‘சிலாமயம் வேச்மம்’ என்றால் கருங்கல்லால் ஆன க்ருஹம்; கற்கோயில். இப்போது கோவிலென்றால் கருங்கல்லை அடுக்கிக் கட்டியதுதான் என்றாகி விட்டதால் இதை விசேஷமாகக் குறிப்பிடுவானேன் என்று தோன்றலாம். ஆனால் காரணத்தோடுதான் இங்கே இப்படிச் சொல்லியிருக்கிறது.
ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த மஹேந்த்ர வர்மப் பல்லவனுக்கு முன்பெல்லாம் செங்கல், மரம் முதலியவற்றால்தான் கோயில் கட்டினார்கள். மஹேந்த்ரவர்மா தான் முதன்முதலில் கற்கோவில் கட்டினவன். ‘கட்டினவன்’ என்பது தப்பு;கோவில் ‘எடுத்தவன்’ என்றே அவனைச் சொல்லவேண்டும். ஏனென்றால் இவன் காலத்தில்கூட, மலைகளிலிருந்து பாறைகளை வெட்டி slabகளாக (துண்டங்களாக) ச் செதுக்கிக் கொண்டு வந்து அவற்றை அடுக்கிக் கோவில் கட்டுவது என்ற வழக்கம் ஏற்படவில்லை. பின்னே எப்படி கற்கோவில் எடுத்தானென்றால், குன்றாகப் பெரிய பாறைகளிருக்கும் இடத்துக்குப் போய்,
அங்கே அந்தக் குன்றையே குடைந்து, செதுக்கி அப்படியப்படியே கோவிலாக ஆக்கும்படிச் செய்தான். செங்கல்லாலோ மரத்தாலோ ஆதியில் கோயில் அமைத்ததிலிருந்து இது முதல் டெவலப்மெண்ட் (வளர்ச்சி).
இரண்டாவது டெவலப்மெண்ட் மஹேந்த்ரவர்மாவுக்கு நூறு வருஷம் பிற்பாடு வந்த இந்த இரண்டாவது நரஸிம்ஹவர்மாவான ராஜஸிம்ஹ பல்லவனின் காலத்தில் ஏற்பட்டது. அதாவது, இவன்தான் பெரிய பெரிய பாறைகளைக் துண்டங்களாக வெட்டிச் செதுக்கி எங்கே வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு வந்து அவற்றை அடுக்கி நிஜமாகவே கோயில் கட்ட ஆரம்பித்தான். அந்த முதல் கோவில்தான் காஞ்சி கைலாஸநாதர் ஆலயம்;அதைத்தான் குறிப்பாக ‘சிலாமயம் வேச்மம்’ என்று சொல்லியிருக்கிறது.
குன்றுகளைக் குடைந்து கோவிலாக்கினபோது (‘குடைவரைக் கோவில்’ என்பது இதைத்தான்) நாம் கல் இருக்கிற இடத்துக்குப் போகவேண்டும். அதாவது ஸ்வாமியைத் தேடிக் கொண்டு நாம் போகவேண்டும். கல் நம்மைத் தேடி வரும்படியாக அதைச் செதுக்கிக்கொண்டு வந்து செங்கல்லைப் போலவே இசைத்துக் கட்டி ஸ்வாமியே நம்மிடம் எழுந்தருளும்படியாகச் செய்த முதல் கற்கோவில் கைலாஸ நாதருடையது. இதைக் “கட்டிடக் கோயில்” என்பார்கள். விஷயம் தெரிந்தவர்கள் “கற்றளி” என்பார்கள். ‘கல் தளி’ தான் ‘கற்றளி’. தளி என்றால் கோவில்.
பூலோக கைலாஸமாக இந்தக் கோவிலைக் கட்டியதைத்தான் ‘கைலாஸ கல்பம்’ என்று சொல்லியிருக்கிறது. மஹேந்த்ரவர்மா அநுஸரித்த நிர்மாண முறையின் வழியிலேயே இதை நரஸிம்ஹ வர்மா செய்தான் என்பதை ‘மஹேந்த்ர கல்ப:’ என்று சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறது.
அப்பர் ஸ்வாமிகளால் சமணத்திலிருந்து வைதிக மதத்துக்குத் திருப்பப்பட்ட மஹேந்த்ரவர்மா மாமண்டூர், மண்டகப்பட்டு, பல்லாவரம் (பல்லவர்புரம்) , திருச்சி மலைக்கோட்டைக் கோவிலுக்குக் கீழே எல்லாம் குகைகளில் குடைவரைக் கோவில்கள் கட்டினவன். அவன் ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இருந்தவன். அவனுடைய பிள்ளையும் ஒரு நரஸிம்ஹவர்மாதான். வாதாபிவரை போய் ஜயித்த மாமல்லன் அவன்தான். ஆனால் கைலாஸநாதர்கோயில் கட்டினவன் அவனில்லை. அவன் முதலாவது நரஸிம்ஹன். இவன் அவனுடைய கொள்ளுப்பேரனான இரண்டாவது நரஸிம்ஹன். முதல் நரஸிம்ஹனோடு இவனைக் குழப்பிக் கொள்ளாமலிருப்பதற்காகப் பொதுவாக இவனை இவனுடைய பட்டப்பெயரான ராஜஸிம்ஹன் என்ற பெயரில் குறிப்பிடுவதே வழக்கம். புகழ்பெற்ற தன் மூதாதையான மஹேந்த்ரவர்மாவின் வழியில் தானும் கோவிலெடுத்ததால் ‘மஹேந்த்ர கல்ப:’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்.
“சசாங்க மௌளி” என்பது சந்த்ர சேகரனாக இருக்கப்பட்ட பரமேச்வரனைக் குறிக்கும் பெயர்.
“சிலாமயம் வேச்ம சசாங்கமௌளே” என்று ‘ச’காரம் மோனையாக வருவது காதுக்கு மதுரமாயிருக்கிறது.