சென்ற ஐம்பது வருஷங்களுக்குள் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. விஞ்ஞான, பொருளாதார, அரசியல், சமூக விஷயங்கள் எல்லாவற்றிலும் பெரிய மாறுதல்கள் உண்டாகிவிட்டன. அதற்குமுன் ஐயாயிரம் வருஷங்களில் ஏற்பட்ட மாறுதல்களைவிட இந்த ஐம்பது வருஷ மாறுதல்கள் அதிகம் என்றே சொல்லலாம். இந்த ஐம்பது வருஷ மாறுதல்களிலிருந்து நமக்கு ஏற்பட்ட அநுபவம் மிகப் பெரியது. இவ்வளவு அநுபவங்களினின்றும் ஒரு விஷயம் மாத்திரம் தீர்மானமாகத் தெரிகிறது. மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு பகவானிடத்திலிருந்தும் தர்ம நூல்களினின்றும் விலகுகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்றே கண்கூடாகத் தெரிந்து கொண்டிருக்கிறோம். ஸயன்ஸின் அபரிமித அபிவிருத்திக்குப் பிற்பாடு இன்று சர்வ தேசத்திலும் ஒரு தத்தளிப்பு, நிம்மதியின்மைதானே அதிகரித்திருக்கிறது? ஐம்பது வருஷத்துக்குமுன் சமுதாயத்தில் இருந்த நிச்சிந்தையான, நிம்மதியான, சௌஜன்யமான வாழ்க்கை இப்போது இல்லவே இல்லை என்கிறது தானே மிஞ்சி நிற்கிறது? அறிவுச் சக்தியோ பௌதிக ஆற்றலோ அதிகப்பட அதிகப்பட உலகத்துக்கு ஆபத்தும் அதிகரிக்கிறது என்று நன்றாகத் தெரிகிறது.
சரி, வியாதியைத் தெரிந்து கொண்டோம். இனி மருந்து என்ன? பக்தியும் சாந்தமுமே இவைகளுக்கெல்லாம் உற்ற மருந்து. உண்மை பக்தியும் சாந்தமும் உலகில் பரவப்பரவப் போலீசுக்கும், நீதிமன்றங்களுக்கும், சைன்யங்களுக்கும் வேலை குறையும். இதுதான் முந்தைய ஐயாயிரம் வருஷம் காட்டுகிற உண்மை.
ஆதலால், ஆட்சி மன்றத்தின் முதற்கடமை பக்தியையும் சாந்தத்தையும் பரவச் செய்வதே.
ஆனால் நடப்பது என்ன? ஆட்சி மன்றத்தினரோ தாம் மதச் சார்பற்றவர்கள் என்று தீர்மானித்துக் கொண்டிருக்கிற படியால் பக்திப் பிரசாரம் அத்தீர்மானத்திற்கு மாறுபட்டதாகி விடுமோ என்று சந்தேகித்து, இவ்வழி திருப்பாமலிருக்கிறார்கள். மதச்சார்பின்மை என்றால் ஒரு மதத்தை மட்டும் சாராமல் எல்லா மதங்களையும் வளர்ப்பது என்று வைத்துக் கொள்ளாமல், எந்த மதத்தையுமே வளர்ப்பதில்லை என்று அர்த்தம் பண்ணிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட விளைவு இது. அவ்வப்போது நெறிபோதனை (moral instruction) , மத போதனை (religious instruction) என்றெல்லாம் அரசியல்வாதிகள் பெரிதாகப் பேசி, ஒவ்வொன்றுக்கும் கமிட்டி, கிமிட்டி போட்டு, அதுவும் ஊரெல்லாம் சுற்றி, ஆயிரம் பத்தாயிரம் பக்கம் ‘ரிப்போர்ட்’ சமர்ப்பிக்கிறது. ஆனாலும் கடைசியில் காரியத்தில் ஏதாவது அமல் ஆயிற்றா என்று பார்த்தால் ஸைபர்தான். கலாச்சாரம், பண்பாட்டு வளர்ச்சி என்று செய்கிற காரியங்களும் வெறும் கூத்தும், பாட்டுமாக, வெறும் ‘ஷோ’ வாக முடிந்து போகின்றன.
