படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம்.
இப்போது இருக்கும்படியான லோக வழியில் இதைப் பற்றி யோசிக்கச் சாவகாசம் இல்லை; மந்திரத் தியானமோ, ரூபத் தியானமோ பண்ணுவதற்கான பக்குவம் இல்லை. ஏதாவது ஒரு மந்திரத்தை ஜபிப்பது, ஒரு உருவத்தைத் தியானிப்பது என்ற பழக்கம் மனசுக்கு வருவது கொஞ்சம் சிரமம்தான். ஆனாலும் முதலடி எடுத்து வைக்கத்தான் வேண்டும். நம் மனசுக்கு ஹிதமாக, ரஞ்சகமாக இருந்தால்தான் முதலடியே வைப்போம். அப்படி அத்யாத்ம மார்க்கத்தில் ஹிதமான ஒரு முதலடி இருக்கிறது. அதுவே அம்பிகையின் திருவடி. எவ்வித சிரமுமின்றி எவரும் தேவியினுடைய சரண கமலத்தைத் தியானிக்கத் தொடங்கலாம். அந்தச் சரணார விந்தத்தின் அழகையும் குளிர்ச்சியையும் நினைத்து விட்டால் அதில் தானாக மனசு நிலைத்து நிற்கப் பழகும். இப்படி எப்போதும் உபாஸித்தால் அவளுடைய கடாக்ஷத்தால் ஜனன நிவிருத்தி ஏற்படும். அல்லது முதலில் அவளது மகிமையைச் சொல்லும் துதிகளைப் படிக்கலாம். முதல்படி பாராயணம்; அதற்கப்புறம் ஜபம்; பின்பு தியானம் பண்ணுவது. அப்படி தியானம் பண்ணும் போது, ‘பராசக்தி! இந்த உடம்பிலிருந்து உயிர் போகும் தருணத்தில் நான் உன்னையே தியானம் பண்ணிக்கொண்டு உன்னிடமே மீண்டும் சேர்ந்து விடும்படியாக அநுக்கிரகம் செய்ய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக்கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் அவளுடைய சரணாரவிந்தத்தைப் பிரார்த்தித்து வேண்டிக்கொண்டால், உயிர் போகும் தருணத்திலும் அவனுடைய கடாக்ஷத்தினால் அவளுடைய தியானம் வரும். இந்த உடல் போனபின் இன்னோர் உடல் வராமல் அவளிடம் இரண்டறக் கலந்து சம்ஸாரத்திலிருந்து விடுபட்டுப் பேரானந்த மயமாகி விடலாம்.
தேவியும் குருவும் ஒன்றே. எனவே இருவரது திருவடியும் ஒன்றே. குரு பாதுகையும் தேவி பாதுகையும் ஒன்றே. குரு பாதுகையை சந்திர மண்டலத்தில் தியானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம். அமிருதம் சந்திரனிலிருந்தே பொழிவதாக சாஸ்திரம்.
சூரியன் சுயமான பிரகாசத்தை உடையவனாக இருக்கலாம். நமக்கு அவன் ஒளி கொடுக்கிறான். என்றாலும், அவனால் தாபம் உண்டாகிறது. வேர்க்கிறது; தாகம் எடுக்கிறது. அம்பாளுடைய பிரகாசம் நமக்கு ஒளியும் கொடுக்கிறது. தாபத்தையும் நீக்குகிறது. எனவே அது சந்திரிகையின் ஒளி போல் இருக்கிறது. தாபசாந்தி பண்ணுவது அமிருதம்; அமிருதமாக நமக்குத் தாபத்தை நீக்கி சாந்தியைக் கொடுத்துக் கொண்டு பிரகாசிக்கிறது அம்பிகையின் கடாக்ஷமும் சரணார விந்தமும்.
உஷ்ணப் பிராந்தியத்தில் (Tropics) உள்ள நமது தேசத்தில் இருக்கிறவர்களுக்கு குளிர்ச்சியில் ஒரு பிரீதி. ‘அவன் குளுமையாக இருக்கிறான். குளுமையாகப் பேசினான், இப்போதுதான் என் வயிறு குளிர்ந்தது’ என்று சந்தோஷ விஷயங்களுக்குச் சொல்வோம். மேல் நாட்டவர்களுக்கு இது நேர் மாறாக இருக்கிறது. அவர்களுடைய பிரதேசம் ஒரே குளிர்ச்சியானதால் அவர்களுக்கு உஷ்ணம்தான் ( Warmth) இன்பம் அளிக்கும். அவர்களுக்கு கோல்டு (Cold) என்றால் நம்முடைய எண்ணத்திற்கு நேர் விபரீதமான அர்த்தம். சரியாக வரவேற்காவிட்டால் cold reception என்பார்கள். நிர்த்தாக்ஷண்யமானவனை cold-hearted என்பார்கள்.
நமக்குச் சந்திர கிரணம் மாதிரி தாபத்தை நீக்கிக் குளுமையைக் கொடுத்து ஆனந்தத்தை அளிப்பவள் அம்பிகை. அம்பிகை சந்திர மண்டலத்தில் வாஸம் செய்வதாகப் பல இடங்களில் சொல்லியிருக்கிறது. நமக்கு இன்பம் கொடுக்கிற பெருநிதி அவள்தான். அந்த சாக்ஷாத் பரதேவதையின் சரணத்தைத் தியானம் பண்ணிப் பண்ணி சுத்தமாகி நித்திய க்ஷேமத்தை, ஆனந்தத்தை அடைவோமாக.