வேதம் அநாதியானது, அபௌருஷேயமானது, ஸகல ஸ்ருஷ்டிக்கும் அதுவே மூலம் என்பது மட்டும்தானா அதன் மகிமை? இல்லை. வேறு பல பெருமைகளும் சிறப்புகளும் வேதத்துக்கு உண்டு.
அதன் சப்தம் நம்முடைய நாடிகளிலும், வெளி லோகத்திலும் (atmosphere) ஏற்படுத்தும் சலனங்களால் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் உண்டாகிறது. லோக க்ஷேமம் என்றால் மநுஷ்யர்களின் க்ஷேமம் மட்டுமில்லை. ஸகல பிராணி வர்க்கங்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று வேதம் சொல்கிற மாதிரி வேறெந்த மதத்திலும் சொல்லியிருக்கவில்லை. “தே த்விபாத் சதுஷ்பாத்” – இரு கால் பிராணி, நாலுகால் பிராணி எல்லாம் க்ஷேமமாக இருக்க வேதம் பிரார்த்திக்கிறது. புல், பூண்டு, விருக்ஷம், மலை, நதி ஆகிய எல்லாவற்றின் நன்மையையும் கோருகிறது. இந்த ஸமஸ்தப் பிராணிகளின் க்ஷேமம் வேதத்தின் சப்த விசேஷத்தாலேயே நடந்து விடுகிறது.
சப்த விசேஷத்தோடு அர்த்த கௌரவமும் வேதத்துக்கு அளவிட முடியாததாக இருக்கிறது. வேதக் கருத்துக்களைப் பார்த்து இதர மதஸ்தர்களும், வெளி நாட்டு அறிவாளிகளும் கூட ஆச்சர்யப்படுகிறார்கள். காவிய ரீதியில் இருக்கிற அழகு, சமூக வாழ்வு முறைகளை நுட்பமாகச் சொல்லியருக்கிற அழகு, அத்யாத்ம தத்வங்கள், நன்னெறி உபதேசங்கள் (moral instructions) , ஸயன்ஸ் கருத்துக்களுங்கூட வேதங்களில் கொட்டிக் கிடக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறார்கள்.
சப்த சலனமான மந்திரங்களுக்கெல்லாம் அர்த்தம் இருக்க வேண்டும் என்பதே இல்லை. பிரகிருதத்தில் [நடைமுறை வாழ்க்கையில்] பார்த்தாலும், வார்த்தையோ அர்த்தமோ இல்லாமலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணிக் கேட்கிறபோது, அதன் வெறும் சப்தம் மட்டுமே நமக்கு ஆனந்தம், துக்கம் முதலான உணர்ச்சிகளைத் தருகிறது. வாத்திய ஸங்கீதத்தினால் ஏற்பட்ட Vibration-களினாலேயே கறிகாய்ச் செடிகளைத் தூண்டி யதேஷ்டமாகக் காய்க்க வைத்திருக்கிறோம் என்று ஸமீபத்தில்கூட ஒரு யூனிவர்ஸிடியில் பரிசோதனை பண்ணித் தெரிவித்திருக்கிறார்கள். சப்தத்துக்கு சிருஷ்டி சக்தி உண்டு என்பதற்கு இது ஒரு proof. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கேயும் வாத்ய ஸங்கீதம் என்பதாலேயே வார்த்தையோ அர்த்தமோ முக்கியமில்லை என்று தெரிகிறது.
வேதத்தில் என்ன விசேஷம் என்றால் அதன் சப்தத்துக்கே தனியாக சக்தி இருப்பது மட்டுமின்றி, வார்த்தைகளாகவும் அதற்கு மிக உயர்ந்த அர்த்தம் இருக்கிறது.
