அஹிம்ஸா ஸோல்ஜர்கள் தேவை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘நவீன ஸயன்ஸின் அபிவிருத்தியால் எல்லா சௌகரியங்களையும் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்; மதமும், அநுஷ்டானமும் எதற்கு வேண்டும்?’ என்று சிலர் கேட்கிறார்கள். ஸயன்ஸினால் பல சௌகரிய சாதனங்களை உண்டாக்க முடிவது உண்மையே. ஆனால் இதனால் ஆனந்தம் வந்து விட்டதா என்பதுதான் கேள்வி. ஆனந்தம் என்பது மனத்திருப்தியை, உள்ள நிறைவைக் குறித்த விஷயம். சௌகரிய வாழ்வுக்கு இதெல்லாம் தேவை. இன்னமும் தேவைகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் ஓயாமல் திரவியங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதில் மக்கள் திருப்தியா அடைந்து வருகிறார்கள்? ஏற்கெனவே இருந்த திருப்தியும் போய்விட்டதைப் பார்க்கிறோம். அதோடு இதில் போட்டா போட்டி, வர்க்க பேதம், துவேஷம் எல்லாமும் வளர்ந்துவிட்டன. மநுஷ்யனின் ஆசையைப் பூர்த்தி செய்வது முடியாத காரியம். ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே உண்மையான ஆனந்தம் காணமுடியும். இதற்கு வழி காட்டுவது மதம்தான். ஆனபடியால், ஸயன்ஸ் அபிவிருத்தி ஆகியிருப்பதாலேயே மதத்தின் தேவையும் அதிகமாயிருக்கிறது எனலாம்.

லௌகிக, விஞ்ஞான அபிவிருத்தியால் ஆத்ம சாந்தி காண முடியவில்லை என்று அமெரிக்கா, ருஷ்யா ஆகிய இரு தேசங்களும் நிதரிசனமாகக் காட்டுகின்றன. முதலில் ஸ்புட்னிக் செய்து உலகைக் சுற்றவிட்ட நாடு ருஷியா. அது கம்யூனிஸ நாடு. அங்கு மத போதனை கிடையாது. இருந்தாலும் டெக்னாலஜி அபிவிருத்தி மட்டும் அந்த நாட்டுக்கு உள்ள நிறைவை அளிக்கவில்லை. அதனால்தான் நமது மகாபாரதத்தை ருஷிய மொழியில் மொழி பெயர்த்துத் தங்கள் பள்ளிகளில் போதிக்க அவர்கள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அமெரிக்க மக்களுக்கு ஆத்ம சந்துஷ்டி இல்லாததாலேயே அவர்கள் யோகம், வேதாந்தம், சங்கீ்ர்த்தனம் இவற்றில் திரும்பியிருக்கிறார்கள். ஸயன்ஸில் மிக முன்னேறிய தேசங்கள் நம் பாரத தேசத்தின் பக்கம் திரும்பிப் பயனடைய முயலும்போது, நாமே நமது புராதன தர்மத்தை மறந்து வெறும் இந்திரிய சௌக்கியத்தில் இறங்கினால் அது ரொம்பவும் பரிதாபமாகும்.

நம் தேசத்தில் லௌகிக ஆசையும், நாஸ்திகமும், தெய்வ நிந்தனையும் தலைதூக்கினால்கூட, ஜீவசக்தி வாய்ந்த நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு எந்நாளும் அழிவு வராது என்று நம்பலாம். அப்படி அழிவு வராமல் காப்பது நம்முடைய பொறுப்பு.

‘காப்பது’ என்றால் என்ன செய்யவேண்டும்? நாஸ்திகர்களோடு, மத நம்பிக்கை இல்லாதவர்களோடு சண்டை போடுவதா? இல்லை. ஹிந்து மதம் சண்டையின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாகச் சரித்திரமே கிடையாது. அல்லது சமூகப் பணிகளைக் காட்டி நம் சமயத்துக்கு மற்றவரை இழுத்துக்கொண்டதாகவும் சரித்திரம் இல்லை. ஆக, ஹிந்து மதம் சண்டையும் போடவில்லை; மதமாற்ற நோக்கத்தோடு சமூக ரீதியில் சேவையும் செய்யவில்லை. ஆனாலும், இத்தனை யுகாந்தரமாக, எத்தனை எத்தனையோ எதிர்ப்பு வந்தும் அது அழியாமல் இருப்பதை மட்டும் பிரத்யக்ஷமாகப் பார்க்கிறோம். இது எதனால்? நம் மதத்திலுள்ள தத்துவங்களின் சத்தியத்தினால் என்று சொல்லலாமா? நம் மதத் தத்துவங்கள் பரம உத்தமமானவை என்பது உண்மைதான். ஆனால் கூட, பாமர மக்கள் உள்பட ஏராளமானவர்கள் நம் மதத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு இந்தத் தத்துவ மகிமைதான் காரணம் என்று நான் சொல்லமாட்டேன். நம் ஜனங்களில் ஏராளமானவர்களுக்கு இந்தத் தத்துவங்கள் சமாச்சாரமே தெரியாது.

