இந்த நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக
ஏற்பட்டது. தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/
தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள்
கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்
சொல்லி பிரார்த்தனை செய்து ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு
மற்றதைத் தான் அணிய வேண்டும். பிறகு அம்பாளுக்கு நைவேத்யம் செய்து,
கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.
மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்
தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய
ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா
ஒரு ஸமயம் சத்யவான் என்னும் ராஜா கல்யாணமான சில
வருஷங்களுக்குள் இறந்துபோக நேரிடுகிறது. அப்பொழுது தன் கணவனுடைய
உயிர் இங்கேயே இருக்கும்படி செய்து, எமனுடைய ஆசீர்வாதத்தால் சென்ற
உயிரை மீட்டுவந்த நினைவே, காரடையான்நோன்பு. பொதுவாக உமா மகேஸ்வரர்,
லக்ஷ்மிநாராயணன், என்று அம்மை பெயருடன்தான், ரிஷிகள் ஸ்வாமி பெயர்கள்
வரும். இங்கே சத்யவான் சாவித்திரி என்று சத்யவான் முன்பாகவும் சாவித்திரி
இரண்டவதாகவும் சொல்லப்படுகிறது. கணவனே மாதா, பிதா, பதி தெய்வம் என
எல்லா வகையிலும் கணவனுக்கு முக்யத்துவம் கொடுத்து, அவன் வாழ்வே தன்
வாழ்வு என நினைத்து, கணவன் வாழ்வுக்காக, கணவனை எமன் எங்கெல்லாம்
இட்டுச் சென்றானோ அங்கெல்லாம் தன் தவவலிமையால் சென்று, எத்தனையோ
பல வகையான வரங்கள் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு வரனிலும்
விருப்பமில்லாமல், கணவன் மீண்டும் வரவேண்டும் என ஒரே வரத்தோடு
கணவனை மீட்டு வந்த காரிகை சாவித்ரி. ஆகவேதான் சத்யவான் சாவித்ரி என்று
சொல்வார்கள். பொதுவாக இல்லறத்தில் கணவன் மனைவி இருவருமே பொதுக்
காரியங்களில் ஒத்துப்போகவேண்டியதாக இருந்தாலும் கணவனுடைய ஆபத்து
காலத்தில் அவன் பிரிந்து விட்டால் என்ன ஆகுமோ என்று பயந்து போய்
விடுவார்கள் பிற்காலத்தில் தனக்கு வேண்டிய பொருள்களை சேகரித்து வைத்துக்
கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இது உலக நியதி. இதற்கு விதிவிலக்காக
பலரும் உண்டு. குந்தியின் கணவன் பாண்டு இறந்தவுடன் மாத்ரி என்ற மற்றொரு
மனைவி இறந்து விடுகிறாள். அப்போது குந்திதேவி கணவனோடு உயிர்த்தியாகம்
செய்யாமல், சாபத்தினால் உயிர் போவதை தடுக்க முடியாமல் போனதால் கணவன்
சொல்படி ஐந்து குழந்தைகளை காப்பதில் ஈடுபட்டாள். மாத்ரி போல் குந்தியும்
கணவனோடு உயிர்விட்டிருந்தாலும், அல்லது குந்தியின் வரபலத்தால் சூரியன்
வந்தது போல் யமனை வரவழைத்து பாண்டுவின் உயிரை காப்பாற்றியிருநதாலும்,
ரிஷிகளின் சாபப்படியும், மகபாராதத்தில் நடந்த தெய்வீக ஸங்கல்ப்பப் படியும்,
எமனால் கூட பாண்டுவின் மரணத்தை தவிர்க்க முடியாது. ஆகவேதான்
அத்தனை வலிமையுள்ளவளாக இருந்தும் அவதியின் பலத்தோடு மகாபாரத
நிகழ்ச்சிக்கு உறுதுணையாக பஞ்ச பாண்டவர்களை காப்பாற்றினாள்.
இதுபோலத்தான் காந்தாரியும் கணவன் பார்க்காததை தானும் பார்க்க மாட்டேன்
என்று தன் கண்களையே கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். இப்படி சிலர்
கணவனுக்காக வாழ்ந்தாலும் சாவித்ரி போல் விதியின் பலத்தையும் மாற்றி
கணவனோடு வாழ்நாள் முழுவதும் சுமங்கலியாக வாழும் பாக்யத்தை பெற்றவள்
சாவித்ரி.
ஆகவே காரடையான் நோன்பின் தத்துவம் கணவனோடு எப்பொழுதும்
சுமங்கிலியாக வாழவேண்டும் என்பதுதான்.