தமிழில் அநேக உத்தமமான ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்தால் மனஸ் உருகுகிறது. ஆனாலும் குறிப்பிட்ட பிரயோஜனம் வேண்டுமென்றால், அதில் சிலதை மட்டும்தான் உருவேற்றுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். “திருமுருகாற்றுப்படை”, வியாதி தீருவதெற்கென்று ஒரு திருப்புகழ் (“இருமலுரோக”) , தேவாரத்தில் மழை வேட்டல் பதிகம் என்றிப்படி சிலதை மட்டும் விசேஷமாகப் பல ஆவிருத்தி ஜபிக்கிறோம். இதே நக்கீரரும், அருணகிரிநாதரும், ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளும் இவற்றை விட நெஞ்சை உருக்கும்படியான வேறு ஸ்தோத்திரங்கள் பண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவற்றை விட்டு இவற்றை மட்டும் ஏன் எடுத்துக் கொள்கிறோம் என்றால் சப்த விசேஷந்தான். இந்தப் பாடல்களில் உள்ள சப்தங்களுக்கு மந்திர சக்தி இருக்கிறது. ஆசார்யாளேதான் “ஸெளந்தர்ய லஹரி”, “சிவானந்த லஹரி” இரண்டும் செய்திருக்கிறார். ஆனால் “ஸெளந்தர்ய லஹரி”யில் ஒவ்வொரு ச்லோகத்தை ஜபிப்பதற்கும் ஒவ்வொரு விதமான பலன் சொல்லியிருக்கிற மாதிரி, “சிவானந்த லஹரி” க்குச் சொல்லவில்லை. காரணம் என்னவென்றால் சப்தங்களுக்கே உள்ள மந்திர சக்திதான்.
அர்த்தமே இல்லாத வெறும் சப்தமான மந்திரங்களும் உண்டு. அர்த்தத்தில் ரொம்ப உயர்வாக இருந்தாலும், விசேஷமாக மந்திர சக்தி இல்லாத மந்திரங்களும் உண்டு. வேதத்தின் மஹிமை என்ன என்றால் சப்தத்தின் மந்திர சக்தி, அர்த்தத்தின் கௌரவம் என்ற இரண்டும் கொண்ட மந்திர சமூகமாக அது இருப்பதுதான். ஒரு மருந்து கசப்பாக இருந்து கொண்டு தேகத்துக்கு நல்லது பண்ணுகிறது. ஒரு பக்ஷணம் வாய்க்கு ருசியாக இருந்தாலும் தேகத்துக்குக் கெடுதலை உண்டாக்குகிறது. மதுரமான ருசி, தேக புஷ்டி இரண்டையும் தரக்கூடிய கூச்மாண்ட லேஹ்யம் மாதிரி ஒன்று கிடைத்தால் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது? வேதத்தில் இப்படி இரட்டைப் பலன்: மந்திர சக்தி, தத்வ உபதேசம் என்று இரண்டும் இருக்கின்றன.
தத்வம் என்று எடுத்துக் கொள்கிறபோதும், லோக வாழ்க்கை, அத்யாத்ம வாழ்க்கை இரண்டுக்குமான உபதேசங்கள் அதில் இருக்கின்றன. ஒவ்வொரு ஜீவனும் ஒரு ஜன்மாவில் உண்டாகிறதிலிருந்து சாகிறவரையில் எப்படிச் செய்தால் அவனுடைய ஆத்மா க்ஷேமம் அடையும் என்பதற்கு அதில் உபதேசம் இருக்கிறது. இப்படி indiviual salvation (தனிமனிதனின் உய்வு) -ஐச் சொல்வதோடு மட்டுமில்லாமல், சமூக வாழ்க்கை எப்படி நடக்க வேண்டும், பொது ஜனங்களின் கடமைகள் என்ன, பிராம்மணன் எப்படி இருக்க வேண்டும், ராஜா எப்படி ராஜாங்கம் நடத்த வேண்டும், ஸ்திரீகள் எப்படியிருக்க வேண்டும், பொது ஜனங்கள் எப்படிச் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அது சட்டம் மாதிரி நமக்குப் போட்டுக் கொடுத்திருக்கிறது.
சட்ட புஸ்தகங்களுக்கெல்லாம் உச்சாணி வேதந்தான் என்பது அதன் விசேஷங்களில் ஒன்று.