வேதங்கள் அனந்தம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

சிருஷ்டி அத்தனையும், சிருஷ்டிக்கு அப்பாற்பட்டதும் கூட சப்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறதென்றால், அது ரொம்ப ரொம்ப பெரிதாக அல்லவா இருக்க வேண்டும்? இப்போது வேதங்கள் என்று சொல்லப்படுகிற புஸ்தகங்கள் என்னதான் பெரிதாக இருந்தாலும், விச்வ வியாபாரத்தின் அத்தனை காரியங்களும் இந்த மந்திரங்களுக்குள் வந்துவிட்டன என்றால் சரியாக இருக்குமா என்று தோன்றலாம்.

இப்போது நமக்கு வந்திருக்கிற வேதங்கள் கொஞ்சம்தான். வேதத்திலேயே என்ன சொல்லியிருக்கிறதென்றால், வேதங்களுக்கு அளவே இல்லை – “அனந்தா வை வேதா:”- என்று இருக்கிறது. ரிஷிகளுக்கு அத்தனை வேதங்களும் ஸ்புரித்துவிட்டன என்று சொல்ல முடியாது. நாலு வேதங்களின் ஆயிரத்துச் சொச்சம் சாகைகளே (சாகை என்றால் கிளை) அவர்களுக்குத் தெரிந்தவை.

லோகம் முழுக்க சிருஷ்டித்த பிரம்மாவுக்கே வேதம் முழுக்கத் தெரிந்தது. இந்த பிரம்மாவுக்கு முன் ஒரு மஹாப் பிரளயம் நடந்தது. அதற்கு முந்தி இன்னொரு பிரம்மா இருந்தார். அதே மாதிரி அவருக்கும் முந்தி உண்டு. எல்லாவற்றுக்கும் முதலில் பரமாத்மாவின் எந்த ச்வாஸ சலனத்தால், சிருஷ்டிக் கிரமம் முதல் பிரம்மாவின் தொழிலாகத் தூண்டப்பட்டதோ, அந்தச் சலனம் மட்டும் ஆகாசத்தில் இத்தனை பிரளயங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மட்டும் அழிவே இல்லை. ஒவ்வொரு மஹாபிரளயத்துக்கும் அப்புறம் வருகிற புது பிரம்மா இந்த சலன சப்தங்களைக் கொண்டுதான் மறுபடி ஸ்ருஷ்டி முழுதையும் பண்ணுகிறார்.

நாம் எழுப்புகிற ஒலிகள் அழிகிறதேயில்லை! இரண்டாயிரம் வருஷத்துமுன் கிறிஸ்து பேசினதை, அவர் குரலிலேயே இப்போதும் பிடித்துத் தரமுடியும்; அதற்காக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று படித்ததாக ஞாபகம். அப்புறம் அது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஆனால் இப்படி ஒரு possibility [சாத்தியக்கூறு] இருக்கிறது என்று தெரிகிறது. ஒரு ஒலி உண்டானபின், என்றுமே அது அழியாமல் ஆகாசத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.

இம்மாதிரி, பிரளயத்திலும் அழியாமலிருந்த வேத சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா மறுபடி லோக சிருஷ்டி பண்ணியிருக்கிறார். கல், மண், மரம், இரும்பு முதலியவற்றை வைத்துக் கொண்டு, நாம் ஒரு ஊரை நிர்மாணம் பண்ணுகிறோம். ஆனால் இந்தக் கல், மண், மரம், இரும்பு எல்லாமே பரமாத்மாவின் எண்ணத்தில் இருந்து, எண்ணுகிற மனஸுக்கும் ச்வாஸத்திற்கும் மூலம் ஒன்றாயிருப்பதால், அவருடைய ச்வாஸ சலனத்தினால் ஏற்பட்டவைதான். அந்த சலனங்களுக்குரிய சப்த ரூபத்தை, பிரம்மா வேதங்களாகக் கண்டு அத்யயனம் பண்ணின மாத்திரத்தில் சிருஷ்டி முழுக்க வந்து விட்டது.

இப்போது அடிக்கடி பேப்பரில் [செய்தித்தாளில்] பார்க்கிறோம். பலவிதமான ‘ஸெளண்ட் வைப்ரேஷன்’களை [சப்த அதிர்வுகளை] செடிகளுக்கு அருகிலே உண்டு பண்ணினால், சில விதமான வைப்ரேஷனினால் செடி நன்றாக வளர்ந்து நிறையக் காய்க்கிறது. சிலவகை வைப்ரேஷனால் வளர்ச்சி குன்றுகிறது என்று நியூஸ் வருகிறது. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார சக்தி எல்லாம் சப்தத்துக்கு உண்டு என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறது.

