படைப்பு, காப்பு, அழிப்பு மூன்றுக்கும் ஆதாரமாக இருப்பது ஒரு பராசக்தி. இம் மூன்றைக் கடந்தபின் நாலாவதாக உள்ள துரீயத்தையே சதுர்த்தம் என்றும், சிவம் என்றும் அத்வைதம் என்றும் சாந்தம் என்றும் மாண்டூக்ய உபநிஷத் சொல்கிறது. அதையே பிரம்மம் என்கிறோம்.
அதைத் தவிர இரண்டாவதாக வேறெதுவும் இல்லாததால் அது அத்வைதம். அப்போது அதற்கு நிறமும் இல்லை; சுத்த ஸ்படிகமாக இருக்கிறது. ஸ்படிகமான இந்தச் சிவ ஸ்வரூபம்தான் செக்கச் சிவந்த காமேசுவரியாக, காமாக்ஷியாக இருக்கிறது. ஏகமாக இருந்த ஒன்று பலவாகத் தோன்றுகிற சக்தியாகும்போது காமேசுவரியாகிறது. பலவாகத் தோன்றுவதோடு, அவற்றை எல்லாம் ரக்ஷிக்கிற பரமகாருண்யமுள்ள மாதாவாகவும் அது இருக்கிறது. பலவாகத் தோன்றுகிற ஜகத்தையே ஜீவர்கள் சத்தியமாக நினைத்து மயங்க வைக்கிற மாயையும் அதுதான். இந்த மாயையிலிருந்து ஜீவர்களை விடுவித்து ஏகமான அத்வைத ஸ்வரூபத்தில் கரைக்கிற ஞானாம்பிகையாகவும் அதுவே இருக்கிறது. அதன் மகிமை இப்படி நம்மால் புரிந்து கொள்ள முடியாதபடி பல தினுசாக இருக்கிறது.
பிரம்மம் துரீயம் என்றால், சாக்ஷாத் அந்த பிரம்மத்தின் சக்தியான காமாக்ஷியும் துரீய வஸ்துவாகத்தான் இருக்கிறாள். ‘துரீயா காபித்வம்’ என்று ஆதி சங்கராச்சாரியாள் அவளையே ‘ஸெளந்தர்ய லஹரி’யில் சொல்கிறார். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் இவற்றுக்கு அப்பாற்பட்டு செயலற்று இருப்பது பிரம்மமான சிவஸ்வரூபம். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் இவை மூன்றையுமே செய்வித்துக் கொண்டும், அவற்றால் பாதிக்கப்படாமல், அவற்றைக் கடந்து அதீதமாக நிற்பது பராசக்தியான காமேசுவரி. இந்த மூன்று தொழிலும் அவளுடைய மாயை. இந்த மாயையால்தான் அகில சராசரங்களையும் ஆட்டி வைக்கிறாள். மஹா மாயா விச்வம் ப்ரமயஸி’ என்கிறார் ஸெளந்தர்ய லஹரியில். மஹா மாயையானாலும் உண்மையில் அவளே
‘பரப்ரம்ம மஹிஷி’
சாக்ஷாத் பிரம்மத்தின் பட்டமகிஷி என்கிறார்.
தன்னைத் தவிர, வேறில்லாத பிரம்மத்துக்கு எப்படிப் பத்தினி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. பிரம்மத்திலிருந்துதானே இத்தனை தோற்றங்களும் வந்திருக்கின்றன? ஏதோ ஒரு சக்தியால்தானே அசலமான பிரம்மம் அசைந்து கொடுத்தது மாதிரி இத்தனையும் தோன்றிவிட்டன? அந்தச் சக்திதான் பிரம்மத்தின் பத்தினியான ‘காமேசுவரி’ எனப்படுகிறது. அன்பே உருவான, ஒரு பெற்ற தாயாருக்கு மேலாக அந்தப் பராசக்தி அநுக்கிரஹம் செய்வதைப் பிரத்தியக்ஷமாக அநுபவித்த மகான்கள் அதைக் காமேசுவரியாக வர்ணிக்கிறார்கள்.