பின் என்னதான் காரணம்? ஒருவிதமான பிரசாரமும் இல்லாமலே, பழங்கால போப் மாதிரி, லாமா மாதிரி, காலிஃப் மாதிரி, பலம் வாய்ந்த குருபீடங்களும் இல்லாமலே இத்தனை கோடி மக்கள் இத்தனை ஆயிரம் வருஷங்களாக நம் மதத்தில் நிலைத்து இருப்பதற்கு காரணம் என்ன? முன்பு பிற மதத்தினர் ஆட்சியில் பலவிதக் கொடுமைகளுக்கு ஆளாகியும், அவர்கள் நயமாகவும் பயமாகவும் எத்தனையோ பிரசாரங்கள் செய்தும்கூடக் கோடிக்கணக்கான மக்கள் நம் சநாதன தர்மத்திலேயே இருப்பதற்குக் காரணம் என்ன? எனக்குத் தெரிகிற காரணம் இதுதான். மதத்தைப் பற்றிப் பேசுவதை விட, தத்வார்த்தங்களை வாயால் விளக்குவதைவிட நம் மதம் விதிக்கிறபடியே பூரணமாக வாழ்ந்து காட்டிய உத்தம புருஷர்கள் ஆதியிலிருந்து தோன்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு, நல்ல தெய்வபக்தியுடனும், எல்லோரிடமும் பிரேமையுடனும், தெளிந்த ஞானத்துடனும், நேர்மையான வாழ்க்கை நடத்திய பெரியவர்கள் நம் மதத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் தோன்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இவர்கள் பெரிதாகத் தத்துவப் பிரசாரம் என்று செய்ய வேண்டும் என்பதில்லை. ஆனால் இப்படிப்பட்டவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே இவர்களிடம் பொது ஜனங்களுக்கு மதிப்பு ஏற்பட்டிருக்கிறது! அதனாலேயே இவர்கள் அனுஷ்டிக்கிற மதத்திடம் பற்றுதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த மதத்தைவிட்டு நீங்காமல் அதிலேயே மேலும் சிரத்தையுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

நாஸ்திகமும் ஸயன்ஸும் லௌகிகமும் தலைதூக்கியுள்ள, இப்போதும் இப்படிப்பட்டவர்கள் நம்மிடை தோன்றிவிட்டால் போதும், நம் மதத்துக்கு எந்த ஹானியும் உண்டாகாது. மதத்துக்கு விரோதமான சக்திகளுடன் பௌதிகமாகவோ, வாத, விவாதத்தாலோ யுத்தம் செய்கிற சைன்யம் ஏதும் நமக்குத் தேவையில்லை. எவரிடமும் யுத்தம் செய்யாமல், எது நடந்தாலும் நடக்கட்டும் என்ற துணிவோடு, தம்பாட்டில் கர்மாநுஷ்டானங்களைச் செய்து கொண்டு, சீலர்களாக வாழ்கிற அஹிம்ஸா ஸோல்ஜர்களே இன்று நமக்குத் தேவை. ‘ஸோல்ஜர்’ என்று ஏன் சொன்னேன் என்றால், அவன்தான் சாகத் துணிந்தவன். அப்படியே இவர்கள் பிராணத் தியாகத்தையும் பொருட்படுத்தாமல், ஸ்வதர்மங்களை அநுஷ்டிக்க வேண்டும். சண்டை போடுவதில் ஸோல்ஜர் இல்லை; சாகத் துணிந்ததிலேயே ஸோல்ஜர். தங்களது வாழ்க்கையின் தூய்மையால் தெய்வீகம் பெற்று, பிறர் அனைவரிடமும் காட்டும் அன்பினால் அவர்களின் மதிப்பைப் பெற்று விளங்கும் இப்படிப்பட்ட சிஷ்டர்கள் நம் மதத்தில் தோன்றிக் கொண்டிருக்கும் வரையில் இருள் தானாக விலகி ஒளிவீசிக் கொண்டேயிருக்கும். சுய ஆசைகள் இல்லாமல், சாஸ்திரம் விதித்த பிரகாரம் கர்மாநுஷ்டானம் செய்யத் தொடங்கினால், தன்னால் கட்டுப்பாடு, சித்தசுத்தி முதலிய குணங்கள் உண்டாகி, ஒவ்வொருவரும் உத்கிருஷ்டமான நிலையை அடையலாம். அனைவரும் அடைய முடியவிட்டாலும் தோஷமில்லை. அனைவருமே இப்படி ஒரு முயற்சி செய்தால்தான் லட்சத்தில் ஒருவராவது உண்மை மகானாக உருவாக முடியும். அப்படி ஒரு சிலர் வந்துவிட்டாலும் போதும். அவர்களைப் பார்த்தே ஜனங்கள் நமது வேத தர்மத்தில் பிடிப்புக் கொண்டு விடுவார்கள்.