சர்க்கார் எப்படியிருப்பினும் மக்களில் அறிந்தோருடைய கடமை மக்களுக்கு உண்மையாக நலனைக் கோருவதே; அவர்களை உயர்த்தப் பாடுபடுவதே. மக்களுக்கு உண்மையான நலன், நம்மை விட்டுப் பிரிய முடியாத பேர் உறவினனான ஆண்டவனிடம் அன்பு செலுத்துவதனாலேயே வளரும். பக்தி போனதிலிருந்து க்ஷேமமும் போய்விட்டதென்பதே ஐம்பதாண்டுகளில் நமக்கு ஏற்பட்ட அநுபவத்தின் ஸாரம்.
ஒவ்வொரு ஊரிலும் அநேக சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், குழுக்கள் நிறுவப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிக்கோள் உண்டு. இவை ஒவ்வொன்றும் பற்பல சமயங்களில் மற்றவர்களுடன் முரண்பட்டு ஊரிலும் நாட்டிலும் வெறுப்பு, கசப்பு, புரட்சி முதலியவைகளுக்குக் காரணமாக முடிகிற நிலைக்குக் கொண்டு விடுவதையும் நிறையப் பார்க்கிறோம். ஆதலால் எல்லாக் கசப்பையும் இனிப்பாக மாற்றக்கூடியதும், எல்லாப் புரட்சிகளையும் அன்பாக மாற்றக்கூடியதுமான, ஒரு கழகம் நமக்குத் தேவையாகிறது. பக்தி மார்க்கம் என்னும் வழிபாட்டைப் பரப்பும் கழகங்களே இவை. இந்த வழிபாட்டுக் கழகங்களே இப்போதும், எப்போதும் தேவை. மற்ற எல்லா வாழ்க்கை அம்சங்களையும், மற்ற எல்லாக் கழகங்களையும் சாந்தமுறையில் சீர்படுத்தும் சாதனம் வழிபாட்டுக் கழகங்களே.
எனவே நம் தேசத்திலுள்ள அத்தனை லக்ஷம் கிராமங்களிலும் சாந்தம் பரவ, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வழிபாட்டுக் கழகம் நிறுவ வேண்டும். நாம் எல்லோரும் முனைந்து முயற்சி செய்து ஈசன் அருளைத் துணை கொண்டு, இப்பணியை முடித்தாக வேண்டும். இதனால் நாமும் சீர்ப்பட்டு நாடே அன்பு மயமாகும். நம் ஒரு நாட்டின் உதாரணத்தின் மூலம் உலகமும் சாந்தியாகி, “லோகா: ஸமஸ்தாஸ் ஸுகினோ பவந்து”, “வையகம் துயர் தீர்க்கவே” என்ற நமது வேத நெறியின் சிறப்புக் கொள்கை புத்துயிர் பெற்று நிலவும்; நாம்தான் அப்படி நிலவ வைக்கவேண்டும். இப்பணிக்கே நம் ஆயுளை அர்ப்பணிக்க வேண்டும்.
நவீன விஞ்ஞான வளர்ச்சிகளாலோ, பணவீக்கம் முதலியவைகளாலோ, பரஸ்பர அவநம்பிக்கைகளாலோ ஏற்படக்கூடிய எந்தப் புரட்சியையும் வெகு சாந்தமான முறையில் சமாளிக்கக்கூடிய வழிபாட்டுக் கழகங்களை நிறுவும் பணியில் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு, எஞ்சியிருக்கும் நமது வாழ்நாட்களை இதிலே பயன்படுத்தித் தொண்டு புரிவோமாக! “நம் கடன் பணி செய்து கிடப்பதே!”