பிரம்மாவின் பத்தினி என்று வாக்தேவியைச் சொல்கிறார்கள். பிரம்மா உலகைச் சிருஷ்டிப்பதுபோல், கவிகளுக்குக் கற்பனா சிருஷ்டி சக்தியைத் தருகிறவள் ஸரஸ்வதி. செல்வத்தைத் தருகிற மஹாலக்ஷ்மியை லோகபாலகனான மஹாவிஷ்ணுவின் சக்தியாகச் சொல்வதும் சரி. சம்ஹார மூர்த்தியான ருத்திரனின் சக்தியாக இருக்கிறாள் பார்வதி. இந்த மூன்று காரியங்களுக்கும் மேலே இருக்கிறாளே, பராசக்தியான காமாக்ஷி! இவளை யாருடைய பத்தினி என்று சொல்வது? பரப்பிரம்ம பத்தினி என்றே சொல்ல வேண்டும். குணமும் கிரியையும் இல்லாத சாந்த மயமான பிரம்ம பத்தினியாகவும் இருக்கிறாள் – லோகத்தை எல்லாக் குணங்களிலும், பல கிரியைகளிலும் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிற மஹா மாயையாகவும் இருக்கிறாள். “இந்த மஹிமைக்கு எல்லை காட்ட முடியாது (நிஸ்ஸீமம்) அது இன்னதென்று புரிந்து கொள்ளவும் முடியாது (துரதிகமம்)” என்று ஆசாரியாள் ஸெளந்தர்ய லஹரியயில் அம்பாளுடைய பெருமையைச் சொல்கிறார்.
எல்லாவற்றையும் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிற அந்தச் சக்தியில் கரைந்தால் எப்படி ஆட்டமே இல்லாத ஆனந்தமும், சாந்தமும் உண்டாக முடியும் என்று தோன்றுகிறது. யோசித்துப் பார்த்தால் அது எப்போதும் சாந்தமாகவும், ஆனந்த ஸ்வரூபமாகவும் இருப்பதால்தான் எல்லாவற்றையும் ஆட்டிப் படைத்திருக்கிறது என்று தெரியும். ஜீவனும் கனவு, விழிப்பு, தூக்கம் இவற்றில் சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் இவற்றைச் செய்கிறான் என்று முன்னே சொன்னேன் அல்லவா? இவன் தூங்குகிற போதும் தூங்காமல் இவனுக்குள்ளேயே ஒரு சக்தி இருக்கிறதல்லவா? அது இருப்பதால்தானே இவன் மறுநாள் காலை விழித்துக் கொள்கிறான்? இந்த நான்காவதான துரீய வஸ்து ஒரே அமைதி மயமாகத்தானே இருக்கிறது? தூங்குகிற போது துக்கக் கலப்பே இல்லாத சாந்தம் தானே இருக்கிறது? ஆனால் இத்தனை சாந்தமான அந்த வஸ்து உடம்பை விட்டுப் போய் விட்டால் இவனுடைய ஆட்டபாட்டம் எல்லாம் ஓய்ந்து போகின்றனவே! எனவே ஆட்டபாட்டங்களுக்கெல்லாம் ஆதாரமாக எந்த ஒன்று இருக்கிறதோ, அது ஆடாமலே சாந்தமாகத்தான் இருக்கிறது என்று தெரிகிறதல்லவா?
இப்படியே பிராணாதாரமாகவும், லோகங்களுக்கெல்லாம் ஆதாரமாகவும் இருக்கிற பராசக்தி பரம சாந்தமாகவே இருக்கிறாள். அவளிடம் பக்திவைத்து நம்மை அவளுக்குள் கரைத்துக் கொண்டால் பரம சாந்தியைப் பெறுவோம்.
காலத்தின் போக்கில் மனிதன் மாறுகிறான்; ஜீவராசிகள் மாறுகின்றன; மரம் செடி, கொடி எல்லாம் மாறுகின்றன; லோகங்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள் எல்லாம் மாறுகின்றன. இத்தனைக்கும், ஆதாரமான பிரம்மம்தான் மாறாமலே இருக்கிறது. எக்காலமும் ஒரேபோல் இருக்கிற பிரம்மமாகிற சத்தியத்தையே ‘ஸத்’ என்கிறோம்.
