மனிதனுக்கு பலவிதமான இச்சைகள், பாசங்கள், ஆசைகள். தன் இச்சையைப் பூர்த்தி செய்து கொள்கிறான்; அதில் பூரித்துப் போகிறான்; ஆனால் இது சாசுவதமான பூர்த்தியா, பூரிப்பா என்றால் இல்லவே இல்லை. இன்னோர் இச்சை அப்புறமும் இன்னொன்று என்று பிரவாகமாக வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இந்த ஓயாத அலைச்சலுக்கு நடுவில் அவ்வப்போது இப்படி ஒரு பூரிப்பும் பெறுகிறான். இது ஒரு விதத்தில் அம்பாள் செய்கிற கிருபை! இன்னொரு விதத்தில் அவளே செய்கிற ஏமாற்று வித்தை!
தான் ஆசையும் பாசமும் வைப்பவர்கள், திருப்பித் தன்னிடம் ஆசையும் பாசமும் வைத்தால் ஒரேடியாகச் சந்தோஷப்படுகிறான். கல்யாணம் பண்ணிக்கொண்டு குழந்தை குட்டிகள் பெற்று இவ்வாறு தன் இச்சை பூர்த்தியானதாக சந்தோஷப்படுகிறான். குழந்தையை இவன் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும்போது அது ‘களுக்’ என்று சிரித்தால், ‘அடடா என்னிடம் குழந்தை எத்தனை ஆசையாக இருக்கிறது?’ என்று ஒரே ஆனந்தம் அடைகிறான். அதை மேலும் அன்போடு கவனத்தோடு வளர்க்கிறான்.
மனிதன், இந்த காம இச்சை, வாத்ஸல்யம் எல்லாம் தன் சுகத்துக்காக என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். அதுதான் இல்லை. பல ஜீவர்கள் மறுபடி பிறவி எடுத்துத் தங்கள் கர்மத்தை அநுபவித்தாக வேண்டும். முடிவாகக் கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷநிலையைப் பெற வேண்டும். அதற்காகத்தான் இவனுக்குக் காமமும் கலியாணமும் சந்ததியும். ஆனால், இவன் தன் இன்பத்துக்கென்று நினைத்து ஆனந்தப் படுகிறான். இப்படியாக மனுஷ்யனை இயற்கை ஏமாற்றுகிறது. இயற்கை என்றால் என்ன? அம்பாள் ஏமாற்றுகிறாள்.
இப்படி மநுஷ்யனை பலவிதத்தில் ஏமாற்றியாகிறது! பலவித வியஞ்சனங்களை ருசித்துச் சாப்பிட்டுவிட்டு இவன் சந்தோஷப்படுகிறானே; உணவு இவனது நாவின் சந்தோஷத்துக்காகவா ஏற்பட்டது? இல்லை. இவன் தன் கர்மாவை அநுபவிப்பதற்கு உடம்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். உடம்பு வளருவதற்கு ஆகாரம் வேண்டும். ஒரே ருசியில் ஆகாரம் இருந்தால் சாப்பிட அலுத்துப் போகும். அதனால் – இயற்கை – அம்பாள் – பலவித ருசிகளைக் காட்டி இவனைச் சாப்பிட வைத்து, இவனை, ‘ருசியாகச் சாப்பிட்டோம்’ என்று சந்தோஷப்படவும் செய்து, இவன் கர்மாவை அநுபவிக்க வசதியாக உடம்பை வளர்க்கிறாள்.
தன் குழந்தையிடம் உள்ள அபிமானம் பக்கத்து வீட்டுக் குழந்தையிடம் இவனுக்கு இல்லை. ‘எனது’; ‘எனது’ என்று இந்தக் குழந்தையிடமே அலாதி வாஞ்சை காட்டிப் பூரித்துப் போகிறான். எல்லாக் குழந்தைகளிடம் இவனுக்கு ஒரே மாதிரியான அபிமானம் இருந்தால், இந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்து குளிப்பாட்டி, உணவூட்டி தூங்க வைத்து, அதற்காகவே உடல், பொருள், ஆவியைச் செலவு செய்து வளர்ப்பானா? அந்த குழந்தை வளர வேண்டும் என்பதற்காகவே அதனிடத்தில் இவனுக்கு விசேஷ அபிமானம் உண்டாகச் செய்திருக்கிறாள் அம்பாள்.
