கும், வண்டுகளுக்கும், மரங்களுக்கும், ஜலத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும் ஆகாசத்தில் வசிக்கக்கூடியவைகளுக்கும், நலல கதி கிடைக்க வேண்டும் என்று ப்ரார்த்தித்து, சிவ பூஜை முடிந்த பிறகு,

குங்கிலியம் போட்டு ப்ரார்த்தனை செய்வார்கள்.

ஒவ்வொரு கோயிலிலும் பழமை எல்லாம் கழித்து பாபங்களை பொசுக்கும் நினைவாகவும், நல்ல சொர்க்க லோகத்திற்கு செல்லும் நினைவாகவும் சொக்கபானை (ஸ்வர்க்கபானை) கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஆகவே கார்ததிகை மாதம் ஸ்நானம், தானம், பூஜை, ப்ரார்த்தனை, ஞானம் இத்தனையும் வருவது. எனவே, விசேஷமான மாதமாகிறது.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is புரட்டாசி சனிக்கிழமை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  போகிப் பண்டிகை
Next