ஒன்று இருந்தால் மட்டும் பிரயோஜனம் இல்லை. தான் இருக்கிறோம் என்று அறிந்தால்தான் பிரயோஜனம் உண்டு. தான் உள்ளதாகவே உணராத ஒன்று இருந்தும் இல்லாதது மாதிரிதான். ‘ஸத்’ தாகிய பிரம்மத்துக்கு, தான் இருப்பதாக அறிவு இருப்பதால்தான் தன் சக்தியை இத்தனை தோற்றங்களாகக் காட்ட முடிகிறது. இப்படியாக ‘ஸத்’ தன்னைத்தானே அறிந்துகொள்வதைத்தான் ‘சித்’ என்கிறோம். ஞானம் என்றும் அறிவு என்றும் சொல்வது அதைத்தான். ‘ஸத்’ என்பது ஈசுவரன். ‘சித்’என்பதே அம்பிகை. தன்னையே அறிந்து கொள்ளும்போதுதான் ஆனந்தம் என்கிற உணர்வு உண்டாகிறது. ஈசுவரனும் அம்பாளும் – காமேசுவரனும் காமாக்ஷியும் சேர்ந்து – ‘ஸத்சித்’ஆனந்த பிரம்மமாக இருக்கிறார்கள்.
பிரம்மத்தையும் பிரம்ம சக்தியையும் பிரிக்க முடியாது. பாலும் வெண்மையும், புஷ்பமும் அதன் சுகந்தமும், தேனும் மாதுரியமும், அக்னியும் பிரகாசமும் போல் ஈசுவரனும் அம்பாளும் பிரிக்கவொண்ணாமல் அபின்னமாக இருப்பவர்கள். இதனால்தான், அர்த்தநாரீசுவரராகச் சொல்கிறோம். ஒரே ஸ்வரூபத்தில் ஈசுவரன் ஒரு பாதி, அம்பாள் மறு பாதி.
‘ஆனால் இதுவும்கூட முழுக்கச் சரியில்லை போலிருக்கிறதே!’ என்கிற மாதிரி ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோகம் ஒன்றில் (த்வயா ஹ்ருத்வா வாமம்) என்று சொல்கிறார்:
“அம்பிகே! நிர்குணப் பிரம்மம் தனக்கென்று எந்த வர்ணமும் இல்லாத ஸ்படிக ஈசுவரனாக இருக்கிறது. அதில் இடப்பக்கத்தை நீ திருடிக் கொண்டாயாம். அப்படிப் பார்த்தாலும் உனக்கு ஒரு பாதி உடம்புதானே இருக்க வேண்டும்? ஆனால் பதியின் பாதி சரீரத்தைதத் திருடிக் கொண்டதிலும் உனக்குத் திருப்தி உண்டாவில்லை. பாக்கி பாதி தேகத்தையும் நீயே ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதாகக் காண்கிறது. அதனால்தான் பூரண ஸ்வரூபமாகச் செக்கச் செவேலென்று காமேசுவரியாக இருக்கிறாய். பரமேசுவரனுக்கு உரிய நெற்றிக்கண், சந்திர கலை எல்லாவற்றையும் நீயே ச்வீகாரம் செய்து கொண்டு விட்டாய்!” என்கிறார்.
செயலற்ற பிரம்மம் அநுக்கிரஹம் செய்வதற்கென்றே பூரண ரூபமும் கொண்டுவிட்டது என்பதை இப்படிச் சொல்கிறார் போலிருக்கிறது.
‘கதாஸ்தே மஞ்சத்வம்’ என்று ஆரம்பமாகும் சுலோகத்தில், அம்பாள் ஐந்தொழிலும் செய்வதாகச் சொல்லும்போது, “பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் (மாயைக்கு அதிபதியான) ஈசுவரன் இவர்களைக் கட்டில் கால்களாகக் கொண்ட மஞ்சத்தின் மீது நீ பிரம்ம ஸ்வரூபமான காமேசுவரனோடு அநுக்கிரஹ ரூபிணியாக, காமேசுவரியாக விளங்குகிறாய். ஆனாலும் அந்தக் காமேசுவரன் ஒருத்தன் தனியாக இருப்பதே தெரியவில்லை. உன்னுடைய ஜோதிச் சிவப்பு அவனுடைய ஸ்படிக நிறத்திலும் பளீரென்று வீசி, அவனையும் ஒரே சிவப்பாக்கி சிருங்கார ரஸத்தின் வடிவமாக்கிவிட்டது” என்கிறார். காமாக்ஷியின் அநுக்கிரஹ சக்தி அத்தனை வலுவானது!
