பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முறையே பராசக்தியின் ரஜோ குணம், ஸத்வ குணம், தமோ குணம் இவற்றில் தோன்றிப் படைப்பு, காப்பு, அழிப்பு ஆகிய முத்தொழில்களைச் செய்கின்றனர் என்றேன். ஜீவர்களான நமக்கும் இந்த மூன்று குணங்களும் இருக்கின்றன. நாமும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் மூன்று அவஸ்தை (நிலை) களில் செய்கிறோம்.
தூங்குகிறபோது ஸ்வப்னம் உண்டாகிறதே, அப்போது நாம் சிருஷ்டித் தொழிலைச் செய்கிறோம். கனவில் எத்தனை எத்தனையோ இடங்களையும், ஜனங்களையும் படைத்து விடுகிறோம். அம்பாள் அவளுடைய லீலைக்கு ஒரு பெரிய திருஷ்டாந்தமாகவே ஸ்வப்னத்தை உண்டாக்கியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. மனிதன் வேலை செய்வதற்காக விழித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேலை செய்து களைத்த போது தூங்கவேண்டியதுதான். ஆகையால் ஜாக்ரத் (விழிப்பு) ஸுஷுப்தி (தூக்கம்) என்ற இந்த இரண்டு அவஸ்தைகள் (நிலைகள்) போதாதா? ஸ்வப்னம் (கனவு) என்கிற மூன்றாவது அவஸ்தை எதற்காக இருக்க வேண்டும்? யோசித்துப் பார்த்தால் பராசக்தி பரம கருணையினாலேயே ஸ்வப்னாவஸ்தையை ஒரு பெரிய உதாரணமாக நமக்குத் தந்திருக்கிறாள் என்று தெரிகிறது. லோகத்தில் “வேறு வேறாகக் காண்கிற சமஸ்த ஜீவராசிகளும் ஒரே பராசக்தியின் கற்பனைதான்; வாஸ்தவத்தில் அவளைத் தவிர வேறொன்றும் இல்லை” என்று ஞானிகள் சொல்கிறார்கள். இதை எப்படி நம்புவது? ‘இத்தனை ஜீவராசிகளும் பிரத்யக்ஷமாகக் காணப்படுகிறார்களே, காரியங்களைச் செய்கிறார்களே, இவர்களை எப்படிக் கற்பனை என்று சொல்வது?” என்று தோன்றுகிறது. இந்தச் சந்தேகத்தைப் போக்கவே விழிப்பு, தூக்கம் இரண்டு மட்டுமே போதாது என்று ஸ்வப்னா அவஸ்தையை ஒவ்வொரு ஜீவனுக்கும் அம்பாள் தந்திருக்கிறாள். பராசக்தி ஒருத்தியின் கற்பனையில் நாம் அனைவரும் உண்டானதுபோல், நம் ஒருத்தரின் கற்பனையிலேயே கனவில் பல ஊர்களை, ஜனங்களை, நிகழ்ச்சிகளை ஒவ்வொருவரும் உண்டாக்கி விடுகிறோம். கனவு காண்கிறபோது, இதெல்லாம் கற்பனை என்று தெரிகிறதோ? இல்லை. சத்தியமாகவே தோன்றுகிறது. கனவில் அழுகிறோம்; சிரிக்கிறோம்; என்னன்னவோ செய்கிறோம். ஆனால் ஜாக்ரத் (விழிப்பு) நிலைக்கு வந்தவுடன் என்ன ஆகிறது? அத்தனை காட்சியும், ஊர்களும், ஜனங்களும், சம்பவங்களும் வெறும் கற்பிதமே என்று தெரிகிறது. ஆனால் இந்தக் கற்பனைக்கு ஆதாரமாக ஒருத்தன் இருந்தானே, அந்த ஜீவன் மட்டும் ஸ்வப்னாவஸ்தையிலும் இருந்தான்; இப்போது விழித்த பின்பும் இருக்கிறான். இப்படியே உலகமும் பராசக்தியின் கற்பனையின்றி வேறில்லை; அவள் ஒருத்தியே எக்காலமும் சத்தியமாக இருப்பவள் என்று தெரிகிறது. கனவு காண்கிறபோது, அது கனவு என்று தெரியாததுபோல், இந்த உலக வாழ்க்கையில் நாம் மாட்டிக் கொண்டிருக்கிற வரையில் இந்த வாழ்வு மாயம் என்பதும் தெரியாமலே இருக்கிறது.
