இதைவிட எனக்கு ரொம்ப குதூஹலம் (அதாவது curiosity) ஏற்படுத்தி ஆராய்ச்சியில் இறக்கிவிட்ட விஷயம் என்னவென்றால் “கடிகை” என்று ஏன் பேர் வந்தது என்பது தான்.
“கடிகை” என்றால் சின்னதான பானை என்று ஒரு அர்த்தம். கடம் : பெரிய பானை. கடிகை – அதைவிடச் சின்ன பானை. கடிகை என்றால் ஒரு நாழிகைப் பொழுது என்று இன்னொரு அர்த்தம். அந்த வார்த்தை எந்த அர்த்தத்தில், அல்லது எந்த விதத்தில் வித்யாசாலைக்குப் பெயராக இடப்பட்டது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்வம் உண்டாயிற்று. நான் கேட்டுப் பார்த்த யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. கடைசியில் எத்தனையோ தோண்டித் துருவியதில் என்னுடைய ரிஸர்ச்சில் பாஸ் பண்ணிவிட்டேன். அந்தப் பெருமை அடித்துக் கொள்ளத்தான் இப்போது கதையளந்து கொண்டிருக்கிறேன்.
மெட்ராஸில் இருக்கிற ஓரியண்டல் மானுஸ்க்ரிப்ட் லைப்ரரிக்காரர்கள் தங்களிடமுள்ள சுவடிகளில் பலவற்றை அச்சுப்போட்டு வருகிறார்கள். ஸமீபத்தில்1 அவர்கள் போட்டிருந்த “ஆபோகம்” என்ற புஸ்தகத்தைப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது என்ன புஸ்தகம் என்று சொல்லவேண்டுமானால் இதற்கு அப்பாப் புஸ்தகம், தாத்தாப் புஸ்தகம், கொள்ளுத் தாத்தா புஸ்தகம் முதலியவற்றைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். இவையெல்லாம் அத்வைத சாஸ்த்ரங்களானபடியால் உங்களுக்கும் கொஞ்சம் தெரிந்திருப்பது நல்லதுதான். சொல்கிறேன்.
வ்யாஸர் ‘ப்ரஹ்ம ஸூத்ரம்’ செய்திருக்கிறார். அதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருக்கிறார். அந்த பாஷ்யத்துக்கு பாஷ்யம் மாதிரி விளக்கவுரை வாசஸ்பதி மிச்ரர் செய்திருக்கிறார். இதற்கு ‘பாமதி’ என்று பெயர். வாசஸ்பதி மிச்ரருடைய பத்னியின் பெயர் பாமதி. அந்தப் பெயரையே புஸ்தகத்துக்கு வைத்தார்2. பாஷ்யத்தின் பாஷ்யமான இதற்கும் பாஷ்யம் மாதிரி அமலாநந்தர் என்பவர் ‘கல்பதரு’ என்று எழுதியிருக்கிறார். அந்தக் ‘கல்பதரு’வுக்கும் விளக்கவுரையாக லக்ஷ்மிந்ருஸிம்ஹர் என்பவர் எழுதியதுதான் ‘ஆபோகம்’. அதாவது ‘ப்ரஹ்ம ஸூத்ர’த்தின் குழந்தை அதற்கு ஆசார்யாள் செய்த பாஷ்யமென்றால், பேரக் குழந்தைக்குப் பேரக் குழந்தை ‘ஆபோகம்’!
அந்தப் புஸ்தகத்தைப் பார்த்ததிலிருந்து, ஒரு ரெஃபரன்ஸுக்காக அதன் அப்பாப் புஸ்தகமான “கல்பதரு”வைப் பார்க்கவேண்டி வந்தது. அதிலே ஓரிடத்திலே கடிகா ஸ்தானத்தைப் பற்றி வருகிறது.
எந்த இடத்திலே என்றால், ப்ரஹ்ம ஸூத்ரத்தின் மூன்றாம் அத்யாயம், நாலாம் பாதம், இருபதாம் ஸூத்ரத்தை விளக்கும் இடத்திலே. ஸந்நியாஸ ஆச்ரமம் என்பது உண்டு என்று ஸூத்ரகாரர் (வ்யாஸர்) அபிப்ராயப்படுகிற இடம். ‘க்ருஹஸ்தன் பண்ணும் வைதிக கர்மாவினாலேயே அவனுக்கு நேராக மோக்ஷம். வைதிக கர்மாவைவிட்ட ஸந்நியாஸம் கூடாது’ என்கிற ஜைமினியின் பூர்வ மீமாம்ஸைக் கொள்கையை ஆக்ஷேபித்து இங்கே வ்யாஸாசார்யாள் துரீயாச்ரமத்தை (நாலாவது ஆச்ரமமான துறவறத்தை) ஸ்தாபித்திருக்கிறார்.