பூரணத்துவம் அடைந்த புருஷர்களின் வாழ்க்கை உதாரணத்தாலேயே வளர்ந்து வந்த நமது மதம் இனியும் அப்படியே வளர வேண்டும். நாம் மனப்பூர்வமாக இந்த முயற்சி எடுத்தால், பரமேசுவரன் நிச்சயம் கைகொடுப்பார்! நாஸ்திகம் வந்துவிட்டதே என்று பயப்பட வேண்டாம். நம்மை நாமே சோதித்துக் கொண்டு திருந்துவதற்கே ஈசுவரன் இந்த எதிர்ப்புகளை உண்டாக்குகிறான் என்று உணருவோம். இன்றிருப்பதைவிட மகா பெரிய எதிர்ப்புக்கெல்லாம் ஈடுகொடுத்தது நம் ஸநாதன தர்மம். எதிர்ப்புக் காரணமாகவே, ஆஸ்திகர்களிடத்தில் உண்மையான எழுச்சி உண்டாகி, சமயப் பற்று அதிகமாகியிருக்கிறது. புராண காலங்களில் ராக்ஷஸர் எதிர்த்த கதைகள் ஒருபுறமிருக்கட்டும். சரித்திர காலத்தில்கூட அவைதிக மதங்கள் வலுப்பெற்றபோது எங்கிருந்தோ ஒரு சங்கர பகவத்பாதர் வந்தார்; திருஞான சம்பந்தர் வந்தார். ஔரங்கஜேப் தோன்றி ஹிந்து மதத்தை ஒடுக்கப் பார்த்தார். உடனே ஒரு சிவாஜியும் அஹல்யாபாயும் வந்து நம் சமய உணர்வை முன்னைவிட வலுவாக்குகிறார்கள்! எனவே மதம் என்ன ஆகும் என்ற பயம் வேண்டாம். விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பகவானுக்கு ‘பயக்ருத்’ (பயத்தைத் தருபவர்) ‘பயநாசன’, (பயத்தைப் போக்குபவர்) என்று அடுத்தடுத்து நாமங்கள் உள்ளன. நம்மை திருத்துவதற்கே ‘பயக்ருத்’ ஆகிறார். நாம் திருந்த முயன்றோமானால் உடனே ‘பயநாசனன்’ ஆவார்.

இந்த முயற்சியில் இறங்குவோம். மதத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பயப்படாமல், மத விரோதிகளைப் பற்றிக் கோபப்படாமல், சண்டையோ வாதமோ செய்யாமல் அவரவரும் நம் மத விதிகளை நாம் அநுசரித்து நடக்கச் சங்கல்பம் செய்து கொள்வோம். “எங்கள் மதத்தில் இன்னின்ன கர்மங்களையும் தர்மங்களையும் சொல்லியிருக்கிறது” என்று வாதப் பிரதிவாதம் செய்வதோடு திருப்தி அடையாமல், “எங்கள் மதத்தில் சொன்ன கர்மங்களையும் தர்மங்களையும் பூரணமாகச் செய்துகாட்டுகிற சீலர்களை இதோ பாருங்கள்” என்று காட்டக்கூடியவாறு உத்தமப் பிறவிகள் தோன்ற முயற்சி செய்வோம். இவ்வாறு ஒவ்வொருவரும் வேத மதத்தின் அஹிம்ஸா ஸோல்ஜராவதற்கு முயல்வோம். ஸோல்ஜர் தன் தேசத்தின் நிலத்தில் ஒரு அங்குலம்கூட எதிராளிக்கு விடமாட்டான் அல்லவா? அப்படியே நம் சாஸ்திர வழக்கங்களைக் கொஞ்சம்கூட விடாமல் தைரியத்தோடு நம் தர்மத்தை ரக்ஷிக்கப் பிரயாசை எடுப்போம். நாம் அந்தரங்க சுத்தமாக முயற்சி எடுத்தால் ஈசுவரன் நமக்கும் நம் ஸநாதன தர்மத்துக்கும் குறைவு வராமல் அநுக்கிரகிப்பார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is இளைஞர் கடமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is      வையகம் துயர்தீர வழி
Next