முதலில் சொன்ன சுலோகப்படி அம்பாளுக்கும் முக்கண் உண்டு; சிரஸில் சந்திரகலை உண்டு; நெற்றிக் கண் அக்னி வடிவானது; வலக்கண் சூரிய வடிவம்; இடக்கண் சந்திர வடிவம். உலகத்தை வாழ்விக்கிற மூன்று ஜோதிகளும் பராசக்தியிடமிருந்து வந்தவை. இதைக் கவித்வ அழகோடு ஸெளந்தர்ய லஹரியின் இன்னொரு சுலோகம் சொல்கிறது. அது, ‘உன் வலது கண் பகலைப் படைக்கிறது. இடது கண் இரவைப் படைக்கிறது. இரண்டுக்கும் நடுவே உள்ள நெற்றிக் கண் சந்தியா காலத்தைப் படைக்கிறது. அதனால்தான் அது சிவந்து விளங்குகிறது’ என்கிறது. காலஸ்வரூபிணி அவளே என்பது இதன் தாத்பரியம்.
காமாக்ஷி தன் சிரஸில் சந்திரகலை வைத்துக்கொண்டிருப்பதை மூகரும் தமது ‘பஞ்ச சதீ’யில் சொல்கிறார். மூகபஞ்சதீயில் முதலில், ‘ஆர்யா சதகம்’ என்று நூறு சுலோகங்கள் இருக்கின்றன. இந்த சுலோகங்களின் விருத்தத்துக்கு ‘ஆர்யா’ என்று பேர். ஸ்தோத்திரிக்கப்படும் அம்பாளும் ஆர்யா. அதாவது, பரம உத்தமமானவள். இரண்டு விதத்திலும் இதற்கு ‘ஆர்யா சதகம்’ என்ற பெயர் பொருந்தியிருக்கிறது. இதில் ‘ஐசுவரியம் இந்துமௌளே’ என்கிற ஸ்லோகத்தில் இவ்விஷயத்தை சொல்லுகிறார். ‘இந்துமௌளி எனப்படும் சந்திரசேகரின் ஐசுவரியமே நீதான் அம்மா’ என்கிறார். ஈசுவரனின் தன்மை எதுவோ அதுவே ‘ஐச்வரியம்’. ஈசுவரனுக்கே ஈசுவரத் தன்மை பராசக்தியால்தான் வந்தது என்கிறார். ஸெளந்தர்ய லஹரியில் முதல் சுலோகமும் இதையேதான், ‘அம்பிகையின் சக்தி இல்லாவிட்டால் சிவன் அசைந்து கொடுக்கக்கூட முடியாது’ என்கிறது. பரமேசுவரன் தன்னைத் தானே அறிந்து கொள்கிற அறிவாகிய அசைவு அவள்தான். எங்கும் நிறைந்திருக்கிற அந்தப் பரமேசுவர தத்துவம் அவள் கிருபை இருந்தால்தான் நமக்கும் தெரியும்.
இவளால்தான் அவனை அவனே அறிய முடியும். அதே சமயத்தில் அவன்தான் அவளுக்கு ஆதாரமாக இருக்கிறான். ‘பிரகிருதி’ என்கிற இவள் இயற்கையாக இருக்கிறாள்; அது ஜடம்போலத் தோன்றுகிறது; அதற்கு உயிராக அவனே புருஷனாக இருக்கிறான். பிரகிருதியை மாயை என்றும், ஈசுவரனை மாயி என்றும் சொல்வார்கள். ஈசுவரனின் செல்வமான காமாக்ஷி, ‘பிரகிருதியோடு ஒன்றாகக் கரைந்து காஞ்சிபுரத்தின் மத்தியில் சந்திரப் பிஞ்சைச் சிரஸில் சூட்டிக்கொண்டு, வேதங்களின் பரம தாத்பரியமாகப் பிரகாசிக்கிறது’ என்கிறார் ஸ்ரீ மூகர். “ஐந்தவ கிசோர சேகரம்” – குழந்தையான பிறைமதியைச் சிரஸில் உடையது – என்று வெகு லலிதமான வாக்கினால் சொல்கிறார். ‘முற்றா வெண்திங்கள்’ என்று ஞானசம்பந்தக் குழந்தை சொன்னது போலவே!
