அரசனே தர்மத்துக்குக் காரண புருஷன்—”ராஜா தர்மஸ்ய காரணம்”—என்று ஒரு முதுமொழி இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம்.
முதலில் தர்மம் என்றால் என்ன?
மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வசிக்க ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெயிலிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை ரட்சித்துக் கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் மனிதன் வசதி செய்துகொள்ள வேண்டும். ஏதோ ஒரு தொழிலைச் செய்தே இதற்கு வசதி செய்து கொள்கிறான். அத்தியாவசியமான சுய தேவையைப்பூர்த்தி செய்துகொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் பிறர் விஷயமாகச் சில கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவனும் ஏதோ ஒரு குடும்பத்தில் பிறப்பதால் அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், பிற்பாடு கல்யாணமானதும் மனைவி மக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னுடைய சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் மனிதன் கடமை ஆற்றவேண்டியிருக்கிறது. பலவிதத்தில் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்; பலவிதத்தில் வீடு, நாடு இவற்றுக்கான கடமைகளைச் செய்யலாம். ஆனால் மனத்துக்குத் தோன்றியபடியெல்லாம் இவற்றைச் செய்யாமல், எவருக்கும் தீங்கு விளைவிக்காத விதத்தில், அதீதமான காமமும் குரோதமும் கலக்காமல் செய்ய வேண்டும். தன்னையும் மேம்படுத்திக்கொண்டு, அனைவரையும் உயர்த்துகிற விதத்தில் தொழிலையும் கடமையையும் செய்ய முடியும். இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரது ஆத்ம அபிவிருத்திக்கும் அநுசரணையாக இக உலகக் காரியங்களைச் செய்வதற்குத்தான் “தர்மம்” என்று பெயர்.
பலர் கூடி வாழ்கிற சமூகத்தை, அவர்களது பலவிதமான காரியங்களில் உரசலில்லாமல், சமூகம் முழுவதும் ஆத்மாபிவிருத்தி அடையும் முறையில் சீராக வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்வதே ராஜாங்கத்தின் கடமை. பிரஜைகளின் லௌகிக வாழ்க்கையை ஒழுங்கு செய்து, அவர்கள் ஆத்மாபிவிருத்தி அடைகிற வாய்ப்புகளையெல்லாம் பூர்த்தி செய்து தரவேண்டியது ராஜாங்கத்தின் பொறுப்பு. இதனாலேயே “ராஜா தர்மஸ்ய காரணம்” என்றனர்.
ராஜாங்கம், தனி மனிதர்கள் இவர்களுக்குப் பலவிதமான காரியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எத்தனை காரியம் இருந்தாலும் அதற்கெல்லாம் மூலமும், நோக்கமும் அன்பு என்ற ஒன்றாகவே இருக்க வேண்டும். காரியம் என்று ஏற்பட்டால் அதன் விளைவுக்கு ஆளாகிற ஒன்றும் இருக்கத்தான் செய்யும். ‘காரியம் செய்பவன்’ இருப்பதுபோல் ‘காரியத்தின் விளைவுக்கு ஆளாகிற ஒருவனு’ம் இருந்தே தீருவான். விளைவை அநுபவிக்கப் போகிறவர்களிடம் பூரண அன்பு வைத்தே எந்தக் காரியமும் செய்ய வேண்டும். அன்பிலேயே எந்தக் காரியமும் பிறக்க வேண்டும்.
உலக விகாரங்களில் யுத்தம் முதலியனவும் அத்தியாவசியமாகிவிடுகிற நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. சிலருக்கு தண்டனை தர வேண்டி நேருகிறது. ஆனால், யுத்தம் செய்யும் போதும், தண்டனை தரும்போதும்கூட எதிராளியிடம் துவேஷம் கொள்ளாமல் அன்புடனேயே செய்ய வேண்டும்.
காரியம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் காரியம் செய்கிற மனசில் அன்பு தவிர வேறெதுவும் இருக்கக்கூடாது. அன்பு வேறு; புத்தரும் காந்தியும் சொன்ன அஹிம்சை வேறு. அன்பினால் லோக க்ஷேமத்தைச் செய்யும்போது, தப்புச் செய்பவர்களுக்கு ஹிம்சை செய்வதைத் தவிர்க்க முடியாமற் போகலாம். அப்போது ஹிம்சையில் தோஷமும் இல்லை. ஆனால், தண்டனை பெறுகிறவர்களிடமும் நம் மனசில் அன்பே இருக்க வேண்டும். லோகக்ஷேமத்தை மட்டுமின்றி அவனுடைய க்ஷேமத்தையும் — அதாவது இனிமேலும் இந்த கெடுதல்களைச் செய்து அவன் பாபத்தைத் பெருக்கிக் கொள்ளக்கூடாது என்பதையும் — உத்தேசித்தே அவனுக்கு ஹிம்சை தரவேண்டியிருக்கிறது என்ற உணர்வோடு சிட்சிக்கவேண்டும். காமம், குரோதம், துவேஷம், வஞ்சனை இவற்றைப் பூரணமாக நீக்கிவிட்டு, லோகக்ஷேமத்துக்காக எந்தக் காரியமும் செய்யலாம். அன்பு ஒன்றே சகல காரியங்களுக்கும் வழித்துணை (guide) யாகிவிட்டால் உலகில் உள்ள பல தீமைகள் தானாகச் சிறுகச் சிறுகச் மறைந்து போகும். இது என்னுடைய உபதேசம் (Message) அல்ல; இதுவே பாரத தேசத்தின் சகல ரிஷிகளும் முனிவர்களும் தந்திருக்கிற உபதேச சாரம்.