பிரம்மாவின் தபோ மகிமையால், power of concentration-ஆல் லோகம் முழுவதையும் வேத சப்தத்தால் அவர் உண்டாக்க முடிந்தது. நாம் தினமும் ஜபிக்கிற அதே பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு தரம் சொல்லி ஒரு ஸித்தர் விபூதி பூசினால், உடனே ஒரு வியாதி சொஸ்தமாகிறது என்றால், அது எப்படி? நம்மைவிட அவருக்கு உள்ள கான்ஸென்ட்ரேஷன் [மன ஒருமைப்பாட்டு] சக்தியால்தான். அதோடுகூட மந்திரத்தை அக்ஷரம், ஸ்வரம் கொஞ்சங்கூட தப்பாமல் சுத்தமாகச் சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் உண்டாகும். ஜகத் ச்ருஷ்டிக்குக் கருவியாகவே பிரம்மா பரமாத்மாவிடம் தோன்றியதால், அவருக்கு இவற்றில் பூர்ண சக்தி இருந்தது.

ஒன்றுமில்லாத ஆகாசத்திலிருந்து எலெக்ட்ரிஸிடியால் எவ்வளவோ காரியங்கள் செய்யப்படுகின்றன. அதைப் போல, எல்லாம் நிர்குணப் பிரம்மமான சைதன்ய வஸ்துவிடமிருந்து உண்டாகும். பிரளய ஸமயங்களில் அந்தச் சைதன்யம் தூங்கும். ஒரு ஸாண்டோ இருக்கிறான். அவன் தூங்கினால் அவனுடைய சக்தி ஒன்றும் வெளியே தெரிவதில்லை. குஸ்தி முதலிய காரியங்களைப் பண்ணும்பொழுது அவனுடைய சக்தி தெரிகிறது. அது போல சிருஷ்டி காலத்தில் சைதன்ய வஸ்துவின் சக்தி பல காரியங்களைச் செய்கிறது. நிர்குண வஸ்துவினிடத்திலிருந்து முதலில் ஒரு கான்ஸென்ட்ரேஷன் சக்தி (தபஸ்) கிளம்புகிறது. அதன் வழியே உண்டானவர் பிரம்மா. அவர் தபோரூபமாக உண்டானதால் சகல வேதங்களையும் பூர்ண சக்தியோடு கிரஹித்துக் கொண்டார். வேத சப்தத்திலிருந்து லோகத்தைச் சிருஷ்டித்தார். வேதங்கள் அளவிறந்தன; சிருஷ்டியும் பலவிதம்.

பரத்வாஜ மஹரிஷி மூன்று ஆயுஸ் பரியந்தம் வேதாத்தியயனம் செய்தார். பரமேச்வரன் அவருக்குப் பிரத்தியக்ஷமானார். “உமக்கு நாலாவது ஆயுஸ் கொடுக்கிறேன். அதைக் கொண்டு என்ன செய்வீர்?” என்று கேட்டார். பரத்வாஜர், ‘அந்த ஆயுஸை வைத்துக் கொண்டும் வேதாத்தியயனமே பண்ணிக்கொண்டிருப்பேன்’ என்று சொன்னார். எத்தனை ஆயுஸ் கிடைத்தாலும் வேதங்களைப் பூர்ணமாக அத்யயனம் பண்ணுவது ஸாத்தியமில்லையாதலால், இந்த அஸாத்ய விஷயத்தில் ரிஷி பிரயத்னப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பரமேச்வரன், அவர் மனஸை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். அங்கே மூன்று பெரிய மலைகளைத் தோன்றப் பண்ணி, ஒரு பிடி மண்ணை எடுத்துக் காட்டி, ‘நீ இவ்வளவு வருஷக் கணக்காக அத்யயனம் பண்ணின வேதங்கள் இந்தப் பிடி மண்ணுக்கு ஸமானம். நீ இன்னும் தெரிந்து கொள்ளாதவை இந்த மலைகளைப்போல் இருக்கின்றன’ என்று சொன்னார்.

வேதகிரி என்னும் திருக்கழுக்குன்றம் தான் இப்படி வேதமே மலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “வேத வேத வேத மஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!