‘ஒரு சரீரம் பிறந்து வளருவதற்காக இவனிடம் கர்மத்தை வைத்து, பிறகு வாத்ஸல்யத்தைத் தந்திருக்கிறாள் அம்பாள். இவனுடைய சரீரம் வளருவதற்காகவே இவனுக்கு ருசி, பசி முதலியனவற்றை அம்பாள் வைத்திருக்கிறாள்’ என்று சொன்னேன். ‘சரி, இப்படி இவன் வாழ்வதாலோ, இவனால் இன்னொரு ஜீவன் பிறந்து வளர்வதாலோ என்ன பிரயோஜனம்? பழைய கர்மத்தை அநுபவிப்பது தவிர இதில் என்ன பயன்? இவனும் ஆத்ம க்ஷேமம் அடையக்காணோம்.பொதுவாக நாம் பார்க்கிற எல்லா ஜன்மாவும் வீணாகத்தானே போகின்றன? ஒவ்வொரு ஜன்மாவும் காம, குரோத, லோப, மோக, மத, மாத்சரியங்களை அதிகப்படுத்தி பாபத்தைப் பெருக்கிக் கொள்வதாகத்தானே ஆகிறது; கர்மத்தைக் கழித்துக்கொண்டு மோக்ஷத்துக்கும் போகிறவர்களாகக் கோடியில் ஒருத்தர் கூடத் தோன்றக் காணோமே!’ என்று சந்தேகம் வரலாம்.
இப்படிச் சந்தேகப்பட வேண்டாம். ஒரு மாமரத்தில் நிறையப் பழங்கள் உண்டாகின்றன. பழம் உண்டாவதன் பயன் அதன் கொட்டையிலிருந்து மீண்டும் ஒரு மரம் தோன்றுவதற்குத்தான். ஆனால் ஒவ்வொரு மாமரத்திலும் உண்டாகிற அத்தனை பழங்களில் உள்ள வித்துக்களும் மரமானால் உலகிலே வேறெதற்குமே இடம் இராதே. ஒரு மரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பழங்களில் ஒரே ஒரு வித்து மரமானால் நாம் திருப்திப்படவில்லையா! பாக்கியெல்லாம் வியர்த்தமாயிற்றே என்றா வருத்தப்படுகிறோம்?
அப்படித்தான் லக்ஷக்கணக்கில், கோடிக்கணக்கில் நாம் இத்தனை பேரும், ஆத்ம க்ஷேமம் பெறாமல் வீணாகப் போனாலும் பரவாயில்லை. நம்மில் யாராவது ஒரு ஆத்மா பூரணத்துவம் பெற்றுவிட்டால் போதும். சிருஷ்டியின் பயன் அதுவே! அந்த ஒரு பூரண ஆத்மா நம் அனைவருக்கும் சக்தி தரும். அப்படிக் கோடானு கோடி ஜீவர்களில் ஒன்று தோன்றவே, இத்தனை காமமும், சஞ்சலமும் இன்ப துன்பமும் வைத்திருக்கிறது. நாம் இத்தனை பேரும் வாழ்வதன் பயனும் அந்த ஒருத்தன் தோன்றுவதுதான்.
உறியடி உத்ஸவத்தில் வழுக்கு மரத்தில் பலர் ஏறி ஏறிச் சறுக்கி விழுவார்கள். கடைசியில் ஒரே ஒருவன் ஏறி விடுகிறான்! அவன் ஒருவன் ஏறுவதற்காகத்தான், அத்தனை பேரையும் அத்தனை பிரயாசைப்படுத்தி விளையாட்டு நடக்கிறது! உலக விளையாட்டும் அப்படியே! நம்மில் பலர் சறுக்கி விழுந்தாலும் ஒருவன் பூரணத்தைப் பிடித்து விட்டால் போதும். எத்தனை முறை சறுக்கினாலும் உறியடியில் திரும்ப திரும்ப முயற்சி செய்தவனைப்போல், நாமும் பூரணத்துவத்தை அடைய முயன்று கொண்டேயிருப்போம். அம்பாள் நம்மில் யாருக்குக் கை கொடுத்து ஏற்ற வேண்டுமா, அவனை ஏற்றி வைப்பாள். அவன் ஒருத்தன் அதற்குப் பிற்பாடு இந்த ஏமாற்று வித்தையிலிருந்து தப்புவதே நம் இத்தனை பேருக்கும் போதும்.