பிள்ளையார் ப்ரீதியை நாம் பெற்றுவிட்டால் அவரிடம் மிகவும் அன்புகொண்ட பார்வதி பரமேச்வரர்களின் அநுக்ரஹத்தைப் பெற்று விடலாமென்றேன். நாம் பொதுவாக ஈச்வரனையும் அம்பாளையும் முக்யமாகக் கொண்டு வழிபடுபவர்களாதலால், அவர்களுடைய செல்லப் பிள்ளையை நாம் ஸந்தோஷப்படுத்துவதாலேயே அவர்களிடமிருந்து எல்லா அநுக்ரஹமும் பெற்றுவிடலாமென்பதற்காச் சொன்னேன். இதனால் அநுக்ரஹ சக்தி அவர்களுக்குத்தான் உண்டு, பிள்ளையாருக்குக் கிடையாது என்றதாக ஆகாது. அப்பாவும் அம்மாவுந்தான் அருள் செய்யவேண்டும் என்றில்லாமல் அவரே எதையும் அருள வல்லவர்தான்.
ஈச்வரனுக்கும் அம்பாளுக்கும் புத்ரர் என்பதற்காக இல்லாமல், அவரே முழுமுதற் கடவுள் என்று உபாஸிக்கிறவர்கள் இம்மை மறுமை நலன்கள் எல்லாவற்றையும் அவரே அநுக்ரஹிப்பாரென்று கொண்டிருக்கிறார்கள். கணபதியே பரதெய்வம் என்று உபாஸிக்கிற இவர்களுக்கு ‘காணபதர்கள்’ அல்லது “காணபத்யர்கள்” என்று பெயர். தங்களுடைய உபாஸனா மூர்த்தியின் உத்கர்ஷம் (உயர்வு) பற்றி அவர்கள் பிற உபாஸகர்களிடம் சொல்லும் ஒன்றை எவரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். “சிவனையோ, அம்பாளையோ, முருகனையோ, விஷ்ணுவையோ பரதெய்வமாகப் பூஜிக்கிற நீங்களும் உங்கள் ஸ்வாமியைப் பூஜை பண்ண ஆரம்பிக்கும்போது முதலில் ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக் கொண்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து எங்கள் ஸ்வாமியை வேண்டிக் கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது? பிள்ளையாரையே பரமாத்மாவாகப் பூஜை பண்ணும் நாங்கள் உங்கள் ஸ்வாமிகளில் எவரையும் இப்படி வேண்டிக் கொள்வதில்லையே!” என்று அவர்கள் சொல்வார்கள்.
விஷ்வக்ஸேனர், தும்பிக்கையாழ்வார் என்ற பெயர்களில் வைஷ்ணவர்கள் முதல் பூஜை செய்வதும் விக்நேச்வரரின் ஒரு அவஸரத்துக்குத்தான் (கோலத்துக்குத்தான்) என்று சொல்லலாம்.
தாமே அக்ர (முதல்) பூஜை பெறுகிற உயர்வோடு விளங்குபவர் பிள்ளையார்.
“இவரைப் பற்றிய ச்லோகங்களில் ஈச்வரன், அம்பாள், விஷ்ணு, முருகன் முதலியவர்களைப்பற்றி வருவதால், அந்த ஸ்வாமிகளாலேயே இவருக்குப் பெருமை என்று நினைத்தால் அது ஸரியே இல்லை. அந்த ஸ்வாமிகள் எல்லாருங்கூட ஏதாவது ஒரு ஸந்தர்பத்தில் இவர் தயவை நாடித்தான் கார்ய ஸித்தி அடைந்திருக்கிறார்கள்” என்று கணபதி உபாஸகர்கள் புராணங்களைக் காட்டுவார்கள்.
தெய்வங்களில் உசத்தி தாழ்த்தி இல்லை; இல்லவே இல்லைதான். ஆனாலும் ஒரே பரமாத்மா லீலானந்தத்துக்காகவும், ஜனங்களின் விதவிதமான மனப்போக்குகளில் ஒவ்வொன்றுக்கும் பிடித்த மாதிரியும், பல ரூபங்களில் வருகிறபோது, அவரவருக்கும் தங்கள் மூர்த்தியிடம் பக்தி ஒருமுகப்படுவதற்காக ஒவ்வொரு மூர்த்தியும் மற்றவற்றைச் சில ஸந்தர்பங்களில் ஜயித்ததாகப் புராணங்களில் பார்க்கிறோம். ஒவ்வொரு மூர்த்தியும் இப்படி மற்றவற்றை ஜயித்தது என்பதாலேயே ஒவ்வொன்றும் மற்றவற்றிடம் தோற்றும்தான் இருக்க வேண்டுமென்றாகிறதல்லவா? இப்படி ஒவ்வொரு தெய்வமும் சில ஸந்தர்பத்தில் ஜயித்து, சில ஸந்தர்பத்தில் தோற்றுப் போவதில் ஜயித்தவைகளை மட்டுமே அந்தந்த தெய்வத்தின் பக்தர்களும் எடுத்துக் கொண்டு அதனிடம் தங்கள் பக்தியை வலுவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பிள்ளையார் தோற்றுப் போனதாக மட்டும் ஒரு கதையும் ப்ரஸித்தமாயிருக்கவில்லை.
ஆனால் மற்ற ஸ்வாமிகள் இவரைப் பூஜித்ததற்கு நிறையக் கதைகள் இருக்கின்றன.