அம்பாளைப் பிரகிருதி, மாயை என்று சொன்னதோடு நிற்கவில்லை. புருஷன் அல்லது மாயையின் சக்தியும் இதே காமாக்ஷிதான். அவனோடு அபேதமாக, அபின்னமாக இருக்கப்பட்ட வஸ்து இவள். இருவரும் ஒன்றே; அத்வைதமாக இருக்கிறார்கள். வேதங்களின் பரம தாத்பரியம் அத்வைதம். அந்த அத்வைதத்தின் ரூபமாகவே காஞ்சிபுரத்தில் காமாக்ஷி பிரகாசிக்கிறாளாம்! ‘ஐதம்பரியம் சகாஸ்தி நிகமானாம்’ என்கிறார் மூகர்.
மாதா ஸ்வரூபம் என்று அருகில் போகிறோம். பார்த்தால் பிதாவுக்கு உண்டான நெற்றிக்கண், சந்திரகலை எல்லாமும் இங்கே இருக்கின்றன. சிறந்த பதிவிரதையாக இருந்து, அந்தப் பதிவிரத்தியத்தாலேயே ஈசுவரனின் பாதி சரீரத்தை இவள் பெற்றதாகச் சொன்னாலும், இப்போது பார்க்கும் போது, இவள் சிவஸ்ரூபத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி, முழுவதும் தானே ஆகிவிட்டாள் என்று, ஸெளந்தர்ய லஹரி சொல்கிறது.
பக்தியின் ஸ்வாதீனமும், கவித்த கல்பனா சுதந்திரமும் கொண்டு இப்படியெல்லாம் ஆசார்யாள், மூகர் போன்றவர்கள் துதிக்கிறார்கள். மொத்தத்தில் தாத்பரியம் அவள் பூரண பிரம்மசக்தி, அவளுக்கும் பரமாத்மாவான பரமேசுவரனுக்கும் லவலேசம்கூட பேதம் இல்லை என்பதே.
பரமேசுவரனின் சரீரத்தை இவள் திருடியதாக ஆசார்யார் சொல்கிறார் என்றால், அப்பைய தீக்ஷிதர் வம்சத்தில் வந்த மகனாகிய நீலகண்டதீக்ஷிதரோ அம்பாளுடைய கீர்த்தியைத்தான் ஈசுவரன் தஸ்கரம் செய்து கொண்டுவிட்டான் (திருடிவிட்டான்) என்று குற்றப் பத்திரிக்கை படிக்கிறார்! பரமேசுவரன், ‘காமனைக் கண்ணால் எரித்தவராம்; காலனைக் காலால் உதைத்தவராம்’ என்று லோகம் முழுக்கப் பிரக்யாதி பெற்றுவிட்டார். “ஆனால் அம்மா, காமனை எரித்த நெற்றிக் கண்ணில் பாதி உன்னுடையதல்லவா? அதுவாவது தொலையட்டும். இந்த வெற்றியில் பாதி சிவனுக்குச் சேரும். ஆனால் காலனைக் காலால் உதைத்து வதைத்த புகழ் அவரை அடியோடு சேரவே கூடாது. ஏனென்றால் இடது காலல்லவா அவனை உதைத்தது. அது முழுக்க உன்னுடையதுதானே?” என்கிறார். காமாக்ஷியின் கடாக்ஷம் துளி விழுந்துவிட்டால் நாம் காமத்தை வென்று விடலாம். காலத்தையும் வென்று அமர நிலையை அடைந்து விடலாம் என்று அர்த்தம்.
