தெய்வ வாக்கு : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

அபௌருஷேயம் (மனிதர் செய்யாதது) என்றால், நம்ப மாட்டோம் என்பது சரியேயில்லை. நம் தேசத்தில் மட்டுமில்லாமல் மற்ற மதஸ்தர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். கர்த்தரின் வார்த்தையையே தாம் சொல்வதாகவும், தாமாக எதையும் சொல்லவில்லை என்றும் இயேசு சொல்கிறார். முகமது நபி அல்லாவின் ஆக்ஞைகளையே வெளியிட்டதாக அந்த மதஸ்தர்கள் சொல்கிறார்கள். நாம் அபௌருஷேயம் என்பதைத்தான் அங்கே Revealed Text என்கிறார்கள். தெய்வவாக்கே மஹான்கள் மூலம் மத நூல்களாக வந்திருக்கின்றன.

மதப் புஸ்தகமில்லாமல், எந்த துறையிலும் ஆழ்ந்து ஐகாக்ரியத்தோடு (ஒருமுனைப்பாட்டோடு) புகுந்து விட்டால், அதில் உள்ள உண்மைகள் தாமாகவே ஒருத்தருக்கு வெளிப்பட்டுவிடுகின்றன. அந்த ஸத்யமே ஸ்புரித்தது, flash ஆயிற்று என்கிறார்கள். இதை intuition என்கிறார்கள். ஐன்ஸ்டீன் கூடத் தம்முடைய பிரசித்தமான ‘ரிலேடிவிடி தியரி’யைத் தம் புத்தியால் யோசித்து யோசித்துப் பண்ணவில்லை என்றும், அந்த ஈக்வேஷன் அப்படியே இன்ட்யூஷனில் ஃப்ளாஷ் ஆயிற்று என்றுதான் சொல்லியிருக்கிறார் என்றும் ஒரு ப்ரொஃபஸர் தெரிவித்தார்.

இதையெல்லாம் ஒப்புக்கொள்ளும்போது, பரம சுத்தமான அந்தஃகரணத்தை உடைய ரிஷிகளின் ஹ்ருதய ஆகாசத்தில் வேத மந்திரங்கள் தாமாகவே, அதாவது அபௌருஷேயமாக வெளிப்பட்டன என்பதை நம்பமாட்டோம் என்பது நியாயமில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அத்யயன முறைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வேதஅனந்தம்
Next