மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.
வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம் தான்.
மநுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக் கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூற ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமான படியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மநுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அநுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக் கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். தன் நிஜ ஸ்வரூபம் என்ன என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், தானே பூரண ஆனந்த வஸ்து என்று தெரிந்து கொள்வான்.
இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மகா சமுத்திரம் மாதிரி இருக்கிறதென்றால், இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிடமிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்து விட்டால் அப்புறம் வெளி இன்பத்தைக் தேடவே மாட்டான். தன்னைத்தானே அநுபவித்துக்கொண்டு ஆனந்த சமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையைவிட்டு வராமல் இருந்தாலும் அதனிடம் நதிகள் போய் விழுகின்றன அல்லவா? அப்படியே ஆசைகள் இவனிடம் வந்து விழுந்து சமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். ‘ஆபூர்ய மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்ரம்’ என்று கீதை சொன்ன மாதிரி, பேரின்பக் கடலாக நிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல் பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திர பதவியின் ஆனந்தம்கூட இந்த ஆத்மானந்தக் கடலில் ஒரு துளிதான் என்கிறார் ஸ்ரீ பகவத் பாதர்கள்: ‘யத்ஸெளக்யாம்புதி லேச லேசதஇமே சக்ராதயோ நிர்விருதா:’ (மனீஷா பஞ்சகம்).
பதவி, பணம், ஸ்திரீ புருஷாள், கௌரவம், பப்ளிஸிட்டி—என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரிதான். வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்குக் குறை வந்து விட்டதாகக் துக்கப்படுவது சுத்தத் தப்பு. நமக்குக் குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து. நமக்கு அன்னியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம். ‘வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கிக் கொள்வதுபோல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. எதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இருப்பதெல்லாம்?’ என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.