ஆனபடியால் குருகுலம், வித்யாப்யாஸம் முதலான ஸமாசாரங்களே போகப் போக ப்ராமணர்களை முக்யமாக கொண்ட விஷயங்கள் மாதிரியாகிவிட்டன. க்ஷத்ரியர்களிலும் ராஜகுமாரர்கள், ராஜ குடும்ப முக்யஸ்தர்களின் பிள்ளைகள் ஆகியோர் நீண்டகாலம் குருகுலவாஸம் செய்து நிரம்பவும் வித்யாப்யாஸம் செய்து தேர்ச்சி பெற்றார்கள்.
ஆனால் ப்ராமணப் பசங்களின் பாடத்திட்டத்தில் சதுர்தச வித்யைகளுக்கு * ப்ராதான்யம் கொடுத்து, தநுர் வேதம், அர்த்த சாஸ்திரம் முதலானவற்றை ‘எலிமென்டரி’யாகத்தான் சொல்லிக்கொடுத்திருப்பார்கள். ஏனைய ஜாதியினருக்கும் அவர்களுடைய தொழிலை போதிக்க பிராமணன் தகுதி பெற்றிருக்கவேண்டுமாதலால், ப்ராமணப் பசங்களிலேயே பன்னிரண்டு வருஷத்துக்கு மேல் குருகுல வாஸம் செய்கிறவர்களில் சிலருக்கு தநுர் வேதம், சிலருக்கு அர்த்த சாஸ்திரம், சிலருக்கு சில்பம், சிலருக்கு ஸங்கீதம் என்றிப்படிப் பிரித்து, மற்றவர்களுக்கான தொழிலைக் குறித்த கல்வியும் புகட்டினார்கள். ஆக, இது எல்லா ப்ராமணர்களுக்குமான பொதுப் பாடதிட்டமில்லை.
க்ஷத்ரியப் பசங்களிலோ அத்தனை பேருக்குமே தநுர் வேதப்படி நிறைய அஸ்த்ர சஸ்த்ர சிக்ஷை தரவேண்டும். ராஜ நீதி, அர்த்த சாஸ்திரங்களையும் இவர்களுக்கு deep-ஆக போதிக்க வேண்டும். ஆனதால் ப்ராமணப் பசங்களுடையதற்கு வித்யாஸமானதாகவே இவர்களுக்குக்கெனத் தனி ‘கர்ரிகுலம்’, ‘ஸிலபஸ்’ போட்டு அதன்படியே சிக்ஷை தந்திருக்கவேண்டும். இவர்களுக்காக முழுக்கவே தனியாக குருகுலம் இருந்திருக்கலாம்; அல்லது வேதாதி சதுர்தச வித்யைகளில் ப்ராமணப் பசங்களின் குருகுலங்களிலேயே ஒரு கட்டம் வரையில், அல்லது நடு நடுவே சில க்ளாஸ்களில் சேர்ந்து கல்வி கற்பதாகவும், ஆயுதப் பயிற்சி, ஆட்சி முறைக்கல்வி முதலியவற்றைத் தனியான (exclusive) குருகுலங்களில் கற்பதாகவும் இருந்திருக்கலாம். Inter-collegiate க்ளாஸ்கள் என்று தற்காலத்தில் வெவ்வேறு காலேஜ் மாணவர்கள் சில ஸப்ஜெக்ட்களை மட்டும் சேர்ந்து படிக்கிற மாதிரி இருந்திருக்கலாம். ப்ராமணரான த்ரோணரோடேயே அவருடைய பிதாவான பரத்வாஜரிடம் க்ஷத்ரியனான த்ருபதன் குருகுலவாஸம் பண்ணியிருக்கிறான். க்ஷத்ரிய க்ருஷ்ணரும், ப்ராமண குசேலரும் சேர்ந்து படித்திருக்கிறார்கள்.
* இரண்டாம் பகுதியில் ‘ஹிந்து மதத்தின் ஆதார நூல்கள்’ என்ற உரையில் ’14 ப்ரமாண நூல்கள்’ என்ற உட்பிரிவு பார்க்க.