பரத்வாஜ ரிஷியின் இந்தக் கதை வேதத்திலேயே “காடக”த்தில் இருக்கிறது.

அதனால் அனந்தமான வேதங்கள் உண்டு என்று தெரிகிறது. நாலுவேதம், ஆயிரத்து சொச்சம் சாகை என்பதெல்லாம் பிற்பாடு ஏற்பட்ட அமைப்புகள்தான்.

பிரம்மா உண்டானவுடன் அவருடைய ஹிருதயத்தில் வேத சப்தமெல்லாம் தோன்றின. அவருக்கு ஸ்ருஷ்டி செய்வதற்கு அந்த வேதம் வழி காட்டிற்று. எங்கே பார்த்தாலும் வேத சப்தம் நிறைந்திருந்ததை அவர் அறிந்தார். அவருக்கு எல்லா வேதங்களும் தோன்றும்.

ரிஷிகளுக்குச் சிலசில மந்திரங்களே தோன்றும். இப்படி ரிஷிகளுக்குத் தோன்றிய மந்திரங்கள்தான் நமக்கு கிடைத்துள்ள வேதமாக இருக்கிறது.

நாம் மந்திரங்களுக்கு ரிஷி, சந்தஸ், தேவதை என்னும் மூன்றையும் சொல்லுகிறோம். எல்லா மந்திரங்களுக்கும் ரிஷி, சந்தஸ், தேவதை உண்டு. தெலுங்கு தேசத்தில் எல்லா மந்திரங்களுக்கும் அவைகளைச் சொல்லிவருகிறார்கள். தபஸ் பண்ணின ரிஷிகள் மூலமாக அறியப்பட்டவையே மந்திரங்கள். அந்தந்த ரிஷிகள்தான் அந்தந்த மந்திரங்களுக்குரிய ரிஷிகள். அவர்களுக்கு அந்த மந்திரங்களைக் கேட்கும் திவ்விய சுரோத்திரம் உண்டு. யோகசாஸ்திரத்தில் பெரிய ஆகாசமும் மனஸிலுள்ள ஆகாசமும் ஒன்றாக ஆகிவிட்டால் பெரிய ஆகாசத்திலுள்ள சப்தமெல்லாம் நமக்குக் கேட்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எங்கும் நிறைந்து அபேதமான நிலையை அடைந்தவர்களுக்கே அந்த சப்தங்கள் தெரியும். இம்மாதிரி ரிஷிகள் மந்திரங்களை லோகத்தில் பிரசாரத்துக்குக் கொண்டு வந்தவர்களேயன்றி, அவற்றை இயற்றியவர்களல்ல. ஆனாலும், ஏற்கனவே உள்ளதை வெளிப்படுத்தியதாலேயே நமக்குப் பரம உபகாரத்தைப் புரிந்திருக்கிறார்கள். ஒருவர் நமக்கு கங்கா தீர்த்தம் கொண்டு வந்து கொடுத்தால், கொடுத்தவரையே நமஸ்காரம் பண்ணி வாங்கிக் கொள்கிறோம். அவரா கங்கையை உண்டு பண்ணினார்? இல்லாவிட்டாலும், ஆயிரம் மைலுக்கு அப்பாலிருக்கும் கங்கை நமக்குக் கிடைக்கும்படி அவர் செய்த உபகாரத்தைப் போற்றுகிறோம். நம் காதுக்கு எட்டாத மந்திரங்களை நமக்காகப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்த ரிஷிகளை எவ்வளவு பூஜித்தாலும் போதாது. அதனால்தான் ஒரு மந்திரத்தைச் சொல்லும்போது, எந்த ரிஷி மூலமாக அது லோகத்துக்கு வந்ததோ அவர் பெயரைச் சொல்லி தலையைத் தொடுகிறோம். அவருடைய பாதங்களை சிரஸில் வைத்துக் கொள்கிறோம் என்பதற்கு இது அறிகுறி.

வேதங்கள் ஆதியற்ற அநாதி. அவை மநுஷ்யர்களால் செய்யப்படாத அபௌருஷேய கிரந்தம் என்பதெல்லாம் எப்படி என்று நான் இவ்வளவு நாழி சொன்னதிலிருந்து கொஞ்சங் கொஞ்சம் தெளிவாகியிருக்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தெய்வ வாக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  மந்திர யோகமும் மந்திங்கள் ர ஸித்தியும்
Next