எது சுயராஜ்யம்? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

சுதேசி, சுயராஜ்யம் என்று இப்போழுது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் வெள்ளைக்காரன் மாதிரி இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இவைகளெல்லாம் உள்ள மட்டும் நாம் பரதேசிகள் தான்; நம் நாடு பராதீனத்திலுள்ள ராஜ்யம்தான். வாஸ்தவமான சுயராஜ்யம் வரவேண்டுமென்றால் நம்முடையை தேசத்தின் ஆசார அநுஷ்டானங்கள் எப்படி இருந்தன என்பதைக் கவனித்து, இப்பொழுது இருப்பதை அப்படி மாற்றினால் நல்லது என்று உணர்ந்து, அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்வதுதான். நம்முடைய தேசத்துப் பழைய வழக்கங்கள், தர்மங்கள், ஆத்ம சம்பத்துக்கள் மாறாமல் இருக்க வேண்டும். பிற தேசத்தார்கள் மாதிரி நாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வெளிநாட்டார் சொல்லாமலே, நாமே அவர்களுடைய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டபின், அரசியலில் மட்டும் அடிமைத்தனம் இருந்ததென்ன, போயென்ன?

உண்மையான சுயராஜ்யமானால், நம்முடைய சுதந்திரப்படி நடத்தும் சட்டசபை எனில், நம்முடைய தர்மராஜ்யம் ஆதியில் எப்படி இருந்தது, அதை மீண்டும் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென்பதை ஆலோசிக்க வேண்டும். நமக்கென்று ஒரு பண்பாடும், நாகரிகமும் உண்டு. இருக்கட்டுமே; அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்றால், ‘நமது’ என்கிற வெறும் பாசத்துக்காக இப்படிச் சொல்லவில்லை. எத்தனையோ புராதன நாகரிகங்கள் காலப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டு போனபோதிலும், நம் பண்பாடும், நாகரிகமும் பாறாங்கல் போல எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருப்பதாலேயே இதற்கு ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்கிறதென்று உணர்ந்து, அதையே நாமும் அநுசரித்து வாழவேண்டும். நாம் நாமாக இருக்க வேண்டும். எவ்வளவு பலம் நமக்கு உண்டோ அவ்வளவையும் நம்மை நிஜமான நம்மவர்களாக்குவதில் உபயோகப்படுத்த வேண்டும்.

வெள்ளைக்கார வேஷத்திலே உள்ள நம்மவர்கள் சட்டம் செய்கிறார்கள்; அதற்கு அடிமையாக நாம் இருக்கிறோம் என்றால் அதில் சுதந்திரத்தின் சாரமே இல்லை. நம்முடைய சம்பிரதாயங்களை அநுசரிக்காதவர்களுக்கு வோட்டுக் கொடுத்து வரும் ராஜ்யம் அடிமை ராஜ்யம்தான். லௌகிக விஷயங்கள்கூட ஆத்ம சம்பந்தமாகவும் தெய்வ சம்பந்தமாகவும் இருந்த முறைதான் நம்முடையது. அதன்படி இருந்தால் உத்கர்ஷத்தை (உயர்வை) அடையலாம் என்பதை அறிந்து, நமக்கு எந்த மாதிரி ஸ்வதந்திரம் உண்டோ அதை, அந்த முறையை நிலை நிறுத்துவதிலேயே பயன்படுத்த வேண்டும். தர்மம், தொழில்முறை முதலியவைகளை அறிந்தவர்களையும், அநுஷ்டானம், ஒழுக்கம் உடையவர்களையுமே ராஜ்ய நிர்வாகத்தில் வைத்துக் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடைய சாஸ்திரப்படி தர்ம ராஜ்யத்தை ஸ்தாபித்து, இது நன்றாக நடக்கிறது என்று காட்டி, மற்ற தேசத்தவர்களும் இதை அநுசரிக்கச் செய்ய வேண்டும். அப்படி நடத்திக்காட்டுவதற்கு நம்முடைய சாஸ்திரங்களையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். வழிகாட்டும் புஸ்தகங்கள் பல இருக்கின்றன. இவை இருப்பதால்தான் நானும் இதையெல்லாம் சொல்லவாவது முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் மறந்து போயிருக்கும். அவைகளைப் பார்த்து அந்தப்படி ஏன் நடக்கக்கூடாது? அந்தப்படி பண்ணுகிறவர்களை ஏன் சட்ட சபைக்கு அனுப்பக்கூடாது என்று எல்லா ஜனங்களும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை இவ்விதம் பிரயோஜனப்படுத்தி, லோகத்தில் தர்மத்தை நடத்திக் காட்டி, மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டிப் பரமேசுவரனுடைய அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is அன்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  அறமும் அன்பும் அரசாங்கமும்
Next