மரியாதைக்குரிய குழந்தை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பெரிய இடத்துப் பிள்ளை என்பதாலேயே, ‘நாம் நமக்கென்று ஒரு யோக்யதையும் ஸம்பாதித்துக்கொள்ள வேண்டியதில்லை. நம்முடைய பெரிய ஸம்பந்தத்தைக் காட்டியே ஊரை ஆட்டி வைத்துக்கொண்டிருக்கலாம்’ என்று இருப்பவர்கள் உண்டு. அநேகம் பெரிய மநுஷ்யரகத்துப் பசங்கள் தறுதலைகளாகவோ, அசட்டுப் பிசட்டென்றோ இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இந்தப் பெரிய இடங்களுக்கெல்லாம் உச்சியிலுள்ள மஹா பெரிய இடத்துப் பிள்ளை, ‘உச்சிப்பிள்ளையார்’ என்கிறோமே, அவர் எப்படியிருக்கிறார்? தேஹபலமா, புத்திக் கூர்மையா, கார்ய சக்தியா, அன்புள்ளமா எல்லாவற்றிலும் தமக்கு மேல் யாருமில்லை என்று இருக்கிறார். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால் மாத்திரம் அவருக்குப் பெருமையில்லை. அவருக்காகவே அவருக்குப் பெருமை என்பது “பிள்ளை” க்கு “யார்” போட்டு அவரைப் “பிள்ளையார்” என்று மிகவும் மரியாதையாகச் சொல்வதிலிருந்தே தெரியும்.

பொதுவாகத் தாய், தகப்பன், பாட்டன், பாட்டி, தமையன், தமக்கை ஆகிய பெரியவர்களைத்தான் மரியாதையாகத் தாயார், தகப்பனார், பாட்டனார், பாட்டியார், தமையனார், தமக்கையார் என்றெல்லாம் சொல்வது வழக்கம். பிள்ளைக்கு அப்படி மரியாதை விகுதி சேர்த்துச் சொல்கிற வழக்கம் எங்கேயும் கிடையாது. இதற்கு மாறுதலாக இவர் ஒருவர் விஷயத்தில் மட்டும் “பிள்ளை” என்காமல் “பிள்ளையார்” என்றே சொல்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is முருகனும் மூத்தோனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  முழுமுதற் கடவுளாக
Next