ஸ்வப்னத்தை ஆத்ம சோதனை செய்து கொள்வதற்கு ஒரு பரிட்சையாகவும் அம்பாள் வைத்திருக்கிறாள். உள்மனத்தில் அமுக்கி வைத்த எண்ணங்களும், நம்முடைய பூர்வ ஸம்ஸ்காரங்களால் உள்ளுக்குள்ளே தடிப்பேறிப் போயிருக்கிற வாஸனைகளுமே ஸ்வப்னத்தில் ஓரளவுக்கு வெளியாகின்றன. உள்ளுக்குள்ளே நாம் எப்படி இருக்கிறோம், எத்தனை தூரம் பரிசுத்தமாயிருக்கிறோம் என்பது நமக்கே தெரியவில்லை. ஸாது ஜனங்களோடு கோவிலுக்குப் போனால், அப்போது மனசுக்கு ரொம்பவும் சாந்தமாக இருக்கிறது; நாம் மிகவும் சுத்தமாகியிட்டோம் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு விடுகிறோம். உடனேயே இந்திரியங்களைத் தூண்டுகிற சினிமா, இல்லாவிட்டால் நாவலைப் படிக்க நேர்ந்தால், அதிலும் சந்தோஷம் ஏற்படுகிறது. இதைப் பற்றி யோசிக்கிறபோது, ‘அடடா கடைசியில் நாம் இவ்வளவுதானா?’ என்று துக்கம் உண்டாகிறது. வாஸ்தவமாகவே நம் பக்குவத்தின் நிலை என்ன என்று உரைத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளவே அம்பாள் ஸ்வப்னத்தை ஓர் உரைக்கல்லாகத் தந்திருக்கிறாள். கனவில் நாம் காமாதி அநுபவங்களில் மகிழ்கிறோமா, அல்லது காமாக்ஷியின் தரிசனம் கிடைத்தாற்போல் ஸ்வப்னம் வருகிறதோ என்று பார்த்தால் நம் அந்தரங்கம் நமக்கே தெரியும். பூஜை, தியானம், ஜபம் என்று வெளிப்பட நாம் அமர்க்களம் பண்ணலாம். ஆனாலும் ஸ்வப்னத்தில் காமாக்ஷியைத் தரிசிப்பதாக வந்தால்தான் உண்மையாகவே பக்குவமானதாக அர்த்தம். நம் குறை நிறைகளை அறியப் பரீட்சையாகக் கனவை வைத்திருக்கிறாள். குறையிருக்கிறதே என்று புலம்ப வேண்டியதில்லை. நமக்கு உள்ள குறையை உணர்ந்தால்தானே நிறைவை நோக்கிப் போகலாம்? “அம்மா! நான் இன்னமும் இப்படித்தான் இருக்கிறேனா? என்னை மேலும் கை தூக்கி விடு. உன்னை நிஜமாக பக்தி செய்ய அநுக்கிரஹம் பண்ணு” என்று அவளையே நம்பிக்கையோடு வேண்டிக் கொள்ள வேண்டும். நம் பக்குவக் குறையை உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ளவே, அல்லது நிறைவை அறிந்து நிம்மதி பெறவே, கருணையோடு ஸ்வப்னாவஸ்தையை வைத்திருக்கிறாள்.