அவளுடைய பெருமை நம் புத்திக்கும் வாக்குக்கும் எட்டாதது. அசலமான சிவத்தையே சலனம் செய்விக்கிற சக்தி அது. அவளுடைய க்ஷணநேரப் புருவ அசைப்பை அக்ஞையாகக் கொண்டு பிரம்மாவும், விஷ்ணுவும், ருத்திரனும், ஈசுவரனும், ஸதாசிவனும் பஞ்சகிருத்தியங்களைச் செய்கிறார்கள் என்கிறது “ஸெளந்தர்ய லஹரி” (ஜகத் ஸுதேதாதா). பிரம்ம, விஷ்ணு, ருத்திரர்கள்தான் சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் செய்பவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். இந்த முத்தொழிலோடு மாயை என்கிற மறைப்பு மாயையைப் போக்குகிற ஞானம் என்ற அநுக்கிரகம் இவற்றைச் சேர்த்துக் கொண்டு பஞ்சகிருத்யம் என்னும்போது, மறைப்பான திரோதானத்தைச் செய்கிறவன் ஈசுவரன்; அநுக்கிரகம் செய்பவன் ஸதாசிவன். இந்த தொழில்கள் எல்லாமே பராசக்தியின் ஏவலின்படி நடக்கிறவைதான். இந்த ஐந்து மூர்த்திகளை ஐந்து ஆபீஸர்களாக வைத்துக் காரியம் நடத்தும் எஜமானி அம்பாள்தான். அவர்கள் தங்கள் இஷ்டப்படி தொழிலாற்ற முடியாது. அவர்களுடைய சக்தி எல்லாமும் பராசக்தியான இவளிடமிருந்து பெற்றதுதான். “உன் பாதத்தில் அர்ச்சித்து விட்டால்போதும். அதுவே மும்மூர்த்திகளின் சிரசிலும் அர்ச்சனை செய்ததாகும்; ஏனென்றால் திரிமூர்த்திகளின் சிரசங்களும் எப்போதும் உன் பாதத்திலேயே வணங்கிக் கிடக்கின்றன” என்கிறது ஸெளந்தர்ய லஹரியில் இன்னொரு ஸ்லோகம் (த்ரயாணாம் தேவானாம்). மும்மூர்த்திகளும் அந்த சரணார விந்தங்களில் தங்கள் தலையை வைத்து, தலை மீது கைகளை மொட்டுக்கள் மாதிரி குவித்து அஞ்சலி செய்கிறார்கள். நாம் புஷ்பம் போடுவது அம்பாளின் பாதமலர்களிலிருந்து மட்டுமல்லாமல் திரிமூர்த்திகளின் கரங்களான மொட்டுகளுக்கும் அர்ச்சனை ஆகிறது. சகல தேவ சக்திகளையும் பிறப்பித்த பராசக்தி ஒருத்திக்குச் செய்கிற ஆராதனையே, எல்லாத் தெய்வங்களுக்கும் செய்ததாகிறது என்கிறது உட்பொருள்.
அம்பாளின் மகிமையை ஸெளந்தர்ய லஹரியில் ஆசாரியாள் சொல்கிறார்: “அம்மா, ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை உடைய வாஸஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுகளையும் தாண்டியிருக்கிற வாசலில்தான் மகா பெரிய இந்திராதி தேவர்களும் காத்துக்கிடக்கிறார்கள். அந்த வெளி வாசலில் காவல் செய்கிற அணிமா முதலிய ஸித்திகளே இந்த இந்திராதி தேவர்களுக்கு அஷ்டமகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் (புராராதே: அந்த: புரமஸி)
இந்த ஒன்பது கட்டு அரண்மனைதான் ஸ்ரீ சக்கரம் என்கிற அம்பாள் இயந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி திவ்விய மங்கள் ஸ்வரூபத்துடன் அவயங்களோடு காமேசுவரியாக வந்த மாதிரி இந்த எந்திர ரூபத்திலும் இருக்கிறாள். பார்த்தால் ஏதோ கோடுகளும், கோணங்களுமாகத் தெரியும். ஆனால் இது அம்பாள் உருவமே. சில சப்தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதால் அவற்றை ‘மந்திரம்’ என்கிறோம். இப்படியே சிலவிதமான கோடுகள் கோணங்களைக் கொண்ட சித்திரங்களுக்கு (DIAGRAM) தெய்வீகமான சக்தி உண்டு. இவற்றை ‘யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பலரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு; காமேசுவரி அல்லது காமாக்ஷி என்கிற லலிதையாக உள்ளபோது, அவளுடைய மந்திரம் ஸ்ரீ வித்யா; யந்திரம் ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றின் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி ஸாக்ஷாத் பராசக்தி. மற்ற ஆவரணங்கள் இதைச் சுற்றி சுற்றி உள்ள கோட்டைகள் மாதிரி. சிருஷ்டி முழுவதும் பிறந்த மூல முக்கோணமான அந்தப்புரத்தில் பரப்பிரம்மமாகிற காமேசுவரனோடு சேர்ந்து காமோசுவரியாக இருக்கிறாள் பராசக்தியான காமாக்ஷி. அவளே பூரண சக்தி. வெளியில் ஒன்பது ஆவரணங்களிலும் சுற்றி சுற்றிப் பல்வேறு தேவதைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பராசக்தியின் அம்சங்கள். இவர்களுக்கும் ஒவ்வொருவித சக்தி உண்டு. எல்லாவற்றுக்கும் வெளியே உள்ள ஆவரணத்தில் அணிமா முதலிய எட்டு தேவதைகள் காவல் இருக்கிறார்கள்.