ஸந்நியாஸியின் லக்ஷணம் என்ன என்று இங்கே ‘கல்பதரு’வில் அமலாநந்தர் கொடுத்திருக்கிறார். ஸந்நியாஸி என்பவன் சிகையை எடுத்துவிட்டு முண்டனம் பண்ணிக் கொள்ளவேண்டும் (மொட்டை அடித்துக்கொள்ளவேண்டும்), பூணூலை அறுத்துப் போட்டுவிட வேண்டும் என்றுதான் பொதுவிலே வைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் சிகையையும் பூணூலையும் கத்தரிக்காமலே ஸந்நியாஸி இருக்கலாமென்ற வழக்கத்தைச் சிலர் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் – பிற்காலத்தில் வந்த ராமாநுஜ ஸித்தாந்தத்தில் இந்த வழக்கம்தான். இதில் எது ஸரி என்று இங்கே ‘கல்பதரு’க்காரர் தம் அபிப்ராயத்தைச் சொல்கிறார்.
“யேது சிகா யஜ்ஞோபவீத த்யாக ரூப பாரம
ஹம்ஸ்ய வ்ருத்திம் ந மந்யந்தே தே ந பச்யந்தி
ப்ரத்யக்ஷ கடிகாஸ்தாநேஷு பட்யமாந ஆதர்
வணீம் ச்ருதிம் – ஸசிகம் வபநம் க்ருத்வா பஹிஸ்
ஸூத்ரம் த்யேஜத் புத:” என்கிறார்.
“ஸந்நியாஸிகளில் உச்சமான பரமஹம்ஸ முறைக்குப் போகிறவன் தலையைப் ‘பண்ணிக்’ கொள்ள வேண்டாமென்றும், பூணூலைக் கத்திரித்துப்போட வேண்டாமென்றும் சொல்கிறவர்கள், ‘ஸந்நியாச்ரமம் எடுத்துக் கொள்ளும் புத்திமான் சிகையை எடுத்துவிட்டு, பூணூலையும் துறந்துவிடவேண்டும்’ என்று கடிகாஸ்தானத்திலே அத்யயனம் செய்பவர்கள் சொல்லும் அதர்வ வேத வாக்கைக் கேட்டதில்லை போலிருக்கிறதே!” என்று அர்த்தம்.
இதிலிருந்து தெரிகிற இன்னொரு முக்யமான விஷயம், பிற்காலத்தில் அதர்வ வேத அத்யயனம் அடியோடு மங்கிப் போய்விட்டாலும் அக்காலத்தில் அந்த வேதமும் போதிக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். அதிருக்கட்டும். இதிலே கடிகாஸ்தானம் என்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. ப்ராசீனமான (தொன்மை வாய்ந்த) அத்வைத ப்ரமாண நூல்களிலொன்றிலேயே ‘கடிகா ஸ்தானத்துப் பசங்களின் அத்யயனத்தை இவர்கள் கேட்டதில்லையா என்ன?’ என்று வருவதால், கடிகாஸ்தானங்கள் வித்வத் ஜனங்களால் மிகவும் மதிக்கப்பட்டது நன்றாகத் தெரிகிறது.
‘கல்பதரு’ எழுதிய அமலானந்தர் அதன் முடிவில் சொல்லிக்கொள்வதிலிருந்து அவர் தேவகிரியில் க்ருஷ்ணன், மஹாதேவன் என்ற யாதவ வம்சத்து ஸஹோதரர்களின் ஆட்சிக் காலத்திலிருந்தவரென்று தெரிகிறது. இது கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு மத்தியாகும். (அதாவது ராமாநுஜருக்கு நூறு, நூற்றைம்பது வருஷம் அப்புறம்.) இதற்கு முன்னாடியும் பின்னாடியும் எப்போதிலிருந்து எதுவரை கடிகாஸ்தானத்தைப் பற்றி ஆதாரபூர்வமான சாஸனங்களில் பிரஸ்தாபித்திருக்கிறது என்று தேடிப்பார்த்தேன். ஆராய்ச்சி அமலாநந்தர் காலத்துக்குக் கிட்டத்தட்ட ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் கொண்டுவிட்டது!
1 இவ்வுரையின் இப்பகுதி ஸ்ரீசரணர்கள் 1965-ல் அருளியது.
2 இதற்கான காரணம் இனி வரவிருக்கும் ‘தெய்வத்தின் குரல்’ பகுதிகளில் ஒன்றில் வெளியாகலாம்.