ஸ்வப்னம் என்பது படைப்புத் தொழிலைக் காட்டுகிறது. அப்போது நாம் பிரம்மா மாதிரி சிருஷ்டி செய்கிறோம். ஜாக்ரத் என்கிற விழிப்பு நிலையில், நம்மையும் நம்மைச் சேர்ந்தவர்களும் ரக்ஷித்துக் கொள்வதற்காக காரியங்களைச் செய்கிறோம். இது விஷ்ணுவின் பரிபாலனம் மாதிரி, ஸுஷுப்தி எனப்படும் தூக்கத்தில் நம் இந்திரியங்கள், மனசு எல்லாம் அழிந்து போனதுபோல், எந்த வேலையும் செய்யாமல் ஒய்ந்து போய்விடுகின்றன. இது ருத்திரனின் கிருத்தியமான சம்ஹாரம் போன்ற நிலை. அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என்பார்கள். அம்பாளுடைய சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகியன ஒவ்வொரு ஜீவனிடத்திலும் இருக்கின்றன. ஆனால், அவள் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவள் மட்டுமல்ல. இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டிருக்கிற நாலாவதான துரீய வஸ்துவே அவள். அந்த நிலை எப்படி இருக்கும். ஒரு கற்கண்டு கட்டியை உடைத்து எந்தப் பொடியை வாயில் போட்டுக் கொண்டாலும் எப்படித் தித்திக்குமோ, அதுபோல் ஆனந்தத்தைத் தவிர வேறெதுவுமே இல்லாத நிலைதான் அந்தத் துரீயம். ஆனந்தாநுபவம் என்கிற ரஸமொன்றே இறுகி இருக்கிற அந்த நிலையை ரஸனம் என்று சொல்வார்கள்.
சிருஷ்டியிலும் ஸ்திதியிலும் நிறைவான, நிரந்தரமான ஆனந்தம் இல்லை. சம்ஹாரத்தில் எந்த அலைச்சலும் இல்லாத ஆனந்தம் இருந்தாலும், ‘ஆனந்தமாக இருக்கிறோம்’ என்ற பிரக்ஞை இல்லை – இதுவும் பிரயோஜனமில்லை. துரீயத்தில்தான் இந்த மூன்றுமே அடிபட்டுப்போய் இவற்றுக்கு ஆதாரமான ஒரே சத்தியம் மட்டும் ஆனந்த ஸ்வரூபமாகப் பூரணப் பிரக்ஞையுடன் பிரகாசிக்கிறது. அந்த ஒன்றுதான் மாயையால் இந்த மூன்றாகவும் தெரிந்தது. மாயை போனால், மூன்றும் போய்விடும். துரீயமான ஒன்று மட்டுமே நிற்கும். ஜீவனை இந்த மூன்றின் கட்டிலிருந்து, மாயா பந்தத்திலிருந்து அம்பாள் விடுவித்தால் அந்த ஆனந்தத்தை அநுபவிக்கலாம். இந்த உலக மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கும்போதே பரீட்சையில் பாஸ் பண்ணுவது, உத்தியோகத்தில் பிரமோஷன் பெறுவது, வியாதி வந்தால் குணமாவது இதற்கெல்லாம் பிரார்த்தனை செய்கிறோம். நம் பிரார்த்தனை நிறைவேறி விட்டால் “ஸ்வாமி அநுக்கிரஹம் செய்து விட்டார்” என்று சொல்கிறோம். ஆனால், பராசக்தியின் பஞ்ச கிருத்தியங்களை (ஐந்தொழில்கள்) எடுத்துக் கொள்ளும்போது ‘அநுக்கிரம்’ என்றால், அது மாயா லோகத்திலிருந்து நம்மை விடுவித்து நம்முடைய ஆத்ம ஸ்வரூபமான மோக்ஷ நிலையில் சேர்ப்பிக்கிறதைத்தான் குறிக்கும். லலிதா ஸஹஸ்ரநாமமும் “பிரம்மாவாக உலகைப் படைக்கிறாய், விஷ்ணுவாகக் காக்கிறாய், ருத்திரனாக ஸம்ஹரிக்கிறாய், மஹேஷ்வர சக்தியாக மாயை ஆகிறாய், ஸதாசிவ ஸ்வரூபமாக அநுக்கிரஹத்தை செய்கிறாய்’ என்று ஐந்தொழில்களைச் சொல்கிறது:
ஸ்ருஷ்டிகர்திரீ – ப்ரம்மரூபா; கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ; ஸம்ஹாரிணி – ருத்ரரூபா; திரோதானகரி – ஈச்வரி; ஸதாசிவா – அநுக்ரஹதா; பஞ்ச க்ருத்ய பராயணா.