ஸித்தர்கள் என்று சிலரைச் சொல்கிறோம். அவர்கள் இயற்கைக்கு அதீதமான அற்புதங்களைச் செய்கிறார்கள். இப்படி அற்புதம் செய்கிற ஸித்திகளை அணிமா முதலிய எட்டு தேவதைகள் அநுக்கிரகம் செய்கிறார்கள். இவற்றை “அணிமாதி ஸித்தி” என்பார்கள். தன் சரீரத்தை அணு மாதிரி சின்னதாக்கிக் கொள்கிற ஸித்தி ‘அணிமா’: எத்தனை மகா பெரிய ரூபமும் எடுப்பது ‘மஹிமா ஸித்தி’: பஞ்சைவிட லேசாகி லகுவாகப் பறப்பதற்கு ‘லகிமா’ என்று பேர். ‘ப்ராப்தி’ என்கிற ஸித்தி ஒருத்தருக்கு ‘ப்ராப்தி’யானால் அவர்தான் நினைத்த எதையும் சென்றடைய முடியும். ‘ப்ராகாம்யம்’ என்பது எவருக்கும் வெல்லமுடியாத இச்சா சக்தியைத் தருகிற ஸித்தி; ‘ஈசித்வம்’ என்பது ஈசுவரத்வம் – அதாவது அடக்கி ஆளுகிற ஆற்றலைக் கொடுக்கும் ஸித்தி; ‘வஸித்வம்’ என்பது எவரையும் வசப்படுத்துகிற சக்தியைத் தரும் ஸித்தி. இந்த ஏழு ஸித்திகளுக்கும் மேலே உள்ளது, தன் மனசையே வசப்படுத்தி அடக்குவது. மற்ற ஸித்திகளால் நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். ஆனால், நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் மேலே போய் பரம சாந்தமாக இருப்பதே மற்ற எந்த ஸித்தியாலும் சாதிக்க முடியாத பேரானந்தத்தைத் தருவது. மனசு அடங்கினால்தான் இதைப் பெற முடியும். இதற்கு ஆசைகள் அடங்க வேண்டும். இப்படி ஆசைகளை அடக்குவது ‘காமாவஸாயனம்’ என்ற கடைசி ஸித்தியாகச் சொல்லப்படுகிறது. தாயுமானவர்கூட, ‘மற்ற இந்திர ஜால வித்தை எல்லாம் செய்துவிடலாம்: ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று இதைத்தான் மிகவும் பிரமிப்பான ஸித்தியாகச் சொல்கிறார். இப்படித் தங்களுக்கென்று ஆசையில்லாமல் வைராக்கியத்தைப் பெற்றுவிட்ட மகான்களும்கூட, லோகோபகாரமாக மற்ற ஸித்திகளை உபயோகப் படுத்தலாம். இப்படிப் பல ஸித்தர்கள் – பதினெண் சித்தர்கள் என்றுகூட ஒரு கணக்குச் சொல்வதுண்டு – இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அநேக காரியங்கள் பைத்தியம் மாதிரி இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் ஸர்வ ஜனங்களிடமும் பிரியத்தோடு லோக க்ஷேமத்துக்காகவே சித்து விளையாட்டுச் செய்துகொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டுகிற ஸித்திகளைத் தருகிற தேவதைகள்கூட, சாக்ஷாத் பராசக்தியின் அந்தப்புரத்துக்கு வெகு தூரத்திற்கு வெளியே நிற்கிற காவலாளிகள்தாம் என்று சொல்வதிலிருந்து அவளுடைய மகிமையை ஊகிக்கலாம்.
இப்படிப்பட்ட அம்பாளின் சக்தி, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவலில் அகிலாண்டேசுவரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேசுவர அவதாரமான ஆசாரியார் ஸ்ரீ சக்கரமாகவும் சிவ சக்கரமாகவும் இரண்டு தாடங்கங்ளைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமனப்படுத்தி அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார். காஞ்சிபுரத்தில் ராஜராஜேசுவரியான காமாக்ஷியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது அதே ஆசாரியாள் அந்த உக்ர கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம ஸெளம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணா கடாக்ஷம் செய்து வருகிறாள்.