நாம் எல்லோரும் பரம்பொருளை பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். இந்த ஞானம் என்பது என்ன? பரம்பொருளைத் தவிர, வேறெதுவுமே இல்லை என்பதுதான். அந்த ஒன்று இத்தனை யாகவும் தோன்றுகிறது. இத்தனையான தோற்றங்களிலேயே மனஸைச் செலுத்திக் கொண்டிருந்தால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு, இவற்றால் உண்டாகும் கஷ்டங்கள் எல்லாம் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இத்தனை தோற்றத்திலிருந்தும் மனஸைத் திருப்பி, இவற்றுக்குக் காரணமான ஒன்றையே அறியத் தொடங்கினால் எண்ணமும் பலவாக ஓடி அவதிப் படாமல், சஞ்சலங்கள் ஓயும். ஒரே வஸ்து என்றபின் சஞ்சலிக்கவோ ஏற்றத்தாழ்வுக்கோ இடம் ஏது? அந்த நிலையிலேயே நித்திய சுகத்தைப் பெறலாம். இந்த நிலையைத்தான் ஞானம் என்கிறோம்.
உலக வாழ்வில்கூட சுகம் வருவது போலிருக்கிறது. ஆனால் அது நித்தியமாக நிலைத்து நிற்பதில்லை. வெளியிலிருந்து வருகிற சுகத்தை நாம் எப்படி சாசுவதமாக்கிக் கொள்ள முடியும்? வெளியிலிருந்து வருவது நமக்கு ஸ்வாதீனப்படாமல் நம் கைவிட்டு ஓடியும் விடும். அப்போது அதனால் கிடைக்கிற சுகமும் போகத்தான் செய்யும். இப்படித்தான் இந்த நிமிஷம் சுகமாக இருப்பது அடுத்த நிமிஷமே மறைகிறது. அடர்ந்த மரத்தின் கிளைகள் ஆடுகிறபோது இடுக்கு வழியாகக் கொஞ்சம் வெளிச்சம் வந்து பாய்ந்துவிட்டு, அடுத்த நிமிஷமே நிழல் வந்து மூடிக்கொள்வது போலத்தான், உலகத்தின் துன்பத்துக்கு நடுவில் கொஞ்சம் கொஞ்சம் சுகம் தலையை எட்டிப் பார்த்துவிட்டு ஓடிவிடுகிறது. நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக் காரணமான ஒன்றை அறிவது தான்.
உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும். பிராணாபத்து உண்டாகும். ஒருவனுக்கு பணமும் பதவியும் உள்ளபோதே அதனால் உண்டாகிற சிறிது சுகத்தோடு, தன் பணம், பதவி போகக்கூடாது என்ற கவலை, சுகத்தைவிட அதிகமாக இருக்கிறது. இதனால்தான் உலகத்தில் எவனுமே, தான் சந்தோஷமாக இருப்பதாகச் சொல்லக் காணோம்! ஒவ்வொருவனும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்பவும் அழகு என்று நினைத்துக் கொண்டிருப்பதுபோல், அதிக துக்கமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.
ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.
சித்தப் பிரமை பிடித்து, ஜடமாகி விட்டால் கஷ்டம் தெரிவதில்லை. பைத்தியத்தின் கஷ்டம் வேரூன்றி நிற்பதில்லை; ஆனால், சித்தப் பிரமையில் நித்திய ஆனந்தமும் இல்லை. தூக்கத்தில் துக்கமில்லை. ஆனால் தூக்கத்தில் சுகமாக இருக்கிறோம் என்கிற அறிவு இல்லை. ஞானிதான் எப்போதும் விழிப்பிலேயே இருந்து கொண்டும் சாசுவத ஸுகியாக இருக்கிறான். அவனது தேகத்தில் சிரமங்கள் இரா என்பதில்லை. ஆனால் அவனுடைய மனத்தில் கிலேசமே இராது. வெளியிலிருக்கிற சிரமம் அவன் உள்ளே பாதிப்பதே இல்லை.
கிணற்று ஜலத்துக்குள் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால் தண்ணீர் மட்டத்துக்கு மேலே குடம் வந்தவுடன் கனக்க ஆரம்பித்து விடுகிறது. எளிதில் புரட்ட முடியாத பெரிய மரங்களை வெள்ளத்துக்கு அடியாகத்தான் புரட்டி எடுப்பது வழக்கம். அதே மாதிரி நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் ஜலத்துக்குள் இழுக்கிற குடம் மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகிவிடும்.