ஜீவன் விஷயத்தில் கனவு, விழிப்பு, உறக்கம் இவையே சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்றேன். இங்கேயும் துரீயம் இருக்கிறது. குடை ராட்டினத்தில் சுற்றுகிற மாதிரி விழிப்பிலும், கனவிலும், தூக்கத்திலும், மாயைக்குள் சுற்றி சுற்றி வருகிறோம். சிலர் இந்த குடை ராட்டினத்தில் யானை மேல் இருக்கிறோம்; சிலர் குதிரை மேல் இருக்கிறோம்; சிலர் சிங்கத்தின் மேல் இருக்கிறோம்; ஆனால், எதுவானாலும் இந்தக் குடை ராட்டின வட்டத்தை விட்டு அப்பால் சவாரி செய்ய முடியாது. அதாவது, மாயைக்குள்ளேயேதான் நம் பெருமை, சிறுமை எல்லாம் சுழன்று சுழன்று வருகின்றன. அதைக் கடந்து போக முடியவில்லை. குடைராட்டினத்துக்கு அப்பால் அதில் உள்ள மிருக மொம்மைகள் போக முடியாதே; இருக்கிற இடத்திலேயே சுற்ற வேண்டியதுதான். சுற்றி வரும்போது எத்தனை சந்தோஷமாக இருந்தாலும், அது பிறகு அலுத்துத்தான் போகிறது. இந்தச் சலிப்புத் தீரத் தூக்கத்தை ஒரு மருந்தாகத் தந்து ஒய்வு கொடுக்கிறாள் அம்பிகை. இதுவும் மாயை வட்டத்துக்குட்பட்டதுதான். குடை ராட்டினப் பொம்மை மீதே தலை சுற்றி மயங்கிச் சாய்கிற மாதிரிதான் தூக்கம். ராட்டினத்தை விட்டு இப்போதும் இறங்கினபாடாக இல்லை. இந்தத் தூக்கத்துக்கு அப்பால்தான் மூன்று நிலைகளுக்கும் ஆதாரமான துரீயம் இருக்கிறது. நாம் தூங்குகிறபோதும், எதுவோ ஒன்று நமக்குள் தூங்காமல் விழித்துக் கொண்டு உயிரை இயக்குகிறது அல்லவா? அதுதான் துரீயம். குடை ராட்டின வட்டத்துக்கு அப்பாற்பட்ட சத்தியம் அதுவே. அதுவே அம்பாள்.
அம்பிகையை மாயை, மாயை என்றே பொதுவாகச் சொல்வார்கள். மூகரும், காமாக்ஷியிடம், “ஹே மகா மாயையே! உன் துளிர்போல் சிவந்த பாதங்களில் லயித்துப் போகிறேன்” என்கிறார்.
“லீயே புரஹரஜாயே மாயே தவ தருண பல்லவச் சாயே சரணே”
மாயையில் லயிப்பதாகச் சொன்னாலும், மாயைக்கு அதீதமான துரீயானந்தத்தில் இரண்டறக் கலப்பதாகத்தான் இங்கே அர்த்தம். மாயையாகிற காமாக்ஷிதான் அதை நீக்குகிற அநுக்கிரஹ மூர்த்தியும் ஆவாள். எவள் மறைக்கிறாளோ அவள்தானே மறைப்பை எடுக்கவும் முடியும்?